ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

எது சூப்பர் மல்ட்டிஜெட்?

டாடா ஹேரியர் vs ஜீப் காம்பஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டாடா ஹேரியர் vs ஜீப் காம்பஸ்

போட்டி: டாடா ஹேரியர் vs ஜீப் காம்பஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு BS-6 டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஜீப் காம்பஸ் வெளிவந்தது. இதன் ஆரம்ப வேரியன்ட்டின் விலையே, டாடா ஹேரியரின் டாப் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டைவிட 2.03 லட்ச ரூபாய் அதிகம்.

இதுவே காம்பஸின் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் வெர்ஷன் என்றால், மேலும் 3.6 லட்ச ரூபாய் கூடிவிடும். டாடாவைவிட 5.6 லட்ச ரூபாய் அதிக விலையில் இருக்கும் ஜீப், இந்த விலையை நியாயப்படுத்தும்படி இருக்கிறதா? குறைவான விலை என்றாலும், காம்பஸுடன் எந்தளவுக்கு ஹேரியர் போட்டி போடுகிறது?

விலை I ரூ.29.98 லட்சம்
(சென்னை ஆன்ரோடு), விலை I ரூ.24.35 லட்சம்
(சென்னை ஆன்ரோடு)
விலை I ரூ.29.98 லட்சம் (சென்னை ஆன்ரோடு), விலை I ரூ.24.35 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

இன்ஜின் - கியர்பாக்ஸ் பர்ஃபாமன்ஸ்

BS-4 ஹேரியரில் இருப்பதும் BS-6 ஹேரியரில் இருப்பதும் ஒரே இன்ஜின்தான். என்றாலும், BS-4 மாடல் குறைவான 140bhp சக்தியை வெளிப்படுத்தியது. இது அதிக செயல்திறன் கொண்டதாக இருந்தாலும், அதை யாரோ கட்டுப்படுத்துவது போலவே இருக்கும். தற்போதைய BS-6 வெர்ஷனில் அந்தக் குறை இல்லை. அதிகரிக்கப்பட்டிருக்கும் 30bhp பவரை, நெடுஞ்சாலைகளில் நன்றாக உணர முடிகிறது. மொத்தமுள்ள 170bhp பவரை, ஹேரியரின் முன்பக்கச் சக்கரங்களுக்குச் சிறப்பாகக் கடத்துகிறது, ஹூண்டாயின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். கியர்கள் ஸ்மூத்தாக மாறுவதால், வேகம் பிடிப்பது எளிதாக நடக்கிறது. ஆனால் தடாலடியாக ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, கியர்பாக்ஸின் எலெக்ட்ரானிக்ஸ் அமைப்பு சரியான கியரைத் தேர்ந்தெடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது.

இதற்கான மாற்றாக, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் மேனுவல் மோடைத் தேர்வு செய்துகொள்ளலாம். இங்கே அந்தப் பிரச்னை இல்லையென்றாலும், காரின் MID-ல் கியர் இண்டிகேட்டர் கொஞ்சம் மந்தம்.

ஜீப்பில் இருப்பது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். கியர்கள் ஸ்மூத்தாகவே மாறுவதுடன், நெரிசல்மிக்க டிராஃபிக்கில் காரை இயக்கும்போது, சரியான கியரில் இருக்கும்படி இதன் எலெக்ட்ரானிக்ஸ் அமைப்பு பார்த்துக் கொள்கிறது. இதை நம்பி நெடுஞ்சாலைகளிலோ திருப்பங்கள் நிறைந்த சாலைகளுக்கோ செல்லும்போதுதான், இந்த ZF ஆட்டோ மேட்டிக் கியர்பாக்ஸின் குறை தெரிகிறது. 3,000 ஆர்பிஎம்மிலேயே இன்ஜினை இயக்கும் விதத்தில் கியர்பாக்ஸ் கட்டமைக்கப்பட்டிருப்பது புரிகிறது. எனவே திடீரென ஓவர்டேக் செய்வதற்காக ஆக்ஸிலரேட்டரில் அழுத்தத்தைக் கூட்டும்போது, கியர்கள் அதற்கேற்ப உடனுக்குடன் மாற மறுக்கின்றன. எனவே நீண்ட நேரப் பயணம் என்றால், டிரைவரின் கைகள் தானாகவே மேனுவல் மோடுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை மாற்றிக் கொள்ளத் துடிக்கும். BS-4 காம்பஸை ஓட்டியவர்களுக்கு, அதன் அதிரடியான மிட்ரேஞ்ச்சின் மகத்துவம் புரியும். பர்ஃபாமன்ஸில் தனக்கிருந்த முன்னிலையை காம்பஸ் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டது. 0-100கிமீ வேகத்தை 11.4 விநாடிகளில் ஜீப் எட்டினால், இதே வேகத்தை 11.58 விநாடிகளிலேயே எட்டிப்பிடித்து அசத்துகிறது ஹேரியர். இன்ஜின் சத்தத்தைப் பொறுத்தவரை, ஐடிலிங்கில் டாடாவைவிட காம்பஸ் அமைதியாக இருக்கிறது.

ஓட்டுதல் அனுபவம்

கியர்பாக்ஸில் அசத்திவிட்ட ஹேரியர், ஓட்டுதலில் காம்பஸை வீழ்த்தவில்லை. ஜீப்பைவிட அளவில் பெரிதாக இருக்கும் டாடா எஸ்யூவி, நகரப் பயன்பாட்டிலும் குறைவான வேகத்திலும் அதன் சைஸ் தெரியும்படியே இயங்குகிறது. இதன் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் நெடுஞ்சாலைகளில் பயன்படுத்த நன்றாக இருக்கிறது. ஆனால், பெரிய பள்ளங்களில் இறங்கி ஏறுவது ஸ்டீயரிங்கில் தெரிகிறது. மேலும் அதிரடியாக ஆக்ஸிலரேஷன் கொடுக்கும்போது, கார் ஒருபக்கமாகச் செல்கிறது. இதனாலேயே எப்போதும் ஸ்டீயரிங்கில் ஒரு கையை வைக்க வேண்டியிருக்கிறது. இதனுடன் ஒப்பிட்டால், காம்பஸின் எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் அற்புதம்.

 1.முன்பைவிட ஃபிட் அண்ட் ஃபினிஷில் முன்னேற்றம் தெரிகிறது ஹேரியரில். வேறெதுவும் மாற்றம் இல்லை. 
2. அனலாக்-டிஜிட்டல் காம்போ மீட்டர் ஸ்டைலில் ஓகே. டிஸ்ப்ளேவில் தாமதமாக இருக்கிறது.
 3.லேண்ட்ரோவர் போலவே டெரெய்ன் ரெஸ்பான்ஸ் மோடுகள்... ஆனால், 4வீல் டிரைவ் இல்லையே?
1.முன்பைவிட ஃபிட் அண்ட் ஃபினிஷில் முன்னேற்றம் தெரிகிறது ஹேரியரில். வேறெதுவும் மாற்றம் இல்லை. 2. அனலாக்-டிஜிட்டல் காம்போ மீட்டர் ஸ்டைலில் ஓகே. டிஸ்ப்ளேவில் தாமதமாக இருக்கிறது. 3.லேண்ட்ரோவர் போலவே டெரெய்ன் ரெஸ்பான்ஸ் மோடுகள்... ஆனால், 4வீல் டிரைவ் இல்லையே?

நகரங்களில் இலகுவாகப் பயன்படுத்தும் வகையில் குறைவான எடையில் இருப்பதுடன், அதிக வேகங்களில் செல்லும்போது தானாகவே அதிகமான எடை கொண்டதாக மாறிவிடுகிறது. தவிர நான்கு வீல்களிலும் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் இருப்பதால், கையாளுமையிலும் காம்பஸ் ஒரு படி மேலேதான்.

ஹேரியரின் பின்பக்கத்தில் வழக்கமான டார்ஷன் பீம் சஸ்பென்ஷனே இருந்தாலும், அது நம் ஊரின் கரடுமுரடான சாலைகளைச் சிறப்பாகவே சமாளிக்கிறது. என்றாலும் இதே விஷயத்தை காம்பஸ் அதை ஜஸ்ட் லைக் தட் செய்கிறது. எனவே நல்ல வேகத்தில் சீரற்ற சாலைகளில் ஜீப்பை ஓட்ட நேர்ந்தாலும், அது காருக்குள்ளே இருப்பவர்கள் உணர முடியாத அளவுக்கு அதன் ஓட்டுதல் அமைந்திருக்கிறது. BS-4 மாடலில், குறைவான வேகத்தில் செல்லும்போது, சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கும். அந்தக் குறை இப்போது இல்லை. .

காம்பஸை ஓட்டிவிட்டு ஹேரியருக்குத் திரும்பினால், இதன் சஸ்பென்ஷன் இறுக்கமாக இருப்பது தெரிகிறது. வெளிச்சாலை சத்தம் கேபினுக்குள்ளே கேட்கிறது. தவிர காம்பஸின் பின்பக்கத்தில் டிஸ்க் பிரேக் இருப்பதால், எதிர்பார்த்தபடியே ஃபீட்பேக் நச் ரகம் (ஹேரியரின் பின்னால் டிரம் பிரேக்ஸ்தான்).

 1.டிசைன் கொஞ்சம் போர் அடித்துவிட்டது. ஆனால், தரத்தில் அட்டகாசம். 
2. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், காம்பஸ் ஒரு ப்ரீமியம் கார் என்பதை நிரூபிக்கிறது.
3. 4வீல் டிரைவுடன் ஆஃப்ரோடு மோடுகள் இருப்பது செம!
1.டிசைன் கொஞ்சம் போர் அடித்துவிட்டது. ஆனால், தரத்தில் அட்டகாசம். 2. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், காம்பஸ் ஒரு ப்ரீமியம் கார் என்பதை நிரூபிக்கிறது. 3. 4வீல் டிரைவுடன் ஆஃப்ரோடு மோடுகள் இருப்பது செம!

எனவே ஓட்டுதல் அனுபவத்தைக் கணக்கில் கொண்டால், விலை அதிகமான கார்களுக்கும் சவால்விடுகிறது காம்பஸ். என்ன… அந்த கியர்பாக்ஸ் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததுதான் மைனஸ். இந்த செக்மென்ட்டில், ஆஃப் ரோடிங் திறன் அவ்வளவு பெரிய தேவை கிடையாதுதான். இருப்பினும் காம்பஸின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலில், 4 வீல் டிரைவ் ஸ்டாண்டர்டாக வருகிறது. இதில் தேவைப்பட்டால் பின்பக்க ஆக்ஸிலுக்கு மட்டும் பவரை அனுப்ப முடியும் என்பதுடன், 4x4 லாக் மற்றும் Selectable ஆஃப் ரோடு மோடுகளும் உள்ளன. ஹேரியரில் Hill Descent கன்ட்ரோல், லேண்ட்ரோவரில் இருப்பதுபோன்ற 3 மோடுகளைக் கொண்ட Terrain Response சிஸ்டம் (ESP செட்டிங்கைக் கன்ட்ரோல் செய்யலாம்) ஆகியவை இருக்கின்றன. இருப்பினும் இந்த டாடா எஸ்யூவி ஃப்ரன்ட் வீல் டிரைவ்தான்.

கேபின் எர்கனாமிக்ஸ்

4.4 மீட்டர் நீளமுடைய ஜீப்பைவிட, 4.6 மீட்டர் நீளம் கொண்ட டாடா பெரிதாகவே உள்ளது. எனவே எதிர்பார்த்தபடியே இடவசதியில் காம்பஸை வீழ்த்துகிறது ஹேரியர். காம்பஸின் பின் சீட் இடநெருக்கடியாக இல்லை என்றாலும், அங்கே இருவருக்கான இடம் மட்டுமே உள்ளது. மேலும் உயரமானவர்களுக்குக் கொஞ்சம் ஹெட்ரூமும் குறைவுதான். தவிர பின்பக்க இருக்கையின் பேக் ரெஸ்ட் மேல்நோக்கி இருப்பது, சிலருக்கு அசெளகரியத்தைத் தரலாம்.

டாடா ஹேரியர் vs ஜீப் காம்பஸ்
டாடா ஹேரியர் vs ஜீப் காம்பஸ்

ஹேரியரின் பின்பக்க இருக்கைகள் தரக்கூடிய சப்போர்ட் நன்று என்பதுடன், மூன்று பேருக்கான இடம் கிடைப்பது ப்ளஸ். அகலமான கேபின் – அதிக லெக்ரூம் ஆகியவற்றுடன் பெரிய பனோரமிக் சன்ரூஃப் மற்றும் கதவுக் கண்ணாடிகள் சேரும்போது, பயணிகளுக்கு விசாலமான மற்றும் சொகுசான அனுபவத்தைத் தருகிறது டாடா.

Price To Size விகிதத்தில் காம்பஸை முந்துகிறது ஹேரியர்.ஹேரியரின் உயரமான முன்பக்க இருக்கைகள் காரணமாக, ஒரு காஸ்ட்லியான பெரிய காரில் இருக்கிறோம் என்ற உணர்வு கிடைக்கிறது. ஆங்காங்கே கேபினில் சுமாரான பிளாஸ்டிக்ஸ் இருந்தாலும், டேஷ்போர்டில் உள்ள Faux Wood வேலைப்பாடு – லெதர் சுற்றப்பட்ட கதவு பிடிகள், முன்பைவிடச் சிறப்பான ஃபிட் அண்டு ஃபினிஷில் இருக்கின்றன. டச் ஸ்க்ரீனின் ரெஸ்பான்ஸ் மேலும் நன்றாக இருந்திருக்கலாம். டாடாவுடன் ஒப்பிட்டால், ஜீப்பின் கேபின் வடிவமைப்பு டல். ஆனால் ஒட்டுமொத்தத் தரத்தில் உயர்ந்து நிற்கிறது காம்பஸ். டேஷ்போர்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல்கள் தொடுவதற்கு நன்றாகவே இருக்கின்றன. ஹேரியர் அளவுக்கு காம்பஸின் டிரைவிங் பொசிஷன் உயரமாக இல்லாவிட்டாலும், சொகுசான சீட்டிங்குக்கு கேரன்ட்டி.

எது சூப்பர் மல்ட்டிஜெட்?

சிறப்பம்சங்கள்

இந்த எஸ்யூவிகளின் BS-4 மாடல்கள், குறைவான வசதிகளுக்காகத் தமது வாடிக்கையாளர்களிடையே கொஞ்சம் திட்டு வாங்கின. எனவே BS-6 வெர்ஷனில் அதிகப்படியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலுமே பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் டிரைவர் சீட், 6 காற்றுப்பைகள், ESC, ஆஃப் ரோடு மோடுகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான டச் ஸ்க்ரீன், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எலெக்ட்ரிக் மிரர்கள் என ஒற்றுமைகள் உள்ளன. என்றாலும் சில வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன.

ஹேரியரில் அனலாக் – டிஜிட்டல் மீட்டர் - பெரிய 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன் – டிரைவிங் மோடுகள் இருந்தால், காம்பஸில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் – 4 வீல் டிரைவ் சிஸ்டம் – டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி – ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் ஆகியவை ஸ்பெஷலாக உள்ளன. மேலும் ஹேரியரில் 17 இன்ச் அலாய் வீல் இருந்தால், காம்பஸில் இருப்பதோ 18 இன்ச் அலாய் வீல்! ஆனால் டாடா மற்றும் ஜீப் ஆகியவற்றில் பேடில் ஷிஃப்ட்டர், வென்டிலேட்டட் சீட்கள், இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜிங் இல்லை என்பது மைனஸ்தான்.

தீர்ப்பு

ஜீப் காம்பஸின் லிமிடெட் ப்ளஸ் டீசல் ஆட்டோமேட்டிக் (டாப் வேரியன்ட்), காரின் சைஸுடன் ஒப்பிட்டால், 29.98 லட்ச ரூபாய் (சென்னை ஆன்-ரோடு) விலை மிகவும் அதிகம்தான். பின்பக்க இடவசதி தேவை என்பவர்களுக்கான சாய்ஸும் இது கிடையாது. ஆனால் Owner Cum Driver ஆக இருப்பவர்களுக்குக் கச்சிதமாக செட் ஆகும், சுமாரான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டிருப்பது பெரிய முரண். அட்டகாசமான ஓட்டுதல், துல்லியமான கையாளுமை, அற்புதமான கட்டுமானத் தரம், அசத்தலான ஆஃப்ரோடிங் திறன் எனப் பக்காவான பேக்கேஜாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது காம்பஸ். எனவே இதன் விலை அதிகம் எனக் கருதுபவர்கள், கொஞ்சம் குறைவான வசதிகளுடன் வரும் Longitude AT மாடலைப் பார்க்கலாம் (26.38 லட்ச ரூபாய், சென்னை ஆன்- ரோடு).

எது சூப்பர் மல்ட்டிஜெட்?

XZA + வேரியன்ட்டின் 24.35 லட்ச ரூபாய் (சென்னை ஆன்-ரோடு) எனும் மிகக் குறைவான விலை என்பது மட்டுமே, ஹேரியரை இந்த ஓப்பீட்டின் வெற்றியாளர் ஆக்கிவிடவில்லை (காம்பஸைவிட 5.6 லட்ச ரூபாய் குறைவு). டாடாவின் சிறந்த எஸ்யூவியாக அறியப்படும் இது, பவர்ஃபுல் BS-6 இன்ஜின் - சிறப்பான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியில் சுண்டியிழுக்கிறது.

இது ஹேரியரின் இதர திறமைகளுடன் (இடவசதி, சிறப்பம்சங்கள், ஸ்டைல், பர்ஃபாமன்ஸ்) கச்சிதமாகக் கைகோர்த்துள்ளது. ஓட்டுதலில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை என்றாலும், அது மோசமாக அமைந்துவிடவில்லை அனேகமாக இவற்றை, ஹேரியரின் அடுத்த ஃபேஸ்லிஃப்ட்டில் டாடா சரிசெய்யும் என நம்பலாம்.