Published:Updated:

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

போட்டி - வென்யூ vs எக்கோஸ்போர்ட் vs நெக்ஸான்

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

போட்டி - வென்யூ vs எக்கோஸ்போர்ட் vs நெக்ஸான்

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

துவரை 45,000 பேருக்கும் அதிகமாக ஹூண்டாய் வென்யூ காரை முன்பதிவு செய்துள்ளார்கள். இதில் 36 சதவிகிதம் பேர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை வாங்கியிருக்கிறார்கள். ட்ராஃபிக்கில் சிரமம் இல்லாமல் செல்ல ஆட்டோமேட்டிக்தான் சிறந்த வழியாக இருக்கும். ஃபோர்டு, ஹூண்டாய், டாடா என மூன்று பெட்ரோல் ஆட்டோமேட்டிக்குகளில் கால் வைத்தேன்.

ஒவ்வொரு காரிலும் ஒரு கியர்பாக்ஸ். வென்யூவில் இருப்பது விலை அதிகமான டூயல் கிளட்ச். எக்கோஸ்போர்ட்டில் நவீனமான டார்க் கன்வெர்ட்டர். நெக்ஸானில் விலை குறைவான AMT கியர்பாக்ஸ். இதில் எந்த மாடல், நம் பட்ஜெட்டுக்குள் நல்ல சொகுசான, சிரமமில்லா டிரைவிங்கைக் கொடுக்கிறது?

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

1. வென்யூவின் டேஷ்போர்டில் கன்ட்ரோல்கள்

கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளன.

2. கனெக்டட் தொழில்நுட்பத்தில் அதிக வசதிகள்.

3. இங்கிருப்பதிலேயே சன்ரூஃப் கொண்டது வென்யூதான்.

நகரத்துக்குள்...

வென்யூவில் இருக்கும் 1 லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின்தான் இங்கே சிறியது. ஆனால், டர்போசார்ஜர் மற்றும் டைரக்ட் இன்ஜக்‌ஷன் உதவியோடு 120bhp பவரையும் 17.2Kgm டார்க்கையும் தருகிறது. இதன் DCT கியர்பாக்ஸ், சிட்டியில் சத்தமில்லாத டிரைவிங் கொடுக்கிறது. த்ராட்டிலை லைட்டாக அழுத்தினாலே ரெஸ்பான்ஸ் பலமாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் கியர் மாறுவதே தெரிவதில்லை. லைட்டான ஸ்டீயரிங், நல்ல ரோடு விசிபிலிட்டி... டிராஃபிக்கில் வென்யூ கொஞ்சம்கூட கஷ்டப்படுத்தவில்லை.

எக்கோஸ்போர்ட்டின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், அதிக வேகங்களில் கில்லி. ஆனால் டிராஃபிக்கில் எந்த கியரில் இருக்க வேண்டும் என்று குழம்பி, கியரை மாற்றிக்கொண்டே இருக்கிறது. கியர்பாக்ஸ் இன்னும் ஸ்மூத்தாக இருந்திருக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மென்மையாக ஆக்ஸிலரேட்டரைக் கொடுத்து ஓட்டினால், இதன் ரெஸ்பான்ஸ் அடிபோலி. ஃபோர்டின் ஸ்டீயரிங் சுற்றி வளைத்து ஓட்டுவதற்கு செம! சஸ்பென்ஷனும் சொகுசோ சொகுசு. ஆனால் எக்கோஸ்போர்ட்டின் தடிமனான A பில்லர், விசிபிலிட்டியைப் பாதிக்கிறது. 17 இன்ச் வீல் மாடல்களில் டயர் அதிகமாகச் சேதமாவதால், ஃபோர்டு அதை நிறுத்தி விட்டது. தற்போது 16 இன்ச் வீல் மட்டுமே வருகிறது. நாங்கள் ஓட்டியதும் அதுவே!

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

1. எக்கோஸ்போர்ட்டில் மட்டும்தான்

பேடில் ஷிஃப்ட்டர்.

2. காம்பேக்ட் காரில் 6 காற்றுப்பைகள்!

3. ஆறு வருட டிசைன்... பார்க்க ஸ்போர்ட்டிதான்.

இந்த ஒப்பீட்டில் பின்தங்கியிருப்பது நெக்ஸான்தான். இதன் AMT, மற்ற கியர்பாக்ஸ் அளவுக்கு நவீனமானது கிடையாது. ரொம்பவே சிம்பிள். டிராஃபிக்கில் பயணிக்கும்போது தேவையில்லாமல் கியர் அப்ஷிஃப்ட் ஆவதும், பவர் காணாமல் போவதும் இதில் கடுப்பேற்றும் விஷயங்கள். டாடாவின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் ரெஸ்பான்ஸ் குறைந்த வேகங்களில் ரொம்பவே சுமார். பெரிய டிராஃபிக்கில் குறைவான வேகத்திலேயே நகர வேண்டும் என்ற நிலை வந்தால், மேனுவல் மோடில் ஓட்டுவது சிறந்த முடிவு. லைட்டான ஸ்டீயரிங்கும் சொகுசான சீட்டும் உங்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தலாம். ரியர்வியூ விசிபிலிட்டி போதவில்லை.

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

1. வெளிப்புறம் போலவே டாடாவின் கேபினும்

செம ஸ்டைலிஷ்.

2. டிரைவிங் மோடுகள், பர்ஃபாமன்ஸை மாற்றுகின்றன.

3. ரியர் ஏசி வென்ட்களில், புளோயர் கன்ட்ரோல் உண்டு...

நெடுஞ்சாலையில்....

பர்ஃபாமன்ஸ் மற்றும் சொகுசான டிரைவிங்கை, நெடுஞ்சாலையில்தான் நாம் அதிகம் எதிர்பார்ப்போம். வென்யூ மீண்டும் ஒரு பெரிய சர்ப்ரைஸ். பாந்தமாகச் செல்வதுபோல இருந்த வென்யூதான் இங்கு சுறுசுறுப்பான கார். 0-100 கி.மீ வேகத்தை வெறும் 11.90 நொடிகளிலேயே தொட்டுவிட்டது. எக்கோஸ்போர்ட் 13.22 நொடிகள் எடுத்துக் கொள்ள, நெக்ஸான் 15.18 விநாடிகளை எடுத்துக் கொண்டது. ஸ்போர்ட் மோடில் வேகமான ரெஸ்பான்ஸும், மேனுவல் மோடில் ஃபன்னான ரைடிங்கும் உறுதி. வென்யூவின் குறையாக இருப்பது இதன் ஸ்டீயரிங். 100 கி.மீ வேகத்தைத் தாண்டிச் செல்லும்போது ஸ்டீயரிங்கின் ஃபீல் போதுமானதாக இல்லை.

டிரைவருக்கான கார் என்றால், அது எக்கோஸ்போர்ட்தான். 16 இன்ச் வீல்களால் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் குறைந்திருந்தாலும், இதன் எலெக்ட்ரிக் அசிஸ்டன்ஸ், அதிக வேகங்களில் திரும்புவதற்கு நம்பிக்கை தருகிறது. 123bhp பவர் தரும் இந்த 1.5 லிட்டர் இன்ஜினில் சத்தமும் அதிகம்... சுறுசுறுப்பும் அதிகம். டிராஃபிக்கைக் கடந்தவுடன் ஸ்போர்ட் மோடைத் தேடி கை துடிக்கிறது. பேடில் ஷிஃப்டர்கள் கொடுத்திருப்பது குதூகலம்.

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

நெக்ஸான், அதன் ஓட்டுதல் தன்மையில் பல முறை நம்மை அசத்தியிருக்கிறது. இந்த முறையும் மாற்றம் இல்லை. அதிக வேகங்களில் சூப்பர். வேகமான சூழல்களில் மட்டுமே நெக்ஸான் தனது திறமையை வெளிப்படுத்துகிறது. ஆக்ஸிலரேட்டரை அழுத்தி பர்ஃபாமன்ஸ் கேட்கும் நேரத்தில், உடனடியாக கியரைக் குறைப்பதில் டாடாதான் டாப். ஆனால் AMT-யின் பலவீனமும் அப்போதே தெரியத் தொடங்குகிறது. கியர் கூட்டுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது இந்த கியர்பாக்ஸ். இதனால்தான் நெக்ஸானுக்கும், வென்யூக்கும் பெரிய பர்ஃபாமன்ஸ் இடைவெளி. 40-60 மற்றும் 60-80 கி.மீ வேகம் வரையில் நெக்ஸான்தான் லீடிங். ஆனால் 85 கி.மீ வேகம் தொட்டவுடன் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிடுகிறது.

எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர்

ஹூண்டாய் வென்யூவை மாடர்ன், க்ளாஸிக் என இரு ரசிகர்களுக்கும் பிடிக்கும். ஆனால் இதில் எஸ்யூவிக்கான கம்பீரம் மட்டும் இல்லை. காரின் உள்ளே நுழைந்ததும் எஸ்யூவி தெரியவில்லை... காம்பேக்ட் மட்டும்தான் தெரிகிறது. முன் சீட்டுகளை மிகவும் நெருக்கமாக வைத்துள்ளார்கள். சீட்டில் உட்கார்ந்தால், சொகுசில் பெரிய குறை தெரியவில்லை. சிம்பிளான டேஷ்போர்டு, பிடிக்கத் தோதாக இருக்கும் ஸ்டீயரிங், டேஷ்போர்டு பிளாஸ்டிக் எல்லாமே தரமானதுதான்.

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் இன்டீரியரும் அருமை. கதவைச் சாத்தும்போது வரும் ‘தடக்’ சத்தமே இதுதான் பில்டு குவாலிட்டியில் சிறந்த கார் என்பதைக் காண்பித்துவிடுகிறது. முன் சீட் ஸ்போர்ட்டி. டேஷ்போர்டில் இருக்கும் டேப்லெட் ஸ்டைல் டச் ஸ்கிரீன், காரின் லுக்கை உயர்த்துகிறது. பிளாஸ்டிக்ஸ் இன்னும் ப்ரீமியமாக இருந்திருக்கலாம்.வெளியே பெரிய கிரில்லும், உயரமான பானெட்டும் தோற்றத்தைப் பெரிதாக காட்டுகிறது. டெயில் கேட்டில் இருக்கும் ஸ்பேர் வீல், இது எஸ்யூவி என்பதைச் சொல்கிறது. இரண்டு ஆண்டுகள் ஆனாலும், நெக்ஸானின் டிசைன் ஃப்ரெஷ். டாடாவில் இருக்கும் இன்னொரு ட்ரம்ப் கார்டு இடவசதி. இங்கே இருப்பதிலேயே எஸ்யூவி என்ற பெயருக்கு ஏற்ப, அதிக இடவசதி கொண்ட கார் இதுதான். டேஷ்போர்டில் பேனல்களை இன்னும் சரியாகப் பொருத்தியிருக்கலாம். பின்பக்க இடவதியில் நெக்ஸானுக்கே முதல் பரிசு. லெக்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் இரண்டுமே தாராளம். சீட்டும் செம சொகுசு.

ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு இரண்டுமே, கேபின் அளவுகளில் தாராளம் காட்டவில்லை. இந்த கார்களில் பின் வரிசையில் இரண்டு பேர் மட்டுமே சொகுசாகச் செல்லலாம். பின் சீட்டில் ஆர்ம்ரெஸ்ட்கூட வென்யூவில் இல்லை.

வசதிகள்

மூன்று கார்களிலும் டாப் வேரியன்ட்டில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொதுவாக இருக்கிறது. ஆனால் வித்தியாசங்கள் நிறைய உண்டு. வென்யூவில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் வருகிறது. இதில் மொபைல் ஃபோனை வைத்தே காரை ஆன் செய்யும் ரிமோட் இக்னிஷன் மற்றும் ஏ.சியைக் கட்டுப்படுத்தும் க்ளைமேட் கன்ட்ரோல் வசதிகளைத் தவிர மற்ற கனெக்டட் வசதிகள் எதையும் பயன்படுத்திய ஞாபகம் இல்லை. 8 இன்ச் டச் ஸ்கிரீன் இருக்கிறது. ஹூண்டாய் ஏன் இந்த வேரியன்ட்டில் ரியர் வைப்பர் கொடுக்கவில்லை?

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

லெதர் சீட், ஆட்டோ டிம்மிங் மிரர், ஆட்டோ வைப்பர்ஸ், 6 காற்றுப்பைகள்... எக்கோஸ்போர்ட்டின் எக்ஸ்க்ளூசிவ் வசதிகள். ரியர் ஏசி வென்ட் மிஸ்ஸிங். அதை விடப் பெரிய குறை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கொடுக்காதது. முன்பு இருந்த 8 இன்ச்சுக்குப் பதிலாக 9 இன்ச் டச் ஸ்கிரீன் வைத்துள்ளார்கள்.

நெக்ஸானின் 6.5 இன்ச் டச் ஸ்கிரீன்தான் இங்கு சிறியது. மற்ற இரண்டையும்போல ஸ்மூத்தாகவும் இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றம் ஆப்பிள் கார்ப்ளே இரண்டும் உண்டு. செக்மென்ட்டிலேயே இது மட்டும்தான் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய கார் என்பது நெக்ஸானின் தனிச்சிறப்பு.

எந்த ஆட்டோமேட்டிக் வாங்கலாம்?

காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெயருக்கு டாடா நெக்ஸான் தகுதியான கார்தான். ஆனால் இது சிறந்த ஆட்டோமேட்டிக் கார் இல்லை. கொடுக்கும் காசுக்கு நெக்ஸானின் AMT சிட்டியில் சிறப்பாக இருந்தாலும், கொஞ்சம் விலை அதிகம் கொடுத்தால் இதைவிடச் சிறப்பான கியர்பாக்ஸ்கள் கிடைக்கின்றன.

ஆட்டோமேட்டிக்கில் இவங்க முக்கியமானவங்க!

எக்கோஸ்போர்ட் ஆட்டோமேட்டிக்கில் தற்போது ஒரே ஒரு வேரியன்ட் மட்டும்தான் விற்பனையாகிறது. இது விலை மலிவானதும் கிடையாது. ஆனால், டிரைவிங்கை ரசிப்பவர்களுக்கான ஒரே ஆப்ஷன் எக்கோஸ்போர்ட் மட்டுமே! ஸ்டீயரிங் அருமை. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கூட்டணியில் தனித்துவமான கேரக்டர். கியர்பாக்ஸ் இன்னும் ஸ்மூத்தாக இருந்திருக்கலாம். அராய் மைலேஜ் லிட்டருக்கு வெறும் 14.8 கி.மீ மட்டுமே கிடைக்கிறது (வென்யூ - 18.15 கி.மீ, நெக்ஸான்-17 கி.மீ).

வென்யூ ஒரு பெர்ஃபெக்ட் எஸ்யூவி இல்லை. ஆனால் சொகுசானது மற்றும் விரைவானது. எக்கோஸ்போர்ட் அளவுக்கு ஃபன் இல்லையென்றாலும், டிரைவர்களுக்கு சௌகரியம் நிச்சயம். இதுவும் விலை அதிகம்தான். ஆனால் வசதிகளில் நிச்சயம் ஏமாற்றாத வென்யூதான் இந்தப் போட்டியின் வெற்றியாளர்.