Published:Updated:

இந்தோனேஷியாவில் அறிமுகமாகியிருக்கும் க்ரெட்டா பேஸ்லிஃப்ட், இந்தியாவுக்கு எப்போது?

க்ரெட்டா பேஸ்லிஃப்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
க்ரெட்டா பேஸ்லிஃப்ட்

க்ரெட்டா பேஸ்லிஃப்ட்

க்ரெட்டாவின் 2022-க்கான அப்டேட்டாக புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்தி யிருக்கிறது ஹூண்டாய். ஆனால், இந்தியாவில் இல்லை, இந்தோனேஷியாவில். அங்கு வெளியான மாடலைப் பற்றி இங்கு ஏன் பேச வேண்டும் எனக் கேட்கிறீர்களா? ஹூண்டாய் இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தும் மாடலைத் தான் இந்தியாவுக்கும் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே, அதை ஒரு ரவுண்ட் பார்த்து விடுவோமே!

டிசைன்:

புதிய டூஸானை நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் முன்பக்க மாற்றங்கள். காரின் மொத்த முன்பக்கத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் பாராமெட்ரிக் கிரில்லைப் பயன்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். கிரில்லோடே சேர்த்து எல்இடி DRL-ம் கொடுக்கப்பட்டிருப்பதால், அதுவும் கிரில்லின் ஒரு பகுதி போலவே காட்சியளிக்கிறது.

ரஷ்யாவில் பயன்பாட்டில் இருக்கும் க்ரெட்டாவின் பின்பக்க டிசைனை அப்படியே இந்தோனேஷிாயவில் வெளியாகியிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உருவாக்கி இருக்கிறது ஹூண்டாய். ஷார்ப்பான டெயில் லைட்கள், கொஞ்சம் மாற்றி டிசைன் செய்யப்பட்ட பூட் லிட்கள் மற்றும் பம்பர் டிசைனைக்கூட கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள்.

புதிய வசதிகள் என்னென்ன?

உள்பக்கத்தைப் பொறுத்தவரை, முந்தைய க்ரெட்டா மாடலின் டிசைன் அப்படியே இருக்கிறது. ஆனால் சில புதிய வசதிகளை ஃபேஸ்லிஃப்ட்டில் சேர்த்திருக்கிறது ஹூண்டாய். அல்கஸாரில் இருப்பது போன்றே 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஹூண்டாயின் ப்ளூலிங்க் கனெக்டட் கார்டெக் வசதி ஆகியவற்றை ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். மேலும் பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், ஏர் ப்யூரிஃபயர் மற்றும் ADAS உண்டு.ஆனால், இவையெல்லாம் இந்தியாவில் வெளியாகும் மாடலிலும் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு எப்போது?

தற்போதைய க்ரெட்டாவில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் ஃபேஸ்லிஃப்ட்டிலும். தற்போது விற்பனையில் இருக்கும் க்ரெட்டாவை கடந்த ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹூண்டாய். எனவே, இந்தப் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

க்ரெட்டா பேஸ்லிஃப்ட்
க்ரெட்டா பேஸ்லிஃப்ட்