ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

கோலிக்கு ஆடி; தோனிக்கு ஜீப்! கிரிக்கெட் வீரர்களின் கார்கள்!

விஐபி கார்கள்: கிரிக்கெட்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விஐபி கார்கள்: கிரிக்கெட்டர்ஸ்

விஐபி கார்கள்: கிரிக்கெட்டர்ஸ்

சிலருக்குக் கார்கள் அத்தியாவசியத் தேவையாக இருக்கும்; சிலருக்கு கிரேஸாக இருக்கும். அத்தியாவசியத்தைத் தாண்டி… விஐபிகள் இதில் இரண்டாவது ரகம். அதுவும் கிரிக்கெட் வீரர்களுக்குச் சொல்லவே தேவையில்லை. கிரிக்கெட்டர்களுக்கு ரன் ரேட்தான் முக்கியம்; கார் ரேட் முக்கியம் இல்லை. அதாவது, கார்களின் விலையைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள்; தேவையும் இருக்காது. பொசுக் பொசுக்கென்று தங்கள் கராஜில் காஸ்ட்லி கார்/பைக்ஸை வாங்கி நிறுத்தி ரசிப்பார்கள். ‘லோக்கல் டிராவலுக்கு இது; வெளியூர்ப் பயணங்களுக்கு அது’ என்று பிரித்து வைத்துப் பயணிப்பார்கள். சினிமா ‘தல’ அஜித்துக்கு பைக்குகள் என்றால் எப்படி உயிரோ… அதேபோல கிரிக்கெட் ‘தல’ தோனிக்கும் கார்/பைக்ஸ் என்றால் உயிர். தோனி, தனது மகளுடன் காரை வாஷ் செய்வதுபோல் இன்ஸ்டாவில் ரீல் போட்டால், வியூஸ் அள்ளும்! அதேபோல், கோலி தனது ஆடி காரில் சாய்ந்து ஒரு போட்டோ போஸ்ட் போட்டால்… சோஷியல் மீடியாவே தெறிக்கும். லேட்டஸ்ட்டாக தனது புது பென்ஸ் பற்றி ரோஹித்சர்மா சொன்னதும் வைரல். இந்திய கிரிக்கெட்டர்களின் கராஜில்… என்னென்ன கார்கள் இருக்கின்றன என்பது பற்றிய சுவாரஸ்யமான லிஸ்ட் இதோ!

Audi RS5
Audi RS5
விராட் கோலி
விராட் கோலி

விராட் கோலி

இப்போதைக்கு இந்தியாவின் இந்த டெஸ்ட் மேட்ச் கேப்டன்தான், இந்தியாவின் மூன்றாவது பணக்கார விளையாட்டு வீரர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இவரது சொத்து மதிப்பு சுமார் 1,000 கோடிக்கு மேல் என்கிறார்கள். இதில் பல கோடிகளைப் புதுப் புது கார் வாங்குவதற்கென்றே செலவழிப்பார் விராட் கோலி. இப்போதைக்கு அவரது கராஜில் ஏகப்பட்ட கார்கள் இருக்கின்றன. ஆடி Q7 (1 கோடி), ஆடி RS5 (1.5 கோடி), லேண்ட்ரோவர் வோக் (2.5 கோடி), பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் (3.75 கோடி), பென்ட்லி கான்டினென்ட்டல் ஸ்பர் (4.5 கோடி) என்று கோடிகள் தொடும் கார்கள்தான் கோலியின் ஃபேவரைட்! லேட்டஸ்ட்டாக கோலியின் கராஜில் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி R8 கார் ஒன்றும் இணைந்திருக்கிறது. இதில் 5.7 லிட்டர் சக்தி கொண்ட V10 பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இதன் பவர் 570bhp; டார்க் 540 Nm. சக்தியும் பவரும் நெருங்கியிருப்பதால்… எந்த காரும் இதன் வேகத்துக்கு இணையாக நெருங்க முடிவதில்லை. பென்ட்லி, ஜாகுவார் என்று பல கார்கள் வைத்திருந்தாலும், கோலிக்கு ஆடி கார்கள்தான் ரொம்ப இஷ்டம். ஒருவேளை – ஆடியின் பிராண்ட் அம்பாஸடர் என்பதால் இருக்குமோ!

ஃபெராரி 599 GTO
ஃபெராரி 599 GTO
மகளுடன் காரைத் துடைக்கும் தோனி
மகளுடன் காரைத் துடைக்கும் தோனி
மஹேந்திர சிங் தோனி
மஹேந்திர சிங் தோனி

மஹேந்திர சிங் தோனி

தோனியின் கராஜைச் சுற்றி வருவதற்கே ஒரு கார் வேண்டும். அந்தளவு கார்களை நிறுத்தி வைத்திருக்கிறார் தோனி. ஹம்மர் எஸ்யூவியில் ஆரம்பித்து ஆடி Q7, மிட்சுபிஷி பஜேரோ, லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர், சில பல மஹிந்திரா ஸ்கார்ப்பியோக்கள், ஃபெராரி 599 GTO, நிஸான் ஜோங்கா, போன்ட்டியாக், மெர்சிடீஸ் பென்ஸ் GLE, ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஷேடோ, ஹிந்துஸ்தான் அம்பாஸடர் என்று வெரைட்டியாக கார்கள் வைத்திருக்கிறார் தோனி. இவை தவிர வின்டேஜ் கார்கள் மீதும் தோனிக்குத் தனி விருப்பம். எங்கேயாவது ஏலம் விட்டால்… அங்கே ‘அண்ணாமலை’ ரஜினி மாதிரி தோனியின் என்ட்ரி இருக்குமாம். அப்படித்தான் அமெரிக்க இறக்குமதியான போன்ட்டியாக் ஃபயர்பேர்டு மற்றும் 1971 லேண்ட்ரோவர் சீரிஸ் 3 கார்களைப் பெருத்த தொகைக்கு ஏலம் எடுத்திருக்கிறார். தோனிக்கு எஸ்யூவிகள் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டாம். லேட்டஸ்ட்டாக அவர் ஒரு எஸ்யூவியை தனது மகளுடன் சேர்ந்து துடைப்பது போன்ற ஸ்டில் சோ க்யூட் வைரல். இவரிடம் உள்ள நிஸான் ஜோங்கா கார் மேல் தோனிக்கு ஒரு தனி மரியாதை உண்டு. காரணம், இது ஸ்பெஷலாக இந்திய ராணுவத்துக்காகவே தயாரிக்கப்பட்ட கார். இந்த காரை W473 என்றும் அழைக்கிறார்கள். டாட்ஜ் M37 Weapon Carrier மாடலில் இருந்து இன்ஸ்பயர் செய்து பண்ணியிருக்கும் இது தோனிக்கு மிகவும் உயிர்.

லம்போகினி உருஸ்
லம்போகினி உருஸ்
ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
JEWEL SAMAD

ரோஹித் ஷர்மா

ரோஹித்துக்கு மைதானத்தில் ஹிட் மேன் என்றொரு பெயர் உண்டு. ஆனால், நிஜத்தில் இவரும் ஒரு கார் ஃப்ரீக் மேன். ODI மேட்ச்களில் 48.96 ஆவரேஜ் ஸ்கோர் வைத்திருக்கும் ரோஹித்தின் கராஜிலும் ஆவரேஜாக பல லக்ஸூரி கார்கள் உண்டு. டொயோட்டா, பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ், ஸ்கோடா, லம்போகினி என்று சில கார்கள் இருந்தாலும்… ரோஹித்தின் செமயான ஃபேவரைட் கார் பிஎம்டபிள்யூ M5 கார்தானாம். தனது டிரீம் கார் என்று இதை ஒரு பேட்டியில் ஓப்பனாகவே சொல்லியிருந்தார் ரோஹித். மும்பைக்குள் எங்கு போனாலும் இந்த பிஎம்டபிள்யூ M5–ல்தான் பயணம். 560bhp பவரும் 680 Nm டார்க்கும் கொண்ட இந்த V8 இன்ஜின் பிஎம்டபிள்யூ M5–ல் பறப்பது அலாதியான சுகம் என்பார். இதுபோக, பென்ஸின் GLS 350D எனும் கறுப்பு நிற எஸ்யூவியும் வைத்திருக்கிறார் ரோஹித். 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் காரான இதன் பவர் 255bhp மற்றும் 620Nm டார்க். 7.8 விநாடிகளில் இது 100 கிமீ–யைக் கடக்கும். ரோஹித் ஷர்மாவின் லேட்டஸ்ட் செல்லம், லம்போகினி உருஸ் எஸ்யூவி. 12.8 விநாடிகளில் 200 கிமீ–யைக் கடக்கும் இந்த உருஸை விரட்ட சாலை இல்லை என்கிறார் ரோஹித். இதன் டாப் ஸ்பீடு 305 கிமீ. உருஸ், பிஎம்டபிள்யூ – இவை ஓட்டாத நாட்களில் மும்பைக்குள் ரோஹித்தின் ரவுண்ட் – டொயோட்டா ஃபார்ச்சூனரில்தானாம். இது தவிர, ஸ்கோடா லாராவும் வைத்திருக்கிறார் ரோஹித்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவின் கதை, இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி. பொருளாதார ரீதியாக மிகவும் போராடி வந்த ஹர்திக் பாண்டியா, இப்போது கோடிகளில் கார்களை வாங்கிக் குவிக்கிறார். பாண்டியா, நம்பர் ஒன் கிரிக்கெட்டர்களில் முக்கியமான ஒருவர். கோலிக்கே ஐடியா கொடுத்து மோட்டிவேட் செய்து மேட்ச்சை ஜெயிக்க வைப்பது என்றால் சும்மாவா? அப்படிப்பட்ட பாண்டியாவும் கார் காதலன்தான். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டரான பாண்டியா…. கார்கள் விஷயத்திலும் ஆல்ரவுண்டர்தான். பேட்டிங், பவுலிங்கில் மட்டுமில்லை; கார்களிலும் வேகம் பிடிக்கும் பாண்டியாவுக்கு. அதனாலேயே ஏஎம்ஜி கார்கள் மீது தனிப்பிரியம். மெர்சிடீஸ் AMG G63 கார்தான் பாண்டியாவின் ஃபேவரைட் கார். இதன் விலை சுமார் 2.6 கோடி ரூபாய். தனது செல்ல மகனுடன் கார்களில் டிரைவ் போவது இவருக்கு மிகவும் பிடிக்கும். இந்த பென்ஸ் ஜி வேகன் தவிர – 70 லட்ச ரூபாய்க்கு ஆடி A6, லம்போகினி ஹுரேகான் (4.20 கோடி), ரேஞ்ச்ரோவர் வோக் (2.15 கோடி), 6.8 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் என்று காஸ்ட்லி கார்களுக்குச் சொந்தக்காரர். லோக்கலாகச் சுற்றி வர ஜீப் காம்பஸ் கார் ஒன்றும் வைத்திருக்கிறார் பாண்டியா. இது தவிர, வெளிநாடுகளுக்கு ட்ரிப் அடித்தால்… அங்கே சூப்பர் கார்களை வாடகைக்கு எடுத்தாவது ஓட்டுவது பாண்டியாவின் ஸ்டைல்.

போர்ஷே கேமேன்
போர்ஷே கேமேன்
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கோலியும் ரோஹித்தும் கை கொடுக்காத வேளையில், தினேஷ் கார்த்திக்கை நம்பித்தான் இப்போது இந்திய டீமே இருக்கிறது. சுத்தத் தமிழனான தினேஷ் கார்த்திக், விகடன் விருது விழாவில் இந்திய டீமுக்காக வெளிநாட்டில் இருந்த வேளையில், வீடியோ கால் மூலம் தனது தாயை வைத்து விருதை வாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. தினேஷும் கார் பிரியர்தான். தினேஷுக்கு எஸ்யூவிகளைவிட ஸ்போர்ட்ஸ் கார்கள் மீதுதான் பிரியம் போல! இவரது கலெக்ஷனில் ஸ்போர்ட்ஸ் கார்கள்தான் கெத்து காட்டுகின்றன. முக்கியமாக, ஜெர்மன் நிறுவனமான போர்ஷே மீதுதான் தினேஷுக்கு ஒரு கண்; இல்லை இரண்டு கண்களும்! அதனால்தான் இரண்டு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்களை முக்கியமான செல்லங்களாக வைத்திருக்கிறார். ஏற்கெனவே போர்ஷே ஸ்பீட்ஸ்ட்டர் என்றொரு காரின் உரிமையாளர் தினேஷ். இப்போது மறுபடியும் ஒரு போர்ஷே கேமேன் காரின் ஓனராகி இருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 1.9 கோடி ரூபாய். 300bhp பவர் கொண்ட இந்த கேமேன் கார், அழகில் ஏஞ்சல் என்றால்… வேகத்தில் பீஸ்ட். கொடுக்கும் காசை எப்படி ஒர்த் ஆக்குவது என்று தனக்குத் தெரியும் என்கிறார் தினேஷ் கார்த்திக். அதனால்தான் இந்த போர்ஷே கார்களை வைத்திருப்பதாகச் சொல்கிறார். ஸ்குவாஷ் வீராங்கனையான இவரது மனைவி தீபிகா பல்லிகலும் ஒரு கார் பிரியைதானாம். சென்னையில் அழகான வீட்டில், தனது அழகான மனைவியுடன் லோக்கல் பயணம் செல்ல வேண்டுமென்றால், ஒரு டாடா ஹேட்ச்பேக் காரில்தான் செல்வாராம் தினேஷ் கார்த்திக்.

ரோல்ஸ்ராய்ஸ்
ரோல்ஸ்ராய்ஸ்
ரவிச்சந்திரன் அஷ்வின்
ரவிச்சந்திரன் அஷ்வின்

ரவிச்சந்திரன் அஷ்வின்

ஒரு ஆஸ்திரேலியா மேட்ச்சில், தினேஷும் அஷ்வினும் சேர்ந்து… ‘மச்சி.. ஆஃப்ல போடுறா… லெக் ஸ்பின்ல விக்கெட் தூக்குடா’ என்று இருவரும் ஆஸ்திரேலிய வீரர்களுக்குப் புரியாத வகையில் பேசி… விக்கெட் தூக்குவது செம இன்ட்ரஸ்டிங். கேரம் பாலுக்கு ஃபெமிலியரான அஷ்வினை அடிக்கடி ஒரு ஆடி Q7 எஸ்யூவியில் பார்க்கலாம். ஆடி Q7தான் தனது செல்லம் என்பார் அஷ்வின். இந்த 95 லட்ச ரூபாய் எஸ்யூவிக்கு அடுத்து, கொஞ்ச நாட்களுக்கு முன்பு தனது ஸ்டேட்டஸைச் சொல்லும்விதமாக, யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார் அஷ்வின் ரவிச்சந்திரன். ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் இது எந்த மாடல் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. சிலர் இந்த காரின் மதிப்பு சுமார் 6 கோடி என்றும்; சிலர் 9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார் அஷ்வின் என்றும் தகவல்கள் கலந்து கட்டி வருகின்றன. Wraith, Spectre, Cullinan, Ghost, Phantom என்று சில மாடல்கள் ரோல்ஸ்ராய்ஸில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதில் Wraith மாடல்தான் சுமார் 5 கோடிக்கு ஆரம்ப மாடல். அநேகமாக, அஷ்வின் ரோல்ஸ்ராய்ஸில் Ghost மாடல் வாங்கியிருக்கலாம். இந்த இரண்டு காஸ்ட்லி கார்களைத் தவிர, அஷ்வினின் கராஜில் பெரிதாக கார்கள் இல்லை என்பது தகவல்.

ஆடி R8
ஆடி R8
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

போன ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஒற்றை ஆளாக, பஞ்சாப் அணியைத் தாங்கியவர் கேஎல் ராகுல். இப்போது லக்னோ டீமின் கேப்டன். நடப்பு டி20 மேட்ச்சில் ரோஹித்துடன் ஓப்பனிங் வைத்து ராகுல் அடித்தால்.. பந்து விண்ணைத் தாண்டிப் பறக்கும். அதேநேரம் கேஎல் ராகுல் கார் ஓட்டினால்… `வ்வ்ர்ர்ரூம்’ என சாலையைத் தாண்டிப் பறக்கும். பெங்களூருவில் பிறந்த ராகுல், ஒரு எஸ்யூவி பிரியர். வேகம் பிடித்தாலும், எஸ்வியூகளின் கட்டுமஸ்தான தோற்றமும், செயல்பாடும் தன்னை மனம் மயக்குவதாகச் சொல்கிறார். இவரின் கராஜில் எஸ்யூவிகளும் நிறைய உண்டு. 1 கோடி ரூபாய் மதிப்பில் பிஎம்டபிள்யூ X7, ஒண்ணே கால் கோடி ரூபாய் மதிப்பில் பென்ஸ் GLS, ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு ரேஞ்ச்ரோவர் வெலர் என்று ராகுலின் கலெக்ஷன்களில் எஸ்யூவிகளாகவே சிரிக்கின்றன. அதற்காக ஸ்போர்ட்ஸ் கார்கள் பிடிக்காமல் இல்லை; இல்லாமலும் இல்லை. 3 கோடி ரூபாய் மதிப்பில் ஆஸ்ட்டன் மார்ட்டின் DB11 எனும் ஸ்போர்ட்ஸ் காரை வைத்திருக்கிறார் கேஎல் ராகுல். 5.2 லிட்டர் V12 இன்ஜின் கொண்ட இது, 0–100 கிமீ–யை அவரின் பேட்டிங் போலவே வெறும் 3.1 விநாடிகளில் கடக்கும். கிரிக்கெட்டர்களுக்கு லம்போகினி மேல் என்ன கிறக்கமோ… ராகுலிடமும் ஒரு லம்போகினி ஹுராகான் ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் கார் இருக்கிறது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய். இது 2.6 விநாடிகளில் 100 கிமீ–யைக் கடக்கும். மேலும் 2.5 கோடிக்கு ஆடி R8 காரும் வைத்திருக்கிறார். ராகுலிடம் இருக்கும் விலை குறைந்த கார் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்தான். இது தவிர லேட்டஸ்ட்டாக 75 லட்ச ரூபாய்க்கு பென்ஸ் C43 காரும் வாங்கியிருக்கிறார். கூடவே, தனது இன்ஸ்டா பக்கத்தில் டாடா நெக்ஸான் காருக்கு ப்ரொமோஷனும் செய்து வருகிறார் ராகுல்.

பிஎம்டபிள்யூ M8
பிஎம்டபிள்யூ M8
ஷிகர் தவான்
ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஐபிஎல் மேட்ச்சில் டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பாக திவான் அடித்த தொடர்ச்சியான 3 சதங்கள் யாராலும் மறக்கவே முடியாது. தலைநகர் டெல்லியில் வசித்து வரும் ஷிகர் தவானும், ஹை எண்ட் கார் பிரியர். இவரும் தனது கராஜில் லக்ஸூரி கார்களாக நிறுத்தி வைத்திருக்கிறார். அதில் மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச்ரோவர் எனப் பல கார்கள் அடக்கம். தவானும் ஒரு எஸ்யூவி பிரியராகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனவே 1 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பென்ஸ் எஸ்யூவி வைத்திருக்கும் தவான், லேட்டஸ்ட்டாக லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியை வாங்கி, அதில் வலம் வருவதை ஹாபியாகக் கொண்டிருக்கிறார். இதன் பவர் 510bhp மற்றும் 625Nm டார்க். இதன் மதிப்பு சுமார் 2.19 கோடி ரூபாய். இது தவிர ஸ்போர்ட்ஸ் கார்களும் தவானின் கராஜில் வீற்றிருக்கின்றன. அதில் 80 லட்ச ரூபாய்க்கு ஆடி A6, மேலும் 80 லட்ச ரூபாய்க்கு 255 bhp பவர் கொண்ட பிஎம்டபிள்யூ 6 GT (Grand Tourismo) இரண்டும் முக்கியமான செடான் கார்கள். இது தவிர, லேட்டஸ்ட்டாக பிஎம்டபிள்யூ M8 எனும் வெறித்தனமான கூபே ஸ்போர்ட்ஸ் காரை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் தவான். அட்வென்ச்சர் விரும்பியான தவான், அடிக்கடி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்போர் புலிகள் சரணாலயத்துக்குச் சென்று, அங்குள்ள ஜீப்பைக் கேட்டு வாங்கி ஓட்டி மகிழ்வாராம்.

மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் S560
மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் S560
ஜஸ்பிரிட் பும்ரா
ஜஸ்பிரிட் பும்ரா

ஜஸ்பிரிட் பும்ரா

ஐபிஎல் போட்டியில் மும்பை கப் அடித்தபோதெல்லாம், பும்ராவின் புயல் வேகப் பந்துவீச்சும் காரணமாக இருந்திருக்கும். பும்ராவின் பந்து வீச்சுக்குத் திணறாத பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. தனது பந்துவீச்சு மாதிரி பும்ரா, ஒரு வேகப் பார்ட்டி இல்லை. ரொம்பவே சாந்தமாக, மென்மையாக உரையாடுவார். அப்படிப்பட்ட பும்ராவின் கார் கலெக்ஷனும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அஹமதாபாத்தில் வசித்து வரும் பும்ராவின் கராஜில் 90 லட்ச ரூபாய் மதிப்பில் ரேஞ்ச்ரோவர், 2.12 கோடி ரூபாய் மதிப்பில் நிஸான் ஜிடி–ஆர் ஸ்போர்ட்ஸ் கார் போன்றவை மிக முக்கியமான காஸ்ட்லி கார்கள். லேட்டஸ்ட்டாக பும்ரா, தனது அஹமதாபாத் வீட்டிலிருந்து ஒரு டைட்டன் சிவப்பு நிற நீ…ளமான காரில் டிரைவ் போனதை பாப்பராஸிகள் வீடியோ எடுத்துப் போட… அது வைரலானது. பிறகுதான் தெரிந்தது – அது மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் S560 கார். பொதுவாக கிரிக்கெட்டர்கள் வெள்ளை அல்லது கறுப்பு நிற பென்ஸ் கார்களையே தேர்ந்தெடுப்பார்கள்; ஆனால் பும்ரா சிவப்பு நிற மேபேக் காரை 2.5 கோடிக்கு வாங்கியிருப்பதும் செய்தியானது. 4.0 லிட்டர் V8 இன்ஜினும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கொண்ட இந்த கார் வேகத்தில் மட்டுமில்லை; சொகுசிலும் உச்சம். பிரதமர்கள், அதிபர்கள் போன்ற விவிஐபிக்கள் தேர்ந்தெடுக்கும் இந்த மேபேக்கில்தான் இப்போது பும்ரா, குஜராத்தில் வலம் வருகிறாராம். இவற்றைத் தாண்டி சாதாரண கம்யூட்டிங் கார்களாக 8.5 லட்ச ரூபாய்க்கு மாருதி டிசையர், 16 லட்ச ரூபாய் ஹூண்டாய் வெர்னா, 15 லட்ச ரூபாய்க்கு டொயோட்டா எட்டியோஸ், 26 லட்சத்துக்கு டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா போன்ற பட்ஜெட் கார்களும் வைத்திருக்கிறார் பும்ரா.

லம்போகினி ஹுராகான்
லம்போகினி ஹுராகான்
ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்

போன ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவுக்கு ரஸலுக்குப் பிறகு, பெரிய தூண் என்றால் அது ஷ்ரேயாஸ் ஐயர். கேப்டனாக இருந்து கொல்கத்தாவைச் சிறப்பாக வழி நடத்திய ஷ்ரேயாஸ், அடிக்கடி செய்திகளில் அடிபடுவார். எப்படி என்றால்… ஏதாவது ஒரு சிறப்பு நாளன்று ஏதாவது ஒரு ஷோரூமில்… ஏதாவது ஒரு லக்ஸூரி காரை வாங்கியபடி போஸ் கொடுப்பார் ஷ்ரேயாஸ் ஐயர். லேட்டஸ்ட்டாக ஒரு பென்ஸ் ஏஎம்ஜி காரை வாங்கியிருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரின் போட்டோ வைரல் ஆனது. இந்த பென்ஸ் ஏஎம்ஜி G சீரிஸ் மாடல், வேகத்துக்குப் பெயர் பெற்றது. ஷ்ரேயாஸ் வாங்கியிருப்பது இந்த பென்ஸ் AMG G63 4Matic சீரிஸின் டாப் எண்ட் மாடல். வெறும் 4.3 விநாடிகளில் 0–100 கிமீ–யைக் கடக்கும் இந்த ஏஎம்ஜி மாடல், சொகுசுக்கும் பெயர் பெற்றது. இது தவிர ஆடி S5 எனும் ஸ்போர்ட்ஸ் காரும் 1 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயர் வைத்திருக்கிறார். இதன் டாப் ஸ்பீடு 250 கிமீ. இது 3.9 விநாடிகளுக்குள் 0–100 கிமீ–யைக் கடக்கும். மும்பையில் அடிக்கடி இந்த ஆடி S5-ல் ‘வ்வ்ர்ர்ரூம்’ என ஷ்ரேயாஸ் பறப்பதைப் பார்க்கலாம். இது தவிர, வழக்கம்போல கிரிக்கெட்டர்களின் ஃபேவரைட்டான லம்போகினி ஹுராகான் காரும் வைத்திருக்கிறார் ஐயர். 3.8 கோடி ரூபாய்க்கு இதை வாங்கியிருக்கிறாராம் ஷ்ரேயாஸ். 5.2லிட்டர் V10 பெட்ரோல் இன்ஜினும், 631bhp பவரும், 601Nm டார்க்கும் கொண்ட இந்த லம்போகினி கார், கிட்டத்தட்ட 324 கிமீ டாப் ஸ்பீடில் பறக்கும். 0–100 கிமீ–க்கு வெறும் 2.9 விநாடிகள்தான் ஆகும். மும்பையில் லோக்கலாகச் சுற்றுவதற்கு, ஹூண்டாய் ஐ20 கார் வைத்திருக்கிறார். இதை மாடிஃபிகேஷன் செய்து மும்பையில் வலம் வருவாராம். இதுதான் ஷ்ரேயாஸ் ஐயர், தனது சம்பளத்தில் வாங்கிய முதல் காராம்.