ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஃபியட்டின் பேபி டீசல் இன்ஜின்... இனி அவ்வளவுதானா?

ஃபியட் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபியட் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட்

சமர்ப்பணம்: ஃபியட் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட்

சச்சின் ஓய்வு பெற்றபோது கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வளவு கவலைப்பட்டார்களோ, ‘இனி விளையாட மாட்டேன்’ என பீலே சொன்னபோது, கால்பந்து ரசிகர்கள் எவ்வளவு கவலைப்பட்டார்களோ...

அதைவிட வருத்தம் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு இப்போது. ஆம்! ஸ்விஃப்ட்டிலும், புன்ட்டோவிலும், எர்டிகாவிலும், பிரெஸ்ஸாவிலும் நாம் ஓட்டி மகிழ்ந்த ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின், இனி எதிலும் வராது. அதாவது எண்ட் கார்டு போட்டுவிட்டார்கள்!

இதில் 2,000rpm வரை கொஞ்சம் டர்போ லேக் இருக்கும்தான். ஆனால்... அதைத் தாண்டி 5,000 rpm வரை கிடைக்கும் இதன் மிட் ரேஞ்சும், டாப் எண்டும் இருக்கிறதே... இந்த ஃபீலிங், மல்ட்டிஜெட் இன்ஜினை ஓட்டுபவர்களுக்குத்தான் புரியும். ‘‘என்ன.. லேசா ஆக்ஸிலரேட்டர மிதிச்சாலே கார் பறக்குதே’’ எனப் புதிதாய் கார் வாங்குபவர்களையும் சிலாகிக்க வைத்ததுதான், இந்த இன்ஜின் செய்த அழகான வித்தை.்தான் புரியும். ‘‘என்ன.. லேசா ஆக்ஸிலரேட்டர மிதிச்சாலே கார் பறக்குதே’’ எனப் புதிதாய் கார் வாங்குபவர்களையும் சிலாகிக்க வைத்ததுதான், இந்த இன்ஜின் செய்த அழகான வித்தை.

2.0 லிட்டர், 3.0 லிட்டர் எனப் பெரிய டீசல் இன்ஜின் கொண்ட கார்களே அப்போது பிரபலமான வேளையில், குறைவான 1,248 சிசி-யில் அதே அளவுக்கதிகமான டார்க், மிட் ரேஞ்சில் பட்டையைக் கிளப்பும் பர்ஃபாமன்ஸ்... அதைவிட முக்கியமாக மைலேஜ்... இவை அனைத்திலுமே எந்தக் குறையையும் வைக்காமல், 2007-ல்தான் முதன்முறையாக மாருதி சுஸூகியின் ஸ்விஃப்ட் காரில் இந்த ஃபியட்டின் இன்ஜின் சாலைக்கு வந்தது.

ஃபியட் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட்
ஃபியட் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட்

ட்ரக்குகளில் இருந்து பெறப்பட்ட சாதாரண Di இன்ஜின்கள் (Direct Injection) அதிரவும் சத்தம் போடவும் செய்தவேளையில், காமன்-ரெயில் டைரக்ட் இன்ஜெக்ஷன் (CRDI) - என்று மல்ட்டிஜெட்டில் சில தனித்துவங்களைப் புகுத்தியது ஃபியட். அதாவது ஒவ்வொரு பவர் ஸ்ட்ரோக்குக்கும் எரிபொருளைச் செலுத்த பல இன்ஜெக்டர்கள், அதிக அழுத்தத்தில் சிறப்பாக வேலை செய்ய... இன்ஜின் செம ஸ்மூத். மைலேஜும் அடிவாங்கவில்லை. அதனால்தான் MultiJet என்று ஃபியட் இதற்குப் பெயர் வைத்தது.

மாருதி சுஸூகிதான் ஃபர்ஸ்ட்

உலகளவில் ஃபியட்தான் இந்த இன்ஜினுக்குப் பிள்ளையார் சுழி போட்டது. ஆனால் நம் ஊரைப் பொறுத்தவரை, அந்தப் பெருமை மாருதி சுஸூகியையே சேரும். முதல் தலைமுறை ஸ்விஃப்ட் 2007-ல் வெளியானபோது, அதற்குப் பெயர் வாங்கிக் கொடுத்ததே இந்த 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் இன்ஜின்தான். 19.4 kgm டார்க்கும், 75bhp பவரும், பெட்ரோல் கார் போன்ற இதன் ரெவ்விங் திறனும், ஸ்விஃப்ட்டை ஓட்ட ஓட்ட பிடித்துப் போனது மக்களுக்கு. மைலேஜிலும் கையைக் கடிக்கவில்லை ஸ்விஃப்ட். ‘‘எனக்கு 17 தான் தருது... உங்களுக்கு 18 தருதா.. எப்படி?’’ என்று வடிவேலு - சிங்கமுத்து போலச் சண்டை போட்டவர்களெல்லாம் உண்டு. பர்ஃபாமென்ஸிலும் சொல்லியடித்தது இந்த இன்ஜின். 13.87 விநாடிகளில் 100 கி.மீ-யைத் தொட்டது ஸ்விஃப்ட் டீசல். இதற்காகவே பெட்ரோல் காரைவிடச் சுமார் 70,000 ரூபாய் அதிகமாகக் கொடுக்கவும் தயங்கவில்லை வாடிக்கையாளர்கள்.

ஆரம்பத்தில் மாருதி சுஸூகிக்கு ஒரே வருத்தம் - ஹைடெக்கான இந்த இன்ஜினின் விலை கட்டுப்படியாகவில்லை. அதனால் 2,500 கோடி செலவில், மானேஸரில் இன்ஜின் தொழிற்சாலையை அமைத்தது. இன்ஜினின் விலையைக் குறைக்க ஏதுவாக, 5 C-க்களை (CrankShaft, CamShaft, CylinderHead, CylinderBlock, ConnectingRod) பாஷ் போன்ற உள்நாட்டுக் கம்பெனிகளிடம் இருந்து வாங்கியது மாருதி சுஸூகி. இந்த நேரத்தில் ஃபியட்டும் தனது மல்ட்டிஜெட் இன்ஜின் தயாரிப்பைத் தனது ரஞ்சன்கோன் ஆலையில் தொடங்க, சுஸூகியும் ஃபியட்டும் இணைந்து மல்ட்டிஜெட்டை மல்ட்டிப்பிள் செய்தன.

ஏகப்பட்ட பவர்...

அதன் பிறகுதான் பவரில் வெரைட்டி காட்டியது ஃபியட். இதற்கு ஃபியட்டின் சுயநலமும் ஒரு காரணம். ஆம், மாருதி சுஸூகி கார்களைவிட எடை அதிகமானவை ஃபியட் கார்கள். உதாரணத்துக்கு, இந்த நிறுவனத்தின் கிராண்டே புன்ட்டோ, ஸ்விஃப்ட்டைவிட 50 கிலோ எடை அதிகம். அதனால் 75bhp, 90bhp, 95bhp, 105bhp என்று பவர்ஃபுல் மல்ட்டிஜெட்கள் சர்வதேச சந்தைகளில் களமிறங்கின. அதன் பிறகு பர்ஃபாமென்ஸில் நடந்தது மாயாஜாலம்தான். டியூனிங் பாக்ஸ் கொண்ட ஸ்விஃப்ட், 0-100 கிமீ-க்கு வெறும் 11.9 விநாடிகள்தான் எடுத்தது. 1,195 கிலோ எடை கொண்ட விட்டாரா பிரெஸ்ஸாவோ - ஸ்விஃப்ட்டுக்கு இணையாக வெறும் 12.96 விநாடிகளில் 100 கி.மீ-யைக் கடந்தது. வேரியபிள் ஜியோமெட்ரி டர்போவைப் பொருத்தி, பிஸ்டன் ரிங்குகளில் மாற்றம் செய்ததால்தான் இந்தத் தெறி பர்ஃபாமென்ஸ்.

டாடாவும் வந்தது...

உண்மையில் இந்த மல்ட்டிஜெட்டால் அதிகம் பலன் அடைந்தது டாடாதான். ஃபியட்டின் ரஞ்சன்கோன் தொழிற்சாலையை 50:50 ஒப்பந்தமாக்கிக் கொண்டது டாடா. ஃபியட் தயாரிப்புகள் போக, டாடாவின் 50 சதவிகிதத்தில் மட்டுமே 1 லட்சம் மல்ட்டிஜெட் இன்ஜின்கள் வெளிவந்தன. இண்டிகா விஸ்டா பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குட்டி காரான இதை ஓட்டினால், ஏதோ பவர்ஃபுல் கார் ஓட்டுவதுபோலவே இருக்கும். காரணம், இந்த மல்ட்டிஜெட் இன்ஜின். அதன் பிறகு மான்ஸா, போல்ட், ஜெஸ்ட் என்று மாருதி சுஸூகி போலவே இங்கும் பல கார்களுக்கும் வாழ்க்கை கொடுத்தது மல்ட்டிஜெட்.

எடை சிறுசு; மவுசு பெருசு!

இப்போது வரை 24 மாடல் கார்கள், மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினோடு பறந்து கொண்டிருக்கின்றன. காரணம், ஹேட்ச்பேக்குகளுக்குக்கூட செட் ஆகும் இதன் எடை குறைந்த வடிவமைப்புதான். உறுதியான இரும்பு பிளாக்குகள் கொண்டிருந்தபோதும், இந்த இன்ஜினின் மொத்த எடையே வெறும் 130 கிலோதான். 50 செ.மீ நீளம்/65 செ.மீ உயரம் என காம்பேக்ட்டான அளவுகோலும் இதன் ப்ளஸ். இதற்கு இன்னொரு காரணம், இதன் 3 சிலிண்டர் செட்-அப்பும்தான். சுமார் 1,000 கிலோ மட்டுமே எடை கொண்ட செவர்லே பீட்டில் இருந்ததும் இந்த 3 சிலிண்டர் மல்ட்டிஜெட்தான்.

ஃபியட்டின் பேபி டீசல் இன்ஜின்... இனி அவ்வளவுதானா?

செவர்லேவும்...

‘அண்ணன் எப்படா எந்திப்பான்; திண்ணை எப்படா காலியாகும்’ என்பதுபோல், டாடாவின் கான்ட்ராக்ட் முடியக் காத்திருந்ததுபோல, செவர்லேவும் தன் பங்குக்கு ‘பச்சக்’ என ஃபியட்டுடன் ஒப்பந்தம் போட்டது. தலேகான் தொழிற்சாலையில் 3 சிலிண்டர் மல்ட்டிஜெட்டை சொந்தமாகவே தயாரிக்க ஆரம்பித்துவிட்டது செவர்லே. ஆனாலும் செயில், செயில் யுவா, என்ஜாய் என்று இதன் கார்கள் வரிசையாக தோல்வியையே தழுவியது வருத்தம். இப்போது செவர்லேவே இல்லை என்பது அதைவிடப் பெரிய சோகம். ஃபியட்டின் ஒரிஜினல் பார்ட்னரான ப்ரீமியரும் இதில் கையைச் சுட்டுக்கொண்டது. தனது காம்பேக்ட் எஸ்யூவியில் மல்ட்டிஜெட் இன்ஜின் இருந்தும், சுமாரான சர்வீஸ் நெட்வொர்க்கால் ப்ரீமியர் ரியோவும் எடுபடாமல் போனது.

திரும்ப வருமா?

சுற்றுச்சூழலுக்கு உகந்த BS-6 கட்டுப்பாடு மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், இந்த 1.3 லிட்டர் மல்ட்டிஜெட்டைக் காலி செய்தது ஏமாற்றம்தான். ‘ஏன், இந்த மல்ட்டிஜெட் இன்ஜினிலேயே BS-6 கொண்டு வர வாய்ப்பில்லையா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த BS-6 மல்ட்டிஜெட் ஐரோப்பாவில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில்...? ‘இனிமேல் எங்கிட்ட காசு இல்லடா’ என்று கவுண்டமணிபோல் கையை விரித்து விட்டது மாருதி சுஸூகி. ஆம், இதற்கான உரிமத் தொகையை நினைத்துப் பயந்துவிட்டது. இது தவிர டாடா (BS-6 Revotorq), மாருதி (1.5 DDiS) என்று மற்ற நிறுவனங்கள் சொந்தமாகவே டீசல் இன்ஜின் தயாரிப்பில் இறங்கிவிட்டதால், மல்ட்டிஜெட்டுக்கு மவுசு குறைந்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றும். ஆனால், இந்தியாவில் 30 லட்சம் கார்கள் ஓடிக் கொண்டிருப்பது இந்த ஃபியட்டின் பேபி டீசல் இன்ஜினில்தான் எனும்போது, ஃபியட் தலை நிமிரலாம்.