ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
News
டிக்‌ஷ்னரி

இது DOC எனப்படும் Diesel Oxidation Catalyst எனும் அமைப்புடன் சேர்ந்து இயங்கும்.

BS - 6 பெட்ரோல் காரா அல்லது டீசல் காரா... என்ற கேள்விக்கான விடையை, வாகன புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகள், மாற்றியிருக்கின்றன.

இன்னொருபுறம், பெட்ரோல் - டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம் குறைந்து வருவதால் (7 ரூபாய்தான்), பெட்ரோல் கார்களுக்கான வரவேற்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், புதிய டீசல் கார்களின் விற்பனை 85% சரிவைக் கண்டதே அதற்கான சாட்சி. இந்த நிலையில், BS-6 காரணமாக டீசல் கார்களின் விலை புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. இதனால் மாருதி சுஸூகி, ரெனோ - நிஸான், ஃபோக்ஸ்வாகன் - ஸ்கோடா போன்ற பல வாகன உற்பத்தியாளர்கள், புதிதாக டீசல் கார்களைத் தயாரிப்பதில் இருந்து விலகியிருக்கிறார்கள்.

BS-4, BS-6 என்ன வேறுபாடு?

சுருக்கமாகச் சொல்வதென்றால், BS-4 டீசல் காருடன் ஒப்பிடும்போது BS-6 டீசல் கார் 68% குறைவான NOx மற்றும் 93% குறைவான PM வெளிப்படுத்துகின்றன. ஒரு டீசல் கார் வெளியிடும் புகையில் உள்ள மாசின் அளவை இந்தளவுக்குக் கட்டுப்படுத்தும் பணியை, DPF - DOC - SCR - AdBlue போன்றவை செய்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் தேவையான எலெக்ட்ரானிக்ஸ் அமைப்பையும் சேர்த்தால், முன்பைவிட ஒரு BS-6 டீசல் காரின் விலையை சுமார் 14% வரை உயர்த்த வேண்டியிருக்கும்.

டிக்‌ஷ்னரி
டிக்‌ஷ்னரி

DPF - Diesel Particulate Filter

பெயருக்கேற்றபடியே, டீசல் கார் வெளியிடும் புகையில் இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் Particulate Matter-ன் அளவைக் குறைப்பதே DPF-ன் வேலை. இது DOC எனப்படும் Diesel Oxidation Catalyst எனும் அமைப்புடன் சேர்ந்து இயங்கும்.

இதுதான் புகையின் மாசைக் குறைப்பதில் முதல் படி. மிக நுண்ணிய அளவில் இருக்கக்கூடிய அந்த ஃபில்ட்டர், பிளாட்டினத்துக்கு நிகரான விலை கொண்ட இரும்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன், கார்பன் மோனோக்ஸைடு, எரிக்கப்படாத டீசல், ஆயில் போன்றவை, இந்த ஃபில்டரைத் தாண்டித்தான் செல்லும். இந்தக் கலவை காற்றுடன் சேரும்போது, அதன் நச்சுத்தன்மை குறைந்துவிடும்.

DOC-யில் இருந்து வெளியே செல்லும் வாயு DPF-யை வந்தடையும். இதிலும் DOC போலவே நுண்ணிய செராமிக் ஃபில்டர் உண்டு. கூடவே Cordierite எனும் மினரலும் DPF-ல் அடக்கம். ஆனால் DOC ஃப்ரீ ஃப்ளோ பாணியில் இருந்தால், DPF Wall Flow Filter-யைக் கொண்டுள்ளது. எனவே DOC-யில் ஃப்ரி ஃப்ளோ ஃபில்டரைத் தாண்டிச் செல்லும் புகை, நுண்ணிய வலையை எட்டும்.

டிக்‌ஷ்னரி

இதுவே DPF என்றால், Wall Flow Filter-யைத் தாண்டி வரும் புகை நுண்ணிய சுவரை வந்தடையும். எனவே ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், Soot-யை ப்ராசஸ் செய்வதே DPF-ன் தலையாய கடமை. இந்தப் பாகங்களின் வடிவமைப்பு, BS-6க்கான புதிய Particulate Matter Limit விதிகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே புகையிலிருக்கும் PM-யை, அந்த நுண்ணிய சுவர் தன்வசப்படுத்திக் கொள்ளும். ஆனால் Soot DPF-ல் தொடர்ந்து இருந்தால், இன்ஜின் புகை வெளியேறுவதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் இது இன்ஜினின் செயல்திறனைப் பாதிக்கும் என்பதுடன், புகை மாசின் வீரியமும் அதிகமாக இருக்கும். எனவே DPF தனது இயல்பு நிலையில் இயங்குவதற்கு, இரு முறையில் ரீ-ஜெனரேஷன் நடக்கும்.

Passive Regeneration: நிலையான வேகத்தில் காரை ஓட்டுநர் தொடர்ச்சியாக இயக்கும்போது, DPF 300 டிகிரி வெப்பநிலையில் இருக்கும். எனவே, அந்தச் சூட்டிலேயே Soot எரிக்கப்பட்டுவிடும். இது வழக்கமான இயக்கத்தின்போது அமலுக்கு வரும்.

Active Regeneration: DPF-ன் வெப்பநிலை Soot-யை எரிக்கப் போதாத சமயத்தில், ஃபில்டருக்குக் கொஞ்சம் டீசலை ECU அனுப்பும். இதனால் தேவையான வெப்பநிலை எட்டப்பட்ட பிறகு, அந்த இடைவெளியில் டீசல் எரியூட்டப்பட்டு, அதனால் ஏற்படும் கூடுதல் சூட்டினால் Soot எரிக்கப்படுகிறது. ஒருவேளை இது நடக்காவிட்டால், கொஞ்சம் தரமற்ற டீசலுக்கே இன்ஜின் சரியாக இயங்காது. தவிர தேங்கி நிற்கும் Soot, ஃபில்டரை அடைத்துக் கொள்ளும். எனவே இந்த ஃபில்டர் சுத்தமாகும்வரை, இன்ஜின் தற்காலிகமாக இயங்காது.

டிக்‌ஷ்னரி

SCR - Selective Catalytic Reduction

வாகனப் புகையிலுள்ள Particulate Matter-யை புறந்தள்ளுவதே DPFதான். இது சாம்பலாக அதனுள்ளே சேர்ந்துவிடும் என்பதால், கார் சர்வீஸ் செய்யப்படும் போது அது சுத்தம் செய்யப்படும். ஆனால் NOx-யை DPF கட்டுப்படுத்துவதில்லை என்பதுடன், நம் ஊரின் நெரிசல்மிக்க டிராஃபிக் மற்றும் தூசிமிகுந்த சாலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, SCR தனது இருப்பைக் காட்டுகிறது. உலகின் மேற்குப் பகுதியில் டீசலால் இயங்கும் கனரக வாகனங்களில் இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கிறது.

தற்போது காலத்தின் கட்டாயத்தால், அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகும் கார்களிலும் இவை இடம்பெறத் தொடங்கிவிட்டன. SCR-ன் செராமிக் ஃபில்டரில், சில விலை உயர்ந்த தாதுக்களின் கலவை இடம்பெற்றுள்ளது. இவை புகை மாசு Adblue-உடன் இணைபுரிவதை விரைவுபடுத்தும். ஜெர்மானிய ஆட்டோமொபைல் துறையின் அசோசியேஷன், AdBlue-க்கான உரிமையைப் பெற்றுள்ளது. எனவே AUS 32 விதிகளின்படி, இந்த அடீட்டிவ் மார்க்கெட்டிங் செய்யப்படுவது தெரிந்ததே.

டிக்‌ஷ்னரி

AdBlue

32.5% யூரியா மற்றும் 67.5% Distilled Water சேர்ந்ததுதான் AdBlue என அழைக்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்தும் கிருமி நாசினி மற்றும் பூச்சிக் கொல்லிகளில் இருக்கும் அதே கலவைதான் என்பதால், AdBlue மக்கும் தன்மைமிக்க, நச்சுத்தன்மையற்ற, தீ பற்றிக் கொள்ளாத தன்மையைக் கொண்டுள்ளது.

வழக்கமாக பெட்ரோல் டேங்க் மூடிக்கு அருகேயே, AdBlue டேங்க்கின் மூடியும் இருக்கும். பெயருக்கேற்றபடியே, AdBlue Tank நீல நிற மூடியைக் கொண்டிருக்கும். காரின் அளவுக்கேற்ப இந்த டேங்க்கின் அளவு 5-20 லிட்டர்கள் வரை இருக்கும்.

டிக்‌ஷ்னரி

காரை நாம் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து, AdBlue டேங்க்கை டாப் அப் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, ஜீப் காம்பஸ் ட்ரெய்ல் ஹாக்கில் இருக்கும் AdBlue டேங்கின் கொள்ளளவு 13 லிட்டர். இது தோராயமாக 7,000-10,000 கி.மீ வரை வரும். எனவே ஒரு அளவுக்குக் கீழே Adblue சென்றால், அது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் தெரிந்துவிடும். தவிர AdBlue கொண்ட இன்ஜின்கள், அது இல்லாமல் இயங்காது.

சரி, இது எப்படி செயல்படுகிறது...? SCR-க்குள்ளே ஒரு Dosing வால்வ் வழியே, ஒரு குறிப்பிட்ட அளவு AdBlue செலுத்தப்படும். இது புகை மாசு வரும் திசைக்கு எதிர்பக்கத்தில் அனுப்பப்படும். AdBlue-வில் இருக்கும் அமோனியா, NOx உடன் இணைபுரியத் தொடங்கும். இதன் வெளிப்பாடாக எக்ஸாஸ்ட்டின் வாயு நிலையிருந்து ஆவி நிலைக்கு வரும் NOx, நச்சுத்தன்மையற்ற நைட்ரஜன் மற்றும் தண்ணீராகப் பிரிக்கப்படும். இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

டிக்‌ஷ்னரி

இது எல்லாம் கேட்கவே சிக்கலா இருக்கே!

வழக்கமான பெட்ரோல் காரை ஓட்டுவது போலதான் BS-6 டீசல் காரும். இவையெல்லாம், பின்னணியில் சத்தமின்றி இன்ஜின் புகையின் மாசைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்யும். இருப்பினும் BS-4 டீசல் காரைவிட இவை கொஞ்சம் அதிக பராமரிப்புச் செலவு வைக்கும். விலையும் அதிகம். மாற்று எரிபொருள் - இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி - எலெக்ட்ரிக் வாகனங்கள் - தானாக இயங்கும் கார்கள் என ஆட்டோமொபைல் துறை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தரமான எரிபொருள்களும் கட்டுக்கோப்பான விதிகளும் அவசியம்தான்.

பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்கள் அதிக மைலேஜுடன் அதிக நச்சுப்புகையையும் தரவே செய்கின்றன. இந்த DPF, SCR, DOC, AdBlue காரணமாக, BS-6 டீசல் இன்ஜின்கள் முன்பைவிட அமைதியாகவும் ஸ்மூத்தாகவும் இயங்கும். ஆனால் இதனாலேயே, முன்பைவிட இன்ஜின்களின் பர்ஃபாமன்ஸ் வெளிப்படும்விதம் கொஞ்சம் தட்டையாக மாறியிருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனவே காரின் விலை அதிகமாகி இருந்தாலும், விலை மதிப்பில்லா சுற்றுச்சுழலின் மாசைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்யும் இந்த அமைப்புகளுக்கு, தாராளமாக ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்!