கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

ஃப்யூல் இன்ஜெக்‌ஷனில் இத்தனை சென்ஸார்களா?

டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
News
டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி / ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - விதிமுறைகள்

டந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனாவுடன் சேர்ந்து, நம் நாட்டுக்கு இந்த வாகன மாசு விதிகள் அமலுக்கு வந்தது தெரிந்ததே. இதற்கேற்ப தமது தயாரிப்புகளை வாகன உற்பத்தியாளர்கள் மேம்படுத்தியதன் விளைவாக, புதிய வாகனங்களின் விலை 10-20% முதல் வரை அதிகரித்ததைப் பார்க்க முடிந்தது.

கார்களைப் பொறுத்தவரை, பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் விலைதான் ஏகத்துக்கும் ஏறிவிட்டது. 10-20 லட்ச ரூபாய் விலையுள்ள கார்களில், ஒரு காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் 1.5 - 2 லட்ச ரூபாய் வரை வந்துவிட்டது! இதுவே டூ-வீலர்கள் என்றால், 100-110சிசி BS-6 வாகனங்களின் விலை, 125சிசி BS-4 வாகனங்களின் விலைக்கு இணையாகக் கிடைக்கின்றன. இதே நிலைதான், 150-160சிசி, 200சிசி பைக் செக்மென்ட்களிலும். இதனால் லாக்டவுனுக்கு முன்பாக பெரிய பைக் வாங்கும் முடிவில் இருந்த பலர், இதே காரணத்தால் திறன் குறைவான பைக்குகளுக்கு மாறிவிட்டதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. இந்த விலை ஏற்றத்தில் பெரும்பங்கு, Fi எனப்படும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தையே சேரும். அதாவது மெக்கானிக்கலாக இயங்கும் கார்புரேட்டர்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக்கலாகப் பணிபுரியும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துக்கு மாறவேண்டிய கட்டாயம். இந்த ப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தில் இருக்கும் சென்சார்களைப் பற்றி பார்க்கலாம்.

ஆக்ஸிஜன் சென்ஸார்
ஆக்ஸிஜன் சென்ஸார்

Intake Air Temperature Sensor: பொதுவாக, காலை நேரத்தில் வாகனத்தை நாம் ஸ்டார்ட் செய்ய முற்படும்போது, இன்ஜின் குளிர்ச்சியாகவே இருக்கும். எனவே இன்ஜினை விரைவாக அதன் இயங்குநிலைக்குக் கொண்டுவர ஏதுவாக, இன்ஜினுக்குள் செல்லும் காற்று - எரிபொருள் கலவையின் அளவு மற்றும் அழுத்தம் வழக்கத்தைவிட மாறுபடும். இதுவே சாலையைவிட அதிக உயரத்தில் இருக்கும் மேம்பாலங்களில் ஏறும்போது, இன்ஜின் சீராக இயங்குவதற்குப் போதுமான காற்று கிடைக்காமல் வாகனம் திணறுவதைப் பார்க்க முடியும். இந்த பிரச்னையைச் சரிசெய்ய, இன்ஜினுக்குள் செல்லும் காற்று - எரிபொருள் கலவையின் அளவு மற்றும் அழுத்தத்தில் தானாக மாற்றம் ஏற்படும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பவர் டெலிவரி ஒரே சீராக இருக்கும்.

Throttle Position Sensor: ஆக்ஸிலரேட்டர் திருகப்படும் அளவுக்கு ஏற்ப, அந்தக் கணத்திலேயே வாகனத்தின் ஆக்ஸிலரேஷனில் முன்னேற்றம் தெரிவதை நம்மால் உணரமுடியும். இந்த இடைப்பட்ட மைக்ரோ நேரத்தில், தேவைப்படும் வேகத்தை எட்டும் வகையில், இன்ஜினுக்குள் காற்று - எரிபொருள் கலவை உடனடியாகச் செலுத்தப்படும். மேலும் Fi சிஸ்டம் வெளியிடும் த்ராட்டில் ரெஸ்பான்ஸை அதிகரிக்கும் விதமாக, இரு ஆக்ஸிலரேட்டர் கேபிள்களை இங்கே காணலாம். ஏனெனில் கார்புரேட்டர் கொண்ட பெரும்பான்மையான டூ-வீலர்களில், ஒரு ஆக்ஸிலரேட்டர் கேபிளே இருக்கும். இதில் மறைமுக பலன் என்னவென்றால், தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் ஒரு ஆக்ஸிலரேட்டர் கேபிள் அறுந்தால் கூட, மற்றொரு கேபிளின் உதவியுடன் வாகனத்தைக் குறைந்த வேகத்தில் இயக்க முடியும். அதேபோல, கேபிளை மாற்றும்போது இரண்டையுமே மாற்றிவிடுவது நல்லது (இந்த இடத்தில் சிக்கனம் வேண்டாம்).

Vehicle Speed Sensor: பில்லியன் சீட்டில் உட்காரும் நபரின் எடையைப் பொறுத்து, பைக்கின் பே லோடில் வித்தியாசம் இருக்கும் (வாகனத்தின் எடையைத் தவிர, 130 கிலோதான் அனுமதிக்கப்பட்ட அளவு). ஒருவேளை நபருக்குப் பதிலாக வாகனத்தில் பொருள்களை ஏற்றும்போது, பின்பக்கச் சக்கரத்தில் ஏற்படும் அழுத்தத்தில் மாறுதல் இருக்கும். எனவே கூடுதலாக இழுக்க வேண்டிய எடையை உணர்ந்து, இன்ஜினுக்குள் செல்லும் காற்று - எரிபொருள் கலவையின் அளவில் மாறுதல் இருக்கும். எனவே, வாகனம் திக்காமல் ஸ்மூத்தாகச் செல்லும்.

த்ராட்டில் பொசிஷன் சென்ஸார்
த்ராட்டில் பொசிஷன் சென்ஸார்

Manifold Absolute Air Pressure Sensor: ஊட்டி/கொடைக்கானல் தொடங்கி லே-லடாக் வரையிலான மலைச்சாலைகளில் மேலே செல்லச் செல்ல, வெளியே இருக்கும் காற்றின் அளவு குறையத் தொடங்கும். எனவே டூரிங்குக்குப் பெயர்பெற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகள் (கார்புரேட்டர் மாடல்கள்), இதுபோன்ற இடங்களில் தன்வசமுள்ள பவரை இழந்துவிட்டதுபோல வேகமெடுப்பதில் சுணக்கம் காட்டுவதைப் பார்க்கலாம். அங்கே நிலவும் தட்பவெப்ப நிலையும் ஓரு காரணம் என்றாலும், இன்ஜினுக்குள் செல்ல வேண்டிய காற்றின் அளவு மற்றும் அழுத்தத்தில் சரிவு ஏற்படுவதே இதற்கான பிரதான காரணி. எனவே இந்த நேரத்தில் இன்ஜினுக்குள் செல்லும் எரிபொருளின் அளவு மற்றும் அழுத்தம், அதற்கேற்ப மாற்றம் காணும். இதனாலேயே மலைச்சாலைகளில் செல்லும்போது வரும் மைலேஜ், வழக்கமான சாலைகளில் வரும் மைலேஜைவிடக் குறைவாகவே இருக்கும்.

Engine Oil Temperature Sensor: தொடர்ந்து இயங்கும் இன்ஜினின் வெப்பத்தையும் உராய்வையும் கட்டுப்படுத்துவதில், இன்ஜின் ஆயிலின் பங்கு அளப்பரியது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல, இன்ஜின் ஆயில் தனது மசகுத்தன்மையை இழந்துகொண்டே வரும். எனவே இன்ஜினுக்குள் இருக்கும் ஆயிலின் அளவிலும் அழுத்தத்திலும் மாற்றம் ஏற்படுவதால், வழக்கத்தைவிட இன்ஜினின் வெப்பநிலை அதிகரிக்கும். இதை ரைடருக்கு உணர்த்துவதே இந்த சென்ஸாரின் பணி. இது எரியத் தொடங்கும்போது, இன்ஜின் ஆயிலைப் புதிதாக மாற்றிவிடவேண்டும் (கரெக்ட்டான கொள்ளளவும் கிரேடும் அவசியம்). ஆயில் மாற்றும்போது, ஆயில் ஃபில்டரையும் மாற்றுவது நலம். இப்படி தக்க தருணத்தில் ஆயில் மாற்றப்படுவதால், இன்ஜின் பாகங்களின் ஆயூள் நீண்ட நாள்கள் நீடித்து இருக்கும்.

Oxygen Sensor & Crank Position Sensor: காற்று - எரிபொருள் கலவை எரியூட்டப்படுவதால் உண்டாகும் வாயு, எக்ஸாஸ்ட் வழியே வெளியே அனுப்பப்படும். அந்தக் காற்றில் இருக்கும் O2-வின் அளவு கச்சிதமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் தொடர்ச்சியாக இன்ஜினுக்குள் சரியான அளவிலான காற்று - எரிபொருள் கலவை செலுத்தப்படும். ஏனெனில் கார்புரேட்டர் கொண்ட வாகனங்களில், சில சமயம் எக்ஸாஸ்ட் காற்றுடன் பெட்ரோலும் கலந்து வரும். இது இன்ஜினுக்குள் Combustion சரியாக நடக்காததைக் குறிக்கிறது (உபயம்: Rich Mixture). அதேபோல இன்ஜின் இயங்கும் ஆர்பிஎம்முக்கு ஏற்ப, அதை எட்டவும் தக்க வைக்கவும் இன்ஜினுக்குள் செல்லும் காற்று - எரிபொருள் கலவையின் அழுத்தம் இருப்பது அவசியம். இந்தத் தருணத்தில் க்ராங்க் ஷாஃப்ட்டின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, முன்னே சொன்ன அம்சம் மாறுபடும். இதனால் இன்ஜினின் இயங்குதிறனுக்கு ஏற்ற அளவில் காற்று - எரிபொருள் செல்வதால், ஸ்மூத்னெஸ்ஸில் முன்னேற்றம் இருக்கும். மேலும் கார்புரேட்டரைவிட ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட வாகனங்கள், சராசரியாக 15% வரை அதிக மைலேஜைத் தரும் எனத் தெரிய வந்துள்ளது.

ஃப்யூல் இன்ஜெக்‌ஷனில் இத்தனை சென்ஸார்களா?

Start Stop Sensor: சிக்னலில் வாகனத்தை நிறுத்தும்போது, 3-5 விநாடிகளுக்குள்ளாகத் தானாக இன்ஜின் ஆஃப் ஆகிவிடும். பிறகு க்ளட்ச்சைப் பிடிக்கும்போது, வாகனம் தானாகவே ஸ்டார்ட் ஆகிவிடும். இதுவே ஸ்கூட்டர் என்றால், ஆக்ஸிலரேட்டரைத் திருகும்போது இன்ஜின் ஸ்டார்ட் ஆகும். ஆனால் இது நடக்க வேண்டுமானால், ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் On ஆக இருத்தல் அவசியம். இந்த அம்சம் இல்லாத வாகனங்களில், இன்ஜின் கில் ஸ்விட்ச் இருக்கும். எனவே வாகனத்தை சிக்னலில் நிறுத்தும்போது, அங்கே இருக்கும் டைமர் 20 விநாடிகளுக்கும் அதிகமாக இருந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடுவது நலம்.

ஸ்பீடு சென்ஸார்
ஸ்பீடு சென்ஸார்

Bank Angle Sensor: நேர்ச்சாலைகளைவிடத் திருப்பங்களில் செல்லும்போது, வாகனத்தின் Angle மாறுபடும். அது குறிப்பிட்ட அளவில் இருந்து மாறும்போது, வாகனம் தனது சமநிலையில் இருந்து தவறுவதற்கான சாத்தியம் அதிகம். இது நடந்துவிட்டால், இன்ஜினை ஆஃப் செய்துவிடுவதே இந்த சென்ஸாரின் கடமை. ஏனெனில் வாகனம் கீழே விழுந்தபிறகு, பின்சக்கரம் தொடர்ந்து இயங்குவது ஆபத்தான விஷயம். மேலும் வாகனத்தில் Side Stand Cut-off Switch இருக்கும்பட்சத்தில், தெரியாமல் சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முற்பட்டால், முதல் கியரைப் போடும்போது வாகனம் ஆஃப் ஆகிவிடும். இதுவே நியூட்ரலில் இன்ஜின் இயங்கிக் கொண்டிருக்கும்போது சைடு ஸ்டாண்டைப் போட்டால், இன்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடும்.

OBD Sensor: ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட வாகனங்களில், OBD எனப்படும் On Board Diagnosis அமைப்பு இடம்பெற்றிருக்கும் (Stage/Level-1). இது வாகனத்தின் பிரதான பாகங்களுடன், ECU வாயிலாக தொடர்பில் இருக்கும். எனவே அதன் இயங்குதிறனில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், வாகனத்தின் மீட்டரில் இருக்கும் Malfunction Indicator எரியத் தொடங்கும். எந்த பாகத்தில் பிரச்னை இருக்கிறது எனத் தெரிந்துவிடும். குறிப்பிட்ட அந்த பாகத்தை மட்டுமே மாற்றினால் போதுமானது. எனவே வாகனத்தின் பராமரிப்புச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருக்கும் என்பதுடன், அதன் இயங்குதிறனும் நன்றாகவே இருக்கும்.