
- சாயி பிரியதர்ஷினி
மோட்டார் வாகனச் சட்டம்: ஓட்டுநர் உரிமம்
`ஓட்டுநர் உரிமம் எடுக்க, இனி ஆர்டிஓ அலுவலகத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. டிரைவிங் லைசென்ஸை பயிற்சி மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்'
- சமீபத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு, ஓட்டுநர் பயற்சி மையங்களுக்குச் சாதகமாக இருப்பதாக ஏராளமான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவர்களும் இந்த அறிவிப்பு குறித்துத் திருப்தியாக இல்லை என்பதுதான் நிஜம்.
இந்தப் புதிய விதிமுறைகள் பற்றி திருச்சியில் அபிராமி ஓட்டுநர் பயிற்சி மையம் நடத்தி வரும் சரண்யா ஒரு சில விஷயங்களை கூறினார். ``மிகவும் திறமையாக வாகனம் ஓட்டப் பயிற்சி பெற்றிருந்தாலும், சிலர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்வில் கலந்து கொள்ளும்போது, பதட்டமும், பயமும் சூழ தேர்வில் தோல்வியடைகிறார்கள். இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, அப்படியொரு சிக்கல் வராது.

ஆனால், ஆர்டிஓ அலுவலகம் போக வேண்டாமே தவிர, பயிற்சி மையங்களில் நடத்தப்படும் போக்குவரத்துக் குறியீடுகள், சாலை விதிமுறைகள், வாகனக் கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளில் குறிப்பிட்ட மணி நேரங்கள் பயிற்சி எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. அது மட்டுமின்றி, தேர்வின்போது, வாகனம் ஓட்டுவது வீடியோ பதிவு செய்யப்பட்டு, ஆர்டிஓ அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். இதற்கான அத்தனை வசதிகளையும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தியாக வேண்டும். இது எங்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்கும்.” என்றார்.
மேலும் 2 ஏக்கர் பரப்பளவில் ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்பது, புதிய விதிமுறைகளில் ஒன்று. நகரத்தின் மையப் பகுதிகளில் பயிற்சி நிலையம் நடத்தி வருபவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படிச் சாத்தியம்? ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இப்படிச் செலவுகள் கூடினால்... ஓட்டுநர் பயிற்சிக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமே? இது மக்களின் தலையில்தானே விடியும்!” என்றார் சரண்யா.
சரண்யாவைப்போலவே ஓட்டுநர் பயிற்சி மையங்கள் நடத்துவோர், இப்படிப் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். அரசின் வழிமுறைகளைப் பின்பற்ற முடியாத பயிற்சி மையங்களின் நிலை என்ன என்பதும் இதில் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.