
விமல்நாத் ; ஓவியங்கள்: ராஜன்
லாக்-டவுனில் நின்ற கார்களை எடுக்கும்போது, முக்கியமாக விண்ட்ஷீல்டையும், வைப்பர்களையும் ஒரு கண் வையுங்கள். விண்ட்ஷீல்டில் மென்மையான பஞ்சுத்துணியை வைத்து தூசு தும்பைகளை நன்கு சுத்தம் செய்துவிட்டு, தண்ணீர் ஊற்றிக் கழுவுங்கள். பிறகு வைப்பர்களின் பிளேடுகளுக்கு அடியிலும் சுத்தம் செய்தபிறகுதான், வைப்பரை ஆன் செய்ய வேண்டும். பின்பு, சோப் ஆயில் ஸ்ப்ரே ஆன் செய்து சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
ஓகே. கதைக்குப் போகலாம். சர்வீஸ் சென்டருக்கு ஒரு ப்ரீமியம் கார் வந்தது. ``பார்க்கிங் லைட் பிளிங்க் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஆஃப் ஆகவில்லை’’ என்றார் அந்த கார் கஸ்டமர். அதாவது, MID ஸ்க்ரீனில் மால்ஃபங்ஷன் லைட் எரிந்தால், இன்ஜினுக்குள்ளே ஏதோ விஷயம் என்று அர்த்தம். ஆனால், இது வித்தியாசமானதொரு மால்ஃபங்ஷன். அதாவது, ஹஸார்டு லைட்கள் பிளிங்க் ஆகிக் கொண்டே இருந்தன. ஆஃப் ஆகவே இல்லை.
பொதுவாக, இண்டிகேட்டர் ஸ்டாக்-ஹெட்லைட் ஸ்டாக் போன்றவற்றில் மால்ஃபங்ஷன் ஆனால்தான் இந்த சமிக்ஞை வரும். பிறகுதான் தெரிந்தது – அது ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் உள்ள கார். நீண்ட நேர செக்கிங்குக்குப் பிறகுதான் அதைக் கண்டுபிடித்தோம். அது வைப்பர்களுக்கான மால்ஃபங்ஷன்.

இப்போதுள்ள கார்களில் ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் என்றொன்று உண்டு. அதாவது, கார்களின் விண்ட்ஷீல்டுக்குள் கண்ணுக்குத் தெரியாத ஒரு சென்ஸார் உண்டு. மழை நீர் விண்ட்ஷீல்டில் பட்ட அடுத்த நொடியே, இந்த சென்ஸார் விழித்துக்கொண்டு, வைப்பர்களைத் தானாகவே வேலை செய்ய வைக்கும். இவர் என்ன செய்திருக்கிறார் – சென்ஸார் வேலை செய்யும்போது மேனுவலாக வேகத்தைக் கூட்டி, குறைத்து என்று ஆப்பரேட் செய்ததால், சென்ஸார் குழம்பிப் போய்விட்டதுதான் இந்த மால்ஃபங்ஷனுக்கான அடையாளம்.
அதனால், ரெயின் சென்ஸிங் வைப்பர் உள்ள கார்களில் மேனுவலாக வைப்பரை அடிக்கடி அட்ஜஸ்ட் செய்வது தவறு.
அதேபோல், வேறொரு சம்பவம். அதிலும் மால்ஃபங்ஷன் லைட் ஒளிர்ந்தது. அது விபத்து ஏற்பட்டு, நாங்கள் திரும்ப ரெடி செய்து கொடுத்த கார். அதில் மால்ஃபங்ஷன் என்றதும் பயந்துவிட்டோம். அதற்குப் பிறகுதான் தெரிந்தது – விண்ட்ஷீல்டு மாற்றிய கார் அது. அது ரெயின் சென்ஸார் வைப்பர்ஸ் கொண்ட லேட்டஸ்ட் கார். நாங்கள் மாட்டிய புது விண்ட்ஷீல்டில் அந்த சென்ஸாரைப் பொருத்த மறந்துவிட்டோம். அதனால்தான் அந்த மால்ஃபங்ஷன்.
இது முற்றிலும் வேறொரு கதை. உங்களுக்கு (LPG Liquid Petroleum gas) மற்றும் CNG (Compressed Natural Gas) பற்றித் தெரிந்திருக்கும். CNG தமிழ்நாட்டில் இல்லை. இங்கே LPG மட்டும்தான்.
இவை இரண்டையுமே டீசல் கார்களில் ஃபிட் பண்ண முடியாது. இரண்டுக்குமான கம்பஷன் முறையே வேறு! டீசல் இன்ஜினில், எரிபொருள்-காற்று கலவை சேம்பரில் ஏற்படும் அழுத்தத்தில் சிலிண்டர் இயங்கி, கார் ஓடும். பெட்ரோல் இன்ஜின், அழுத்தம் போக ஸ்பார்க் மூலம் இயங்கும்.
அதனால்தான் பெட்ரோல் கார்கள் ஸ்மூத்தாக இருக்கும். எனவே, LPG-யை பெட்ரோல் கார்களில்தான் பொருத்த முடியும். பொதுவாக, LPG கார்களை, நாங்கள் பார்ஷியல் ஹைபிரிட் கார்கள் என்று அழைப்போம்.
அதாவது, கார் ஸ்டார்ட் ஆவது பெட்ரோலில்; ஓடுவது கேஸில். கேஸ் காலியாகும் பட்சத்தில் தானாக பெட்ரோலுக்கு ஸ்விட்ச் ஆன் ஆகிக் கொள்ளும். இதுதான் பார்ஷியல் ஹைபிரிட் கார்கள். ஆரம்பத்தில் சான்ட்ரோ, வேகன்-ஆர், ஆல்ட்டோ, மாருதி 800 போன்ற கார்களில் LPG வேரியன்ட்கள் இருந்தன. இப்போது கார் தயாரிப்பாளர்கள் LPG தயாரிப்பை நிறுத்தி விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் LPG கார்கள் அடிக்கடி சர்வீஸ் சென்டருக்கு வந்து கொண்டே இருக்கும். எங்கள் சென்டருக்கு வரும் கார்களில் முக்கியமான கம்ப்ளெய்ன்ட் இதுவாகத்தான் இருக்கும். ``சார், இன்ஜின் அடைக்குது சார்… கார் ஜெர்க் ஆகி ஓடுது!’’
அன்றைக்கும் அப்படித்தான். அதே கம்ப்ளெயன்ட்டுடன் ஒருவர் வந்தார். ஆம், செக் பண்ணிப் பார்த்ததில், இன்ஜின் திணறித் திணறி… `ம்ம்ம்…ம்ம்’ என்ற சவுண்டுடன் ஓடியது. முழுதாகச் சோதனை போட்டோம். இன்ஜெக்டர்களில் பெட்ரோல் அடைத்துவிட்டிருந்தது. சரி செய்து கொடுத்து அனுப்பினோம். `இன்ஜெக்டர் அடைக்கிற அளவுக்கா புரொடக்ஷன் பண்ணுவீங்க’ என்று திட்டியபடி கிளம்பிப் போனவர், சரியாக 7 மாதம் இருக்கும்; திரும்பவும் வந்தார். அதே கம்ப்ளெய்ன்ட். ``மாசக் கணக்குக்குத்தான் ஒர்க் பண்ணுவீங்க போல! கொஞ்ச நாள்தான் நல்லாயிருந்தது. திரும்பவும் இதே பிரச்னை’’ என்று திட்டித் தீர்த்துவிட்டார். திரும்பவும் செக் செய்து பார்த்தோம். அதே சிக்கல். அதாவது, இன்ஜெக்டர்களில் பெட்ரோல் அடைத்து விட்டிருந்தது. இந்த முறை இன்ஜெக்டர்களைத் தாண்டி ஃப்யூல் லைன், இன்ஜின் கேஸ்கெட், ஓ-ரிங்கெல்லாம் காலியாகி இருந்தன.
ஃப்யூல் டேங்க்கில் உள்ளே முழுவதும் சோதனை செய்தததில், பெட்ரோல் கண்டாமினேட் ஆகியிருந்தது. அதாவது, பாசி படர்ந்து சளிபோல் இறுகியிருந்தது. இது இன்ஜெக்டர்களில் போய் அடைத்ததால்தான் இந்தப் பிரச்னை. விஷயம் இதுதான் – இந்த இன்ஜின் பெட்ரோலையே பார்த்துப் பல மாதங்களாகி விட்டதுதான் காரணம். விசாரித்ததில் உண்மை தெரிந்து விட்டது. இவர் பெட்ரோல் போட்டு சுமார் 7 மாதங்களாகி விட்டது. அதாவது, சர்வீஸ் சென்டரிலிருந்து எடுத்துப் போன கையோடு நிரப்பிய பெட்ரோல்தான். அது பயன்படுத்தப்படவே இல்லை. கேஸிலேயேதான் இவர் பயணம் நடந்திருக்கிறது. கூடவே, இன்னொரு திடுக்கிடும் தகவல் – ஸ்டார்ட் செய்வதுகூட பெட்ரோலில் இல்லை; கேஸில்தான். ``பெட்ரோலை எதுக்கு வேஸ்ட் பண்ணிக்கிட்டுனு நினைச்சேன்’’ என்று கூலாகச் சொன்னார்.

பொதுவாக, கம்பெனி ஃபிட்டிங்கோடு வரும் எல்பிஜி கார்கள், ஸ்டார்ட் ஆவது நிச்சயமாக பெட்ரோலில்தான் இருக்கும். அதன் பிறகுதான் கேஸுக்கு மாறும். ஆனால், வெளிமார்க்கெட்டில் வரும் கார்களில் என்ன பிரச்னை என்றால், ஸ்டார்ட்டிங்கே கேஸிலும் கனெக்ஷன் கொடுத்திருப்பார்கள். இவர் போன்ற சிலர், `எதுக்கு பெட்ரோலை வேஸ்ட் பண்ணிக்கிட்டு’ என்று பெட்ரோலில்கூட ஸ்டார்ட் செய்யமாட்டார்கள். இதில்தான் பிரச்னையே ஆரம்பிக்கும். இதனால்தான் பெட்ரோல், இன்ஜெக்டர்களில் போய் அடைத்துக் கொண்டு இன்ஜினைத் திணறடிக்கும். LPG கனெக்ஷனனை வெளிமார்க்கெட்டில் ஃபிட் செய்த கார் இது. அவருக்கு அறிவுரை சொல்லி அனுப்பினோம்.
அதேபோல், வெளிமார்க்கெட்டில் ஃபிட் செய்யப்பட்ட LPG கார்களுக்கு கம்பெனியில் சர்வீஸ் செய்வதில்லை. மேலும், எந்த ஒரு பொருளுக்கும் வாரன்ட்டியும் கவர் ஆகாது. ஏனென்றால், இது UnAuthorised Fitment.
நீண்டநாட்களுக்கு பயன்படுத்தாமல் விட்டால், காரில் இருக்கும் பெட்ரோல் வீணாகிவிடும்.
வெளிமார்க்கெட்டில் கேஸ் ஃபிட் செய்யலாமா?
இப்போது கம்பெனி மார்க்கெட்டிலேயே எல்பிஜி கார்கள் தயாரிக்கப்படுவதில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். பொதுவாக, கம்பெனி ஃபிட்டடாக வருகிற எல்பிஜி கார்களில், கேஸ் கனெக்ஷன் ECM உடன் கனெக்ட் செய்து, ஃப்யூல் - கேஸ் என்று ஒவ்வொன்றுக்கும் லைன்கள் தனித்தனியாக பக்காவாக இருக்கும். எங்கே லீக் ஆனாலும், சட்டென வார்னிங்குடன் நம்மை அலெர்ட் செய்து, பாதுகாப்பாக இருக்கும்.
அதேபோல், டிக்கியில் ஸ்டெஃப்னி இடத்திலேயே இதை பிட் செய்திருப்பதால், இடத்தையும் அடைக்காது. ஆனால், சாதாரண கார்களில் வெளிமார்க்கெட்டில் கொடுத்து எல்பிஜி கனெக்ஷன் கொடுத்திருப்பார்கள். இங்கேதான் சிக்கலே! டிக்கியில் ஒரு பெரிய சிலிண்டரை வைத்துவிட்டு, அதன் கனெக்ஷன் லைன்களை நேரடியாக ஃப்யூல் லைனுடன் லிங்க் செய்திருப்பார்கள். இது லீக் ஆனால், பெரிய ஆபத்தில்தான் முடியும். அதேபோல் எல்பிஜி கார் வைத்திருப்பவர்கள், தயவுசெய்து காரை ஸ்டார்ட் செய்யவாவது பெட்ரோலைப் பயன்படுத்துங்கள்.
`பெட்ரோலை எதுக்கு வேஸ்ட் பண்ணிக்கிட்டு’ என்று கேஸையே முழுவதும் உபயோகிக்காதீர்கள். பயன்படுத்தப்படாத பெட்ரோல், கண்டாமினேட் ஆகி இன்ஜெக்டர்களையும், ஃப்யூல் லைன்களையும் காலி செய்துவிடும். வெளிமார்க்கெட்டில் எல்பிஜி ஃபிட் செய்வது நல்லதல்ல; அப்படியே செய்திருந்தால், உடனே ஆர்சி புக்கில் எண்டார்ஸ் செய்ய மறக்காதீர்கள். இது சட்டப்படியும் குற்றம்.