
விமல்நாத்; ஓவியங்கள்: ராஜன்
உங்களுக்கு காரின் ஜெனரல் சர்வீஸில், என்னென்ன அடங்கும் என்று தெரியும்தானே? ஆயில் மாற்றம், ஆயில் ஃபில்டர், பிரேக் செக்கிங், இன்ஜின் சம்பந்தமான சில ஜெனரல் செக்-அப்கள், வைப்பர் வாஷர் ஃபில்லிங், வாட்டர் வாஷ் – எல்லாம் உண்டு. இதில் ஒரு விஷயம் மட்டும் அடங்காது. வீல் அலைன்மென்ட் – வீல் பேலன்ஸிங். இவற்றுக்குத் தனி பில் உண்டு சர்வீஸ் சென்டர்களில். கார்களுக்கு பீரியாடிக்கல் ஆயில் சர்வீஸ் இருப்பதுபோல், ஒவ்வொரு 5,000 கி.மீக்கு ஒரு முறையும் வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங் செக் செய்ய வேண்டியது மிக அவசியம்.
வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங் - இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முதலில் வீல் அலைன்மென்ட் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான்கு வீல்களுக்கும் சென்ஸார் மாட்டி, ஆங்கிள் செக் செய்வதுதான் வீல் அலைன்மென்ட். `டோ-இன், டோ-அவுட், கேஸ்டர், கேம்பர்’ என்று இவற்றுக்குச் சில பெயர்கள் உண்டு. த்ரெட் ஆங்கிள், டர்ன் ஆங்கிள், செட்பேக் என்று ஏகப்பட்ட டெக்னிக்கல் அம்சங்கள் சேர்ந்ததுதான் வீல் அலைன்மென்ட். சாலையில் இருந்து டயர்களின் ஆங்கிள் உள்ளே – வெளியே என்று சில விஷயங்கள் அட்ஜஸ்ட் செய்வோம். கேஸ்டர் – கேம்பர் என்பது நான்-அட்ஜஸ்டபிள். நீங்கள் சாலையில் லோடு ஆட்டோ பார்த்திருக்கலாம். டயர்கள், உள்ளே இழுத்து சாய்ந்தபடி ஓடிக்கொண்டிருக்கும். சிலர் இதை வீல் அலைன்மென்ட் சரியில்லை என்று நினைப்பார்கள். ஆனால், அந்த ஆட்டோக்களுக்கு அதுதான் சரியான ஆங்கிள்.
இது தவிர, வீல் பேலன்ஸிங் என்றொன்று உண்டு. இது காரிலிருந்து ஒவ்வொரு வீலையும் தனித்தனியாகக் கழற்றி பேலன்ஸர் மிஷினில் வைத்து செக் செய்வது. வீல்களை ரொட்டேஷனில் விட்டு டிஸ்க்கில் பெண்டு இருப்பது, வீல் பெண்டு போன்றவற்றைக் கண்டுபிடிப்பதற்கான விஷயம். சாதாரண வீல்கள் என்றால் பெண்டு எடுத்துவிட்டு, வீல் வெயிட்டைப் பொருத்தி சரிசெய்து பயன்படுத்தலாம். இதுவே அலாய் வீல்களில் பேலன்ஸிங் பிரச்னை என்றால், மொத்தமாக வீல்களையே மாற்ற வேண்டியிருக்கும். அதனால்தான் அலாய் வீல்களை நிறைய பேர் ஃரெபர் செய்வதில்லை.
வீல் பேலன்ஸிங் என்பது காரின் ஓட்டுதலுக்கு முக்கியமான விஷயம். கார் வாப்ளிங் ஆவது, அலைவது போன்றவை இந்தப் பிரச்னையால்தான் ஏற்படும். இதுவே வீல் அலைன்மென்ட் பிரச்னை என்றால், புல்லிங் பிராப்ளம், டயர் தேய்மானத்தில் அது காட்டிக் கொடுத்துவிடும்.

ஒவ்வொரு காரும் சர்வீஸ் வரும் போது, நாங்கள் வீல் அலைன்மென்ட்டை ரெக்கமெண்ட் செய்வோம். இதற்குத் தனி பில் போடுகிறார்கள் என்று சிலர் `வேண்டாம்’ என்று சொல்லி விடுவார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இந்தச் சம்பவம்.
எங்கள் சென்டருக்கு ஒரு எஸ்யூவி அடிக்கடி சர்வீஸுக்கு வரும். ரெகுலர் பீரியாடிக்கல் சர்வீஸில் அந்த உரிமையாளரை மிஞ்ச ஆள் இல்லை. மிகச் சரியாக 10,000 கி.மீ-க்கு ஒருமுறை தவறாமல் ஆயில் சர்வீஸ் விட்டு விடுவார் அவர். எல்லாம் பக்காவாக இருக்கும். ஆனால், அவர் ஒரு விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக இருப்பார். அதாவது, வீல் அலைன்மென்ட் மட்டும் எங்களிடம் செக் செய்ததே இல்லை. ``நீங்க தனியா பில் போடுறீங்க. சர்வீஸோட சேர்க்க வேண்டியதுதானே… நான் வெளிலயே பார்த்துக்கிறேன்’’ என்பார். கார் 45,000 ஓடி முடிந்த நேரம். அவர் டயர்களை செக் செய்தபோது, அப்நார்மலாகத் தேய்ந்திருந்தன. டயர்களும் ரீப்ளேஸ்மென்ட் கண்டிஷனுக்கு வந்துவிட்டன என்பதைச் சொன்னபோது, “அதெல்லாம் தேவையில்லை; நான் டயர்லாம் வெளியேவே மாத்திக்கிறேன். நீங்க சர்வீஸ் மட்டும் பண்ணிக் கொடுங்க!’’ என்றார்.
ஒரே மாதத்தில் திரும்ப எங்களிடம் வந்தார். “டயர் அப்நார்மலா தேயுது.. என்னன்னு பாருங்க!’’ என்றார். ஆச்சரியம்; டயர் மாற்றி 5,000 கி.மீ கூட ஓடியிருக்கவில்லை. அதற்குள் ரியர் டயர்கள் உள்பக்கமாக அதிகமாகத் தேய்ந்து போயிருந்தன. அப்போதும் அவர் கார் நிறுவனத்தைத்தான் குறை சொன்னார். “மேனுஃபேக்ஷரிங் டிஃபெக்ட்; நீங்கதான் ரீப்ளேஸ்மென்ட் பண்ணித் தரணும்! இல்லேன்னா கேஸ் போடுவேன்’’ என்றார். வக்கீலையும் உடன் அழைத்து வந்து அடிக்கடி சட்டம் பேசினார்.
முதலில் பிரச்னை என்னவென்று பார்த்து விடலாம் என்று களத்தில் இறங்கினோம். வீல் அலைன்மென்ட்டுக்குப் போகும் முன்னரே ஒரு விஷயம் கண்டுபிடித்தோம். அதாவது, புதிதாக மாற்றிய எல்லா டயர்களுக்கான ஸ்பெஸிஃபிகேஷனும் மாறியிருந்தது. பிராண்ட் மாற்றவில்லை; ஆனால், சைஸ் மாறியிருந்தது. உதாரணத்துக்கு 215/60/R16 செக்ஷனுக்குப் பதில் 205/65/R16 பெரிய சைஸ் மாற்றப்பட்டிருந்தது. விசாரித்தால், வெளியே அலைன்மென்ட் செய்யும் இடத்தில், “நல்லா ஸ்டெபிலிட்டி கிடைக்கும்’’ என்று ஐடியா கொடுத்துள்ளார்கள்.
ஆனால், டயர் தேயத் தேய, அவர் அங்கே போய்க் கேட்டதில், “இது நிச்சயம் தயாரிப்புப் பிரச்னையாகத்தான் இருக்கும். வாரன்ட்டி கேட்டுப் பாருங்க’’ என்று அவர்கள் எங்களைக் கைகாட்டி சண்டை போடும்படி சொல்லிவிட்டார்கள். அதனால்தான் இந்த காச் மூச்!
நாங்கள் வீல் அலைன்மென்ட் செய்ததில் ரியர் டோவில் ஆங்கிள் வித்தியாசம் இருந்தது. அதாவது, “0 டிகிரி 27 இன்ச்’ இருக்க வேண்டும் என்றால், இது “0 டிகிரி 43 இன்ச்’ இருந்தது. இது ஒரு இன்ச் கூடினாலே டயர்களுக்குப் பெரிய சிக்கல் உண்டு. அதாவது, இது மிகவும் அப்நார்மல் என்பதால்தான், 5000 கி.மீ ஓடிய டயர்கள், 50,000 ஓடியதைப்போல் தேய்ந்து ஓய்ந்திருந்தன.
இதுபோக, கேஸ்டர்-கேம்பரிலும் வித்தியாசம் இருந்தது. நான் ஏற்கெனவே சொன்னபடி, இது நான்-அட்ஜஸ்டபிள். அப்படியென்றால், இதற்கு மொத்தமாக அந்த டெட் ஆக்ஸிலையேதான் மாற்ற வேண்டியிருக்கும். ஒரு புது ஆக்ஸில் எடுத்து, இதனருகில் வைத்து செக் செய்தபோது, இந்த ஆக்ஸில் பெண்ட் ஆகியிருந்ததும் தெரிந்தது.
அதாவது, இதுதான் நடந்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு இவர், தனது நண்பருக்கு இந்த காரை இரவல் கொடுத்திருக்கிறார். அந்த நண்பரிடமும் விசாரித்தபோதுதான், ஒரு பெரிய பள்ளத்தில் காரை இறக்கியது தெரிய வந்தது. கார் வழக்கம்போல் ஓடியதால், அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது ஏற்பட்ட நெளிசலிலேயே இந்த ஆக்ஸிலும் ஓடிக் கொண்டிருந்திருப்பதுதான் பெரிய பிரச்னை. பெரும்பாலான கார்களில் முன் பக்க வீல்களுக்கு மட்டும்தான் அட்ஜஸ்டபிள். இது ரியர் வீல் என்பதால், வெளி சர்வீஸ் சென்டரில் அவர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
வெளியே வீல் அலைன்மென்ட் செய்தவர்கள், இதைச் சொல்லவே இல்லை.ரியர் ஆக்ஸில் மாற்ற 15,000 ரூபாய் செலவு ஆகும். அந்த அடிபட்ட ஆக்ஸிலுக்கு இன்ஷூரன்ஸ் அப்ளை செய்ததில், அவருக்கு 1,500 ரூபாய் மட்டுமே பில் வந்தது. ஆனால், நான்கு டயர்களுக்கும் வாரன்ட்டியோ, இன்ஷூரன்ஸோ சுத்தமாகக் கிடைக்காது என்பதைத் தெரியப்படுத்தினோம். பிறகென்ன, 20,000 கொடுத்து தனது சொந்தச் செலவில்தான் 4 டயர்களையும் மாற்றினார்.
அப்புறம், “இனிமே நீங்களே வீல் அலைன்மென்ட்டும் பார்த்துடுங்க!’’ என்று ஒருவழியாக மனசு மாறிவிட்டார்.
இதைக் கவனிங்க!
1. காரை பீரியாடிக்கல் சர்வீஸ் விடுவதுபோல், ஒவ்வொரு 5,000 கி.மீ-க்கும் ஒருமுறை வீல் அலைன்மென்ட் செய்ய வேண்டும்.
2. வீல் அலைன்மென்ட் தவிர்த்து, வீல் பேலன்ஸிங்கும் செய்யச் சொல்லுங்கள். காரில் ஃபிட் பண்ணிய டயர்களைச் சோதனை செய்வது அலைன்மென்ட். வீல்களைத் தனியாகக் கழற்றிச் சோதனை போடுவது பேலன்ஸிங்
3. சர்வீஸ் சென்டரிலேயே வீல் அலைன்மென்ட்டையும் ஒப்படைத்து விடுங்கள். சிலர் எக்ஸ்ட்ரா பில் போடுகிறார்கள் என்று நினைத்து, வெளிமார்க்கெட்டில் செய்வார்கள். வீல் அலைன்மென்ட்டில் ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. சின்னதாகச் சொதப்பினாலும், டயர்களின் ஆயுள் குறையும்.

4. சர்வீஸ் சென்டருக்கும் வெளியில் செய்வதற்கும் நீங்கள் நினைப்பதுபோல் பெரிதாகத் தொகை வித்தியாசம் வராது.
5. காரை ஏதாவது பள்ளத்தில் இறக்கினாலோ, ஸ்பீடு பிரேக்கரில் பெரிதாக அடிபட்டாலோ, ஆயில் சம்ப்களில் இருந்து ஆக்ஸில் வரை அடிபட வாய்ப்புண்டு. உடனே சர்வீஸ் சென்டரில் சொல்லிவிடுங்கள்.
6. ரெகமெண்ட் செய்யப்பட்ட டயர்கள், அதற்கான அளவுகளில் மட்டுமே டயர்களை ஃபிட் செய்யுங்கள். ஸ்டெபிலிட்டி கிடைக்கும் என்று பெரிய செக்ஷன் டயர்கள் மாட்டுவது ரொம்பத் தப்பு.
7. சிலர் காசு மிச்சம் பிடிப்பதற்காக, செகண்ட் ஹேண்ட் டயர்கள் பொருத்துவார்கள். இதுவும் சிக்கல்தான்.