மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹைவேஸில் நாய் அடிபட்டால்... கூலன்ட் விஷயத்தில் கூலா இருக்காதீங்க! - தொடர் #21 : சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்

ரவு அப்போதுதான் தூங்கப் போனேன். சர்வீஸ் சென்டரில் இருந்து அழைப்பு. ‘‘சார், கஸ்டமர் ஒருத்தர் திருச்சி டோல்கேட் பக்கத்துல நிக்கிறார். கார் நின்னுடுச்சாம். இன்ஜின் வார்னிங் சிம்பல், கூலன்ட் சிம்பல் எல்லாமே டேஷ்போர்டில் வருதாம். என்னனு தெரியலை. செமையா கோபப்படுறார்’’ என்றார் எனது டீம் உறுப்பினர்.

என்ன கார் என்று விசாரித்ததில், அது போன வாரம்தான் பீரியாடிக்கல் மெயின்டனன்ஸ் பிரகாரம் சர்வீஸ் செய்யப்பட்ட கார் என்று தெரிந்தது. அதற்குள் இன்ஜினில் இருந்து எப்படிப் பிரச்னை வரும்?

ஹைவேஸில் நாய் அடிபட்டால்... கூலன்ட் விஷயத்தில் கூலா இருக்காதீங்க! - தொடர் #21 : சர்வீஸ் அனுபவம்

அவருக்கு போன் செய்தேன். செம கடுப்பில் இருந்தார். ‘‘என்னங்க சர்வீஸ் பண்றீங்க... 8,000 ரூபாய் அழுதேன். இன்ஜின் ஆயில், கூலன்ட் ஆயில், அந்த ஆயில் இந்த ஆயில் எல்லாமே மாத்தியாச்சுனு சொன்னீங்களே... டோல்கேட் கிட்ட அவமானப்பட்டு நிக்கிறேன். இன்ஜின் சீஸ் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். ஏதோ வாசனையா வருது. உடனே ஆள் அனுப்புங்க.’’ என்று காண்டாகப் பேசினார்.

உடனே கிளம்பிப் போனாலும் ரொம்பத் தாமதமாகும். உடனே பக்கத்து டீலர்ஷிப்பில் தகவல் சொல்லி, ஆன்ரோடு அசிஸ்டன்ஸுக்குத் தகவல் சொன்னோம். ஆனால், அவர் அதற்கு முன்பே பக்கத்தில் உள்ள ஆல் பிராண்ட் கார் சர்வீஸ் ஆட்களிடம் உதவி கோரியிருக்கிறார். அந்த மெக்கானிக் வந்து பார்த்து, ஸ்டார்ட் செய்ததில் இன்ஜின் க்ராங்க் ஆக முடியாமல் தவித்தது. என்னவென்று சோதனை செய்ததில், கூலன்ட் ஒரு சொட்டுகூட இல்லை. ‘‘இப்போதான் சர்வீஸ் விட்டோம்’’ என்று இவர் சொல்ல, ‘‘என்ன சர்வீஸ் பண்ணியிருக்காங்க சென்டர்ல? கூலன்ட் மாத்தவே இல்லை. அதான் காலியாகிடுச்சு. சொட்டுகூட இல்லாம இருந்தா இன்ஜின் எப்படி க்ராங்க் ஆகும்? அதான் சீஸ் ஆயிடுச்சு!’’ என்று அந்த மெக்கானிக் சொல்ல, அதற்குள் எனக்கு மறுபடியும் போன்: ‘‘கூலன்ட்கூட மாத்தாம சர்வீஸ் பண்ணியிருக்கீங்க. உங்களை நான் சும்மா விடமாட்டேன். கோர்ட்டுக்குப் போவேன்’’ என்று மறுபடியும் கோபப்பட்டார்.

ஹைவேஸில் நாய் அடிபட்டால்... கூலன்ட் விஷயத்தில் கூலா இருக்காதீங்க! - தொடர் #21 : சர்வீஸ் அனுபவம்

இரவோடு இரவாக, ஒரு சீனியர் டெக்னீஷியன் மற்றும் ஒரு மெக்கானிக்கை உடனே அந்த ஸ்பாட்டுக்கு பஸ் ஏற்றி அனுப்பினோம். ஆனாலும் அதிகாலை ஆகிவிட்டது. நமது ஆட்கள் செக் செய்ததில், உண்மைதான்... கூலன்ட் ஒரு சொட்டுகூட இல்லை. நமது சர்வீஸ் ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்ததில்... கூலன்ட் மாற்றப்பட்டிருக்கிறது. காருக்குக் கீழே பார்த்தால், கூலன்ட் ஒழுகியதற்கான அடையாளமும் இல்லை. நமது டெக்னீஷியன் மறுபடியும் கூலன்ட்டை ஊற்றியிருக்கிறார். கூலன்ட்டை ஊற்ற ஊற்ற, அது கீழே `சொத சொத’ என வடிந்து தள்ளுகிறது.

‘அட’ என்று அப்போதுதான் நமது மெக்கானிக், காரைக் கவனித்திருக்கிறார். முன் பக்கம் காரின் பம்பர், லேசாக நெளிந்திருந்தது. பம்பரைக் கழற்றிப் பார்த்ததில் ரேடியேட்டரில் செம அடி. சிதைந்திருந்தது. அது வழியாகத்தான் கூலன்ட் கீழே சொட்டிக் கொண்டிருந்தது. ‘‘எதிலயாச்சும் இடிச்சீங்களா...’’ என்று நமது மெக்கானிக் கேட்க, அப்போதுதான் அந்த வாடிக்கையாளர் சொல்கிறார்: ‘‘ஆமா தம்பி... வர்ற வழியில நாய் ஒண்ணு குறுக்க வந்துடுச்சு. அதுலதான் பம்பர் நெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!’’

அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.

‘‘எத்தனை கிமீ வேகத்தில் சார் போனீங்க?’’

‘‘90 கிமீ ஸ்பீடு இருக்கும்!’’

‘‘நாயை அடிச்சா நின்னு பார்க்க மாட்டீங்களா?’’

‘‘தம்பி, அது ஹைவேஸ். நின்னு பார்த்திருந்தா என்னைத் தூக்கியிருப்பாங்க!’’

‘‘நான் உடனே சொல்லலலை சார்.. காரைப் பொறுமையாக பிரேக் பிடித்து ஓரம் கட்டி செக் பண்ணலையா?’’

‘‘இல்லை தம்பி... நான் ஒரு 40 கிமீ கழிச்சுத்தான் டீ குடிக்க இறங்கும்போது பார்த்தேன். பம்பர் மட்டும் லேசா அடிபட்டிருந்தது.’’

‘‘ஏசி ஓடியிருக்காதே... அப்போதும் சந்தேகம் வரலையா சார்?’’

‘‘ஏசி ஃப்யூஸ் போயிடுச்சுனு நினைச்சேன்!’’

இங்கே இதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். அவர் நாயை அடித்தவுடன் என்ன நடந்திருக்கும் என்றால்...

முன் பக்க பம்பர் மேல் நாய் மோதும் போது, பம்பர்தான் முதலில் அடிவாங்கும். பம்பர் ஃபைபரால் செய்யப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். 10 அல்லது 20 கிமீ எனும் குறைவான வேகத்தில் மோதினால் பெரிய பிரச்னை இருக்காது. ஆனால், இவர் போனதோ 90 கிமீ. இத்தனை வேகத்தில் கார் ஒரு பொருளின் மீது மோதும்போது, தாக்கம் பெரிதாக இருக்கும். முதலில் முன் பக்க கிரில் உடையும். அடுத்தது ஏசி கண்டென்ஸர்... அடுத்து ரேடியேட்டர். கிரில்லைத் தாண்டி ஏசி கண்டென்ஸரில் பட்டு, ரேடியேட்டர் உடையும். இது வழியாகத்தான் கூலன்ட் ஒழுகியிருக்கும். சுதாரிப்பான டிரைவர்கள் என்றால், ஏசி கட் ஆஃப் ஆனபோதே, காரை ஓரம் கட்டியிருப்பார்கள். ஆனால், இவர் அதையும் கண்டுகொள்ளவில்லை. ‘‘ஏசி ஃப்யூஸ் போயிடுச்சுனு நினைச்சேன்!’’ என்றிருக்கிறார். பெரிய அடி என்பதால், 5 கிமீ–க்குள்ளாகவே மொத்த கூலன்ட்டும் ஒழுகியிருக்கிறது. இவர் பார்த்ததோ 40 கிமீ–க்குப் பிறகுதான். அதனால், இவருக்கு ஒழுகிய தடம் தெரியாமல் போனதுதான் சோகம். பிறகென்ன, மொத்த இன்ஜினுமே சீஸ். பெரிய செலவுதான்.

ஒருவழியாக இன்ஜின் கவரேஜ் பாலிஸி வைத்திருந்ததால், அவருக்குப் பெரிதாக செலவு இல்லை. மொத்தமே அவர் கையிலிருந்து 5,000 ரூபாய்தான் செலவானது.

கூலன்ட் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு, இதுபோல் இன்னொரு சம்பவம் சொல்கிறேன். அதேபோலவே ஹைவேஸ் பயணம். திடீரென கார் இன்ஜின் டெம்பரேச்சரைக் கவனிக்கும்போது, ஓவர்ஹீட் வார்னிங். நல்லவேளையாக காரை நிறுத்திவிட்டார் அவர். அவசரத்துக்கு லோக்கல் மெக்கானிக் ஒருவரை நாடியபோது, நினைத்ததுபோலவே கூலன்ட் காலி. ‘இப்போ என்ன செய்ய... அவசரமா போகணுமே’ என்று உதவி கோரியபோது, பழைய அம்பாஸடர் ஸ்டைலில் கூலன்ட் டேங்க்கில் குளுகுளு மினரல் வாட்டரை ஊற்றியிருக்கிறார் மெக்கானிக். அதற்கப்புறம் ஐந்தே கிமீ–ல் மறுபடியும் இன்ஜின் ஆஃப். கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை.

மறுநாள் நாங்கள் செக் செய்தபோது, இன்ஜின் ஹெட்டில் செம க்ராக் விழுந்திருந்தது. முந்தின நாள் மெக்கானிக் செய்த காரியத்தால் நடந்தது இது. அதாவது, தகதகவென இன்ஜின் கொதித்துக் கொண்டிருக்கும்போது, தண்ணீர் ஊற்றினால் என்னாகும்? விரிசல் விழத்தான் செய்யும். இதுவும் தவறு.

அப்படியென்றால், தண்ணீர் ஊற்றவே கூடாதா என்றால், ஊற்றலாம். கார் நின்றபிறகு, இன்ஜின் குளுமையடைந்த பிறகு ஊற்றினால்கூடத் தவறில்லை. இருந்தாலும், அதையும் நாங்கள் ரெக்கமண்ட் செய்வதில்லை. ஏனென்றால், கூலன்ட் விஷயத்தில் கூலாக இருப்பது தவறு!

ஹைவேஸில் நாய் அடிபட்டால்... கூலன்ட் விஷயத்தில் கூலா இருக்காதீங்க! - தொடர் #21 : சர்வீஸ் அனுபவம்

நாயை அடித்தால் என்னாகும்? என்ன செய்ய வேண்டும்?

1.
வேகமாகப் போகும்போது, நாய் போன்ற விலங்குகள் மீது மோதினால்... முதலில் பம்பர்தான் அடிவாங்கும். பிறகு ஏசி கண்டென்ஸர். அதற்குப் பிறகு அதை ஒட்டியே உள்ள ரேடியட்டர். இந்த மூன்றும் நிச்சயம் பாதிப்படையும்.

2. இதனால் கூலன்ட் ஒழுக ஆரம்பிக்கும். கூலன்ட் இல்லாமல் கார் ஓட்டினால் இன்ஜினுக்குப் பெரிய ஆபத்து.

3. ஹைவேஸில் நாயை அடித்த உடனேயே சடர்ன் பிரேக் போடுவதும் தவறு. பின்னால் வரும் வாகனங்களின் மீதும் கவனமாக இருங்கள். 200 மீட்டர் தள்ளி காரை மெதுவாக நிறுத்தி, இறங்கி சோதனை போடுங்கள்.

4. ‘பம்பர் மட்டும்தான் நெளிஞ்சிருக்கு’ என்று மீண்டும் காரைக் கிளப்புவது ரொம்பத் தவறு. கூலன்ட் ஒழுகுகிறதா என்று கவனியுங்கள். நாய் அடிபட்ட காரில் நிச்சயம் கூலன்ட் ஒழுகும்.

5. அப்படியும் கவனிக்கவில்லை என்றால், ஏசி–யையாவது ஒரு ஆபத்தான அறிகுறியாக எடுத்துக் கொள்ளுங்கள். பம்பர் மீது ஏதும் மோதினால், நிச்சயம் ஏசியும் கொஞ்ச நேரத்தில் வேலை செய்யாது. அப்போதாவது உஷாராகுங்கள்.

6. கூலன்ட் இல்லாதபட்சத்தில், உடனே குளுகுளு மினரல் வாட்டர் ஊற்றுவதும் ரொம்பத் தப்பு. இதனால், இன்ஜின் ஹெட்டில் க்ராக் விழுந்து, பர்ஸுக்கும் வெடி வைக்கும்.