மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்மார்ட் ஹைபிரிட்... ஸ்மார்ட்டா இருக்கணும்! - தொடர் #18: சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத் ; ஓவியங்கள்: ராஜன்

செம காஸ்ட்லி கார்களான லெக்ஸஸ், பென்ஸ் போன்றவற்றில் ஹைபிரிட் மாடல்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவையெல்லாம் ஃபுல்லி ஹைபிரிட் கார்கள்.

அதாவது, எலெக்ட்ரிக்கலாகவே ஓடும். ஆனால், ஹைபிரிட் மாடல்களிலேயே பார்ஷியல் ஹைபிரிட் கார்கள் என்று சில உண்டு. பார்ஷியல் ஹைபிரிட் பற்றி போன மாதமே சொல்லியிருந்தேன். அதாவது, எல்லா நேரங்களிலும் பேட்டரி கொண்டு இயங்காது பார்ஷியல் ஹைபிரிட் கார்கள். ஸ்டார்ட் ஆவது பேட்டரியில்... கார் ஓடுவது பெட்ரோல் அல்லது கேஸில் என்று இதன் ஃபங்ஷன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இப்போது மாருதி, மஹிந்திரா போன்ற நிறுவனங்களில் இருந்தும் ஹைபிரிட் கார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை நாங்கள் ஸ்மார்ட் ஹைபிரிட் என்று சொல்வோம்.

எல்லா கார்களிலும் பேட்டரி உண்டு. இவையெல்லாம் லெட் ஆசிட் பேட்டரிகள். இவைதான் காரை ஸ்டார்ட் செய்ய உதவும். ஒரு சிக்னலில் பிரேக் பிடித்து நிற்கிறீர்கள், சில விநாடிகளுக்கு மேல் ஐடிலிங்கில் இருக்கும் பட்சத்தில், கார் ஆஃப் ஆகிவிடும். திரும்பவும் கிளட்ச் மிதிக்கும்போது கார், ஐடிலிங்கில் வந்து ஆக்ஸிலேரேட்டர் மிதித்துக் கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கலாம். இந்த நேரத்தில் இன்ஜினை க்ராங்க் செய்ய ஒரு எக்ஸ்ட்ராவாக பேட்டரி தேவைப்படும். அதுதான் லித்தியம் ஐயன் பேட்டரி. ஆம், ஸ்மார்ட் ஹைபிரிட் கார்களில், எக்ஸ்ட்ராவாக லித்தியம் அயன் பேட்டரியும் இருக்கும். இந்த பேட்டரி அவ்வளவு சீக்கிரமாகப் பழுதடையாது. ஆனால், அதையும் தாண்டி ஒரு கஸ்டமர் செய்த தவறால், இந்த லித்தியம் அயன் பேட்டரியை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

அது ஒரு ப்ரீமியம் ஸ்மார்ட் ஹைபிரிட் கார். புது BS-6 கார்தான். சில மாதங்கள்தான் ஆகியிருக்கும். டேஷ்போர்டில் வார்னிங் லைட் எரிவதுதான் பிரச்னை. என்ன என்று பார்த்தால், பேட்டரி சம்பந்தமான வார்னிங் லைட். அதுவும் லித்தியம் பேட்டரிக்கான வார்னிங். ``புது கார்தானே.. அதற்குள் எப்படி பேட்டரி வார்னிங் வரும்’’ என்று ஆராய்ந்தோம். நான் ஏற்கெனவே சொன்னபடி, லித்தியம் அயன் பேட்டரிகளெல்லாம் சாதாரணமாகப் பழுதடையாது. இந்த கார் 10,000 கி.மீட்டர் கூட ஓடி முடித்திருக்கவில்லை. அதற்குள் பேட்டரியில் சார்ஜ் இல்லை என்று சொன்னது வார்னிங் லைட். மால்ஃபங்ஷனில்தான் ஏதாச்சும் கோளாறா இருக்குமோ என்கிற ரீதியில் ஆராய்ந்து பார்த்தோம். அப்படியும் தெரியவில்லை. வேறு வழியில்லை; பேட்டரியை எடுத்தே விட்டோம். நிஜம்தான்; சார்ஜ் ஏறாமல் லித்தியம் அயன் பேட்டரி போயிருந்தது. ``புது கார் எப்படிங்க பேட்டரி சார்ஜ் இறங்கும்; எனக்கு வாரன்ட்டியில் மாத்திக் கொடுங்க!’’ என்கிறார் அந்த வாடிக்கையாளர்.

இந்த பேட்டரி என்பது ஒரு கறுப்புப் பெட்டி மாதிரிதான் இருக்கும். லித்தியம் அயன் பேட்டரியைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, சீக்கிரமாகவே சார்ஜ் இறங்கும்; அதேபோல் அதைவிட பயங்கர வேகமாக சார்ஜ் ஏறக்கூடிய தன்மை கொண்டது லித்தியம் அயன் பேட்டரிகள். நீங்கள் டி-ஆக்ஸிலரேஷன் செய்யும்போது, பிரேக் பிடிக்கும்போது என காரில் நீங்கள் செய்யும் ஒரு டிரைவிங் கண்டிஷனையும் பொருத்து இது வெகுவிரைவாக சார்ஜ் ஏறும். அதேபோல், இந்த பேட்டரியை நம் நாட்டில் டிஸ்போஸ் செய்வதும் சட்டப்படி குற்றம். டீலர்களான நாங்களே இதை டிஸ்போஸ் செய்ய முடியாது. பேட்டரி பழுது என்றால், பழுதான பேட்டரியை அனுப்பித்தான் புது பேட்டரி வாங்க முடியும். இதிலுள்ள ரசாயனங்கள், சுற்றுச்சூழலுக்குக் கேடு என்பதால் இந்தச் சட்டம். அதேபோல், இந்த பேட்டரியின் விலை 50,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும் என்பதுதான் ைஹலைட்.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

ஒரு புது மாடல் காரில் சட்டென இப்படி லித்தியம் அயன் பேட்டரி சார்ஜே இல்லாமல் பழுதடைய வேண்டும் என்றால், கார் ஓடாமல் பல மாதங்கள் இருந்திருக்க வேண்டும். இங்கே அப்படியும் இல்லை. ``போன வாரம்கூட பெங்களூரு போயிட்டு வந்தேன்; நேத்து வரைக்கும் கார் ஓடிக்கிட்டேதான் இருக்கு!'' என்றும் சொன்னார் அவர். எங்களுக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.

காரை மொத்தமாக ஸ்கேன் செய்தோம். அப்போது காரின் முன் பக்கத்தில், ஃபெண்டருக்குப் பக்கத்தில் ஒரு டிங்கரிங் வேலைப்பாடு செய்திருப்பதைக் கண்டுபிடித்தோம். விசாரணையில்தான் தெரிந்தது. ஒரு சின்ன விபத்தில், காரின் முன் பக்கத்தில் லேசான அடி ஏற்பட்டிருக்கிறது. ``சின்ன அடிதான் என்பதால், இதை எதுக்கு சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போயிக்கிட்டு... அங்க போனா பல ஆயிரங்கள்ல பில் போடுவாங்க. அதான் பக்கத்துல இருக்கிற மெக்கானிக்கிட்ட காட்டினேன்'' என்று அப்போதுதான் உண்மையைச் சொன்னார்.

அப்புறம்தான் தெரிந்தது. முன் பக்கம் ஃபெண்டரில் ஏற்பட்ட நெளிவைச் சரி செய்ய டிங்கரிங் வேலையோடு அந்த மெக்கானிக், இந்த லித்தியம் அயன் பேட்டரிக்குப் போகும் ஒயரிங்கில் கை வைத்திருக்கிறார்.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

பொதுவாக இன்ஜின் முதல் வைப்பர் வரை எல்லாமே ECM (Electronic Control Module) உடன்தான் கனெக்ட் ஆகியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த லித்தியம் அயன் பேட்டரிக்குண்டான சார்ஜிங் கனெக்ஷனும் அப்படித்தான். கழற்றி மாட்டும்போது, இந்த பேட்டரிக்குண்டான எர்த் கனெக்ஷனைச் சரியாக டைட் செய்யாமல் விட்டு விட்டிருக்கிறார். அந்த மெக்கானிக்குக்கு இந்த பேட்டரியின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

ஆனாலும், கார் ஸ்டார்ட் ஆகும்; ஓடும்; எல்லாமே ஃபங்ஷன் ஆகும். காரணம், கார் ஸ்டார்ட் ஆவது லெட் ஆசிட் பேட்டரியில்தான். ஆனால், எர்த் கனெக்ஷன் லூஸாக இருந்ததால், லித்தியம் அயன் பேட்டரிக்கு சரியாக சார்ஜ் ஏறவில்லை. கடைசியாக வார்னிங் லைட் எரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும், கார் ஓடிக்கொண்டிருப்பதால் வாடிக்கையாளர் இதைப் பெரிதாக எடுக்கவில்லை. சார்ஜ் ஏறாத லித்தியம் பேட்டரியோடே, அதாவது ஸ்மார்ட் ஹைபிரிட் வேலை செய்யாத விஷயம் தெரியாமலேயே கார் ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார். பேட்டரி டெட் ஆன வார்னிங் வந்தபிறகே அவர் வந்திருக்கிறார். இந்த உண்மையை அவர் பல விசாரணைகளின் பிறகுதான் சொன்னார். அவரிடம் எர்த் கனெக்ஷன் சரியாக இல்லாத காரணத்தைச் சொன்னபோதுதான் அவருக்குத் தன் தவறு புரிந்தது.

வாரன்ட்டிக்காகப் போராடிப் பார்த்தார். பொதுவாக, லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வாரன்ட்டி உண்டுதான். ஆனால், இது போன்று வெளிமார்க்கெட்டில் கைவைத்துப் பிரச்னையான பேட்டரிகளுக்கு ரீப்ளேஸ்மென்ட் கிடையாது என்பதைப் புரிய வைத்து, அந்தப் பழைய பேட்டரியைக் கொடுத்து 60,000 ரூபாய் செலவழித்துத்தான் புது பேட்டரிக்கு ஆர்டர் செய்தோம். ``3,000-க்கு ஆசைப்பட்டு 60,000 ரூபாய் போச்சே'' என்று அவர் புலம்பியதைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

ஸ்மார்ட் ஹைபிரிட் கார்கள் வைத்திருப்பவர்கள், பேட்டரி பராமரிப்பில் கொஞ்சம்... இல்லை ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, வெளிமார்க்கெட்டில் காரை விடுவதைத் தவிர்க்கலாம். பிரச்னை ஏற்படும்பட்சத்தில், அவர்கள் கழன்று கொள்வார்கள் என்பதுதான் நிஜம். வார்னிங் லைட் எரிந்தது தெரிந்தால்... உடனடியாக ஒர்க்ஷாப்பில் விட்டு விடுங்கள்.

ஹைபிரிட் கார்கள் வெச்சிருக்கீங்களா... இதைக் கவனிங்க!

ஸ்மார்ட் ஹைபிரிட்... ஸ்மார்ட்டா இருக்கணும்! - தொடர் #18: சர்வீஸ் அனுபவம்
  • சாதாரண பெட்ரோல், டீசல் கார் வைத்திருப்பவர்களே, வாரத்துக்கு ஒரு தடவை ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஹைபிரிட் கார்கள் என்றால், 5 நாட்களுக்கு ஒருமுறையாவது காரை, குறைந்தது 2 கி.மீ ஆவது ஓட்ட வேண்டும். குறைந்தபட்சம் ஸ்டார்ட் செய்து, முன்னும் பின்னுமாவது நகர்த்த வேண்டும். டி-ஆக்ஸிலரேஷன், பிரேக் பிடித்தல் போன்றவை இருந்தால் பேட்டரி விரைவாக சார்ஜ் ஏறும்.

  • வீல்களுக்கு மேல் தண்ணீர் கெட்டிக் கிடக்கும் இடத்தில் ஹைபிரிட் கார் வைத்திருப்பவர்கள், அதாவது லித்தியம் அயன் பேட்டரி கொண்ட வாகனங்களில் தைரியமாக இறங்கக் கூடாது. ஃப்ளோர்மேட் நனைந்தாலே சிக்கல்தான். தண்ணீர் உள்ளே புகுந்தால், பேட்டரி காலி.

  • வெளிமெக்கானிக்குகளிடம் ஹைபிரிட் கார்களின் ஒயரிங்கில் கை வைப்பதை அனுமதிக்கக் கூடாது. சீட் ஆல்ட்டரேஷன், ஃப்ளோர் மேட், ஹெட்லைட் ஆல்ட்டரேஷன், கஸ்டமைசேஷன் என்று எதுவாக இருந்தாலும் முடிந்தவரை ஆத்தரைஸ்டு ஒர்க்ஷாப்களையே அணுகுங்கள்.

  • இந்த பேட்டரிகளுக்கு ரொம்ப சூடும் ஆகாது. இதை சிலர் அசால்ட்டாக வெளியே எடுத்து மிஸ்ஹேண்ட்லிங் செய்தால், பல்ஜ் ஆகி வெடிக்கும் அபாயமும் உண்டு.