மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்மார்ட் ஹைபிரிட் காரால் குடும்பத்துக்குள் சண்டை! - தொடர் #22 : சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்

ன் சர்வீஸ் வரலாற்றில் நான் அதிகமாக அட்டெண்ட் செய்த கேஸ் இதுதான். ‘செய்த’ இல்லை... ‘செய்து கொண்டிருக்கிற’ என்றுகூடச் சொல்லலாம். ஒரு மாதத்துக்கு இந்தப் பிரச்னை சம்பந்தமாக குறைந்தது 25 தொலைபேசிகளாவது வரும் என்று சொன்னால் நம்புவீர்களா?

அப்படி என்ன காம்ப்ளிகேட்டட் ஆன விஷயம் என்றால்.. அதுவும் இல்லை. போகிறபோக்கில் தீர்க்கக் கூடிய பிரச்னைதான். அதாவது SHVS என்று சொல்லக்கூடிய ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் சிஸ்டம் கொண்ட கார்கள்தான் அடிக்கடி எங்கள் சர்வீஸ் சென்டர் வந்து போகும். அவர்கள் சொல்லும் ஒரே பிரச்னை – ‘‘என் கார்ல ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் வேலை செய்யமாட்டேங்குது சார்!’’ என்பதாகத்தான் இருக்கும்.

முதலில் SHVS என்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன். எரிபொருளைச் சேமிக்கத்தான் இந்த SHVS–யை அறிமுகப்படுத்தின ஆட்டோமொபைல் நிறுவனங்கள். EDS, HVD (Hybrid Vehicle Drivetrain) என்று ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் பெயர் வைத்துக் கொள்ளும். மாருதிக்கு SHVS. எப்போதுமே ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட கார்களில் பேட்டரி பேக்கேஜ் வழக்கமான கார்களைவிட கொஞ்சம் எனெர்ஜி தூக்கலாகவே இருக்கும். அதாவது, பவர் கூடிய பேட்டரி இருக்கும். மாருதி, தனது சியாஸ் காரில்தான் முதன் முதலில் ஹைபிரிட் சிஸ்டம் கொண்டு வந்தது. சியாஸ், 19 கிமீ எல்லாம் மைலேஜ் தருகிறது என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஓகே... விஷயத்துக்கு வருகிறேன்; எரிபொருள் எப்படிச் சேமிக்கப்படும் இந்த SHVS கார்களில்? வேறொன்றுமில்லை; வழக்கமான ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம்தான் இதில் மிக முக்கியமான அம்சம்.

ஸ்மார்ட் ஹைபிரிட் காரால் குடும்பத்துக்குள் சண்டை! - தொடர் #22 : சர்வீஸ் அனுபவம்

அதாவது, சிக்னலில் நீங்கள் நிற்கிறீர்கள். கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வந்துவிட்டு, க்ளட்ச்சிலிருந்து காலை எடுக்கிறீர்கள். இப்போது கார் தானாகவே ஆஃப் ஆகிவிடும். மறுபடியும் க்ளட்ச்சை மிதித்து கியரைப் போடும்போது கார் தானாகவே ஸ்டார்ட் ஆகிக் கிளம்பும். இந்த SHVS-ல் இன்னொரு சிறப்பம்சம், டி–ஆக்ஸிலரேஷன்போது, பேட்டரியில் சார்ஜ் ஏறும். அதாவது, ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்கும்போது, அதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரியில் சார்ஜ் ஏறும். சாதா லெட் ஆசிட் பேட்டரியில் ஏறாது. டொயோட்டா போன்ற இன்னும் சில ப்ரீமியம் கார்களில் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் அம்சமும் உண்டு. அதாவது நீங்கள் பிரேக் பிடிக்கப் பிடிக்க அந்த ஆற்றல், எலெக்ட்ரிக் எனெர்ஜியாக மாற்றப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும் பிரேக்கிங் சிஸ்டம். நீங்கள் பிரேக் பிடிக்கப் பிடிக்க, உங்கள் பேட்டரிக்கு ஆயுள் கூடும்.

இந்த SHVS கார்களை முதலில் ஓட்டுவதற்குக் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கும். திடீரென தானாகவே ஆஃப் ஆவது, தானாகவே ஆன் ஆவது என்று கொஞ்சம் குழம்பும் டிரைவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதேநேரம், ‘‘எங்களுக்கு SHVS சிஸ்டம் கொண்ட கார்தான் வேண்டும்’’ என்று இதை விரும்பிக் கேட்டு வருபவர்களும் இருக்கிறார்கள். என்ன, வழக்கமான கார்களைவிட 75,000 ரூபாய் முதல் விலை அதிகமாக இருக்கும்.

ஸ்மார்ட் ஹைபிரிட் காரால் குடும்பத்துக்குள் சண்டை! - தொடர் #22 : சர்வீஸ் அனுபவம்

அப்படி ஒரு வாடிக்கையாளர், தனது மனைவியின் பிறந்த நாளன்று அவருக்குப் பரிசளிப்பதற்காக SHVS எர்டிகாவை புக் செய்திருந்தார். வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே சர்வீஸ் சென்டர் வந்திருந்தார். என்ன பிரச்னை என்றால், இந்த SHVS காரால் அவர்களுக்குள் டைவர்ஸே ஆகிவிடும் அளவுக்குப் பிரச்னை என்பதுதான் ஹைலைட்! ‘‘இந்த காரை நான் வாங்கின புதுசில் இருந்து ஓட்டுறோம். ஒரு நாள்கூட இந்த SHVS சிஸ்டம் ஒர்க் ஆகி நான் பார்த்ததே இல்லை. டெமோ காரில் பார்த்ததோட சரி.. என் மனைவிக்கும் எனக்கும் இதனால் பெரிய சண்டையே வருது!’’ என்று சத்தம் போட்டார்.

நாங்கள் செக் செய்தபோது, எல்லாமே பக்காவாக இருந்தது. எங்கள் சர்வீஸ் ஆட்கள் டிரைவ் செய்து பார்த்தபோது, அற்புதமாக வேலை செய்தது. அவரிடம் டெலிவரி கொடுத்துவிட்டு வந்த மறுநாள், அவரிடமிருந்து போன். ‘‘மறுபடியும் அதே மாதிரிதான் இருக்கு.. எடுத்துட்டுப் போயிடுங்க!’’ என்று காட்டுக் கத்து கத்தினார்.

ஸ்மார்ட் ஹைபிரிட் காரால் குடும்பத்துக்குள் சண்டை! - தொடர் #22 : சர்வீஸ் அனுபவம்

திரும்பவும் சர்வீஸ் சென்டர் வந்தது. மறுபடியும் எல்லாமே பக்காவாக இருந்தது. அவர்களை வரவழைத்து அவர்களுக்கு முன்பே ஓட்டிக் காட்டினோம். எல்லாமே பக்கா! மறுநாள்... ‘‘இந்த காரால எங்களுக்குள்ள பெரிய சண்டைதாங்க வருது. வண்டியை நீங்களே வெச்சுக்கோங்க!’’ என்று சர்வீஸ் சென்டரில் கோபமாக காரை விட்டு விட்டுப் போய் விட்டார்.

இதில் என்ன பிரச்னை என்றால், சர்வீஸ் சென்டர் ஆட்களுக்கு SHVS வேலை செய்கிறது. ஆனால், அவர் மனைவிக்கு மட்டும் வேலை செய்யவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அப்படியென்றால், அவர் மனைவியின் டிரைவிங் ஸ்டைலில்தான் தவறு இருக்கிறது என்று அர்த்தம். இதைச் சொன்னபோது, அவரின் மனைவி மேலும் கடுப்பாகிப் போனார். ‘‘அப்போ எனக்கு கார் ஓட்டத் தெரியலைன்னு சொல்றீங்களா... என்னை அவமானப் படுத்தத்தான் வரச் சொன்னீங்களா?’’ என்று சண்டைக்கு வந்தார். ஒரு தடவை அவரை எங்களுக்காகக் காரை ஓட்டிக் காட்டச் சொன்னோம்.

SHVS வேலை செய்வதற்கென்று சில முக்கியமான விதிமுறைகள் உண்டு. அதாவது, முதல் விஷயம் – டிரைவர், சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும்; கியர் நியூட்ரலில் இருக்க வேண்டும்; பிரேக் பெடல் என்கேஜ்டு ஆக இருக்கக் கூடாது; டிரைவர் பக்கக் கதவு திறந்திருக்கக் கூடாது; பேட்டரி லோ வோல்ட்டேஜில் இருக்கக் கூடாது; ஹேண்ட் பிரேக் ஆனில் இருக்க வேண்டும் - இப்படி சில விஷயங்கள் பக்காவாக இருந்தால்தான் SHVS வேலை செய்யும்.

அது மதிய வெயில் நேரம். சுள்ளென உரைத்தது. அந்தப் பெண்மணி டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஏசி–யை ஆன் செய்தார். அப்போதுதான் கவனித்தோம். ஆட்டோமேட்டிக் ஏசி–யை ஆன் செய்தார். இதில் என்ன தப்பு இருக்கு என்கிறீர்களா? ஒரு விஷயம் குறித்துக் கொள்ளுங்கள் – SHVS கொண்ட கார்களில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோலை ஆன் செய்வது கூடாது என்பதுதான் அது.

மேனுவலாக நீங்கள் செய்யும் விஷயத்தைத் தானாகவே செய்வதுதான் ஆட்டோமேட்டிக். ஏசி–க்கும் இது பொருந்தும். உதாரணத்துக்கு, நசநசவென வியர்த்துக் கொட்டுகிறது. காரின் உள்ளே 30 டிகிரிக்கும் மேல் டெம்பரேச்சர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உள்ளே என்ன டெம்பரேச்சர் வேண்டும் என்பதை மட்டும் செட் செய்தால் போதும். புளோயர் எவ்வளவு இருக்க வேண்டும்; நீங்கள் செட் செய்த டெம்பரேச்சர் வந்தவுடன் எப்போது ஏசி கம்ப்ரஸரை ஆஃப் செய்ய வேண்டும் போன்ற எல்லா விஷயங்களையும் தானாகவே கவனித்துக் கொள்ளும். ப்ரீமியம் கார்கள் எல்லாவற்றிலும் இப்போது ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி வந்துவிட்டது. மேனுவலாக நீங்கள் ஆன் செய்தால், ஏசி கம்ப்ரஸர் பாடுபடும் என்பதால்தான் இந்த ஆட்டோமேட்டிக் வசதி. இந்த ஆட்டோமேட்டிக் ஏசி ஆனில் இருக்கும்போது SHVS வேலை செய்யாது என்பதுதான் விதி!

ஆட்டோ ஏசி–யில் SHVS ஏன் வேலை செய்யாது?

உதாரணத்துக்கு, உங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட டெம்பரேச்சரை செட் செய்கிறீர்கள். 22 டிகிரி என்று வைத்துக் கொள்வோம். 23 டிகிரிக்கு மேலே போனால், கம்ப்ரஸர் ஆன் ஆக வேண்டும். 21 – 22 டிகிரிக்கு வரும்போது கம்ப்ரஸர் ஆட்டோமேட்டிக்காக ஆஃப் ஆக வேண்டும். இதுதான் ஆட்டோ ஏசியின் விதி.

ஸ்மார்ட் ஹைபிரிட் காரால் குடும்பத்துக்குள் சண்டை! - தொடர் #22 : சர்வீஸ் அனுபவம்

வெயிலில் ஒரு சிக்னலில் நிற்கிறீர்கள். 23–க்கு மேல் டெம்பரேச்சர் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரம், கம்ப்ரஸர் ஆன் ஆக வேண்டிய தருணம் வந்துவிட்டது. கம்ப்ரஸர் ஆன் ஆக வேண்டும் என்றால், இன்ஜின் ரன்னிங்கில் இருக்க வேண்டும். SHVS வேலை ஆகும்பட்சத்தில், இன்ஜின் ரன்னிங்கில் இருக்காதுதானே! அப்படியென்றால், இன்ஜின் ஐடிலிங்கை கம்ப்ரஸர் தேடும். அப்போது க்ளாஷ் ஆகும். இதுதான் டெக்னாலஜி. இதனால்தான் ஆட்டோ ஏசி–க்கும் SHVS –க்கும் ஏழாம் பொருத்தம் என்று சொன்னேன்.

ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் வந்த புதிதில், இந்த டெக்னாலஜி எங்களுக்கும் புதிதாகத்தான் இருந்தது. எங்களுக்கே இதைக் கண்டுபிடிப்பது மிகப் பெரிய சவாலாகத்தான் இருந்தது. போகப் போகத்தான் நாங்களே இதைக் கண்டுபிடித்தோம். மற்ற எல்லா விஷயங்களையும் மிகச் சரியாகச் செய்திருந்தார் அந்தப் பெண்மணி. ஆட்டோமேட்டிக் ஏசிதான் இங்கே பிரச்னை என்று அவருக்கு விளக்கினோம். பிறகு மேனுவலாக ஏசி–யை ஆன் செய்தபோது, SHVS அற்புதமாக வேலை செய்தது.

இந்தக் கட்டுரையைச் சொல்லி முடிக்கும் வரை எனக்கு SHVS சம்பந்தமான சர்வீஸ் என்கொயரிகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன என்பதுதான் இதில் ஹைலைட்! அவ்வ்வ்வ்!

ஸ்மார்ட் ஹைபிரிட் வேலை செய்ய... இந்த 7 விஷயங்கள் அவசியம்!

பேட்டரி நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும். கடைசி கட்டத்தில் லோ வோல்ட்டேஜில் இருக்கக் கூடாது.

பிரேக்கில் இருந்தும், க்ளட்ச்சில் இருந்தும் காலை எடுத்துவிடவேண்டும்.

ஹேண்ட்பிரேக் என்கேஜ்டில் இருக்க வேண்டும்.

கியர் நியூட்ரலில் இருக்க வேண்டும்.

டிரைவர் பக்கத்துக் கதவு திறந்திருக்கக் கூடாது. சிலர் கதவைத் திறந்துவிட்டு, சரியாக மூடாமல் மறுபடியும் க்ளட்ச்சை மிதிப்பார்கள். ம்ம்ம்ஹூம். திரும்பவும் சாவியைத் திருகி, க்ராங்க் செய்துதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

முக்கியமாக டிரைவர் சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும்.

மிக மிக முக்கியமாக, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோலை ஆன் செய்யவே கூடாது.