மற்ற எபிசோடுகள்
Published:Updated:

காரின் மேல் காக்கா கக்கா போனால் என்னாகும்? - தொடர் #21: சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்

மது சர்வீஸ் அனுபவத் தொடரில் இதுவரை இன்டீரியர், இன்ஜின், பிரேக், கியர் என எல்லாமே பார்த்துவிட்டோம். ‘‘காரின் எக்ஸ்டீரியர் பற்றி எதுவுமே பேசவில்லையே’’ என வாசகர்களிடம் இருந்து ரிக்வொஸ்ட்கள். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பாகங்களில் மட்டும்தான் பிரச்னை வருமா? காரின் வெளிப்பக்கங்களிலும் நாம் கவனம் வைக்க வேண்டியவை ஏராளம்.

‘காரை ஓட்டுறோம்; சேஃப்டியா பார்க் பண்றோம்... இதில் காரோட வெளிப்பக்கத்துல என்ன பிரச்னை வரப் போகுது? என்று அசால்ட்டாகத்தான் பலரும் நினைப்பீர்கள். ஆனால், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதுபோல், ‘ஒரு காரின் அழகு அதன் வெளித்தோற்றத்தில்தான் தெரியும்!’ அந்த வெளித்தோற்றத்துக்கு மோசமானவர்களில் முக்கியமானவர்கள் விண்ட்ஷீல்டும் – பெயின்ட்டும்தான்.

காரின் மேல் காக்கா கக்கா போனால் என்னாகும்? - தொடர் #21: சர்வீஸ் அனுபவம்

நீங்களாக விபத்து ஏற்படுத்தி ஸ்க்ராட்ச் ஏற்படுத்தாத வரை ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், தானாகவே விண்ட்ஷீல்டுக்கும் பெயின்ட்டுக்கும் ஓர் ஆபத்து இருக்கிறது. அது ஓப்பன் பார்க்கிங். ஆம், `Bird Dropping’ எனும் பறவைகள் எச்சம்தான்... காரின் வெளிப்புறத்துக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதுதான் விஷயம்.

நான் கார் சர்வீஸில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நடந்த சம்பவம் இது. ஒரு கஸ்டமர் வந்தார். ‘‘என் காரோட அவுட்லுக்கைப் பாருங்க. புது கார் மாதிரியே இல்லை’’ என்று கடுப்பானார். நிஜம்தான். அவரது காரின் பாடி பெயின்ட் முழுதும் வட்ட வட்டமாக ஒரு மாதிரி ஆசிட் அடித்தால் ஓர் அரிப்பு ஏற்படுத்தி இருக்குமே... அதுபோல் இருந்தது. ரூஃபும் அப்படித்தான் இருந்தது. ‘‘புது கார் எப்படி இப்படி ஆகும்’’ என்று வருத்தப்பட்டார். வாரன்ட் பீரியடில் இருந்ததால், அவர் சொன்னதை ஏற்கத்தான் வேண்டும். ‘‘ரீ பெயின்ட் அடிக்க வேண்டும்’’ என்றார்.

காரை சோப் ஆயில் போட்டு வாஷ் செய்தோம். புதுசாக பாலீஷும் அடித்துப் பார்த்தோம். அந்த வட்ட வட்ட அரிப்பு போகவே இல்லை. மாருதி தலைமையகத்துக்கு அனுப்பினோம். பொதுவாக கார் பாடி பெயின்ட்டைப் பொருத்தவரை பல லேயர்கள் உண்டு. மாருதியில் இருந்து இப்படி பதில் வந்தது. ‘‘இது பெயின்ட் பிரச்னை இல்லை. கஸ்டமர் காரை எங்கே பார்க் செய்கிறார் என்று இன்வெஸ்டிகேட் செய்யுங்கள்!’’

ஆனால், போர்டிகோவில்தான் பார்க் செய்வதாகச் சொல்லியிருந்தார் கஸ்டமர். ஒரு தடவை சர்ப்ரைஸ் விசிட் அடித்தபோது, ஒரு வேப்பமரத்தடியில் நின்றிருந்தது அந்த கார். காருக்கு பாடி கவர் எதுவும் போடவே இல்லை. மேலே பறவைகள் கூடு கட்டியிருந்தன. ஸ்பாட்டிலேயே அவருக்கு விளக்கினோம். இது பறவைகளின் எச்சத்தால் வந்த பிரச்னை என்று எடுத்துக் கூறினோம்.

காரின் மேல் காக்கா கக்கா போனால் என்னாகும்? - தொடர் #21: சர்வீஸ் அனுபவம்

இதேபோல், இன்னொரு வாடிக்கையாளர். விண்ட்ஷீல்டில் இதே மாதிரி ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டு வந்தார். அந்தப் புது காரின் விண்ட்ஷீல்ட் முழுக்க அங்கங்கே ஆசிட் அடித்ததுபோல் இருந்தது. என்ன செய்தும் போகவே இல்லை. ஆனால், இது வேறு மாதிரி. அதாவது, ஓப்பன் பார்க்கிங். கவர் போடாத காரின் விண்ட்ஷீல்டில் உப்புத் தண்ணீர் வைத்து அடிக்கடி கழுவியிருக்கிறார் இவர். அதைச் சரியாகத் துடைக்காததால் வந்த வினை.

இதைவிட இன்னொரு பிரச்னை என்னவென்றால், தனது வீட்டில் மாட்டியிருக்கும் ஸ்ப்ளிட் ஏசியின் அவுட்டோர் யூனிட்டின் பின் பக்கத்தில் இருந்து சொட்டிய நீர், காரின் விண்ட்ஷீல்டில் நாட்கணக்கில் வழிந்திருக்கிறது. இவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது பெரிய பாதிப்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இங்கேயும் விண்ட்ஷீல்டைச் சரி செய்யவே முடியவில்லை. வேறு வழியில்லை; முழுதாக விண்ட்ஷீல்டைத்தான் மாற்றினோம். அவருக்கு 7,500 ரூபாய் தண்டச் செலவு.

ஓப்பன் பார்க்கிங் சரியா?

முடிந்தளவு ஓப்பன் பார்க்கிங் தவிர்க்கலாம். க்ளோஸ்டு பார்க்கிங் எல்லோருக்கும் வாய்க்காது. மரங்களுக்குக் கீழே பார்க் செய்வது, வெயிலிலிருந்து பாதுகாக்கலாம். புயல் மழையின்போது மரங்களுக்குக் கீழே பார்க் செய்வது நிச்சயம் ரிஸ்க். வேறு வழியில்லாதவர்களுக்கு, பாடி கவர் நிச்சயம் தேவை. தினசரி காரை எடுப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மாதக்கணக்கில் காரை பார்க் செய்பவர்கள், நிச்சயம் பாடி கவர் போட வேண்டும். உங்களுக்கே தெரியாமல் வெயிலில் காரின் பாடி பெயின்ட் ஃபேடு ஆகத் தொடங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெயில் ஓகே; பெயின்ட் Fade ஆகும். ‘மழையில் கார் நின்னா என்ன தப்பு... மழை நீர்தான் காரைக் கழுவி விடுமே’ என்கிறீர்களா? உலகிலேயே சுத்தமானது மழை நீர்தான். ஆனால், மாசுபட்ட காற்றோடு அது கலந்து வரும்போது, நமக்கே தெரியாமல் கெமிக்கல்/உப்பு கன்டென்ட் நமது காரில் விழும். இதை அப்படியே இரண்டு நாட்கள் விட்டால், நிச்சயம் செலவுதான். பாடி கூடப் பரவாயில்லை; விண்ட்ஷீல்ட்தான் இதில் பெரிய செலவு வைக்கும். இதற்கும் ஒரு தீர்வு உண்டு. மழை பெய்தவுடன், சுத்தமான நீர் கொண்டு ஒரு முறை முன் பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடியில் ஊற்றிக் கழுவி விடுங்கள். விண்ட்ஷீல்டு கிளார் அடிக்காது.

இதற்கு இன்னொரு தீர்வு – பாடி கவர். இதிலும் UV Protected Body Cover என்று மார்க்கெட்டில் உண்டு. காரைக் காதலிப்பவர்களுக்கு இந்த பாடி கவரை ரெக்கமண்ட் செய்கிறேன். இது வெயில் சூட்டையும், மழை நீரையும் காரில் அண்ட விடாது. இதிலேயே இரண்டு குவாலிட்டி உண்டு. பாராசூட் தயாரிக்கும் மெட்டீரியல் கொண்டு ரெடி செய்யப்படும் பாடி கவர் இன்னும் பாதுகாப்பு. என்ன, இது விலை கொஞ்சம் அதிகம்.

பறவைகள் எச்சம் காருக்கு ஆபத்தா?

மரத்துக்குக் கீழே பார்க் செய்வதில் வெயில், மழையைத் தாண்டி பெரிய பிரச்னை – Bird Droppings எனப்படும் பறவைகளின் எச்சம்தான். ‘காக்காதானே கக்கா போயிருக்கு’ என்று அசால்ட்டாக நினைப்பது சரிதான். எந்தப் பிரச்னையுமே அதை முற்ற விடாமல் இருக்கும் வரைதான் ஓகே! நாட்கணக்கில் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டால்... அப்போதுதான் சிக்கல். இதைச் சரி செய்வது, பாடி ஷாப் ஆட்களுக்கே கொஞ்சம் கஷ்டம்.

காரின் பாடிகூடப் பிரச்னை இல்லை. விண்ட்ஷீல்டுதான் இதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும். 10 நாட்கள் ஆனபிறகு இந்த விண்ட்ஷீல்டைச் சரி செய்ய முடியாது. இதனால், இரவு விஷனும் பாதிக்கப்படும். விண்ட்ஷீல்டில் கிளார் அடித்து, கார் ஓட்டவே கஷ்டப்படும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.

என்ன செய்ய வேண்டும்?

பறவை எச்சங்களைப் பார்த்தவுடனேயே சட்டெனக் கழுவிவிட வேண்டும். இதை நாட்கணக்கில் விட்டால், நிச்சயமாக எடுக்கவே முடியாது. ஆயுதபூஜைக்குச் சாமி கும்பிடும் சிலர், கார் பாடியில் சந்தனம் குங்குமம் வைத்து அப்படியே விட்டு விடுவார்கள். இதையும் நாட்கணக்கில் விட்டால் பெரிய சிக்கல்தான். குங்குமத்தில் இருக்கும் கெமிக்கல் இதில் பயங்கரமாக ரியாக்ட் ஆகிவிடும். சிலர் விண்ட்ஷீல்டில் லேசான உப்புத் தன்மை கொண்ட போர் தண்ணீர் கொண்டு கழுவுவார்கள். இதுவும் தவறு. குறைந்தது ஒரு பாட்டில் நல்ல தண்ணீராவது வைத்துக் கழுவுவதுதான் சரி!