மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆ... தள்ளு... தள்ளு! - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாமா? - தொடர் #20: சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்

நீண்ட நாட்கள் கழித்து ஒரு பைக்கை எடுக்கிறீர்கள். ஸ்டார்ட் ஆகவில்லை. விஷய ஞானமுள்ளவர்கள் என்றால், ஓரளவு ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்து, பேட்டரியை சார்ஜ் செய்து என்று தெரிந்தவரை முயற்சிப்பார்கள். இதுவே காருக்கு இப்படி ஒரு பிரச்னை வந்தால்?

இந்த நேரத்தில் காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாமா? அதாவது, ‘புஷ் ஸ்டார்ட்’ செய்யலாமா? காரைத் தள்ளிவிடுவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா?

ஆ... தள்ளு... தள்ளு! - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட்  செய்யலாமா? - தொடர் #20: சர்வீஸ் அனுபவம்

நமது வாடிக்கையாளர் ஒருவர் கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து ரிட்டர்ன் வந்திருக்கிறார். தனது எஸ்யூவி காரை பல மாதங்களாக எடுக்கவில்லை. நீண்ட மாதம் கழித்து காரை எடுக்கும்போது, கார் ஸ்டார்ட் ஆகவில்லை. உடனே எங்களுக்குத் தொலைபேசினார். ‘‘ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் எடுக்குறேன். இன்ஜின் க்ராங்க் ஆகுது; ஆனால் கார் ஸ்டார்ட் ஆகலை’’ என்று சொன்னார். நாங்கள் 45 நிமிடங்களுக்குள் உங்கள் வீட்டுக்குள் சர்வீஸ் ஆள் வருவார் என்று சொல்லிவிட்டோம்.

அதற்குள் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்கள் - தங்களுக்குத் தெரிந்ததை ஆளாளுக்குச் சொல்லியிருக்கின்றனர். ‘‘ரொம்ப நாள் நிப்பாட்டி இருந்ததால, பேட்டரி ப்ராப்ளம் சார்... தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணா சரியாகிடும். இதுக்கு எதுக்கு சர்வீஸ் சென்டர்... காரை புஷ் ஸ்டார்ட் செய்து கிளப்பிடலாம்’’ என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

‘‘ஆ... தள்ளு... தள்ளு...’’ என்று வடிவேலு படப் பாணியில் நான்கைந்து பேர் காரைத் தள்ளிக்கொண்டே போக... வீட்டு பார்க்கிங்கில் இருந்து அரை கிமீ காரைத் தள்ளிவிட்டார்கள். ம்ம்ஹூம்... கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை.

எங்கள் ஆள், சரியாக 40 நிமிடங்களுக்குள் அவர் வீட்டுக்குப் போக, வீட்டில் ஆள் இல்லை. போன் செய்தால், அரை கிமீ தள்ளி இருப்பதாகச் சொல்ல... என்ன ஏதுவென்று விசாரித்தபோது, தாங்கள் காரைத் தள்ளிய கதையைச் சொல்லி விட்டார் அந்த கார் உரிமையாளர்.

‘‘காரை ஏன் சார் தள்ளுறீங்க...’’ என்று லேசாகக் கடிந்துகொண்ட எங்கள் மெக்கானிக், வேறு வழியில்லாமல் காரை டோ செய்துகொண்டு சர்வீஸ் சென்டர் வந்துவிட்டார். முதலில் பேட்டரி அவுட்புட் செக் செய்தோம். நன்றாகவே இருந்தது. காரை ஸ்டார்ட் செய்து பார்த்தோம். செல்ஃப் மோட்டார் சுற்றுவது நன்றாகவே தெரிந்தது. அப்படியென்றால், பேட்டரி நல்ல சார்ஜிங்கில்தான் இருக்கிறது. ஆனால் இன்ஜினுக்குள் எந்த ரெஸ்பான்ஸே இல்லை. அதாவது, க்ராங்க் ஆகவே இல்லை. டெட் ஆக இருந்தது.

தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யும் கேஸ் என்றால், முதலில் ரெஃப்ளெக்ட் ஆவது இன்ஜினுக்கு மேலே உள்ள கேம்ஷாஃப்ட்டில்தான். வளைவு நெளிவாக இருக்கும் இது. வால்வை மூடி மூடித் திறந்து, இன்ஜின் இயக்கப் பணி செய்வதுதான் கேம்ஷாஃப்ட். நாங்கள் நினைத்தது சரிதான். கேம்ஷாஃப்ட் முதல் லோப், எண்டில் வருகிற கியர் வரை எல்லாமே டேமேஜ் ஆகியிருந்தது. இது காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சித்ததால் வந்த வினை.

ஆ... தள்ளு... தள்ளு! - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட்  செய்யலாமா? - தொடர் #20: சர்வீஸ் அனுபவம்

இங்கே நீங்கள் இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, அந்த வாடிக்கையாளர் பார்க்கிங்கில் இருந்த காரை முதன் முதலாக எடுக்கும்போது ஸ்டார்ட் ஆகவில்லை. அதற்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும். கேம்ஷாஃப்ட் உடைந்தது தள்ளிவிட்டதால் ஏற்பட்டது. முதலில் ஏன் ஸ்டார்ட் ஆகவில்லை என்பது தெரிய வேண்டுமே?

பேட்டரி எல்லாமே நன்றாக இருப்பதால், அடுத்த பிரச்னை இன்ஜினுக்கு வரும் ஃப்யூல் சப்ளையாகத்தான் இருக்கும். ஃப்யூல் சப்ளை ஆகிறதா என்று ஃப்யூல் லைனை செக் செய்தோம். ஆம், நாங்கள் நினைத்தபடி ஃப்யூல் பம்ப்பிங் வேலை நடக்கவில்லை. லோ ப்ரஷர் பம்ப்பில் இருந்து ஹை ப்ரஷர் பம்ப்புக்கு வரும் ஃப்யூலில் தடை இருந்தது. அதனால்தான் இன்ஜினுக்கு எரிபொருள் போகாமல் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. இந்த நேரத்தில் ஊரே சேர்ந்து தள்ளு தள்ளு என தள்ளினாலும், கார் ஸ்டார்ட் ஆகாது.

ஆ... தள்ளு... தள்ளு! - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட்  செய்யலாமா? - தொடர் #20: சர்வீஸ் அனுபவம்

காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வதால் என்ன ஆகும் என்பதைச் சொல்லிவிடுகிறேன். தெரிந்து கொள்ளுங்கள். டிரைவர் சீட்டில் ஒருவர் உட்கார்ந்து கொள்வார். டிரைவர், க்ளட்ச்சை மிதித்துக் கொள்ள, பின்னால் இருப்பவர்கள் தள்ளிவிடுவார்கள். க்ளட்ச் மிதிக்கும்போது, இன்ஜினுக்கும் கியர்பாக்ஸுக்கும் உள்ள பிணைப்பு விலகிவிடும். காரை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தள்ளிவிடும்போது, சடாரென க்ளட்ச்சை ரிலீஸ் செய்வார் டிரைவர். செயற்கையாக இன்ஜின் பிஸ்டனைச் சுற்ற வைப்பதுதான் இந்தச் செயல். அப்போது இன்ஜினுடன் என்கேஜ் ஆகும் க்ளட்ச். நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இதனால் இன்ஜின் க்ராங்க் ஆகி கார் ஸ்டார்ட் ஆவது என்பது அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. ஆனால், உண்மையில் என்ன நடக்கும் என்றால், பிஸ்டன்கள் சரியாக இயங்காததால் உள்ளே அழுத்தம் ஏற்பட்டு, வால்வுகள் கன்னாபின்னாவென மூடித் திறந்து, கேம்ஷாஃப்ட்டுக்கு ஃபுல் ப்ரஷர் ஏறிவிடும். அப்புறம் கேம்ஷாஃப்ட் காலி. இங்கே நடந்துள்ளது அப்படித்தான்.

முதலில் ஏன் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஃப்யூல் சப்ளை செய்வதில், ஹை ப்ரஷர் பம்ப், லோ ப்ரஷர் பம்ப் என இரண்டு பம்ப்கள் முக்கியம். லோ ப்ரஷர் பம்ப் என்பது ஃப்யூல் டேங்க்குக்குள் இருக்கும். இதுதான் மேலே எரிபொருளை பம்ப் செய்து அனுப்பும். அங்கிருந்து இன்ஜின் பக்கத்திலுள்ள உள்ள ஹை ப்ரஷர் பம்ப் மற்றொரு வேலையைப் பார்க்கும். இதில் லோ ப்ரஷர் பம்ப் ஒர்க் ஆகவில்லை. நாட்கணக்கில் நிறுத்தியதால் எரிபொருள் கண்டாமினேட் ஆகியிருக்கலாம். இந்த நேரத்தில் பேட்டரி சரியாக இருந்தால், ஸ்டார்ட் செய்யும்போது ‘கிர்ர்ரிக் கிர்ர்ரிக்’ என க்ராங்க் ஆகும் சத்தம் கேட்கும். ஆயில் – எரிபொருள் சப்ளை இல்லாததால், பிஸ்டன் சும்மா இயங்கும். ஆனால், வேலை நடக்காது. இங்கே அதுதான் நடந்திருக்கிறது.

லோ ப்ரஷர் ஃப்யூல் பம்ப், இன்ஜின் ஹெட்ஒர்க் எல்லாம் சேர்த்து மாற்ற வேண்டும். இதில் காரைத் தள்ளிவிட்டதால் கேம்ஷாஃப்ட் உடைந்து போனதையும் மாற்ற வேண்டும். இந்த நேரத்தில் பெரிய ட்விஸ்ட் அடித்துவிட்டார் அவர். ‘‘காரை நாங்கள் தள்ளிவிடவே இல்லை. இது மேனுஃபேக்ச்சரிங் பிரச்னை’’ என்று வழக்கம்போல், பழியை தயாரிப்பு நிறுவனத்தின் மேல் போட ஆரம்பித்து விட்டார். இதற்காகத்தான் எங்கள் மெக்கானிக் மூலம் ஆரம்பத்தில் சொன்னதைப் பதிவு செய்யப்பட்டதைச் சொன்னபோது, ஒருவழியாக ஒப்புக் கொண்டார். பிறகென்ன, 45,000 ரூபாய் எஸ்டிமேஷன் போட்டு எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு போனார்.

காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வதில், கவனமா இருங்க! ஏனென்றால், நீங்களும் பாவம்; காரும் பாவம்!

கார் ஸ்டார்ட் ஆகலையா... என்ன காரணம்?

பொதுவாக, கார் ஸ்டார்ட் ஆகாததற்கு நிறைய காரணங்கள் உண்டு. உதாரணத்துக்கு...

  • முதலில் எல்லோரும் செக் செய்வது பேட்டரியைத்தான். பேட்டரி சார்ஜிங்கில் இல்லாமல் இருந்தால், கார் ஸ்டார்ட் ஆகாது. இப்போது ஜம்பர் கேபிள் வைத்தும் ஸ்டார்ட் செய்யலாம். ஆனால், டெர்மினலைத் தவறாக மாற்றிவிட்டால், பேட்டரி வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, கவனம்.

  • பெட்ரோல் கார் என்றால், ஸ்பார்க் ப்ளக்கும் காரணமாக இருக்கலாம். மழை நீர், கார்பன் போன்றவற்றால் இது ஏற்பட்டிருக்கலாம். டீசல் வாகனம் என்றால், ஃப்யூல் பம்ப்பில் பிரச்னையும் இருக்கலாம். ஃப்யூல் இன்ஜெக்ட் ஆகவில்லை என்றால், கார் ஸ்டார்ட் ஆகாது.

  • நீண்ட நாட்கள் காரை நிறுத்தி வைத்திருக்கும்போது, எரிபொருள் கண்டாமினேட் ஆக வாய்ப்புண்டு. இதனால், எரிபொருளில் பாசி படர்ந்து எரிபொருள் இன்ஜினுக்கு சப்ளை ஆவதில் திணறல் ஏற்படலாம்.

  • நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்திருந்த காரில், எலி கடித்து ஒயரிங் கட் ஆகியிருந்தால் கார் ஸ்டார்ட் ஆவதில் திணறல் இருக்கும். மால்பங்ஷன் வார்னிங் லைட் க்ளஸ்ட்டரில் நிச்சயம் தெரியும். கவனம் தேவை.

  • எது எப்படியோ, கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது கார் ஸ்டார்ட் ஆவது.. அதிர்ஷ்டம்தான். இது ரெக்கமண்டட் இல்லை. சொல்லப்போனால், இது எப்போதுமே ஆபத்துதான். கேம்ஷாஃப்ட் உடைந்து, பர்ஸுக்குத்தான் வெடி வைக்கும்.