
தொடர் #9: சர்வீஸ் அனுபவம்
நான் மாருதியில் இருப்பதற்காகச் சொல்லவில்லை. மாருதி ஜென் காருக்கு என்று ஒரு தனிக்கூட்டமே இருக்கிறது. அவர்களுக்கு ஜென் காரை விற்கக்கூட மனசு வராது.
என்னிடம் ஒரு ஜென் பிரியர் வந்தார். ஐ.டி ஊழியரான அவர், ‘‘சார், என்கிட்ட ஒரு பழைய ஜென் இருக்கு. விற்கவே மனசு வரலை. சும்மா போடவும் மனசு இல்லை. ஒரு நல்ல பட்ஜெட்டில் இதை ரெடி பண்ணித் தாங்க. இனி இதைத்தான் ஓட்டலாம்னு இருக்கேன்! லாங் ரைடும் போகலாம்னும் ஆசை!’’ என்றார்.
அது 1998 மாடல். 2 லட்சம் கி.மீ ஓடிய கார் என்பதால் வீலில் இருந்து சஸ்பென்ஷன், டயர், டிஸ்க் எல்லாமே மாற்ற வேண்டும். இன்ஜின் மட்டும்தான் பக்கா. மற்ற எல்லா பாகங்களுமே மாற்ற வேண்டிய சூழல். காரின் மார்க்கெட் மதிப்பு 45,000 ரூபாய்தான். ஆனால், இதையெல்லாம் வேலை செய்தால், 35,000 ரூபாய் வரும் என்று எஸ்டிமேட் கொடுத்தேன். பரவாயில்லை என்றார்.
பக்காவாக ரெடி செய்து கொடுத்தாயிற்று. அவரும் ஹேப்பி. டெலிவரி எடுத்தவுடன் வெளியூருக்கெல்லாம் ரவுண்டு அடித்து விட்டு வந்துவிட்டதாகச் சொன்னார். சஸ்பென்ஷனில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்தார். ஆனால், எதிர்பார்த்தபடியே ஒரு வாரம் கழித்து போன் செய்தார்.

‘‘வெளியூர் போயிட்டு வந்தப்போலாம் நல்லாதான் இருந்துச்சு. இப்போ திடீர்னு சத்தம் அதிகமா வருது. என்னனு தெரியலை!’’ என்றார். அதாவது, ஆரம்பத்தில் அவர் கொடுத்தபோது சஸ்பென்ஷன் ஸ்டட், ஸ்டீயரிங், வீல் பேரிங் இரைச்சல் என்று எக்கச்சக்க சத்தம் வந்தது. ஆனால், நாங்கள் ரெடி செய்து கொடுத்தபோது, எல்லா சத்தங்களையும் அரெஸ்ட் செய்துதான் கொடுத்தோம்.
எப்போதுமே கஸ்டமர்கள் இது மாதிரி புகாருடன் வரும்போது, ‘ஜாயின்ட் ரோடு டெஸ்ட்’ என்கிற ஒரு விஷயத்தைக் கடைப்பிடிப்போம்.
அதாவது, அவர்களை உடன் வைத்தே டெஸ்ட் டிரைவ் செய்வது. பின்பு அவர்களை ஓட்ட விடுவது. ஜாயின்ட் ரோடு டெஸ்ட்டில், எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாமே பக்காவாக இருந்தது. ஒன்றுக்கு இரண்டு தடவை டெஸ்ட் செய்தபிறகும் எந்தப் பிரச்னையும் தெரியவில்லை.
திரும்பவும் வெளியூர்ப் பயணம் போய்விட்டு வந்ததாகச் சொன்னார். ‘‘ஒரு தடவைகூட சத்தம் வரலை. ரொம்ப தேங்க்ஸ்’’ என்றார். திரும்பவும் 2 நாட்கள் கழித்து போன். ‘‘சார், எனக்குத் திருப்தியே இல்லை. மறுபடியும் சத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு. இ்ன்ஜின் சத்தம்னு நினைக்கிறேன். ‘ஸ்ஸ்ஸ்ஸொய்ங்...’னு வருது’’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.
மீண்டும் ஜாயின்ட் ரோடு டெஸ்ட். அவர் சொன்னதுபோல், எந்தப் பிரச்னையும் இருப்பதுபோல் தெரியவில்லை. ‘‘என்னை நம்பமாட்டீங்களா... உங்ககூட வரும்போது மட்டும் சத்தம் கேட்கமாட்டேங்குது’’ என்று புலம்பினார். ‘வெஹிக்கிள் நார்மல்’ என்று ரிப்போர்ட் எழுதி, காரை அவரிடம் டெலிவரி கொடுத்து விட்டோம்.
அன்றைக்கே நைட்ஷிஃப்ட் முடித்து விட்டு, காலை போன் செய்தார். ‘‘35,000 ரூபாய் செலவழிச்சும் எனக்குத் திருப்தியே இல்லை. உங்ககூட ஓட்டும்போது கேட்கலை. ஆனா நான் ஓட்டும்போது மட்டும் அந்தச் சத்தம் கேட்குது. எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்க என்னமோ பண்றீங்க? ‘மோசமான சர்வீஸ்’னு நான் மாருதிக்கு மெயில் போடப் போறேன்’’ என்று புகார் மெயிலும் தட்டிவிட்டார்.
டெக்னிக்கல் ஹெட் என்று சொல்லக் கூடிய மேனேஜருக்குத் தகவல் போய், அவரும் வந்துவிட்டார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் காரை டெஸ்ட் டிரைவ் செய்தால்... ஆச்சரியம்... எந்தச் சத்தமும் கேட்கவில்லை. கண்ணாடிகளை இறக்கிவிட்டும் ஓட்டிப் பார்த்தோம். ம்ஹூம்... எந்தச் சத்தமும் வரவில்லை.
‘‘நீங்க என்னை எப்படியோ ஏமாத்தி ஓட்டுறீங்க!’’ என்று கடுப்பாகிவிட்டார் அவர். இதற்காக ஒவ்வொரு தடவை சத்தம் கேட்கும்போதும், பானெட்டைத் திறந்து, பிரேக்குகளை செக் செய்து, ஆயில் சம்ப்பைச் சரிபார்த்து... என்று ஏதேதோ மெக்கானிக் வேலையும் பார்த்திருக்கிறார்.
எல்லோருக்குமே மன அழுத்தம். இதற்கு என்னதான் தீர்வு... பிரச்னை என்னவென்று தெரிந்தால், அதற்கு ஏதாவது ஒரு தீர்வு கண்டுபிடிக்கலாம். எந்த இரைச்சல் என்று தெரியாமேலேயே அந்த இரைச்சல்l̥ எப்படி அரெஸ்ட் செய்வது? மாருதியில் இருந்தும் ஒரே ப்ரெஷர். அந்தச் சத்தம் எப்போதெல்லாம் வந்தது என்று ஒரு ஷார்ட்லிஸ்ட் எடுத்தோம். அவர் சொன்ன தேதி எல்லாமே, அவர் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நாட்களாகவே இருந்தன. அதாவது, வெளியூருக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லும்போது அந்தச் சத்தம் வந்ததாகக் குறிப்பிடவில்லை அவர்.
ஒரு நாள் முழுதும் அவருடனேயே அலுவலகம்/வீடு என்று பயணம் செய்வது தான் என்று முடிவாயிற்று. தினமும் இரவுப் பணி முடிந்து அதிகாலை 2.30 மணிக்குத்தான் அவர் வீடு செல்வார். காலை 2.30 மணிக்கு அவர் அலுவலக வாசலில் எங்கள் குழுவினருடன் நின்றோம்.
அவர் வெளியே வந்ததும் எங்கள் டீமே காரை ஓட்டினோம். அவர் சொன்ன வழியில் காரை ஓட்டினோம். கண்ணாடியை ஏற்றி, ஏ.சி–யெல்லாம் ஆஃப் செய்து விட்டோம். காதைக் கூர்மையாக்கிக் கொண்டோம். 10 நிமிடங்களாகியும் எந்தச் சத்தமும் கேட்கவில்லை.
``கொஞ்சம் பொறுங்க” என்று அவர் எங்களை ஒரு பார்வை பார்த்தார். என்ன ஆச்சரியம்! ஒரு மெயின் ரோடு க்ராஸ் ஆன கொஞ்சநேரத்தில், காரிலிருந்து அவர் சொன்ன அந்த அமானுஷ்யமான ஹம்மிங் சத்தம் கேட்க ஆரம்பித்தது. ‘‘சார், இந்தச் சத்தம்தான்’’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். நாங்கள் எல்லோரும் சுதாரித்துவிட்டோம்.
எங்கள் எல்லோருக்குமே அந்தச் சத்தம் கேட்டது. தொடர்ந்து அவர் வீட்டுக்குப் போகும் வழியில் 5 கி.மீ வரை அந்தச் சத்தம் படுத்தி எடுத்திவிட்டது. காரை வேறு ஏரியாவுக்குத் திருப்பினோம். அமானுஷ்யச் சத்தம் காணவில்லை. திரும்பவும் அந்த ஏரியாவுக்குள் வரும்போது அந்த `ஹம்மிங்’ சத்தம்.

எங்கள் எல்லோருக்குமே புரிந்துவிட்டது. பிரச்னை காரில் இல்லை; ரோட்டிலும் நேரத்திலும்தான். அந்தச் சாலையின் அமைப்பு ஒரு மாதிரியாக இருந்தது. மேடு–பள்ளமாக இல்லை; ஏற்ற இறக்கமாக இல்லை; சமதளமாகவும் இல்லை – அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு ஒழுங்கற்ற முறையில் அந்தச் சாலையைச் சிதைத்து விட்டிருந்தார்கள்.
பகலில் கேட்காத இந்த அமானுஷ்யச் சத்தம்... இரவில் மட்டும் கேட்கிறது. பகலிலும் இந்த இடத்தில் சத்தம் ஏற்பட்டிருக்கும். ஆனால், பகல் டிராஃபிக் சத்தத்தில் அந்தச் சத்தம் அவ்வளவாகக் கேட்க வாய்ப்பில்லை. இரவு நிசப்தம் என்பதால், அந்தச் சத்தம் நன்றாகவே கேட்டு அவரைப் பயமுறுத்தி இருக்கிறது. அதனால்தான் அவர் வெளியூர் போகும் போதும், மற்ற இடங்களில் பயணிக்கும் போதும் கேட்காத இந்தச் சத்தம், 5 கி.மீ–க்குள்ளாக அங்கே மட்டும் கேட்டிருக்கிறது.விஷயத்தை விளக்கியபிறகுதான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. ‘‘நல்லவேளை, இதுக்காகவே ஜென் காரை மாத்திடலாம்னு நினைச்சேன்...’’ என்று புளகாங்கிதம் அடைந்தார்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், சில நேரங்களில் வாகனங்களைத் தாண்டி சில விஷயங்களில் தவறு இருக்கலாம். அது எதிர்பார்த்ததைவிட ரொம்ப சுமாரான விஷயமாகவும் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு.
எப்போதெல்லாம் சத்தம் வரும்?
கார்களில் வரும் சத்த அளவுகளை NV என்பார்கள். நாய்ஸ், வைப்ரேஷன். இதில் சத்தத்துக்கும் அதிர்வுகளுக்கும் வித்தியாசம் உண்டு. சில அதிர்வுகளை உணர மட்டும் முடியும். சத்தம் என்பது காதில் கேட்கக் கூடியது.
சில கார்களை நீண்ட நாட்கள் வெயிலிலேயே நிறுத்தியிருந்தால், டயர் கல் மாதிரி கடினமாகிவிடும். இதனால் வேகமாகப் போகும்போது மில்லில் சங்கு ஊதும்போது பயங்கரமாக ஒரு சத்தம் வரும்.
வாகனங்களைத் தாண்டியும் சில சத்தங்கள் உண்டு. பாலங்களில் போகும்போது, வரும் சத்தத்துக்குப் பெயர் ‘ஏர் கட்டிங் நாய்ஸ்.’ இதைக் கண்டு பயப்பட வேண்டாம்.
சில நெடுஞ்சாலைப் பாலங்களில் சாலைகளில் உள்ள சின்ன டிவைடர்களில் போகும்போது, ‘தடக் தடக்’ என்ற சத்தம் கேட்கலாம். இதுவும் பிரச்னை இல்லை.
மற்றபடி வாகனங்களின் பிரச்னையாலும் சத்தம் வரலாம். வாகனம் அடிபட்டால் ஏற்படும் சத்தம் ஒரு வகை. வீல் பேரிங் தேய்ந்திருந்தால், ‘ம்ம்ம்ம்’ என்று கேட்கும் சத்தம் ஒரு வகை. இது தவிர கியர்பாக்ஸ், டிஃப்ரன்ஷியல் போன்ற இடங்களில் அதிர்வுகளோ, சத்தமோ – எதுவாக இருந்தாலும் அலெர்ட் ஆகிவிடுங்கள்.
- விமல்நாத்; ஓவியங்கள்: ராஜன்