
விமல்நாத்; ஓவியங்கள் : ராஜன்
ஆரோக்கியமாக இருக்கும் உடல், திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய்வாய்ப்பட்டுப் போகிறது. ஒரு விஷயத்தை உன்னிப்பாகப் பார்த்தால் தெரியும். முந்தின நாள் சாப்பிட்ட சாப்பாடோ அல்லது உங்களை அறியாமல் செய்த ஏதோவொரு தவறோதான் இதற்குக் காரணமாக இருக்கும். ‘என்னடா இது, டாக்டர் மாதிரி பேசுறானே’ என்று நினைக்க வேண்டாம்.
ஒரு வகையில் நம் கார்களுக்கும் இது பொருந்தும். நம்மை அறியாமல் செய்த ஏதோ ஒரு சிறு தவறுதான், காரில் சில முக்கியமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நேரடியாக கேஸ் ஸ்டடிக்குப் போவோம்.
கஸ்டமர் ஒருவர், குடும்பத்துடன் எர்டிகாவை டெலிவரி எடுத்தார். அவருக்கு இது முதல் கார். அதனால், டீசல் பயன்பாட்டிலிருந்து, காரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எல்லாவற்றையும் வகுப்பு எடுத்து அனுப்பினோம். அடுத்த மூன்றாவது நாள் அதே கார், எங்கள் ஷோரூமில் விருட்டென நுழைந்தது. காரிலிருந்து செம கோபமாக அவர் இறங்கினார். ‘‘என்ன புராடக்ட் பண்றீங்க... 14 லட்ச ரூபாய் போட்டு ஒரு புது கார் வாங்கினா, இப்படியா ரெண்டே நாளுக்குள் பிரச்னை வரும்’’ என்று செம கடுப்பாகக் கத்த ஆரம்பித்து விட்டார்.
ஷோரூமில் மற்ற வாடிக்கையாளர்கள் என்ன, ஏது என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். ‘‘எர்டிகாவுல இப்படி ஒரு பிரச்னையா’’ என்று சிலர் முகம் மாறுவதையும் நான் கவனித்தேன். அவரைச் சமாதானப்படுத்தி, ‘‘எதுவா இருந்தாலும் உள்ள போய்ப் பேசிக்கலாம். அப்படி என்ன பிரச்னைனு சொல்லுங்க!’’ என்று விசாரித்தேன்.

அவர் வாங்கியது ZDI+ எனும் டாப் வேரியன்ட். அதாவது, புஷ் பட்டன் ஸ்டார்ட் கொண்ட கீலெஸ் என்ட்ரி மாடல். அதற்கென உள்ள ரிமோட் கீ–யை நாங்கள் FOB என்போம். இந்த FOBதான் காருக்குச் சாவி. இது காருக்குள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் கார் ஸ்டார்ட் ஆகும். சில கார்களில் இந்த FOB–ல் உள்ள சின்ன பட்டனை ப்ரெஸ் செய்தால், மேனுவல் சாவி வெளியே வரும். இதை வைத்து சிக்கலான நேரங்களில் துவாரத்தில் நுழைத்து கதவை மட்டும்தான் திறக்க முடியும். காரை ஸ்டார்ட் பண்ண முடியாது. இந்த எர்டிகாவில் கார் ஸ்டார்ட் ஆவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சென்ட்ரல் லாக்கிங் ஆகவில்லை என்பதுதான் அவரது குற்றச்சாட்டு.
வொர்க்ஷாப்புக்குள் உடனே எர்டிகாவை பேக் செய்து சோதனை போட்டோம். அவர் சொன்னது நிஜம்தான். கார் ஸ்டார்ட் ஆகிறது. ஆனால், சென்ட்ரல் லாக்கிங் மட்டும் ஆகவில்லை. எங்களுக்கே இது செம ஷாக். அவரின் குற்றச்சாட்டு நியாயமானது தான். காரை வெள்ளிக்கிழமை டெலிவரி எடுத்திருக்கிறார். அடுத்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வேலை செய்யவில்லை. அதாவது முழுதாக ஒரு நாள்கூட வேலை செய்திருக்கவில்லை.
ஒரு புது காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுப்பதற்கு முன், PDI என்று சொல்லக்கூடிய Pre Delivery Inspection எனும் சோதனையைப் பக்காவாக முடித்துவிட்டு, எல்லாவற்றையும் செக்லிஸ்ட் செய்வது எங்கள் வழக்கம். செக்லிஸ்ட்டில் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாமே பக்கா! அப்புறம் எப்படி?
நாலு கதவுகளிலும் சென்ட்ரல் லாக்கிங்கை ஆராய்ச்சி செய்தோம். ஒயரிங்குகள் எதிலும் குறை இல்லை. சில நேரங்களில் FOB–ல் வீக்கான பேட்டரி இருந்தாலும், இந்தப் பிரச்னை வரும். இதில் எல்லாமே பக்கா. ஆச்சரியம்... வேலை செய்யவில்லை.
விசாரணை தொடங்கியது. காரில் பெரிதாக அவர் லாங் டிரைவும் போகவில்லை. ‘‘ஜங்ஷன் வரைக்கும்தான் போனேன்’’ என்றார். ஒரு தடவை சினிமா தியேட்டருக்குப் போனதாகவும் சொன்னார். காரில் ஏதாவது அடி, விபத்து... ம்ஹூம்... எதுவும் இல்லை. யாராவது லோக்கல் மெக்கானிக்குகள் வண்டியில் கை வைத்தார்களா என்று விசாரித்தேன். இல்லை. அதற்கப்புறம்தான் காரை 360டிகிரி பார்வையில் ஓர் அலசு அலசினேன். அப்போதுதான் கவனித்தேன். காரோடு வரும் ஃப்ளோர்மேட் இல்லையே இது? கடைசியாகத்தான் மெதுவாகச் சொன்னார். ‘‘ஃப்ளோர் மேட் மட்டும் மாட்டினேன். வேற எதுவும் பண்ணலை!’’
காரிலேயே வரும் ஃப்ளோர்மேட்டுக்கு மேலே எக்ஸ்ட்ராவாக ஒரு மேட் பொருத்துவது நல்லது என்று சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன். அதன்படிதான் இவர் நடந்திருக்கிறார். இதற்கு சீட்களைக் கழற்ற வேண்டும். இது கீ–லெஸ் என்ட்ரி இல்லாத கார்களில் பிரச்னை இல்லை. FOB உள்ள கார்களில், ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், சென்ஸார்கள் மற்றும் ஆன்டெனாக்கள். எர்டிகாவில் 5 ஆன்டெனாக்கள் உண்டு. கதவுகளில் 2, கியர் ராடு பக்கத்தில் ஒன்று; பம்ப்பருக்குள் ஒன்று; பின் பக்க சீட்டுக்கு அடியில் ஒன்று. இந்த ஆன்டெனாக்கள்தான் காருக்குள் நீங்கள் எங்கே FOB–யை வைத்திருந்தாலும், கார் ஸ்டார்ட் ஆவது போன்ற விஷயங்களை நடத்தும். இங்கே ஆன்டெனாக்கள் என்பது நீண்ட கம்பிபோல் இருக்காது. கறுப்பு நிறத்தில் சின்ன ப்ளாஸ்டிக் பாகம்தான்.

பின் பக்கத்தில் சீட்டைக் கழற்றி ஃப்ளோர் மேட் மாட்டுபவர்களுக்கு இந்த ஆன்டெனா விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஃப்ளோர் மேட் மாட்டும்போது, நீட்டிக்கொண்டிருக்கும் ஆன்ட்டெனாவை கட் செய்திருக்கிறார் அந்த டெய்லர். 5 ஆன்ட்டெனாக்களில் ஒன்று பழுதடைந்தால்கூட, காரில் சென்ட்ரல் லாக் சிஸ்டம் வேலை செய்யாது. முன் பக்கம் இந்த ஆன்டெனாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்பதால், அதை யாரும் தொட முடியாது. அதனால், இதில் ஸ்டார்ட் ஆவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆனால், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் வேலை செய்யவில்லை.
விஷயத்தைச் சொன்னபிறகு, ‘‘சாரிங்க... ஷோரூம்ல வந்து மோசமா நடந்துக்கிட்டேன்.’’ என்று மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றார். எனவேதான் மக்களே, ஃப்ளோர் மேட்ஆக இருந்தாலும் சரி – பெட்ரோல் போடுவதாக இருந்தாலும் சரி – காரில் வேலை நடக்கும்போது நீங்களும் உடன் இருந்து ஒரு பார்வை வையுங்கள். அதுவும் கீ–லெஸ் கார்களில் கேர்லெஸ் வேண்டாமே!
- அனுபவம் தொடரும்
நோட் பண்ணுங்க!
கீ–லெஸ் என்ட்ரி கார்களுக்குச் சாவி இருக்காது. இந்த ரிமோட் கீ–யை FOB என்று சொல்வோம். இதில் எல்லாமே சென்ஸார்தான்.
எர்டிகா போன்ற கார்களில் 5 ஆன்ட்டெனாக்கள் மூலம் FOB வேலை செய்கிறது.
காரை ஐடிலிங்கில் விட்டு, FOB–யை வைத்துவிட்டு வெளியே இறங்காதீர்கள். சில நேரங்களில் டோர் லாக் ஆக வாய்ப்புண்டு. இது ஒரிஜினல் என்றால், கவலை இல்லை. வெளிமார்க்கெட்டுகளில் வாங்கப்படும் டூப்ளிகேட் FOB–களில் கவனம். அதேபோல், உங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்து விட்டும் வெளியே இறங்க வேண்டாம்.
முடிந்தவரை தண்ணீரில் FOB நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கீழே போட்டாலும், பேட்டரி மற்றும் சென்ஸார் பழுதடைய வாய்ப்புண்டு.
வெளிமார்க்கெட்டில் ஃப்ளோர் மேட் போடும்போது, சீட்களைக் கழற்றித்தான் ஆக வேண்டும். அப்போது, எந்த ஒயரிலும் தேவையில்லாமல் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.