மற்ற எபிசோடுகள்
Published:Updated:

70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க? - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத், ஓவியங்கள்: ராஜன்

ரு சிறந்த கார் டிரைவருக்கான அடையாளம் சொல்லவா? பெல்ட்டை மாட்டிவிட்டு, சீட் முதல் மிரர்கள் அட்ஜஸ்ட் செய்து விட்டுத்தான் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும்; டேஷ்போர்டில் ஹேண்ட்பிரேக் முதல் எந்த வார்னிங் லைட்டும் ஒளிராத பட்சத்தில்தான் காரைக் கிளப்ப வேண்டும்.

இதை முறையாகச் செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அதையும் தாண்டி ஒவ்வொரு தடவையும் டேஷ்போர்டின் வலதுபுறம் உள்ள டெம்பரேச்சர் மீட்டரில் எப்போதும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே கார் ஓட்டுபவர், ஆகச்சிறந்த டிரைவர்.

அப்படிப்பட்ட டிரைவர்தான் அந்த வாடிக்கையாளர். ஆனால், அவர் டிரைவர் வைத்துத்தான் காரில் பயணிப்பார். எங்கள் நிறுவனத்தில் புத்தம் புது மாடல் கார் ஒன்றை டெலிவரி எடுத்தார் அவர். எல்லா கார்களுக்கும் 10,000 கி.மீ–க்குள் மூன்று இலவச சர்வீஸ் என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டாவது சர்வீஸ் முடிந்து 2,000 கி.மீ ஓடிய கொஞ்ச நாட்களிலேயே போன் செய்தார்.

‘‘என்ன சர்வீஸ் பண்றீங்க... உங்களை நம்பினா அவ்ளோதான்! நான் காட்டுக்குள்ள நின்னுக்கிட்டிருக்கேன். உடனே ஆளை அனுப்புங்க!’’ என்று செம டென்ஷன் ஆகிவிட்டார்.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

உடனே ஆட்களை அனுப்பினேன். அவரது காரின் டெம்பரேச்சர் மீட்டரைக் கவனித்தால்... 110 டிகிரிக்குமேல் கொதி நிலையில் முள் தகித்துக் கொண்டிருந்தது. அதாவது, இன்ஜின் ஓவர்ஹீட் ஆகி, பாயில் ஆகிக்கொண்டிருந்தது. பானெட்டைத் திறந்தால், கூலன்ட் சுனாமி மாதிரி பொங்கி வெளியே வழிந்து கொண்டிருந்தது. ஆச்சரியமாகப் போய்விட்டது எனக்கு.

பொதுவாக, பழைய செகண்ட் ஹேண்ட் கார்களில்தான் இம்மாதிரிப் பிரச்னை வரும். காரின் ஓடோமீட்டரைப் பார்த்தால், வெறும் 8,000 கூட ஓடி முடித்திருக்கவில்லை. இந்தச் சூட்டில் தொடர்ந்து கார் ஓட்டினால், இன்ஜின் சீஸ் ஆகிவிடும் என்பதால், காரை டோ செய்துகொண்டு சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு வந்தோம். ‘‘புது காரை டோ பண்ற அளவுக்குக் கொண்டு வந்துட்டீங்களே... ஒழுங்கா இன்ஜினை மாத்திக் கொடுங்க!’’ என்று டென்ஷனில் கத்திவிட்டார் அவர்.

சோதனை போட்டதில், ரேடியேட்டரில் இன்புட் போகிறது. ஆனால், அவுட்புட் கிடைக்கவில்லை. அதாவது, ரேடியேட்டரில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இப்போதுதான் சர்வீஸ் முடிந்த கார்; ரேடியேட்டர் பிளாக் ஆக வாய்ப்பே இல்லை. விஷயத்தை அவரிடம் சொன்னதும், ‘‘அப்போ ரேடியேட்டரை மாத்திக் கொடுங்க’’ என்று க்ளெய்ம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

‘‘நினைத்தவுடன் ‘சட் சட்’ என ஸ்பேர் மாற்றிவிட முடியாது. கொஞ்சம் டைம் குடுங்க’’ என்று ரிக்வொஸ்ட் வைத்தேன். பொதுவாக, பீரியாடிக்கலாக கூலன்ட் மாற்றும் காலஅளவுகூட நெருங்கவில்லை. அதாவது, ஒவ்வொரு 20,000 கி.மீ தாண்டியபிறகு கூலன்ட் மாற்றினால் போதும். முழுதாக டிரெய்ன் செய்துவிட்டு, ப்ரீமிக்ஸ்டு கூலன்ட் சேர்த்தால் போதும். ‘எத்திலின் கிளைக்கால்’ என்பதுதான் அந்த கெமிக்கல் பெயர். அதாவது, ப்யூர் டிஸ்டில்டு வாட்டருடன் மிக்ஸ் செய்வதுதான் ப்ரீ-மிக்ஸ். அப்போதுகூட ரேடியேட்டரில் அடைப்பு ஏற்படுவதெல்லாம் சான்ஸே இல்லை.

ரேடியேட்டரின் இன்புட்டில் ப்ரஷர் கொடுத்து சோதனை போட்டோம். அப்போதுதான் கவனித்தேன். அவுட்புட் ஏரியாவில் ஒரே உப்புப் படிமங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. உப்புத் தண்ணீரில் இருக்குமே... அந்த மாதிரி உப்புத் துகள்கள் அடைத்திருந்தன. அதனால் கூலன்ட் சர்க்குலேட் ஆகாமல், கொதிநிலைக்கு வந்து இன்ஜின் ஓவர்ஹீட் ஆவது நடந்திருக்கிறது. பொதுவாக, ரேடியட்டர் ஃபின்ஸ் ரொம்பச் சின்னதாக இருக்கும். சிறிய துகள் போனாலே அது அடைத்துக் கொள்ளும். இங்கே ஏகப்பட்ட படிமங்கள். எல்லாமே உப்பு. நாங்கள் ப்ரீ–மிக்ஸ்டு கூலன்ட்தான் ஊற்றுவோம். அதில் இந்த மாதிரி உப்புப் படிமங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை.

குறுக்கு விசாரணை நடந்தது. காரை வாடிக்கையாளர் ஓட்டுவதில்லை. டிரைவர் வைத்துத்தான் பயணிக்கிறார். அவரது டிரைவரை வரவழைத்து விசாரணை செய்தோம். கார் ஓட்டும்போது, என்னென்ன செய்கிறீர்கள் என்று விசாரித்தபோதுதான், பகீரென்ற அந்தத் தகவல் கிடைத்தது.

அதாவது, அந்த டிரைவர் 70–ஸ் கிட்ஸ். பழைய அம்பாஸடர், பத்மினி போன்ற கார்கள் ஓட்டிய அனுபவம் கொண்டவர். பொதுவாக, பழைய டிரைவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. காரை எடுக்கும்போது, பானெட்டைத் திறந்து, கூலன்ட் செக் செய்ய வேண்டும்; இன்ஜின் ஆயில் லெக் லெவல் செய்வார்கள்; பேட்டரி சோதனை போடுவார்கள்; ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றுவார்கள்; அப்புறம்தான் காரை எடுப்பார்கள்.

இந்த டிரைவரும் அதே ஸ்டைலில் பானெட்டைத் திறந்து, ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதுவும், பக்கத்தில் உள்ள உப்புத் தண்ணீர்க் குழாயில் தண்ணீரைப் பிடித்து ஊற்றியிருக்கிறார் என்பதுதான் இங்கே ஹைலைட். அதாவது, தினமும் இல்லை; வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை. அதுதான் ரேடியேட்டரில் உப்புப் படிமங்கள் ஏற்பட்டு, அடைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

கூலன்ட் ரிசர்வாயர் டேங்க் என்றொன்று உண்டு. இது வெள்ளையாக கொஞ்சம் டிரான்ஸ்பரன்ட்டாகத் தெரியும். இதில் ‘Low’ - ‘High’ என்று சிம்பல்கள் இருக்கும். காரை நிறுத்தியிருக்கும்போது, இது ‘Low’வில் இருக்கும். கொஞ்ச தூரம் கார் ஓடியபிறகு ‘High’–ல் காண்பிக்கும். அவர் காரைக் கிளப்பும்போது ‘Low’வில் இருந்தால், உப்புத் தண்ணீரை ஊற்றுவதை வழக்கமாக்கி இருக்கிறார். அது டிஸ்டில்டு வாட்டர் இல்லை என்பதால், உப்புப் படிய ஆரம்பித்து இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதை யாரிடமும் அவர் சொல்லாமல், அலெர்ட் ஆறுமுகமாக இருந்திருக்கிறார் என்பதுதான் இங்கே பெரிய பிரச்னையே!

அவரிடம் கேட்டபோது, ‘‘கூலன்ட் டாப்–அப் பண்றதுக்கு எதுக்கு சர்வீஸ் சென்டர் போகணும். அதான் நானே டாப்–அப் பண்ணினேன்’’ என்று அப்பாவியாகச் சொன்னார். நல்லவேளை – இன்ஜின் ஆயில் லெவல் சரியாகக் காண்பித்ததால், அதை விட்டு விட்டார். இல்லையென்றால், வேறு ஏதாவது ஆயிலையும் ஊற்றியிருப்பார்.

அப்புறம் அவருக்கு அறிவுரை சொல்லி அனுப்பினோம். அவசரப்பட்டு ரேடியேட்டரை மாற்றினால்... திரும்பவும் இதே பிரச்னைதான் வந்து கொண்டே இருந்திருக்கும் என்பதை வாடிக்கையாளருக்கு விளக்கினோம்.

காரைக் கிளப்புவதற்கு முன்பு, பானெட்டைத் திறந்துதான் ஆயில் லெவல், கூலன்ட் லெவலைச் சோதனை போட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மாடர்ன் கார்களில் டேஷ்போர்டைக் கவனித்தாலே போதும். அதாவது, ரொம்பவும் அலெர்ட் ஆக இருப்பதும் ஆபத்துதான்!

- அனுபவம் தொடரும்

- விமல்நாத்; ஓவியங்கள்: ராஜன்

இதை நோட் பண்ணுங்க!

கார்களின் சிசி-க்கு ஏற்ப 3 லிட்டரில் இருந்து 7 லிட்டர் வரை ஆயில் சம்ப் கொள்ளளவு இருக்கும். ஆயில், கூலன்ட் போன்ற விஷயங்களில் நீங்களாக டாப்–அப் செய்வது நிச்சயம் கூடாது.

ஓடிய காரை நிறுத்திவிட்டு பானெட்டைத் திறந்து, கூலன்ட் அளவைத் தயவுசெய்து சோதனை போடாதீர்கள். சூடாக இருக்கும் மூடியைத் திறந்தால்... ஆபத்து நமக்குத்தான்.

இப்போதுள்ள கார்களில், பானெட்டைத் திறந்துதான் ஒவ்வொரு திரவ அளவையும் செக் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. டேஷ்போர்டு வார்னிங்கை மட்டும் பாருங்கள்.

கார் ஓட்டும்போது, எப்போதுமே டெம்பரேச்சர் மீட்டரில் ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள். 90 டிகிரியைத் தாண்டினால், கார் ஒரு கி.மீ ஓடினால்கூட ஆபத்துதான்.

நீண்ட நாள் பார்க் செய்த காரை ஸ்டார்ட் செய்கிறீர்கள். கார் ஐடிலிங்கில் இருக்கும்போதும், டெம்பரேச்சர் முள் ‘C’–லேயே இருக்கிறது என்றால்... பிரச்னை இல்லை. கார் ஓட ஓட... முள் 90–யை நெருங்கிவிடும். கவலை வேண்டாம்.

காருக்கு ஏற்ப இன்ஜின் பே–வுக்குள் ஏகப்பட்ட சென்ஸார்கள் இருக்கும். ஒரு சென்ஸாரில் பிரச்னை என்றால்கூட, டேஷ்போர்டில் உள்ள வார்னிங் லைட் எரியும். இதை ‘மால்ஃபங்ஷன் வார்னிங்’ என்பார்கள். இது எரிந்தால்... காரை உடனே சர்வீஸ் சென்டருக்குள் விடுங்கள்.