பைக்ஸ்
கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

வாரன்ட்டி இல்லேனா... இன்ஷூரன்ஸ் இருக்கு! - தொடர் #12 சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத், ஓவியங்கள்: ராஜன்

‘கால்ல முள்ளு குத்திடுச்சு; சட்டை சின்னதாயிடுச்சு’ என்பார்கள். தேடி வந்து நம் காலில் முள்ளும் குத்தாது; சட்டையும் மாயக்கம்பளம் மாதிரி சிறிதாகாது. நாம்தான் முள்ளை மிதித்திருப்போம்; நாம்தான் பெரிதாக ஆகியிருப்போம். அதேபோல்தான் கார் டிரைவர்கள் இப்படிச் சொல்வார்கள். ‘‘டயர் வெடிச்சுடுச்சு...!’’

டயர் ஏன் வெடிக்கிறது? ஒரே காரணம்தான். ஓவர் இன்ஃப்ளேஷன். அதாவது, தேவைக்கு அதிகமான காற்றடித்துவிட்டு வேகமாக கார் ஓட்டினால், டயர்கள் சூடேறி வீங்கி வெடித்துவிடும். இதுவே டயர் கிழிவதற்கும் வெடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. வெடித்தால், வாரன்ட்டி கிடைக்கும் (சில நேரங்களில்). ஆனால், கிழிந்தால் நிச்சயம் வாரன்ட்டி கிடைக்காது.

வாரன்ட்டி இல்லேனா... இன்ஷூரன்ஸ் இருக்கு!
வாரன்ட்டி இல்லேனா... இன்ஷூரன்ஸ் இருக்கு!

அப்படி ஒரு விசித்திரமான கேஸ்தான் அன்றைக்கு வந்தது. ஒரு காரில் வலது பின்/முன் என இரண்டு டயர்களும் ஒரே நேரத்தில் வெடித்து விட்டிருந்தன. ‘டயர் வெடிக்கிறது ஒண்ணும் புதுசு இல்லை’ என்றாலும், ஆச்சரியம் என்னவென்றால், கார் 500 கி.மீ கூட முழுதாக ஓடியிருக்கவில்லை. ஒரு டயர் ஸ்டெப்னியும், புதுசாக ஒரு டயரும் வாங்கி ஃபிட் செய்து வந்தார். வாரன்ட்டியில் க்ளெய்ம் செய்து கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்.

இரண்டு டயர்களையும் செக் செய்து பார்த்தோம். சைடு வால்தான் கிழிந்திருந்தது. வெடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அது அலாய் வீல் கொண்ட கார். புது டயர் மாட்டிய அலாய் ரிம்மைப் பார்த்தால்... அதில் ஒரு பெரிய கீறல். ஸ்டெஃப்னிக்கு மாற்றிய வீலையும் சோதனை போட்டோம். ஆதாரம் தெரிந்துவிட்டது. ஆம்! அதிலும் அடே இடத்தில் அலாய் ரிம்மில் ஒரு பெரிய கீறல். கல் போன்ற ஏதோ ஒரு பொருள், டயரின் சைடு வாலைக் கிழித்திருக்க வேண்டும். அந்தக் கல்லின் கீறல்தான் இது. அதனால்தான் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்கிப் பார்த்தேன். ஆனால், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. டயரைப் பற்றி மட்டுமே குறை கூறிக்கொண்டிருந்தார். ‘‘கல்லெல்லாம் குத்தலை. இது வெடிக்கத்தான் செஞ்சிருக்கு. டயர் கம்பெனிக்காரங்களைக் கூப்பிடுங்க.. 500 கி.மீ.கூட ஓடலை. எனக்கு வாரன்ட்டி வேணும்.’’ என்று அடம்பிடித்தார்.

டயர் வெடிக்கவில்லை என்று நான் அடித்துச் சொல்வதற்குக் காரணம், ஒரு டயர் வெடித்தாலே வேகங்களில் கார் வாப்ளிங் ஆக வாய்ப்புண்டு. அதிலும் இரண்டு டயர்கள் என்றால், கார் நிச்சயம் பல்டி அடித்திருக்கும். ஆனால், இந்த கார் டயர் கிழிந்த கொஞ்ச நேரம் கழித்தும் பாதுகாப்பாக ஓரமாய் நின்றிருக்கிறது. டயர் வெடித்த கார்களை கன்ட்ரோல் செய்வது எக்ஸ்பர்ட் ஆன டிரைவர்களால்கூட முடியாது. ‘‘நீங்க எப்படி கன்ட்ரோல் பண்ணீங்க?’’ என்றேன் அவரிடம்.

வாரன்ட்டி இல்லேனா... இன்ஷூரன்ஸ் இருக்கு! - தொடர் #12 சர்வீஸ் அனுபவம்

அப்போதுதான் விஷயம் புரிந்தது. ‘‘நான் ஓட்டலை. நான் அடிக்கடி டிரைவர் வெச்சுத்தான் ஓட்டுவேன்’’ என்றார். அவரின் டிரைவரை வரவழைத்து விசாரித்தோம். அவர் முதலில் ஒப்புக்கொள்ளவே இல்லை. டயர் வெடித்ததாகத்தான் சொன்னார். பிறகு எங்கள் சர்வீஸ் ஆட்களின் ஆதாரங்களை வரிசையாகக் காட்டி விசாரித்ததும், கொஞ்சம் ஜெர்க் ஆக ஆரம்பித்தவர், பின்புதான் உண்மையை ஒப்புக் கொண்டார். ‘‘டயர் வெடிக்கலை சார். தோட்டத்துக்குப் போகும்போது, ஒரு மைல் கல் மேல காரை விட்டுட்டேன். அதுலதான் உரசிடுச்சு. அதுலதான் டயர் கிழிஞ்சிடுச்சுனு நினைக்கிறேன்’’ என்று ஒருவழியாக உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டார்.

டிரைவரை மாட்டிவிட்டு விட்டோமோ என்கிற சங்கடம் ஒரு பக்கம் இருந்தாலும், உண்மையை விளக்கிய திருப்தி.

ஆனாலும், அந்த கார் உரிமையாளருக்கு ஒரு வருத்தம். 500 கி.மீ.கூட ஓடாத புது டயர்களை இழந்த சோகம் தெரிந்தது அவரிடத்தில். இப்போது ‘‘வாரன்ட்டி வராதா’’ என்று ஏக்கமாகக் கேட்டார். வெளிப்புறப் பாதிப்பு, அதாவது ஆக்ஸிடென்ட் என்பதால், டயரின் வெண்டார்களே முடியாது என்று கைவிரித்து விட்டார்கள். அதற்கு இன்னொரு ஆப்ஷன் சொன்னேன். அதாவது, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வது.

சட்டென இன்ஷூரன்ஸுக்கு அப்ளை செய்து, சர்வேயரும் வந்துவிட்டார். எக்ஸ்டெர்னல் இம்பேக்ட் என்பதால், அலாய் டிஸ்க்கும் அடி வாங்கியிருந்தது. ஒரு அலாய் டிஸ்க் ரிம்மின் விலை 4,500 ரூபாய் வரை வரும். இரண்டு வீல்களுக்கும் சேர்த்து என்றால், 9,000 ஆகிவிடும், இரண்டு டயர்களோடு சேர்த்து சுமார் 19,000 வரை செலவாகும். வெளிப்பாதிப்பும் சேர்த்து இருந்ததால், நிலைமை அவருக்குச் சாதகமாக இருந்தது. சட்டென இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்து, டயர்களையும் அலாய் வீலையும் மாற்றிவிட்டோம். வெறும் 1,000 ரூபாய் மட்டுமே அவருக்குச் செலவு. ‘நன்றி சொல்ல உனக்கு’ என்கிற ரேஞ்சில், மகிழ்ச்சியாக காரை எடுத்துக்கொண்டு போனார் அந்த வாடிக்கையாளர்.

இதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று – டிரைவர் வைத்து ஓட்டும்போது, நம்பிக்கையான நபர் முக்கியம். எப்போதும் விழிப்புடனே இருங்கள். இரண்டாவது – டயர் மட்டுமே கிழிந்திருந்தால், இதை இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்திருக்க முடியாது. அதற்காக, டயர் வெடிக்கும் போது, ‘வேகமாப் போய் மோதி காரையும் டேமேஜ் பண்ணிடுங்க’ என்று அர்த்தமல்ல! அப்படிச் செய்தால் அதைவிட ஆபத்தான ஒரு விஷயம் இருக்க முடியாது.

வீல் அலைன்மென்ட்
வீல் அலைன்மென்ட்

தேபோல் இன்னொரு சம்பவம். ‘‘என்ன வீல் அலைன்மென்ட் பண்ணியிருக்கீங்க நீங்க? கார் டயருக்குள்ள இவ்வளவு பெரிய ராடு இருக்கு பாருங்க. டயர் கிழிஞ்சு இப்போ புதுசு மாத்தியிருக்கேன்.’’ என்று தனது காருடன் வந்தார் ஒருவர்.

அந்த கார், நாங்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வீல் அலைன்மென்ட் செய்து அனுப்பிய கார். ‘டயருக்குள்ள ராடா’ என்று நான் முழித்துக் கொண்டிருந்தபோது, ரோடு சைடு பஞ்சர்காரருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார். ‘‘நல்லவேளை, அந்த மெக்கானிக் பார்த்தாரு. ‘டயருக்குள்ள இப்படி ஒரு ராடு இருக்கிறதாலதான் சத்தம்... அப்புறம் டயரும் கிழிஞ்சிடுச்சு’னு அவர் சொல்லித்தான் நான் டயர் மாத்தினேன்’’ என்றார்.

பொதுவாக, வீல் அலைன்மென்ட்க்கு டயர்களைக் கழற்ற வேண்டிய அவசியம் கிடையாது. நான்கு வீல்களும் சரியான அலைன்மென்ட்டில் இருக்கின்றனவா என்று ஒரு சின்ன ராம்ப்பில் மாட்டி சோதனை போடுவதுதான் வீல் அலைன்மென்ட். அவரது வாதம் என்னவென்றால், நாங்கள் வீல் அலைன்மென்ட்டின்போது தெரியாமல் ஒரு ராடை உள்ளே விட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி, வாரன்ட்டியும் கேட்டார்.விஷயம் அதுவல்ல. புதுசாகப் போடப்பட்ட ஒரு கான்க்ரீட் சாலையில் போகும்போது, சின்ன ராடு ஒன்று டயரின் பட்டனில் குத்தி பஞ்சர் ஆகியிருக்கிறது. அது தெரியாமல் இவரும் நாட்கணக்கில் காற்று அடித்து அடித்து ஓட்டிக் கொண்டே இருந்திருக்கிறார். நாள் ஆக ஆக, அந்த ராடு - டயரின் பட்டன் வழியாக டயரின் உள்ளே சென்று, உள்பக்கம் முழுவதும் பயணித்துக் கிழித்திருக்கிறது. இதைத் தெரிவித்த பிறகுதான் அவர் ஆசுவாசமானார். எனவே, காற்று இறங்குகிறது என்று தெரிய வந்தால், உடனே பஞ்சர் போட்டு விடுங்கள். இல்லையென்றால், டயரையே மாற்றும் நிலைமைதான் வரும்.

வாரன்ட்டி எதற்கு?

இன்ஷூரன்ஸ் எதற்கு?

வாரன்ட்டி என்பது, ஒரு பொருளுக்கான உத்தரவாதம். அதாவது, ஒரு பொருளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டே வரும் பட்சத்தில், நாளடைவில் அதில் ஏதோ ஒரு உற்பத்திக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால், அதுதான் வாரன்ட்டி. உதாரணத்துக்கு, கார் ஓட்டும்போது ஸ்பீடு பிரேக்கர்களில் அடிக்கடி ஏற்றி, இன்ஜினின் ஆயில் சம்ப்போ, ரேடியேட்டர் ஹவுஸிங்கோ உடைந்து விட்டது என்றால், அது உங்கள் தவறு. இதுவே இன்ஜின் ஓவர்ஹீட் ஆகி, ஏதோ ஒரு மால்ஃபங்ஷன் ஏற்பட்டு இன்ஜின் சீஸ் ஆகிறது என்றால், அது உற்பத்திக் குறைபாடு. இரண்டாவதற்கு மட்டும்தான் வாரன்ட்டி உண்டு.

அதாவது, வெளிக் காயங்களுக்கு வாரன்ட்டி கிடையாது; உள்காயங்களுக்கு மட்டும்தான். இது டயர்களுக்கும் பொருந்தும். டயர்களின் உற்பத்திக் குறைபாட்டினால் வீங்கி வெடித்தது என்றால், அதற்கு வாரன்ட்டி உண்டு. இலவச டயர் மாற்றலாம். நீங்களாக பள்ளத்தில், கல்லில் உரசிக் கிழித்தால், அதற்கு வாரன்ட்டியை எதிர்பார்ப்பது தவறு.

‘வாரன்ட்டி போச்சே’ என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, இந்த நேரத்தில் நீங்கள் இன்ஷூரன்ஸின் உதவியை நாடலாம். வெளிப்புறப் பாதிப்பு இருந்தால், நிச்சயம் இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்து கொள்ளலாம். முடிந்தவரை இன்ஷூரன்ஸில் ‘நில்–டெப்ரிஷியேஷன் பாலிஸி’ என்றொன்று உண்டு. இதைத்தான் பம்பர் டு பம்பர் என்பார்கள். அதையே உங்கள் கார்களுக்கு நான் ரெக்கமண்ட் செய்கிறேன்.

- அனுபவம் தொடரும்

டயர் முக்கியம் பாஸ்!

  • எப்போதுமே டயர்களுக்குத் தேவையான அளவைவிட அதிகளவு காற்றும் அடிக்காதீர்கள். குறைந்த அளவு காற்றும் அடிக்காதீர்கள். ஒன்று உங்களுக்கு ஆபத்து; இன்னொன்று டயருக்கு ஆபத்து.

  • முடிந்தளவு வெயிலில் காரை பார்க் செய்வதைத் தவிர்க்கலாம்.

  • ஒரு டயரின் ஆயுட்காலம் 30,000 – 40,000 கி.மீ வரை வரலாம். இது ஓட்டத்தைப் பொறுத்தது.

  • டயர்களின் ஆயுட்காலத்தை, பட்டன்களுக்கு இடையில் ரூபாய் நாணயத்தை வைத்து செக் செய்யலாம். நாணயம் பாதி உள்ளே போனால், டயர் தேயவில்லை.

  • டயர் பஞ்சர் ஆனது தெரிந்தால், காற்றை அடித்து அடித்து காரை ஓட்டாதீர்கள். அடுத்த நாளே பஞ்சர் போட்டு விடுங்கள்.

  • டயர்களின் அடிப்பாகத்தைவிட சைடு வால் ரொம்ப மென்மையாகவே இருக்கும். கூர்மையான கற்கள், முட்கள் சைடுவாலில் உரசினால்.... டயர் பாவம்!

  • பெரும்பான்மையான கார்களில் ஸ்டெஃப்னி டயரை ஒரு இன்ச் அளவு குறைத்துத்தான் கொடுத்திருப்பார்கள். பஞ்சரானால் ஸ்டெப்னி டயரை மாற்றிவிட்டு, லைஃப் லாங் ஓட்டலாம் என்று நினைக்காதீர்கள். உடனே டயரை மாற்றி ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அளவுக் குறைபாடு.

நில்-டெப்ரிஷியேஷன் பாலிஸி என்றால் என்ன?

உங்கள் காரின் பம்ப்பர் அடிபட்டு விட்டது. இப்போது பம்ப்பரின் விலை 4,000 என்று வைத்துக்கொள்வோம். இதற்கு பெயின்ட்டிங் சார்ஜ் 3,000 ரூபாய் தனிச்செலவு. தொழிற்சாலையில் இருந்து பம்ப்பர், பெயின்ட் அடிக்காமல்தான் வரும்.

சாதாரண இன்ஷூரன்ஸில் பிளாஸ்டிக் பாகங்களுக்கு 50%தான் க்ளெய்ம் கிடைக்கும். பெயின்ட்டிங் செலவில் 12.5% டெப்ரிஷியேஷன் போடுவார்கள். 7,000 ரூபாய் செலவில் இரண்டையும் சேர்த்து மொத்தமாக 2,375 + ப்ராசஸிங் செலவு 1,000 சேர்த்து 3,375 ரூபாய் நீங்கள் கட்ட வேண்டியிருக்கும்.

இதுவே நில்–டெப்ரிஷியேஷன் கவரேஜில் நீங்கள் வெறும் ப்ராசஸிங் கட்டணம் 1,000 மட்டும் செலுத்தினால் போதும். ‘ப்ரீமியம் அதிகமா இருக்கே’ என்று நில்–டெப்ரிஷியேஷன் கவரேஜை மிஸ் பண்ணினால், நஷ்டம் உங்களுக்குத்தான்.