Published:Updated:

எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!; தொடர் #13: சர்வீஸ் அனுபவம்

எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!

விமல்நாத்; ஓவியங்கள்: ராஜன்

எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!; தொடர் #13: சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்; ஓவியங்கள்: ராஜன்

Published:Updated:
எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!

ந்தப் புத்தாண்டில் உங்களுக்கு ஒரு ஒன்லைன் மெசேஜ் – ‘வாசிக்காமல் வைத்திருப்பது ஒரு புத்தகத்துக்குச் செய்யும் வன்முறை; அதேபோல்தான் ஓட்டாமல் வைத்திருப்பதும் ஒரு காருக்குச் செய்யும் வன்முறை!’

என்னடா வன்முறை என்றெல்லாம் பெரிய வார்த்தை பேசுகிறானே என நினைக்க வேண்டாம். அதன் உள்ளர்த்தம் இதுதான். நீங்கள் காரைப் பயன்படுத்தினால் எவ்வளவு தேய்மானமும் செலவும் ஏற்படுமோ, அதற்கு இணையாக காரைப் பயன்படுத்தாதபோதும் ஏற்படும்! அப்படிப்பட்ட சில சம்பவங்களைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக, தேவைக்கு கார் வாங்குவதைவிட ஆசைக்கு கார் வாங்கும் பலரை நான் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் அதிகம் பார்த்த பிரச்னைகளில், ஓடாமல் இருந்த கார்களைப் பற்றிய கேஸ்கள் நிறைய. அவர் புதிதாக பெரிய செடான் கார் வாங்கினார். வெளிநாட்டுக்கு அடிக்கடி ஆன்சைட்டுக்குப் போகும் அவர், எப்போதாவதுதான் காரை எடுப்பது வழக்கம். ஆனால், சர்வீஸ் ஹிஸ்டரியில் அவர் பக்கா! எல்லா கம்ப்ளெயன்ட்டுகளையும் சரி செய்துவிட்டு, சர்வீெஸல்லாம் முடித்துவிட்டுத்தான் வெளிநாடுகளுக்குச் செல்வார்.

எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!; தொடர் #13: சர்வீஸ் அனுபவம்

2 மாதம் கழித்து அப்போதுதான் வந்த அவர், அன்றைக்கே எங்கள் சர்வீஸ் சென்டருக்கு போன் செய்தார். ‘‘சர்வீஸ் முடிச்சு, ஆயில்லாம் மாத்திட்டுத்தான் ஊருக்குப் போனேன். 30 கி.மீதான் ஓடியிருக்கு. அதுக்கப்புறம் இப்போதான் எடுக்கிறேன். கார் ஸ்டார்ட் ஆகுது. ஆனா ஆஃப் ஆயிடுது. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.. வண்டியை சர்வீஸ் சென்டர் முன்னாடி வந்து கொளுத்தப் போறேன்’’ என்று ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் வறுத்தெடுத்து விட்டார்.

இதுபோன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் நாங்களே நேராக கஸ்டமரின் ஏரியாவுக்குச் செல்வது வழக்கம். வீட்டிலும் கொதிப்பாக இருந்தார். காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தேன்.

மேல்ஃபங்ஷன் இண்டிகேஷனில் இருந்து ஆயில், கூலன்ட் என டேஷ்போர்டில் உள்ள அத்தனை வார்னிங் லைட்டுகளும் எரிய ஆரம்பித்தன. ‘கிங்கிமிங்கீய்... கிறுகிறு’ என்று அடைத்துத் தள்ளியது. ேஹண்ட்பிரேக்கை ரிலீஸ் செய்துவிட்டுப் பார்த்தாலும், ேஹண்ட்பிரேக் லைட் எரிந்து கொண்டே இருந்தது. பதற்றமாகிவிட்டது. SDT அதாவது, சுஸூகி டையக்னஸ்டிங் டூல் வைத்துச் சோதனை போட்டோம். ஒரு காரில் ப்ரீமியம் ரகத்துக்கு ஏற்ப சென்ஸார்கள் இருக்கும். மாருதி பட்ஜெட் கார்களிலேயே எக்கச்சக்க சென்ஸார்கள் உண்டு. கிட்டத்தட்ட அத்தனை சென்ஸாருக்குமான லைனிலும் எரர் காட்டியது. உதாரணத்துக்கு ஏபிஎஸ் வார்னிங் என்றால், பிரேக் பிடிக்கும். ஆனால் ஏபிஎஸ் வேலை செய்யாது. இது டெக்னிக்கல் பிரச்னை மாதிரி தெரியவில்லை. விசாரணை தொடங்கியது.

கடைசியாக 2 மாதங்களுக்கு முன்பு, சர்வீஸ் விட்ட கையோடு பார்க்கிங் செய்திருக்கிறார். மறுநாள் 40 கி.மீ மட்டும் கார் ஓடியிருக்கிறது. அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் ஸ்டார்ட் செய்திருக்கிறார். அப்போதுதான் இந்தப் பிரச்னை.

பானெட்டைத் திறந்து பார்த்தால்... எல்லா கனெக்டர்களுமே ஓகே! அடியில் சம்ப் உடைத்து ஆயில் லீக்கேஜ் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. பிறகு சர்வீஸ் சென்டர் மாதிரி காருக்குக் கீழே படுத்தே விட்டோம். ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள ஒயர் கனெக்ஷனை, ரூட்டிங் படி செக் செய்து பார்த்தபோதுதான் தெரிந்தது – ஒயர் கனெக்ஷன் கட் ஆகியிருந்தது. உதாரணத்துக்கு, இசிஎம்–ல் இருந்து ஆல்டர்நேட்டருக்கு ஒயரிங் கனெக்ஷன் ரூட்டிங்கைப் பார்த்தால்... கட். ஆயில் பிரஷருக்குப் போகும் ஒயர்... கட். ஏபிஎஸ்–க்குப் போகும் ஒயர்... கட். இப்படி கிட்டத்தட்ட 16 இடங்களில் ஒயரிங் கனெக்ஷன் கட். புரிந்து விட்டது. எல்லாம் எலியின் வேலை.

எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் காண்பித்த பிறகுதான் அவருக்கு விஷயம் விளங்கியது. அதற்கப்புறம்தான் அவர் சாந்தமானார். கோபப்பட்டதற்காக மன்னிப்புக் கோரினார். காரை ேஷாரூமுக்கு எடுத்துக் கொண்டு போனோம். ராம்ப்பில் மாட்டிய பிறகுதான் தெரிந்தது – கொத்துக் கொத்தாக ஒயர்கள் கட் ஆகியிருந்தன. உதாரணத்துக்கு, ஒரு இன்ஜினுக்கு மட்டுமே சுமார் 15 சென்ஸார்கள், ஒயர் கனெக்ஷன் உண்டு. அதற்கு மட்டுமே 18,000 ரூபாய் செலவாகும். இது தவிர, மற்றவற்றுக்கும் சேர்த்து சில ஆயிரங்கள் கொட்டேஷன் கொடுத்தோம்.

இவ்வளவு செலவு செய்ய முடியாது என்று, எல்லாவற்றையும் ஜாயின்ட் அடித்துப் போடச் சொன்னார். இது வேலைக்கு ஆகாது என்பதைச் சொல்லியும் கேட்கவில்லை. அப்போதைக்குக் குறைந்த செலவில் ஏபிஎஸ் ஒயர் முதற்கொண்டு எல்லாவற்றையும் ஜாயின்ட் அடித்து உடனடியாக காரை டெலிவரி எடுத்துக் கொண்டு போனார். திரும்பவும் 15 நாட்களுக்குப் பிறகு அதே பிரச்னை.

ஜாயின்ட் அடித்த இடங்களில் மால்ஃபங்ஷன் லைட் எரிய ஆரம்பித்தது. பிறகு இன்ஷூரன்ஸில் கவர் செய்து, ஃப்ரெஷ்ஷாக எல்லாவற்றையும் மாற்றிக் கொடுத்தோம்.

அவருக்குக் கையிலிருந்து 2,000 ரூபாய்தான் செலவானது. பாட்டி வைத்தியம் மாதிரி, எலிகள் வராமல் இருக்க சில வைத்தியம் சொல்லி அனுப்பி வைத்தேன். ‘எல்லாம் ஓகே’ என்று எனக்கு நன்றி சொல்லி, ஸ்டேட்டஸ் எல்லாம் வைத்தார்.

‘அப்பாடா, பிரச்னை முடிஞ்சிடுச்சு’ என்று நெட்டி முறித்த வேளையில், திரும்பவும் காரைக் கொண்டு வந்தார். ‘மறுபடியும் எலி வந்துடுச்சா’ என்று கேட்டேன். ‘‘இல்ல சார், எலி வரலை. ஆனா எலி வாடை மட்டும் போகவே மாட்டேங்குது. எவ்வளவோ ஸ்ப்ரே அடிச்சுட்டேன்.’’ என்றார். டேஷ்போர்டைக் கழற்றிப் பார்த்தால்... அங்கே எலி தன் வேலையைக் காட்டியிருந்தது தெரிந்தது. எல்லாவற்றையும் சுத்தம் செய்து இன்டீரியர் க்ளீனிங் முடிந்தபிறகும் பிரச்னை ஓயவில்லை. ‘ஏ.சி போட்டால் எலி ஸ்மெல் வருது’ என்றார்.

அப்புறம் காரை மொத்தமாகக் கழற்றினோம். டிக்கியில் ஸ்டெஃப்னியைக் கழற்றிப் பார்த்தால், அங்கே 25 எலிக்குஞ்சுகள், ஜாலியாகக் கும்மியடித்துக் கொண்டிருந்தன. மறுபடியும் டெட்டால், ஸ்ப்ரே வைத்து க்ளீனிங் செய்து வெயிலில் காய வைத்துக் கொடுத்தோம். நல்லவேளையாக – டிக்கியைப் பார்க்கவில்லையென்றால் குஞ்சுகள் வளர்ந்து காருக்குள்ளேயே சாகும் வரை செட்டில் ஆகிவிட்டிருக்கும்.

எலிகளை எலிமினேட் செய்யுங்கள்!; தொடர் #13: சர்வீஸ் அனுபவம்

இன்னொரு வாடிக்கையாளர், கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது க்ளட்ச் மிதிக்கும்போது எலி வந்து காலைச் சுரண்டி, பயந்துபோய் விபத்தான சம்பவத்தைச் சொன்னார். அதுவும் நீண்ட நாள் பார்க் செய்த கார்தான். இன்னொருவர், புது ஏஎம்டி கார் வைத்திருந்தார். கார் நின்று கொண்டிருந்தால் பிரச்னை இல்லை. ஓட ஆரம்பித்தால் ‘பெட்ரோல் வாசம் அடிக்குது’ என்று போன் செய்தார். பார்த்தால், டேங்குக்கு உள்ளே லோ ப்ரஷர் பம்ப்புக்கான பிளாஸ்டிக்கைக் கடித்துக் குதறியிருந்தது. அது வழியாக பெட்ரோல் லீக் ஆனது. அதாவது, கார் ஓடினால் மட்டும்தான் இந்த ப்ரஷர் பம்ப் வேலை செய்யும் என்பதால், ஐடிலிங்கில் எரிபொருள் லீக் ஆகியிருக்கிறது. பம்ப்புக்கு 8,000 ரூபாய் செலவு.

இது மட்டுமில்லை; பாம்பு, பூனை, கீரிப்பிள்ளை போன்ற ஜந்துக்களும் காருக்குள் குடியிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஒரு வாடிக்கையாளர், கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று விண்ட்ஷீல்டில் நல்ல பாம்பொன்று படமெடுத்ததைச் சொல்லி, கிலியோடு போன் செய்தார். காரை விட்டு இறங்காமல் அப்படியே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு வந்து, பானெட்டைக் கழற்றிப் பார்த்தால்... பா...ம்பு... இன்ஜினுக்குப் பக்கத்தில் சுருண்டு கொண்டிருந்த அந்த நல்ல பாம்பை வெளியே எடுத்தோம்.

புரிஞ்சிடுச்சா... காரைப் பயன்படுத்தாமல் சும்மா வைத்திருப்பதும் பிரச்னைதான்.

- அனுபவம் தொடரும்

காருக்குள் எலி எப்படி வருகிறது?

‘காற்றுகென்ன ரூட்டு’ என்று வைரமுத்து சொன்னதுபோல், ரேட்டுக்கும் ரூட்டு தேவையில்லை. கீழே சம்ப் வழியாக ஏறி, பானெட்டுக்குள் வரும். ஃப்யூல் ேஹாஸ் வழியாக அப்படியே பயணித்து டிக்கிக்குப் போய் குடியேறும்.

பெரும்பாலும் காருக்குள்ளே வருவதற்கான பாதை எதுவென்றால், ஏ.சி.யில் உள்ள ஃப்ரெஷ் ஏர் மோடை ஆன் செய்திருக்கும்போது, வெளியே உள்ள ஃப்ரெஷ் ஏர் உள்ளே வருவதற்காக, புளோயருக்குப் பின்னால் உள்ள ஒரு பிளாஸ்டிக் கதவு திறக்கும். இதைக் கறுமித்தான் எலி காருக்குள்ளே வரும். மற்ற பிராணிகளைவிட, எலிகளால்தான் காருக்குப் பெரிய டேமேஜ் ஏற்படும்.

எலிகளை எலிமினேட் செய்வது எப்படி?

 • கார்கள் திறந்தவெளியில் இருந்தாலோ, நாட்கணக்கில் ஓடாமல் இருந்தாலோ – எலிகள் நாமினேட் ஆகி தானாக வரும். இவற்றை எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்.

 • எப்போதுமே ஏ.சி.யில் உள்ள ஃப்ரெஷ் ஏர் மோடு–ஐ ஆஃப் செய்தே வைத்திருங்கள். இதுதான் எலி வருவதற்கு முக்கியமான பாதை.

 • தினசரி ஓடும் கார்களில் எலி உள்ளே வராது. முடிந்தளவு காரை வாரத்துக்கு ஒரு முறையாவது எடுத்து விடுங்கள். அப்படியும் இல்லையென்றால், தினமும் காரை ஸ்டார்ட் செய்து 15 நிமிடம் ஐடிலிங்கில் வைத்திருக்கலாம்.

 • ‘ரேட் ரெப்பல்லன்ட் ஸ்ப்ரே’ ஆன்லைனில் விற்பனையாகிறது. இதுவும் ஓரளவு வேலை செய்யும்.

 • நாட்டுப் புகையிலைதான் எலிகளுக்கு நல்ல தீர்வு. பானெட்டில் சில ஒயர்களில் நாட்டுப்புகையிலையைக் கட்டி வைத்து விடுங்கள்.

 • பெப்பர் ஸ்ப்ரேவும் ஒர்க் அவுட் ஆகலாம். மிளகைப் பொடி செய்தும் தூவலாம்.

 • நாப்தலின் உருண்டைகளும் ஓகே! சிலர் மூக்குப் பொடியையும் பானெட்டில் தூவுவார்கள்.

 • எலிகளுக்கான வலையும் உண்டு. இதை காரைச் சுற்றிக் கட்டிவிட்டால் எலிகள் வராது. என்ன, வேலை கொஞ்சம் அதிகம்.

 • மாதத்துக்கு ஒரு முறை காரை எடுப்பவர்கள், பேட்டரி டெர்மினலைக் கழற்றி வைத்து விடுங்கள்.

எலி கடித்தால் இன்ஷூரன்ஸ்

க்ளெய்ம் உண்டா?

- மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

‘‘பொதுவாக, வெளிப்புறப் பாதிப்பு ஏற்படும் எந்த விஷயத்துக்கும் இன்ஷூரன்ஸ் உண்டு. எலி கடித்து 50,000 ரூபாய் வரை நிறைய க்ளெய்ம்கள் நடந்திருக்கின்றன. என்னுடைய ஐடியா என்னவென்றால், குறைந்தபட்சத் தொகையாக இருக்கும்பட்சத்தில், இன்ஷூரன்ஸூக்கு க்ளெய்ம் செய்வது நல்லதல்ல. நோ–க்ளெய்ம் போனஸ் அடிபடும் என்பதைத் தாண்டி, நமக்கும் நஷ்டம்தான். பெரிய தொகை என்றால் மட்டுமே இன்ஷூரன்ஸுக்கு அப்ளை செய்யுங்கள்!’’