மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா? - தொடர் #14: சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்; ஓவியங்கள்: ராஜன்

ஆட்டோமொபைலில் ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக் என்று ஒன்று உண்டு. அது என்ன என்பதைத்தான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம். இது உள்ளோட்டமாகப் பார்த்தால், கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம். மேலோட்டமாகப் பார்த்தால், சின்ன விஷயம்தான்.

இன்ஜினுக்குள் நடக்கும் திணறல்தான் இந்த ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக். காரை எடுக்கும்போது, MID ஸ்க்ரீனைக் கவனித்துவிட்டுத்தான் எப்போதுமே கிளப்ப வேண்டும். எல்லா சமிக்ஞைகளும் சரியாக வேலை செய்ய வேண்டும். சமிக்ஞைகளை விட முக்கியமான ஒரு மேனுவலாகவும் ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இன்ஜின் ஸ்மூத்னெஸ்தான் அது. ஓட்டுதலில் சம்பந்தமே இல்லாமல் ஒரு சத்தமோ, ஜெர்க்னஸோ, சமிக்ஞையோ தெரிந்தால் உடனே காரை நிறுத்திவிடுங்கள். அது இன்ஜின் தொடர்பாக இருக்கும்பட்சத்தில், பெரிய செலவும் ஆபத்தும் உங்களுக்குத்தான்.

அப்படி ஒரு விஷயம்தான் நடந்தது. புதிய பிராண்ட் கார் ஒன்றை டோ செய்து, சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு வந்தார்கள். வந்தவர், ‘‘இன்ஜின் வெடிச்சிடுச்சு சார்!’’ என்றார். ‘என்னது, இன்ஜின் வெடிக்குமா’ என்று வியந்து விட்டேன். பானெட்டைக் கழற்றிச் சோதனை செய்தோம். அதாவது, கனெக்ட்டிங் ராடுகள் சேதாரமாகி, இன்ஜின் பிளாக் (பாடியைத்தான் பிளாக் என்போம்) உடைந்து விட்டிருந்தது. ‘டம்’ என்ற பெரும் சத்தத்தோடு அது உடைந்து விட்டிருக்கும் அதைத்தான் அவர் வெடித்து விட்டது என்றிருக்கிறார்.

மழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா?
மழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா?

இன்ஜின் சிலிண்டரில் உள்ள பிஸ்டனையும், க்ராங்க்ஷாஃப்ட்டையும் இணைக்கக் கூடிய பொருள்தான் கனெக்ட்டிங் ராடு. அந்த 4 சிலிண்டர் காரில், முதல் சிலிண்டரில் உள்ள கனெக்ட்டிங் ராடுதான் உடைந்து விட்டிருந்தது. ஆதாரப்பூர்வமாக அதை உறுதி செய்து கொண்டோம்.

பொதுவாக, கனெக்ட்டிங் ராடு ரன்னிங்கில் உடைவதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. பேரிங் பிரச்னை... அதற்கப்புறம் இன்ஜின் சிலிண்டருக்குள் தண்ணீர் புகுந்து உடைவதுதான் பெரும்பான்மையாக நடக்கும். ஆனால், இங்கே ஆச்சரியம். எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேரிங்கிலும் பிரச்னை இல்லை; தண்ணீர் புகுந்ததற்கான அடையாளமும் இல்லை.

மாருதியின் தலைமையகத்துக்கு விளக்கம் கேட்டு அனுப்பினோம். அவர்கள், ‘தண்ணீர் உள்ளே புகுந்ததால்தான் இந்தப் பிரச்னை’ என்று அடித்துச் சொன்னார்கள். அவர்கள் குடும்பத்தினர் எல்லோரிடமும் விசாரணை நடந்தது. அவர்களும் அடித்துச் சொன்னார்கள். ‘தண்ணி உள்ளே போக வாய்ப்பே இல்லை’. அவர்கள் சொன்னதும் ஓரளவுக்கு நியாயமாகப்பட்டது. ஏனென்றால், அது மழைக்காலம் இல்லை.எனக்குள் இருக்கும் துப்பறிவாளன் வேலை செய்தான். ‘எப்போ வெடிச்சது, எங்கே நடந்தது’ என எல்லாவற்றையும் கேட்டறிந்தேன். கனெக்ட்டிங் ராடு உடைவதற்குக் கடைசியாக, முந்தின நாள் காரை எடுத்திருக்கிறார்கள். அதற்கு முன்பு ஒரு மாதம் வரை காரை அவர்கள் எடுக்கவே இல்லை. ஆனால், அவர்கள் கடைசியாக ஓட்டியது மழைக்காலம். அவர் குறிப்பிட்டுச் சொன்ன தினம், மழை வெள்ளம் நிரம்பிய காலம் என்பதை க்ராஸ்செக் செய்து கொண்டேன். அதாவது, அவர்கள் மழை வெள்ளத்தில் காரை ஓட்டிவிட்டு, ஒரு மாத காலம் ஓட்டாமல், நேற்றுதான் எடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால், தண்ணீர் உள்ளே புகுவதற்கான வாய்ப்பு உறுதியாகி விட்டது.

பொதுவாக, தண்ணீர் உள்ளே புக இரண்டு வழிகள். ஏர்இன்டேக் மேனிஃபோல்டிங் வழியாக, ஏர் ஃபில்டரை நனைத்து இன்ஜினுக்குள் போவது ஒரு வழி. பானெட் வரை கார் மூழ்கினால்தான் இந்த அபாயம் ஏற்படும். அந்தளவு யாரும் காரை ஓட்ட வாய்ப்பில்லை. ஏனென்றால், காரின் பாடிக்கு உள்ளே தண்ணீர் புகுந்துவிடும். நாங்கள் உள்ளே செக் செய்தபோது, தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை. அப்படியென்றால், இன்னொரு வழியில்தான் நிச்சயம் புகுந்திருக்க வேண்டும். சைலன்ஸர் வழியாக உள்ளே நீர் புகுந்துதான் கனெக்ட்டிங் ராடு காலியாகி விட்டிருக்கிறது.

சைலன்ஸர் வழியாக உள்ளே நீர் போவது, எளிதாக நடக்கும் விஷயம். அதாவது, சைலன்ஸர் மூழ்கும் அளவுக்கு நீரில் பயணிக்கும்போது, தொடர்ந்து த்ராட்டில் கொடுத்துக் கொண்டே போனால் பிரச்னை இல்லை. நடுவே கிளட்ச் மிதித்தோ, பிரேக் பிடித்தோ ஆக்ஸிலரேஷனை நிறுத்தினால்... அந்த மைக்ரோ விநாடி போதும். சர்ரென்று சைலன்ஸர் வழியாக நீர் இன்ஜின் பிஸ்டனுக்குள் ஒரே பாய்ச்சலில் புகுந்துவிடும். இதற்கு பெரிய அறிவியலெல்லாம் இல்லை. எல்லோருக்கும் புரியும் எளிய விஷயம் இது.

கார் ஓட்டியது இவரின் டீன்ஏஜ் மகன். ஒரு மழை வெள்ளத்தில், காரை நிறுத்தி நிறுத்தி ஓட்டியதில், சைலன்ஸர் வழியாக உள்ளே தண்ணீர் போவது தெரியாமல் இருந்திருக்கிறார். அப்போதே கனெக்ட்டிங் ராடு காலி. அது தெரியாமல், இவர் காரை வீட்டில் கமுக்கமாகக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். முழுமையான இன்வெஸ்டிகேஷனில் இதைக் கண்டுபிடித்தாகிவிட்டது. அதற்குப் பிறகு மறுநாள் 5 கி.மீ மட்டும் கடைக்குப் போய்விட்டு எடுத்தவர்கள், அதன் பிறகு அடுத்த 35 நாட்கள் காரை எடுக்கவே இல்லை. அதற்குள் சைலன்ஸருக்குள் இருக்கும் தண்ணீர் காய்ந்து விட்டது.

மழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா? -  தொடர் #14: சர்வீஸ் அனுபவம்

பெண்டு ஆன கனெக்ட்டிங் ராடோடு காரை ஓட்டும்போது, ‘நங் நங்’ என்று சத்தம் வந்திருக்கிறது. ஒரு 15 கி.மீ ஓட்டியதும் திடீரென ஒரு நேரத்தில் ‘டமால்’ என வெடிச்சத்தம். கனெக்ட்டிங் ராடு உடைந்த சத்தம்தான் அது. இன்ஜினுக்குள் தண்ணீர் போனதை உறுதி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அதாவது, தண்ணீர் புகுந்து கனெக்ட்டிங் ராடு பெண்டு ஆனது ஒரு மழை நாளில்; உடைந்தது ஒரு வெயில் நாளில். இதைத் தொடர்ந்து ஓட்டியிருந்தால், அன்றைக்கே வெடிச்சத்தம் கேட்டிருக்கும். இதுதான் பிரச்னை.

ஒரே ஒரு பிஸ்டன், கனெக்ட்டிங் ராடு, ஆயில் சம்ப் எல்லாம் சேர்த்து 45,000 ரூபாய் எஸ்டிமேட் தொகை ஆனது. இது வாரன்ட்டியிலும் கவர் ஆகவில்லை என்பதால், செலவு மொத்தமும் அவருடையதாகிப் போனதுதான் சோதனை.

- அனுபவம் தொடரும்

மழை வெள்ளத்தில் கவனம்!

  • காருக்குள் தண்ணீர் புக இரண்டே வழிகள். ஒன்று ஏர் இன்டேக் வழியாகப் போய், பிஸ்டனுக்குள் போவது. பானெட் வரை கார் மூழ்கியிருந்தால்தான் இந்த ஆபத்து. இன்னொன்று – சைலன்ஸர் வழியாகப் போவது.

  • சைலன்ஸர் மூழ்கும் அளவு தண்ணீர் இருந்தால், காரை பார்க் செய்துவிடுங்கள். அதையும் தாண்டிப் போக வேண்டும் என்றால், டிரைவிங் ஸ்கில் அவசியம். தொடர்ந்து த்ராட்டில் கொடுத்தபடி ஒரே மூச்சில் போய்விடலாம். நடுவில் பிரேக்கோ, கிளட்ச்சோ அழுத்தினால்... பிஸ்டன் காலி!

  • வெள்ளத்தில் மூழ்கிய காரைத் தயவுசெய்து ஸ்டார்ட் செய்யக்கூட நினைக்கக் கூடாது. ‘கொஞ்ச தூரம்தானே... போயிடலாம்’ என்று நினைத்தால்... அவ்வளவுதான். ஸ்டார்ட் செய்த அடுத்த விநாடியே கனெக்ட்டிங் ராடு பெண்டு ஆக வாய்ப்பு உண்டு. வெள்ளம் வடிந்த பிறகு பலர் செய்யும் தவறு இது.

இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தால் என்ன நடக்கும்?

காற்றையும் எரிபொருளையும் சிலிண்டருக்குள் இருக்கும் பிஸ்டன், கம்ப்ரஸ் செய்யும்போது ஸ்பார்க் பிளக்கில் உருவாகும் தீ மூலம் இன்ஜின் இயங்குவதுதான் பொதுவாக நடக்கும் விஷயம். இங்கே இந்த வேலை நடந்து கொண்டிருக்கும்போது, வேண்டா விருந்தாளியாக தண்ணீர் நுழையும்போது, கம்ப்ரஸனில் குளறுபடி ஏற்படும்.

சைலன்ஸர் வழியாக முதல் சிலிண்டருக்குள் தண்ணீர் நுழையும்போது, பிஸ்டன் மேலே கீழே இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, பிஸ்டனையும் க்ராங்க்ஷாஃப்ட்டையும் இணைக்கும் கனெக்ட்டிங் ராடு, வளைந்துபோகும். காரை ஓட்டும்போதே இன்ஜினில் ஒரு வேண்டாத சத்தம் கேட்கும். உடனே காரை நிறுத்தி விடுவது நல்லது. இல்லையென்றால், பர்ஸுக்கும் நமக்கும் ஆபத்து.

இன்ஜினுக்குத் தனி இன்ஷூரன்ஸ் பாலிஸி!

ம்பர் டு பம்பர் பாலிஸி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில் காரின் முன் பம்பரில் இருந்து பின் பம்பர் வரை எல்லாமே கவர் ஆகும். இதில் உடைந்து போன பாகங்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும். ஆனால், இன்ஜினுக்கு பாலிஸி க்ளெய்ம் கிடைக்காது. உதாரணத்துக்கு, ஆயில் சம்ப் உடைந்தால் க்ளெய்ம் உண்டு.

அதுவே ஆயில் கொட்டக் கொட்ட ஓட்டி, இன்ஜின் சீஸ் ஆகும் பட்சத்தில் பாலிஸி கவர் ஆகாது. இதற்கு இன்ஜின் கவரேஜ் வேண்டும். சென்னையில் வெள்ளம் வந்த நேரத்தில் ‘ைஹட்ரோ ஸ்டேட்டிக் லாக்’ விஷயத்துக்காகவே இன்ஜின் கவரேஜ் ஆரம்பித்தார்கள். இது இப்போதும் உண்டு. இதற்கு எக்ஸ்ட்ராவாக காரைப் பொறுத்து 1,000 முதல் 2,000 வரை ஆகும். இன்ஜினைப் பாதுகாக்க இதையும் கவனத்தில் கொள்ளலாம்.