மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி ஏமாற்று வேலை இல்லை! - தொடர் #15: சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்; ஓவியங்கள்: ராஜன்

கார் ஓட்டுவதில் படு எக்ஸ்பெர்ட் ஆக இருப்பார்கள் சிலர். ஆனால், சின்னச் சின்ன கார் மெக்கானிசம்கூட அவர்களுக்குத் தெரியாது. `இந்த வைப்பரை ஸ்பீடா ஓட வைக்கிறது எப்படினு தெரியலையே!’ என்றெல்லாம் சில நாட்பட்ட நல்ல டிரைவர்கள் கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.

இன்னும் சிலர் நேரெதிர். அவர்களின் கார் பற்றிய அறிவும் தாறுமாறாக இருக்கும். இதைக் கிண்டலாகத்தான் சொல்கிறேன். அதாவது, தங்களை மெக்கானிக்காகவே பாவித்துக் கொள்வார்கள்.

``ஸ்டீயரிங் சரியா ஒர்க் ஆகலை; ஸ்டீயரிங் ஃப்ளூயிட் மட்டும் ஊத்துங்க... வேற எதுவும் பண்ண வேணாம்... இந்த பேட்டரிக்கு சார்ஜ் மட்டும் ஏத்தினா போதும்’’ என்று அவர்களாக சர்வீஸ் சென்டருக்கு ஆர்டரும் போட்டு விடுவார்கள். ``இல்லேனா தேவையில்லாத செலவு வெச்சு பில் தீட்டிடுவாங்க’’ என்பது அவர்களது வாதம். இது எல்லா நேரத்திலும் எடுபடாது. சர்வீஸ் அதிகாரிகளை தங்கள் வேலையைப் பார்க்க விட வேண்டும்.அப்படித்தான் கார் உரிமையாளர் ஒருவர் வந்தார். அது கொஞ்சம் பழைய மாடல் கார். ``ஏ.சி ஒர்க் ஆகலை.. கேஸ் மட்டும் ஃபில் பண்ணிக் கொடுங்க! எனக்குத் தெரியும் 500 ரூபாய்க்குள்ள முடிஞ்சிடும். நிச்சயமா சொல்றேன். வேற எதுவும் பண்ண வேணாம்!’’ என்று ஆர்டர் போட்டு விட்டார்.

ஒரு ஸ்பேர் பார்ட் வேலை செய்யவில்லை என்றால், அதை ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து ரிப்பேர் செய்து கம்பெனிக்கு ரிப்போர்ட் அனுப்புவதுதான் எங்கள் பணி. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. ``கேஸ் மட்டும் டாப் அப் பண்ணிவிட்டாலும், நீங்க திரும்பவும் வரத்தான் போறீங்க’’ என்றோம். அப்படியும் பிடிவாதமாக இருந்தார். டாப் அப் மட்டும் பண்ணிவிட்டுக் கிளம்பினார். ‘வரமாட்டேன்’ என்றவர், நினைத்தபடியே ஒரு வாரம் கழித்து வந்தார். ‘‘எனக்கு ஏ.சி ஒர்க் ஆகலை. நீங்க சரியா டாப்–அப் பண்ணலை’’ என்று குற்றம் சாட்டினார். ஃபுல் செக் செய்தபோது, கம்பரஸர் ஓடவில்லை என்பது தெரிந்தது. அதுபோக, ஏ.சி கேஸ், புளோயருக்கு உள்ளே கூலிங் காயில் வழியாக லீக் ஆகியிருந்தது.அப்புறம்தான் அவர் செய்த தவறு தெரிந்தது. அதாவது, ஒரு காரில் ஏ.சி வேலை செய்யவில்லை என்றால், வெறும் கேஸ் மட்டும்தான் பிரச்னை என்று புரிந்துகொண்டு, அதை மட்டுமே டாப்–அப் செய்து வந்திருக்கிறார் பல ஆண்டுகளாக! கேஸ் லீக் ஆகி, கம்ப்ரஸரையும் காலி செய்திருக்கிறது.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

அது புரியாமல் இவர் திரும்பத் திரும்ப அதே தவறைச் செய்ததால், கம்ப்ரஸரையும் கூலிங் காயிலையும் மாற்ற வேண்டியிருந்தது. இதற்கு மொத்தம் 25,000 ரூபாய் ஆகும்.

‘‘அன்னைக்கே ஏன் சொல்லலை’’ என்று சண்டை போட்டார் கஸ்டமர். அவர் அன்றைக்கு செக் செய்யவே விடவில்லை என்பதுதான் உண்மை. அவர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு, கம்ப்ளெய்ன்ட் நோட்டீஸ் அனுப்பினார். அதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதைப் புரிய வைத்து, வேலையைச் சரி செய்து கொடுத்தோம்.

இவ்வளவு சிக்கல்களிலும் அவர் செய்திருந்த ஒரே நன்மை என்ன தெரியுமா? அவர் எக்ஸ்டெண்டட் வாரன்டி போட்டிருந்ததுதான். அதனால், அவருக்குப் பெரிதாக செலவு கையைக் கடிக்கவில்லை.

க்ளட்ச் வீக் ஆன பிறகும் கார் ஓட்டினால்..?

உடம்பாக இருந்தாலும் சரி; வாகனமாக இருந்தாலும் சரி - சிறிய பிரச்சனை தெரியும்போதே அதைச் சரி செய்வதுதான் நல்லது. திடீரென செயினில் இருந்து ஏதோ சத்தம் வரும். உறுத்தலாகத்தான் இருக்கும். `அதான் வண்டி ஓடுதே... அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அசால்ட்டாக சிலர் டீல் செய்வார்கள். ஒரு நாள் மொத்தமாக செயின் ஸ்ப்ராக்கெட்டே காலியாகி, பயணமும் வீணாகி, பணமும் வீணாகி... நடுரோட்டில் நின்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். கார் விஷயத்தில் மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பதுதான் நல்லது.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

கார் உரிமையாளர் ஒருவர், தன் காரின் க்ளட்ச்சில் திடீரென ஒரு மாற்றத்தை உணர்ந்திருக்கிறார். அதாவது, க்ளட்ச் முன்பைவிட பயன்படுத்த கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதன் காரணமாக லேசாக மைலேஜும் பிக்–அப்பும் குறைந்ததையோ – கியர்ஷிஃப்ட்டிங் கொஞ்சம் ஹார்டு ஆனதையோ அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ``கார்தான் ஓடுதே’’ என்று நீண்ட நாட்களாக டிரைவிங் செய்திருக்கிறார். திடீரென ஒரு நாள் வந்து, ``கியர் கடிக்கி.. வண்டி மூவ் ஆகமாட்டேங்கி... கொஞ்சம் என்னான்னு பாக்கிறீயளா?’’ என்று வந்தார்.

பார்த்தால், கியர் விழவே இல்லை. க்ளட்ச், ஒரு பாறைபோல் அத்தனை ஹார்டாக இருந்தது. பிக்–அப்... ம்ஹூம்.! கழற்றிப் பார்த்தோம். கியர் விழுவதற்குத் துணைபுரியும் சிங்க்ரனைஸர் ரிங் என்றொரு பாகம் காலியாகி இருந்தது. இது ஒரு ஃப்யூஸ் மாதிரி. அதாவது, வீட்டில் ஃப்யூஸ் இருந்தால், மற்ற மின்சார உபகரணங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்குமே... அதுபோல்! க்ளட்ச் ஹார்டு ஆன கணம் முதல், இந்த சிங்க்ரனைஸர் ரிங்தான் எளிதாகப் பாதிக்கும். க்ளட்ச்சை உடனே மாற்றினால்... செலவு குறைவு. இதனால், கியர்பாக்ஸுக்கு எந்தப் பங்கமும் வராது. ஆனால் க்ளட்ச் வீக் ஆனது தெரிந்தும் ஓட்டிக்கொண்டே இருந்தால்... சிங்ரனைஸர் ரிங் காலி. பர்ஸ் பழுத்துவிடும். இவரும் புத்திசாலித்தனமாக எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி வைத்திருந்ததால்... கியர்பாக்ஸில் தப்பித்தார்.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

இன்னொருவர், ஹைபிரிட் கார் வைத்திருந்தார். அவரது பேட்டரி பிரச்னை என்று வெளியில் சார்ஜ் ஏற்றி ஏற்றி, சலித்துப் போய், பிறகு வேறு பேட்டரி மாற்றிவிட்டார். அப்போதும் சர்ரென பேட்டரியில் சார்ஜ் இறங்க ஆரம்பிக்க... பிரச்னை டைனமோவில்தான் என்பதைக் கண்டுபிடித்தோம்.

ஹைபிரிட் கார் என்பதால், இந்த டைனமோவின் விலை ஏகப்பட்ட ஆயிரங்களில் இருந்தது. இவரும் எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி வைத்திருந்ததால், பெரிய செலவிலிருந்து மீண்டார்.

இவர்கள் அனைவரையுமே பெரிய செலவில் இருந்து காப்பாற்றியது எக்ஸ்டெண்டட் வாரன்ட்டிதான். எனவே, எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்பது பலர் நினைப்பதுபோல் ஏமாற்று வேலை இல்லை.

- அனுபவம் தொடரும்

(தொகுப்பு: தமிழ்)

எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி - நிஜமாகவே பலன் உண்டா?

பொதுவாக, இன்ஷூரன்ஸையும் வாரன்ட்டியும் நிறைய பேர் குழப்பிக் கொள்வார்கள். இரண்டும் வெவ்வேறு. புதிதாக கார் வாங்கும்போது, 2 ஆண்டுகளுக்கு அல்லது 40,000 கி.மீ–க்கு ப்ரைமரி வாரன்ட்டி என்றொன்று தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு கார்களில் இன்டர்னலாக ஏற்படும் பிரச்னைகளுக்கு இது உத்தரவாதம். இது தவிர, எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்றோர் அம்சம் உண்டு. இது 5 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ–க்கு வரும். கார்களைப் பொறுத்து இதற்கு எக்ஸ்ட்ரா 5,000 முதல் 15,000 வரை வரும்.

ப்ரைமரி வாரன்ட்டி முடியும்போதுகூட எக்ஸ்டெண்டட் வாரன்ட்டிக்குப் பணம் செலுத்தலாம். என்ன, கொஞ்சம் ப்ரீமியம் அதிகமாகும். நிறைய பேர், `நான்தான் காரை ஒழுங்கா பராமரிப்பேனே.. நமக்கு எதுக்கு’ என்று இதைப் பிடிவாதமாக மறுப்பார்கள். இதை அசட்டுத் துணிச்சல் என்றுதான் நான் சொல்வேன். ஆனால், இதனால் எக்கச்சக்க பலன் உண்டு.

ஏ.சி கம்ப்ரஸர், சிங்க்ரனைஸர், கியர்பாக்ஸ், இன்ஜினின் மிக முக்கிய அம்சமான ஹை பிரஷர் பம்ப், இன்ஜின் ஒர்க், ஸ்டீயரிங் காலம், ஸ்டீயரிங் பாக்ஸ், பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் டைனமோ என்று காரின் விலை அதிகமான பாகங்கள் பாதிப்படையும்போது, உங்களுக்குப் பெரிதும் செலவை மிச்சப்படுத்தும். தேய்மானம் கொண்ட அம்சங்களுக்கு இந்த எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி கவர் ஆகாது.

கார்களில் க்ளட்ச் வீக் ஆனதை எப்படித் தெரிந்து கொள்வது?

க்ளட்ச்சின் பயன்பாடு ரொம்பவும் கடினமாக இருக்கும். பாறைபோல் மாறிவிடும். க்ளட்ச் மிதிக்க மிதிக்க கால் வலிக்கும். இதுவே பிரேக்கில் பிரச்னை என்றால்... க்ளட்ச்சுக்கு நேர் எதிர். `சர்’ரென உள்ளே போகும்.

கியர் கடிக்க ஆரம்பிக்கும். கியர் போடும்போது `கிர்ர்’ என்று கடித்து இழுத்தால்... பிரச்னை கியர்பாக்ஸில் மட்டுமல்ல; க்ளட்ச்சிலும்தான். இதனால் மைலேஜ் பயங்கரமாக அடிவாங்கும்.பிக்–அப் சுத்தமாகக் குறையும். மலைச்சாலைகளில் சில நேரங்களில் சுத்தமாகவே ஏறவே முடியாது. இந்த அறிகுறிகள் தெரியும்போதே, ஒர்க் ஷாப்பில் காரை விடுவது நல்லது. இல்லையென்றால், பிரேக் டவுன்தான்.