ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஆக்ஸிலரேட்டர் மிதித்தால், கார் வேகம் குறையுமா? - தொடர் #16: சர்வீஸ் அனுபவம்

சர்வீஸ் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வீஸ் அனுபவம்

விமல்நாத்: ஓவியங்கள்: ராஜன்

டிரைவிங் பள்ளிகளில்தான் ABCD என்று கற்றுக்கொடுப்பார்கள். ஆக்ஸிலரேட்டர், பிரேக், க்ளட்ச், டிரைவ் – இதுதான் உங்களுக்குத் தெரிந்த ABCD.

ஆனால், மாருதி ஷோரூம்களிலும் ஒரு காலத்தில் ABCD என்று ஸ்டிக்கராக ஒட்டினார்கள். AMT கார்கள் மாருதியில் வர ஆரம்பித்த காலத்தில் இப்படி ஒரு காம்பெய்ன் நடந்தது. அதாவது, இதன் விரிவாக்கம் - Any Body Can Drive. மாருதியின் AMT கார்களை யார் வேண்டுமானாலும் ஓட்டலாம் என்பது இதன் அர்த்தம்.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

வழக்கமான ஆட்டோமேட்டிக் கார்கள்போல்தான் இந்த AMT கார்களும். க்ளட்ச் பெடல், கியர் ஷிஃப்ட்டிங் மோடு இருக்காது. ஆனால், மேனுவல் கார்களில் நடப்பதைப்போல் கியரையும், க்ளட்ச்சையும் நீங்கள் இயக்கத் தேவையில்லை. கியர் பாக்ஸுக்கு மேலே ஒரு ரோபோ இயங்கிக் கொண்டிருக்கும். இதை ஆக்சுவேட்டர் என்போம். இதைச் செயல்படுத்தும் அசெம்பிளியின் மூளைக்குப் பெயர் TCM. அதாவது, ட்ரான்ஸ்மிஷன் கன்ட்ரோல் மாட்யூல். ECM – உடன் இது கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் கொடுக்கும் த்ராட்டிலுக்கு ஏற்றபடி இது கியரை ஏற்றி - இறக்கி, டார்க்கைக் குறைத்துக் கூட்டி என எல்லா அம்சங்களும் அப்படியே மேனுவல் கார்கள் போலவே நடந்து கொண்டிருக்கும். `ஆட்டோமேட்டிக் கார்தானே’ என்று நினைத்து கார் வாங்கிய ஒரு நபரின் டிரைவிங் ஸ்டைலால் ஏற்பட்ட குழப்பத்தைத்தான் இந்தக் கட்டுரையில் சின்னதாகப் பார்க்கப் போகிறோம்.

புதிதாக வந்த ஏஎம்டி மாடலை, தன் மகளுக்காக புக் செய்தார் ஒரு வாடிக்கையாளர். முதல் சர்வீஸ்கூட விடவில்லை. அதற்குள் கார், சர்வீஸ் சென்டருக்கு வந்துவிட்டது. காரின் கம்ப்ளெய்ன்ட் பற்றி விசாரித்தேன். ``சார், அந்த கஸ்டமர் போயிட்டார். ஆக்ஸிலரேட்டர் மிதிக்கும்போது, கார் ஸ்பீடு குறையுதாம்’’ என்றார் சர்வீஸ் அட்வைஸர். ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் அதை நானே டயோக்னஸ்டிங் டூல் வைத்து செக் செய்தேன். அவர் சொன்னபடி எந்த மால்ஃபங்ஷன் வார்னிங்கும் வரவில்லை. TCM-லும் எந்தப் பிரச்னையும் இல்லை. கார் டெலிவரி ஆகிவிட்டது.

மீண்டும் மூன்றே நாட்களில் அதே கார், ஷோரூமில் நிற்பதாகச் சொன்னார்கள். சர்வீஸ் சென்டருக்கு வராமல் ஏன் ஷோரூமில் விட்டார் என்று சந்தேகம். ``இந்த கார் எனக்கு வேண்டாம்; ஆக்ஸிலரேட்டர் மிதிச்சா கார் ஸ்பீடாகத்தானேங்க போகணும்; இது வேகம் குறையுது. எனக்கு வேற கார், வாரன்ட்டி பாலிஸியில் மாத்திக் கொடுங்க’’ என்று ஷோரூமில் சண்டைபோட்டு, காரை விட்டுவிட்டுக் கிளம்பியதாகச் சொன்னார்கள். அவரிடம் தகவல் சொல்லி, ஜாயின்ட் டெஸ்ட் டிரைவுக்கு இன்வைட் செய்தோம். ஆனால் அவர், `வேற கார்தான் வேணும்’ என்று பிடிவாதமாக இருந்தார்.

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

`நீங்கள் உடன் வந்தால்தான் என்ன பிரச்னைங்கிறதைத் தெரிஞ்சுக்க முடியும்’ என்று ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி, உடன் அழைத்துச் சென்றோம். முதலில் எங்கள் ஆள்தான் ஓட்டினார். எந்தப் பிரச்னையும் இல்லை. ``நல்லாத்தானே இருக்கு’’ என்றபோது, அவர் சொன்ன பதில்தான், பிரச்னை என்ன என்பதைப் புரிய வைத்தது.

``நான் சிட்டிக்குள்ள சொல்லலை. ஹைவேஸ்ல 100 கி.மீ-ல் போகும்போது, ஓவர்டேக் பண்ண முடியலை. ஆக்ஸிலரேட்டர் மிதிச்சா, சர்ர்னு ஸ்பீடோ மீட்டர் முள் இறங்குது’’ என்றார். அப்போதுதான் எங்களுக்கு விஷயமே புரிந்தது. அவருடைய டிரைவிங் ஸ்டைலில் தான் பிரச்னை இருக்க வேண்டும். இருந்தாலும், எங்கள் சர்வீஸ் அட்வைஸரே நெடுஞ்சாலையில் ஓட்டினார். அவர் சொன்னதுபோல் இல்லை. ஓவர்டேக்கிங்கில் பிரமாதமாகவே இருந்தது கார். ``இல்ல நீங்க ஏதோ பண்றீங்க… நானே ஓட்றேன்’’ என்று சந்தேகத்தில் காரை வாங்கி அவரே ஓட்டினார். 100 கி.மீ வேகத்தில் ஒரு வாகனத்தை ஓவர்டேக் செய்ய, பார்ட் த்ராட்டில் செய்தார்.

அதாவது, மேனுவல் கார்களில் ஓவர்டேக் செய்வதற்கு என்ன செய்வோம்? கியரை டவுன்ஷிஃப்ட் செய்து, ஆக்ஸிலரேட்டரைச் சுண்டிச் சுண்டி மிதிப்போம் இல்லையா… அதே முறையில் `வெடுக் வெடுக்’ என ஆக்ஸிலரேஷன் கொடுத்தார். வாகனத்தை முந்துவதற்கு, டார்க் எக்ஸ்ட்ராவாகத் தேவைப்படும் பட்சத்தில், காரின் வேகம் கொஞ்சம் குறையும். அதாவது, கியர் டவுன்ஷிஃப்ட் ஆவதால், வேகம் குறைவதுபோல் தெரியும். ஏஎம்டி யூனிட் அசெம்பிளிக்குள் இப்படித்தான் நடக்கும். இதுதான் அவரது பிரச்னையாக இருந்தது. இது ஏஎம்டி கார்களில் பிரச்னை கிடையாது. அதன் தன்மையே இதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு ஏஎம்டி-யைப் பற்றி முழுமையாகப் புரிய வைத்தோம். கிராஜுவலாக த்ராட்டில் செய்து, ஓவர்டேக் செய்யும் முறை பற்றி விளக்கினோம்.

அதன் பிறகுதான் அவர் தனது தவறை உணர்ந்து, ஷோரூம் எக்ஸிக்யூட்டிவ்ஸ் - சர்வீஸ் ஆட்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, ``அப்போ ஏஎம்டி-னா ஆட்டோமேட்டிக் இல்லைங்கிறீங்க’’ என்று சரியாகப் புரிந்தவராய்க் கிளம்பினார்.

- (தொகுப்பு: தமிழ்)

ஏஎம்டி கார்களில் மைலேஜ் அடிவாங்குமா?

நீங்கள் நினைப்பதுபோல், ஆட்டோ மேட்டிக் கார்கள் என்றால் நிச்சயம் மைலேஜ் அடிவாங்கும். காரணம், இங்கே க்ளட்ச், கியர் இல்லாத காரணத்தால், எரிபொருள் சிக்கனத்தை இங்கே எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஏஎம்டி-யைப் பொறுத்தவரை க்ளட்ச் செயல்பாடு, கியர் ஷிஃப்ட்டிங் நடந்து கொண்டே இருக்கும் என்பதால், மேனுவல் கார்களைப்போலவே பக்காவான மைலேஜ் தரும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

ஏஎம்டி கார் என்பது ஆட்டோமேட்டிக் இல்லை!

AMT என்பதன் முழு விளக்கம் – Automated Manual Transmission. வழக்கமான ஆட்டோமேட்டிக் காரும் இதுவும் ஒன்றா என்றால், இல்லை. இங்கேயும் ஆட்டோமேட்டிக் கார்கள்போல் க்ளட்ச் பெடலும், கியர் ஷிஃப்ட்டிங் மோடும் இருக்காது. ஆனால், D, N, R போன்ற மோடுகள் உண்டு. ஆனால், க்ளட்ச்சும் கியரும் இருக்காது என்று அர்த்தமில்லை. ஏஎம்டி கார்களில் கியர் மாறும்; க்ளட்ச் செயல்பாடும் இருக்கும். ஆனால், இதை நீங்கள் செய்ய வேண்டியதில்லை.

ஆக்ஸிலரேட்டர் மிதித்தால், கார் வேகம் குறையுமா? - தொடர் #16: சர்வீஸ் அனுபவம்

நீங்கள் கொடுக்கும் ஆக்ஸிலரேஷனுக்கு ஏற்ப, ஏஎம்டி யூனிட் அசெம்பிளியில் உள்ள ஆக்சுவேட்டர் அந்த வேலையைக் கவனித்துக் கொள்ளும். இதை சிக்னல் செய்து அனுப்புவது TCM (Transmission Control Module)-ன் வேலை. இந்த எலெக்ட்ரானிக் பாக்ஸ்தான் இந்த அசெம்பிளியின் மூளை. இது ECM – (Electronic Control Module) உடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். எனவே, ஆட்டோமேட்டிக் கார்தான் ஏஎம்டி என்று நினைக்க வேண்டாம்.

ஏஎம்டி கார்கள், ஓவர்டேக்கிங்கில் வேகம் குறைவதுபோல் தோன்றும். இதற்கு நீங்கள் ரெவ் செய்யும் முறைதான் காரணமாக இருக்கும். இந்தக் குறை தெரியாமல் இருக்க, CVT (Continous Varible Transmission) கொண்ட கார்கள் வர ஆரம்பித்தன. இவை கொஞ்சம் விலை காஸ்ட்லி. எனவே, ஏஎம்டி கார்கள் வாங்கும் முன்பு, அதைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு கார் ஓட்டுங்கள்.