Published:Updated:

சல்யூட் தி கார்... ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்... இதெல்லாம் என்ன?

செய்ய வேண்டியது... 
செய்யக் கூடாதது!
பிரீமியம் ஸ்டோரி
News
செய்ய வேண்டியது... செய்யக் கூடாதது!

கார் டிரைவிங்கில் செய்ய வேண்டியது... செய்யக் கூடாதது!

சல்யூட் தி கார்... ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்... இதெல்லாம் என்ன?

‘மாருதிக்குப் பெரிய பலமே அதன் நெட்வொர்க்கும் நம்பகத் தன்மையும்தான்’ என்று ஒவ்வொரு கார் ரிவ்யூவிக்களிலும் நாம் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்று இந்த மழைக்காலங்களில் நிரூபணமாகிக் கொண்டு வருகிறது. `மழைக் காலங்களில் கார்களை எப்படி பாதுகாக்க வேண்டும்' என்பதில் துவங்கி பொது பராமரிப்புவரை பல வகையான பாதுகாப்பு டிப்ஸ்களை கிவ்ராஜ் மாருதி டீலர்ஷிப்பின் வைஸ் பிரசிடென்ட் விஜயராகவனும், சர்வீஸ் தலைவர் கோபாலகிருஷ்ணனும் பகிர்ந்து கொண்டார்கள். அதில் இருந்து சில துளிகள் இங்கே. கார்களின் பாதுகாப்பில்தான் அதில் பயணம் செய்கிறவர்களின் பாதுகாப்பும் இருக்கிறது என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மழைக்காலம்தான் கார்களுக்குப் பெரிய சவாலே! மழை நேரங்களில் கார்களை முடிந்தவரை மரங்களுக்குக் கீழ் நிறுத்தாதீர்கள். மழைக் காற்று அடிக்கும்போது, கிளைகள் முறிந்து விண்ட்ஷீல்டில் விழுந்தால்… மொத்தமாக மாற்ற வேண்டியிருக்கும்.

வெள்ளத்தில் இன்ஜினுக்குள் தண்ணீர் போய், இன்ஜின் வேலை செய்யாததை ‘ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்’ என்று சொல்வோம். (Hydro Static Lock). சைலன்ஸர் வழியாக, பானெட் வழியாக மட்டுமில்லை; ஏர் ஃபில்டர் டக்ட் வழியாகவும் இன்ஜினுக்குள் தண்ணீர் போக வாய்ப்புண்டு. இதிலும் பெரிய பிரச்னை உண்டு.

சல்யூட் தி கார்... ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்... இதெல்லாம் என்ன?
சல்யூட் தி கார்... ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்... இதெல்லாம் என்ன?

மழை வெள்ளத்தில் காரை ஓட்டும்போது மற்ற வாகனங்களாலும் ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக் பிரச்னை வரலாம். அதாவது – பெரிய லாரி ஒன்று தண்ணீரைத் விசிறிக்கொண்டு போகும்போது, அருகில் இருக்கும் உங்கள் காரின் ஏர்ஃபில்டர் டக்ட்டுக்குள் போனால்… கனெக்ட்டிங் ராடு பாதிக்கப்படக்கூடும். ஏனென்றால், 6,000rpm - களில் வேகமாக இயங்கும் இன்ஜின், அந்தத் தண்ணீரைப் பயங்கர வேகத்தில் Suck செய்தால்.. நீங்கள் ரெவ் செய்யும் பட்சத்தில் கனெக்ட்டிங் ராடு பெண்டு ஆகிவிட வாயுப்புகள் உண்டு. அதனால் தண்ணீரை விசிறியடித்துக் கொண்டுவரும் வாகனங்களை விட்டு தள்ளியே இருக்க முயற்சி செய்யுங்கள்.

வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில், சைலன்ஸர் மூழ்கும் அளவுக்கு உள்ள தண்ணீரில் பயணித்தே ஆக வேண்டிய நிலைமை என்று வைத்துக் கொள்வோம். எதிரே வரும் வாகனங்களை வைத்து ஆழம், பள்ளம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக காரை ஓட்டினால் தப்பித்துவிடலாம். அதாவது, முதலாவது கியரைத் தாண்டக் கூடாது; 10 – 15 கிமீ வேகத்தையும் தாண்டக்கூடாது; க்ளட்ச் பக்கம் காலையும், கியர்லீவர் பக்கம் கையையும் கொண்டு போகவே கூடாது; அதைவிட ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்கவே கூடாது. கார் போய்க் கொண்டிருக்கும்போது பதற்றத்தில் பிரேக்கிலும் கால் வைக்கக் கூடாது. கிராஜுவலாக ஒரே வேகத்தில் போகும்பட்சத்தில் வெற்றிகரமாகப் பயணத்தை முடிக்கலாம்.

தண்ணீர் நிறைந்த ஏரியாக்களில் பயணிக்கும்போது, ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுப்பதை டி–ஆக்ஸிலரேஷன் என்று சொல்வார்கள். இது நிச்சயம் கூடாது. பிரேக்குக்கும் மூச்! இது மாதிரி செய்தால் இன்ஜின் தண்ணீரை உறிஞ்சிவிடும். ஜாக்கிரதை. .

பொதுவாக, ஈரமான நேரங்களில் பிரேக்குகள் வேலை செய்யாது. இதற்கு ஒரு வழி உண்டு. பிரேக்கை பம்ப் செய்து பம்ப் செய்து... அதாவது விட்டு விட்டு இயக்கினால்… பிரேக் வேலை செய்யும்.

அதையும் மீறி பிரேக் பிடிக்காத பட்சத்தில், பதற்றம் அடையாமல் கொஞ்சம் கொஞ்சமாக கியரை டவுன்ஷிஃப்ட் செய்ய வேண்டும்.

மலைப் பயணங்களில் சிலர் பிரேக்கில் கால் வைத்துக் கொண்டே இறங்குவார்கள். இதனால், நிச்சயம் பிரேக்குகளின் செயல்பாடு குறையும். அது மாதிரி நேரங்களில் அதேபோல் பம்ப் செய்து பார்க்கவும். அதைவிட ஒரு நல்ல யோசனை உண்டு. அதாவது, காரை எங்காவது ஓரமாக பார்க் செய்துவிட்டு, ஒரு டீ அடித்துவிட்டு காருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டுக் கிளம்புங்கள். பிரேக் டிரம்களின் சூடு குறைந்து தணிந்திருக்கும். நிச்சயம் பிரேக் பிடிக்கும்.

மலைப் பாதைகளில் ஏறும்போது பாதி கிளட்ச்சில் கால் வைத்து ஓட்டுவது மிகவும் தவறு. கிளட்ச் அசெம்பிளியே தேய்ந்து போய், புகை வர வாய்ப்புண்டு. கடுமையான டிராஃபிக் இருந்தால்… சிறிது நேரம் கழித்துக் கிளம்புங்களேன். பெரிய செலவைத் தவிர்க்கலாம்.

ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற சரிவான மலை இறக்கங்களில் சிலர் 4–வது கியரில் இறங்குவதையும் பார்த்திருக்கிறேன். பலர் நியூட்ரலுக்குக் கொண்டு வந்து இறங்குவதையும் பார்த்திருக்கிறேன். மைலேஜ் சிக்கனமாம்! இதுவும் பெரிய ஆபத்து. ஏனெனில், காரின் கன்ட்ரோல் உங்கள் கை மீறிப்போவது ஆபத்து. அடுத்து பிரேக்கும் முழுமையாக வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குப்பைத் தொட்டிகள் இருக்கும் இடங்களில் உங்கள் காரை நிச்சயம் பார்க் செய்யாதீர்கள். எலிகள் போன்ற ரோடெண்ட்கள் காரில் ஏறி நாசம் பண்ணிவிடும். எலிகளைக் குழப்ப திசை மாற்றி மாற்றி கார்களை பார்க் செய்யுங்கள். ஒரு தடவை எலி, தங்களது சிறுநீரையோ மலக்கழிவுகளையோ காரின் அருகில் கழித்துவிட்டால்… ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்று காரை தன் ஆளுகையின் கீழ்கொண்டுவந்துவிடும். அதனால் காரின் அருகிலோ அல்லது பானெட், டிக்கி, சீட் போன்றவற்றிலோ எலிப் புழுக்கைகள் இருந்தால் உடனே சுத்தம் செய்துவிடுங்கள். 3M போன்ற பிராண்டட் ஆன ரோடெண்ட் ஸ்ப்ரேவை மாதம் ஒரு முறையாவது அடித்தாலும் எலிகள் அண்டாது.

சைலன்ஸ் உயரத்துக்கு சாலையில் மழை நீர் தேங்கி இருக்கும் சாலைகளில், ஜன்னல்களை மூடிவிட்டு, ஐடிலிங்கில் இயங்கும் காரில் ஏசி போட்டுக்கொண்டு தூவங்குவது ஆபத்து, ஏனெனில், சைலன்ஸர் வழியாக வெளியேற வேண்டிய நச்சுக்காற்று வெளியேற வழியில்லாமல் காருக்குள் சுழல ஆரம்பிக்கும். இதை சுவாசித்தால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிடும்.,

சிலர் காரின் ஏசியில் இருக்கும் ரீ–சர்க்குலேஷன் மோடு மற்றும் ஃப்ரெஷ் ஏர் மோடு இரண்டையும் கவனிப்பதே இல்லை. தூசு மற்றும் புழுதி நிறைந்த சாலைகளில் ஃப்ரெஷ் ஏர் மோடு ஆனில் இருந்தால், முன்னால் இருக்கும் ஏர் டக்ட் திறந்து, அதன் வழியாக அசுத்தமான காற்று காருக்குள் சுழல ஆரம்பிக்கும். இதில் சைலன்ஸரில் உள்ள கார்பன் மோனாக்ஸைடும் அடங்கும்.

கடும் வெயில் நேரங்களில் சிலர் காரில் ஏறி உட்கார்ந்த உடனேயே குளுகுளு காற்று வாங்கத் துடிப்பார்கள். கடுமையான வெயிலில் சட்டென ஏசி–யை ஆன் செய்வது தவறு. இப்படி செய்தால் ஏசி கம்ப்ரஸர் அடிக்கடி செலவு வைக்கும். வெயில் நேரங்களில் ஏசியை ஆன் செய்ய வேண்டுமானால், முதலில் விண்டோக்களை இறக்கிவிட்டு, ஏசி–யை ஆன் செய்யாமல் புளோயரை மட்டும் ஆன் செய்ய வேண்டும். இது உள்ளே இருக்கும் சூடான காற்றை வெளியே தள்ளும். பிறகு ஏசி–யை ஆன் செய்தால், ஏசி கம்ப்ரஸர் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

மழை நேரங்களில் ‘குளுருது’ என்று ஏசி–யை ஆஃப் செய்துவிட்டு சிலர் பயணிப்பார்கள். இதுவும் தவறு. இதனால் கண்ணாடி மற்றும் விண்ட்ஷீல்டுகளில் ஃபாக் (Fog) ஏற்பட்டு எதிரில் இருப்பதை மறைத்துவிடும். அதனால், ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் பயன்படுத்துவது நல்லது.

சல்யூட் தி கார்... ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்... இதெல்லாம் என்ன?
சல்யூட் தி கார்... ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்... இதெல்லாம் என்ன?
கோபாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்
விஜயராகவன்
விஜயராகவன்

ஹைபிரிட் வாகனங்களைப் பொருத்தவரை – அதுவும் எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி தண்ணீரில் மூழ்காத அளவு பார்த்துக் கொள்வது நல்லது. என்னதான் IP ரேட்டிங் இருந்தாலும்… தண்ணீர் மூழ்கி ஒரு லித்தியம் அயன் பேட்டரி செயலிழந்தால்.. 50,000 ரூபாய்க்கு மேல் செலவு உண்டு.

கார்களில் உட்காருவதற்கே ஒரு ரூல் உண்டு. நாம் உட்காரும்போது, நமது முழங்கால்கள் டேஷ்போர்டில் முட்டவும் கூடாது; ரொம்பவும் இடைவெளியும் வேண்டாம். அதேபோல், `Salute the Car’ என்றொரு விதிமுறையும் உண்டு. அதாவது, நாம் காரில் உட்கார்ந்தபிறகு சல்யூட் அடிப்பதுபோல் நம் தலைக்கு மேல் கையை உயர்த்தும்போது, சரியான இடைவெளி இருக்க வேண்டும். இது விபத்து நேரங்களில் நம்மை மிகவும் பாதுகாக்கும் அம்சம். டிரைவிங் பொசிஷனைச் சரியாக அமைத்துவிட்டு சீட் பெல்ட் போட்டால்… விபத்து நேரங்களில்கூட பாதிப்பு அதிகம் இருக்காது.

சிலர் காரை அதிகமாகப் பயன்படுத்தாமல், நிறுத்தியே வைத்திருப்பார்கள். ‘கார்தான் குறிப்பிட்ட கிமீ ஓடலையே.. எதுக்கு சர்வீஸ்’ என்று ஆயில் சர்வீஸுக்கு விடாமல் இருப்பார்கள். அதிகமாகி ஓடிய காரை சர்வீஸ் விடாமல் இருப்பதைவிட இதுதான் தவறு. முக்கியமாக இவர்கள்தான் சர்வீஸ் விட வேண்டும். கார் சும்மா நின்றாலும், இன்ஜின் ஆயிலின் மசகுத்தன்மை கெட்டுப் போய்விடும். நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சமையல் எண்ணெயை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சல்யூட் தி கார்... ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்... இதெல்லாம் என்ன?

மழை வெள்ளத்தில் உங்கள் கார் மூழ்கிவிட்டால்… மறந்துபோய்க்கூட ஸ்டார்ட் செய்துவிடாதீர்கள். ஒரு தடவை க்ராங்க் ஆகிவிட்டாலும், கனெக்ட்டிங் ராடு உடைய வாய்ப்புண்டு. கடுமையான மழை நேரங்களில் கார் ஓட்டுகிறீர்கள்; திடீரென உங்கள் கார் ஆஃப் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். எதனால் ஆஃப் ஆனது என்று தெரிந்துவிட்டால் ஓகே! சம்பந்தமே இல்லாமல் இன்ஜின் ஆஃப்பானால் நின்றுவிட்டால் அதை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். Tow செய்து சர்வீஸ் சென்டருக்கு விடுவதுதான் நல்லது.

இன்ஷூரன்ஸ் பற்றிப் பலர் அக்கறை எடுப்பதே இல்லை. ‘ப்ரீமியம் குறைவு’ என்பதற்காக சிலர் சுமாரான பாலிஸியை எடுத்திருப்பார்கள். பொதுவான இன்ஷூரன்ஸில் இன்ஜினுக்கு கவரேஜ் கிடைக்காது. தண்ணிரீல் மூழ்கிய காரை நீங்கள் ஸ்டார்ட் செய்தாலும், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்ய முடியாது. இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, `Engine Protect’ எனும் Add-on பாலிஸியைப் பற்றி விசாரியுங்கள். எக்ஸ்ட்ரா ப்ரீமியமாக இருந்தாலும், இது எந்த நேரத்திலும் கைகொடுக்கும்.