கார்ஸ்
Published:Updated:

அன்புள்ள வாசகப் பெருமக்களே!

ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

`EVs எனப்படும் மின்சாரக் கார்களில், ICE இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களில் கேட்காத பல சத்தங்கள் கேட்கும் - இப்படி யார் சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்து போய்விடலாம். ஆனால் ICE, EV என்று இரண்டுவிதமான கார்களை உருவாக்குவதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் இப்படி சொன்னால்... ஆச்சரியம் மேலோங்கும்தானே!

இதற்கு அவர் சொன்ன விளக்கம்தான் கிளாஸ். ``ICE கார்களில், விண்டோ கிளாஸ், க்ளோவ் பாக்ஸ் போன்றவற்றில் அதிர்வுகள் ஏற்பட்டு, லேசாகச் சத்தம் எழும்பினால். அது பெரும்பாலும் காதிலேயே விழாது. ஆனால், இதே காரில் பேட்டரியைப் பொருத்தி மின்சாரக் காராக மாற்றினால்... அப்போது வின்டோ கிளாஸ், க்ளோவ் பாக்ஸ் போன்றவையின் சத்தம் கேட்கும். காரணம் இன்ஜின் போடும் சத்தம் பெரிதாக இருப்பதால், அதனிடையே சிறிய சிறிய சத்தங்கள் கேட்காது. ஆனால், மின்சார கார்களில் இன்ஜின் இல்லை என்பதால் சத்தம் இல்லை. ஆகையால், சிறிய சிறிய சத்தங்கள் எல்லாம்கூடப் பெரிதாகக் கேட்கும். அதனால், மின்சாரக் கார்களின் சிறு சிறு உதிரிபாகங்களின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும்.''

இப்படிப் பல பெளதிக, பொறியியல் ஆச்சரியங்களை மஹிந்திரா ரிசர்ச் வேலியின் நிபுணர்கள் ஒரு நாள் முழுதும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல, மஹிந்திரா ரிசர்ச் வேலியில் செயல்படும் வெஹிக்கிள் டெஸ்ட்டிங் சென்டரை, இன்ஜின் டெஸ்டிங் சென்டர், NVH Lab, Fatigue Lab, சிஸ்டம்ஸ் எவாலுவேஷன் மையம் என்று ஒவ்வொரு பரிசோதனைக் கூடத்திலும் இப்படிப்பட்ட ஆச்சரியமான விஞ்ஞான விந்தைகளை மாணவர்கள் நேரடியாகக் கண்டும் கேட்டும் ரசிக்கும் வாய்ப்பு ஏப்ரல் 14ம்- தேதி அன்று eMobility: The Present and the Future என்ற தலைப்பில், மோட்டார் விகடன், மஹிந்திரா ரிசர்வ் வேலியில் நடத்திய Walkaround Workshop-ன் போது வாய்த்தது.

அனைத்துக்கு மேலாக மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி & புராடக்ட் டெவலப்மென்ட் தலைவர் ஆர்.வேலுசாமி ஜெர்மன் நாட்டில் இருந்தே காணொளி காட்சி வழியாகக் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்கள் என்று அனைத்துக்கும் விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் பதில் கூறியது ஹைலைட்!

மாணவர்களின் ஆட்டோமொபைல் ஆர்வத்தை ஊக்கப்படுத்த, இப்படித் தொடர்ந்து பல பயிலரங்கங்களைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மோட்டார் விகடன் உறுதியாக இருக்கிறது.

நன்றி!

- ஆசிரியர்