கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

லோடு டிரைவர்களின் தோஸ்த்... படா தோஸ்த்!

அசோக் லேலாண்ட் படா தோஸ்த்
பிரீமியம் ஸ்டோரி
News
அசோக் லேலாண்ட் படா தோஸ்த்

ஃபேக்டரி டிரைவ்: அசோக் லேலாண்ட் படா தோஸ்த்

பேண்டமிக் தளர்வுகளுக்குப் பிறகு, முதன் முதலாக ஆட்டோமொபைல் தொழிற்சாலை வாசத்தை நுகர்ந்த இடம் – அசோக் லேலாண்ட். சென்னையைத் தாண்டி உள்ள வெள்ளிவயல்பட்டி எனும் இடத்தில் உள்ள தனது டெக்னிக்கல் சென்டருக்கு அழைத்திருந்தது அசோக் லேலாண்ட். ஸ்வாப் டெஸ்ட்டைத் தவிர எல்லா டெஸ்ட்டும் நமக்கு முடிந்த பிறகு, நமது டெஸ்ட்டுக்காகக் காத்திருந்தது படா தோஸ்த் எனும் புத்தம் புது எல்சிவி.
 கியர் லீவர், டேஷ்போர்டோடு மவுன்ட் செய்யப்பட்டிருப்பது சூப்பர். டிஜிட்டல் மீட்டர் செம ஸ்டைல்.  2+1 சீட்டர் Walkthrough இன்டீரியர் டிசைனால், நல்ல இடவசதி. சீட்களை மடக்கிவிட்டுத் தூங்கிக் கொள்ளலாம்.
கியர் லீவர், டேஷ்போர்டோடு மவுன்ட் செய்யப்பட்டிருப்பது சூப்பர். டிஜிட்டல் மீட்டர் செம ஸ்டைல். 2+1 சீட்டர் Walkthrough இன்டீரியர் டிசைனால், நல்ல இடவசதி. சீட்களை மடக்கிவிட்டுத் தூங்கிக் கொள்ளலாம்.

“ஃபீனிக்ஸ் ஓட்ட வாங்க’’ என்று ஆரம்பத்தில் அசோக் லேலாண்ட் சொன்னபோது புரியவில்லை. படா தோஸ்த்தின் குறியீட்டுப் பெயர்தான் ஃபீனிக்ஸ் என்பது, படா தோஸ்த்தைப் பார்த்தபோதுதான் புரிந்தது. ஏற்கெனவே சாலைகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தோஸ்த் வாகனத்தின் நெக்ஸ்ட் ஜென்தான் படா தோஸ்த். ‘படா’ என்றால் இந்தியில் பெரிய என்று அர்த்தம். ஆம், தோஸ்த்தின் அண்ணனாக, அளவிலும் கொஞ்சம் பெரிதாக வந்திருக்கிறது படா தோஸ்த்.

பெரிய தோஸ்த்தில் ஒரு சின்ன டிரைவ் அடித்துப் பார்த்தோம்.

அசோக் லேலாண்ட் என்றாலே கட்டுமானம்தான். பார்ப்பதற்கே சும்மா கிண்ணென்று இருக்கிறது படா தோஸ்த். பழைய தோஸ்த்தின் ரோடு பிரசன்ஸே சூப்பராகத்தான் இருக்கும். படா தோஸ்த், இப்போது அடுத்த லெவல். பெயருக்கு ஏற்றபடி பே லோடில் இருந்து நீளம், அகலம், உயரம் எல்லாமே மாறியிருக்கிறது. மொத்தம் i4, i3 என இரண்டு மாடல்கள் வந்திருக்கின்றன படா தோஸ்த்தில். பே லோடு எடையிலும், ட்ரக் ஃப்ளீட்டின் நீளத்திலும், டயர் சைஸிலும், ஃப்யூல் டேங்க்கிலும் (50 லி, 40 லி) மட்டும் கொஞ்சம் மாற்றம் செய்திருக்கிறார்கள். இதில் i3தான் விலை குறைந்த வேரியன்ட்டாக இருக்கும். ஆனால், அதில் ட்யூப்லெஸ் டயர் கொடுத்திருந்தார்கள். i4-ல் ட்யூப் டயர்கள்தான் இருந்தன. டயர்களில் செக்ஷன் வேறுபாடு இருந்தது. (i4-7.00R15LT Tube; i3-215/75R15 Tubeless).

i4 மாடலின் லோடு பாடி நீளம் 9.7 அடி. i3-ன் நீளம் 9.3 அடி. i4-ல் சுமார் 1,860 கிலோ லோடு அடிக்கலாம். i3-ல் பழைய தோஸ்த் போலவே 1,400 கிலோதான் ஏற்ற முடியும். இரண்டின் கிராஸ் வெயிட்டில் உள்ள வேறுபாடு அப்படி.

லோடு டிரைவர்களின் தோஸ்த்... படா தோஸ்த்!

அசோக் லேலாண்ட் வாகனங்களின் டிசைனிங்கில் வெஸ்டர்ன் டிசைன் கலப்பு இருக்காது. எப்போதுமே நமது இந்தியக் கலாசாரம் இழையோடும். படா தோஸ்த்திலும் அப்படித்தான். நமது கார் டிசைன் வொர்க்ஷாப்பில் சத்தியசீலன் ஏற்கெனவே இதைச் சொல்லியிருந்தார். கிரிக்கெட்டில் தோனியோ, பேட்மின்ட்டனில் சிந்துவோ… வீரர்கள் ஜெயித்துவிட்டு, இரண்டு கைகளாலும் கப்பை மேலே தூக்கி எனெர்ஜியாக ஒரு போஸ் கொடுப்பார்களே… அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துத்தான் படா தோஸ்த்தின் முன் பக்க டிசைன் உருவாகி இருக்கிறது என்றார். நிஜம்தான். ஹெட்லைட் டிசைன் அப்படித்தான் இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், வெஸ்டர்ன் டிசைனில் ரெடியானது போலவே இருக்கிறது படா தோஸ்த். இதனால் குளோபலாகவும் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

லோடு டிரைவர்களின் தோஸ்த்... படா தோஸ்த்!

உள்ளேயும் டிரைவர்களை மனதில் வைத்து நிறைய அம்சங்கள் செய்திருந்தது சத்தியசீலன் தலைமையிலான டிசைன் டீம். கியர் லீவர் டேஷ்போர்டோடு மவுன்ட் செய்யப்பட்டிருப்பதால், எல்சிவி ஓட்டுநர்களுக்கு வசதியாக இருக்கும் என்கிறார் சத்தியசீலன். இதற்கு `Walkthrough Interior’ என்று பெயர். டிரைவர்கள் சட் சட் என அந்தப் பக்கம் எழுந்து நடமாட வசதியாக இருக்கும். கியர் டனல் இடிக்காது. ஆபத்துக் காலங்களில்தான் இதன் அருமை புரியும்.

பிராக்டிக்காலிட்டியில்தான் கலக்குகிறது படா தோஸ்த்தின் இன்டீரியர். வழக்கம்போல ஏசி, பவர் ஸ்டீயரிங், பாட்டில் ஹோல்டர்கள், டேஷ்போர்டில் இரண்டு பெரிய க்ளோவ் பாக்ஸ்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் என்று கலக்குகிறது இன்டீரியர். அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் வைத்திருக்கலாம். ஆனால், இது ஏற்றுமதி மாடலில் உண்டாம்.

நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்- எல்சிவிக்களில் ரிவர்ஸ் கேமரா, காற்றுப்பைகள், மெமரி சீட்டெல்லாம் கொடுக்க முடியாதா? அட்லீஸ்ட் டிரைவருக்காவது பவர் விண்டோ?

லோடு டிரைவர்களின் தோஸ்த்... படா தோஸ்த்!

படா தோஸ்த்தில் இன்னொரு ஹைலைட் – கோ டிரைவர் சீட்டை இரண்டு பேருக்காக வடிவமைத்திருக்கிறார்கள். சீட்களை மடித்துவிட்டால், டிரைவர் சொகுசாகப் படுத்துத் தூங்கலாம். சில நேரங்களில் நாட்கணக்கில் செக்போஸ்ட்களில் தங்க வேண்டியிருக்கும். எல்சிவிக்களில் இது செமையான இடவசதி.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், சட்டென நம்மைக் கவர்வது, அதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் டிசைன். எல்லாமே டிஜிட்டலில் மிளிர்ந்தன. எல்சிவி டிரைவர்களுக்கு எல்சிடி டிஜிட்டல் மீட்டர் புது அனுபவமாக இருக்கும். எனக்கு காரில் உட்கார்ந்ததுபோல்தான் இருந்தது.

இன்ஜின், பவர், டார்க் போன்ற விஷயங்களில் BS-6 அப்டேஷன் தவிர பெரிதாகக் கைவைக்கவில்லை அசோக் லேலாண்ட். 1,478 சிசி இன்ஜினில் நன்றாகவே NVH லெவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கண்ணாடியை இறக்கினால், எல்சிவிபோல் தெரியவில்லை. ஓரளவு கார் மாதிரிதான் இருந்தது. 80bhp பவர் என்பதால், ஹைவேஸில் ஓரளவு பறக்கலாம். ஸ்பீடு டெஸ்ட் ட்ராக்கில் சட்டென 80 கி.மீ-ல் போக முடிந்தது. இதன் டார்க் 19kgm. 1,600 – 2,400 ஆர்பிஎம்-மில் மொத்த டார்க்கும் கிடைத்து விட்டதுபோல் ஒரு உணர்வு. 5 ஸ்பீடு கியர்பாக்ஸும், க்ளட்ச்சும் இன்னும் கொஞ்சம் லைட் வெயிட்டாக இருந்தால் நன்றாக இருக்கும். மற்றபடி படா தோஸ்த்தின் பெர்ஃபாமென்ஸில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் ஹைஸ்பீடு மேனரும், அட.. கார் ரகம்தான் போங்கள்!

படா தோஸ்த்தின் கையாளுமையும் பிரமாதமாக இருந்தது. இதன் 2 Leaf சஸ்பென்ஷன்கள், சொகுசாகவே இருந்தது. கொஞ்சம் வெர்ட்டிக்கல் மூவ்மென்ட் இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் லோடு அடிக்கும்போது இது பேலன்ஸ்ட் ஆகவே இருக்கும். பிரேக்கிங் ஓகே!

இதன் இன்ஜின் முன் பக்கம் கீழே இருப்பதால், முன் பக்கத்தில் சூடு பரவ வாய்ப்புண்டோ என்று என் சந்தேகத்தைக் கேட்டேன். அதற்காகத்தான் Thermal Pad வைத்திருப்பதாகச் சொல்கிறது டிசைன் டீம். இது இன்ஜின் சூட்டை டிரைவருக்குக் கடத்தாது என்றே நம்பலாம். நான் ஓட்டியவரை சூடு தெரியவில்லை.

ஓவர்ஆலாக பெர்ஃபாமென்ஸ், கையாளுமை, வசதிகள் என அசத்துகிறது படா தோஸ்த். விலையும் ஒத்துப்போனால், டிரைவர் சென்ட்ரிக்காகவே டிசைன் செய்யப்பட்டிருக்கும் படா தோஸ்த்துக்கு பல டிரைவர்கள் பெஸ்ட் தோஸ்த் ஆவார்கள்.