
ஃபேக்டரி விசிட்: ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா
“ஒரு குழந்தை உருவாகுறதுக்கு 10 மாசம்; ஒரு பட்டதாரி உருவாகுறதுக்கு 3 வருஷம்; ஒரு தலைவன் உருவாகுறதுக்கு ஒரு யுகம் தேவைப்படும்’’ என்று ‘மெர்சல்’ விஜய் சொல்வதெல்லாம் ஹூண்டாய்க்கு எடுபடாது.
ஒரு கார் தொழிற்சாலையில் ஒரு வாகனம் உருவாவது, ஒரு குழந்தை பிரசவமாகி வெளிவருவதற்குச் சமம். அப்படிப் பார்த்தால், ஹூண்டாயில் ஒரு குழந்தை உருவாகி வெளியே வருவதற்கு 33 விநாடிகள்தான் ஆகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனம் ஆரம்பித்தபோது, 4 நிமிடங்களுக்கு ஒரு கார் என்று தயாரிப்பில் ‘மெர்சல்’ பண்ணிய ஹூண்டாய், இப்போது 33 விநாடிகளுக்கு ஒரு காரை ரிலீஸ் பண்ணி கார் தொழிற்சாலை நிறுவனங்களின் ‘மாஸ்டர்’ ஆகத் திகழ்கிறது.
‘‘புது க்ரெட்டா எப்படித் தயாராகுதுனு வந்து பார்க்கிறீங்களா?’’ என்று ஹூண்டாய் ஆசையோடு அழைத்தால் விட முடியாதே!

வெளியாட்கள் யாருமே நுழைய முடியாத கோட்டையான ஹூண்டாய் தொழிற்சாலையில் –கொரோனோ பீதியில் கைகளில் சானிட்டைஸர் தடவி நுழைந்தது முதல், பாதுகாப்பாக வெளியே வந்தது வரை எல்லாமே ஆன் டாட்! ‘எதையுமே பிளான் பண்ணிப் பண்ணணும்’ என்பதுபோல், அத்தனை திட்டமும் நேர்த்தியும் இருந்தால்தான் இத்தனை கார்கள், இத்தனை வேரியன்ட்கள் என்று இந்தியாவில் நம்பர் ஒன் கார் தயாரிப்பாளராக இருக்க முடியும் என்பது புரிந்தது.

இங்கே `சேஃப்டி; குவாலிட்டி’ தான் பிரதானம். தலையில் ஹெல்மெட், கைகளில் க்ளோவ்ஸ், கால்களில் சேஃப்டி ஷூ... என போர்வீரர்கள் மாதிரி காட்சி அளித்தார்கள் தொழிலாளர்கள். நானும்தான். ஒரு கார் உருவாகி வெளியே வருவதற்கு, மொத்தம் 5 படிநிலைகள் வைத்திருக்கிறது ஹூண்டாய். 1.ப்ரெஸ் ஷாப் 2.பாடி ஷாப், 3.பெயின்ட் ஷாப், 4.அசெம்பிளி 5.PDI (Pre Delivery Inspection)ப்ரெஸ் ஷாப்பில்தான் ஒரு காரின் ஸ்கெலிடன் அதாவது கூடு உருவாகிறது. இதைத்தான் `டை’ - அதாவது `அச்சு’ என்பார்கள். ஒரு கார் இந்த வடிவத்தில்தான் வர வேண்டும் என்பதற்கான ரா ஸ்டீல் டிசைன்தான் இது. நமக்கு முன்னால் வெறும் கூடாக இருந்த க்ரெட்டாவைப் பார்க்கும்போது, கை கால் முளைக்காத கருவைப் பார்ப்பதுபோல் செம எக்ஸைட்டிங்காக இருந்தது.
ஸ்டீல் பாடியில் அங்கங்கே`புளூ’வாக பெயின்ட் அடித்திருந்தார்கள். ‘‘நீங்க பார்க்கிறது ரா ஸ்டீல். இங்க புளூவா இருக்கு பார்த்தீங்களா... இதெல்லாம் விபத்து ஏற்பட்டால் இம்பேக்ட்டைத் தாங்கக்கூடிய ‘அல்ட்ரா ஹை ஸ்டென்ஸில் ஸ்டீல்’ எனும் லைட் வெயிட் ஸ்டீல். இதனால் காரின் எடையும் குறையும்; பாதுகாப்பும் அதிகரிக்கும்’’ என்று விளக்கினார், பாடி ஷாப் அதிகாரி மணிவண்ணன்.

ரெடியான இந்த பாடியை ஒரு ரோபோ 3டி ஸ்கேன் செய்கிறது. ரோபோவிடம் பாஸ் மார்க் வாங்கினால்தான், அதற்கு பெயின்ட் ஷாப்பின் கதவுகள் திறக்கும். அடுத்தபடி நிலையான அசெம்பிளி லைன் மிக முக்கியமான கட்டம். நாரில் பூக்களைத் தொடுப்பதைப்போல, டேஷ்போர்டில் இருந்து ஹெட்லைட் அசெம்பிளி, சீட்கள், ஸ்டெஃப்னி வீல் என எல்லாமே அசெம்பிள் செய்யப்படுவது இங்கேதான்.

வென்யூ காரின் ஹெட்லைட்டை எடுத்து க்ரெட்டாவுக்கோ, ஆராவின் டேஷ்போர்டை வென்யூவுக்கோ பொருத்திவிட்டால்... என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால், அதற்கெல்லாம் இங்கே சான்ஸே இல்லை. ஒவ்வொன்றுக்கும் Colour Code மற்றும் குறியீட்டுப் பெயர் உண்டு. பிங்க் என்றால் வென்யூ, நீலம் என்றால் க்ரெட்டா, பர்ப்பிள் என்றால் பழைய க்ரெட்டா என்று பக்காவாக வேலை நடக்கிறது. சில கார்களின் பாடியில் சவுதி, தாய்லாந்து என்று இருந்தது. ஆம்! இவையெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக இருப்பவை. அதாவது, ஒரே பிளாட்ஃபார்மில், ஒரே நேரத்தில், ஏகப்பட்ட வேரியன்ட் கார்கள்... அதுவும் ஏற்றுமதி கார்கள்... அப்படியென்றால் எவ்வளவு பக்காவாக பிளான் போட வேண்டும்! அசெம்பிளி லைனில் வெரைட்டியான கலர் டீ–ஷர்ட்டில் இளம் ஊழியர்கள் பரபரவென வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பச்சை கலர் என்றால் அப்ரென்டிஸ், ‘ஸ்டார் ஆஃப் தி மன்த்’ விருது வாங்கிய ஊழியர்களுக்குத் தனி டீ–ஷர்ட் என்று கலர் கோடு வைத்திருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால், ‘உம்’மென்றிருந்தார்கள். ஒருவேளை – ரோபோக்களோடு வேலை செய்து, இவர்களும் ரோபோக்களாக மாறி ஆகிவிட்டார்களோ என்று கடுப்பானேன். ஆனால், விஷயம் இதுதான்.

இங்கே ஒரு விநாடியைக்கூட நீங்கள் வேஸ்ட் பண்ண முடியாது. ஒரு டேஷ்போர்டையோ, ஹெட்லைட்டையோ ஃபிட் செய்த அடுத்த விநாடி, அடுத்த கார் அந்த ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. அந்த ஸ்டேஷனில் இணைக்க வேண்டிய பகுதியை அல்லது வேலையைச் செய்தால்தான் அந்த கார் அங்கிருந்து அடுத்த ஸ்டேஷனுக்கு நகர்கிறது. ஒரு ஸ்டேஷனில் வேலை தேங்கி நின்றால்... அசெம்பிளி லைன் முழுவதுமே வேலை ஏதும் நடக்காமல் தேங்கிவிடும். ஓ.. அதான் மேட்டரா!

இந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு இணையாக ரோபோக்களும் வேலை செய்கின்றன. வெல்டிங், சால்டரிங்... என்று உண்மையிலேயே தீயாய் வேலை செய்யும் குமார்கள் இந்த ரோபோக்கள்தான். ஹூண்டாய்க்கு இன்னொரு பெரிய லைக் பட்டன் – இன்ஜின் தயாரிப்புக்கு! ஹுண்டாய் தனக்குத் தேவையான இன்ஜின்களைத் தானே தயாரித்துக் கொள்கிறது. இயானின் 800 சிசி பெட்ரோலில் இருந்து டூஸானின் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வரை எல்லாமே ஹூண்டாயின் சொந்தத் தயாரிப்புகள்தான். புது க்ரெட்டாவிலும் ஹூண்டாயின் சொந்த 1.5 லிட்டர் இன்ஜின்தான். ஹூண்டாயில் இப்போது புதிதாக ஒரு செக்ஷன் வந்திருக்கிறது. சன்ரூஃப் ஆம், இப்போது புது க்ரெட்டாவில் சன்ரூஃப் உண்டு! ஆரம்பத்தில் வெறும் கூடாகப் பார்த்த க்ரெட்டா, அழகிய உருவத்துடன் ஓர் இடத்தில் நமக்கெதிரே சர் புர்ரென வந்து நின்றது. ‘ஏபிஎஸ் டெஸ்ட்டிங் நடக்குது சார்’’ என்றார்கள். அடுத்து இருக்கும் டிபார்ட்மெண்ட் - ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக்ஷன்.
ஒரு கார் விற்பனையாவதற்கு முன்பு எல்லாமே பக்காவாக இருக்கிறதா என்பதற்கான சோதனை ஏரியா இது. ஒரு காருக்கு 100 விநாடிகள்தான். அதற்குள் அந்த வேரியன்ட்டின் எல்லா வசதிகளும் இருக்கின்றனவா என்பதை டிக் அடித்து விட வேண்டும். ‘‘டாப் எண்ட் வாங்கியிருக்கேன். டூயல் டோன்னு சொன்னீங்க. சிங்கிள்தான் இருக்கு. டச் ஒர்க் ஆகலை’’ என்று டீலர்களோ, வாடிக்கையாளர்களோ புகார் சொன்னால், தலைவலி இந்த ஏரியாவுக்குத்தான். இதைத் தாண்டி, தொழிற்சாலையில் இருக்கும் சாலைகளில், ஆஃப்ரோடு ஏரியாக்களில் காரை ஓட்டி சோதனையிட்ட பிறகே கார் டீலர்களுக்கு அனுப்பப்படும்.

ஆண்டொன்றுக்கு ஏழரை லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலையில், எத்தனை நாட்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஸ்டாக் செய்யப்படும் தெரியுமா? நாள் கணக்கு எல்லாம் இல்லை. மணிக்கணக்கில்தான். நான்கு ஐந்து மணி நேரங்களுக்கு என்ன தேவையோ, அந்த அளவுக்குத்தான் இங்கே மூலப்பொருட்கள் ஸ்டாக் செய்யப்படுகின்றன என்பது ஆச்சரியத்தின் உச்சம்.