Published:Updated:

கோ... கோ ப்ளஸ்... CVT எப்படி இருக்கு?

ஃபர்ஸ்ட் டிரைவ்: டட்ஸன் கோ & கோ ப்ளஸ் ஆட்டோமேட்டிக்

பிரீமியம் ஸ்டோரி

ட்ஸனில் முத்தான மூன்றே மூன்று கார்கள்தான். கோ, ரெடி கோ, கோ ப்ளஸ் – மூன்றுமே பெட்ரோல் மாடல்கள்தான். கோ கார்கள் திடீர் திடீரென்று எப்போதாவது ஃபேஸ்லிஃப்ட் ஆகிவரும். அப்படித்தான் அக்டோபர் 2018–ல் கோவும், கோ ப்ளஸ் காரும் ஃபேஸ்லிஃப்ட் ஆகின. ஸ்டைலில் கொஞ்சம் மாற்றம், புத்தம் புது இன்டீரியர், கூடுதல் வசதிகள்... அதாவது டச் ஸ்க்ரீன், கனெக்ட்டிவிட்டி போன்றவற்றோடு VDC, (Vehicle Dynamic Control) எனும் பாதுகாப்பு வசதியுடன் க்ராஷ் டெஸ்ட் வசதிக்கு ஏற்ப சூப்பராக அப்டேட் ஆகி வந்திருந்தது கோ.

அப்போதும் மிட் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி இல்லை. ‘‘எல்லாம் ஓகே... ஆனா AMT இல்லையே?’’ என்று வாடிக்கையாளர்கள் `உச்’ கொட்டியது டட்ஸனுக்குக் கேட்டுவிட்டதோ என்னவோ? ‘‘AMT என்ன... இந்தாங்க CVT–யே வெச்சுக்கோங்க!’’ என்று CVT கியர்பாக்ஸை கோ-விலும், கோ ப்ளஸ்ஸிலும் இறக்கிவிட்டது டட்ஸன்.

டட்ஸன் கோ ஆட்டோமேட்டிக்
டட்ஸன் கோ ஆட்டோமேட்டிக்

AMT (Automated Manual Transmission) என்பது கொஞ்சம் விலை குறைவான, பர்ஃபாமென்ஸ் கொஞ்சம் குறைவான ஆப்ஷன். CVT (Continious Variable Transmission) அதற்கும் ஒரு படி மேல். செடான்களில்தான் CVT பொருத்துவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘கோ CVT–யை ஓட்டிப் பார்க்கிறீங்களா...’’ என்று கோ மற்றும் கோ ப்ளஸ்ஸின் CVT மாடல்களை ஓட்ட அழைத்திருந்தது டட்ஸன். ஒரகடம், விமான நிலையம், GST ரோடு, வண்டலூர் என்று சென்னை முழுக்க கோ கார்களின் ஆட்டோமேட்டிக்கில் ஒரு நாள் முழுவதும் ரவுண்டு அடித்தோம்.

கோ முக்கியமாகப் போட்டியாகக் கருதுவது சான்ட்ரோ, வேகன்–ஆர், டியாகோ. மற்ற மூன்றில் இருப்பது AMT-தான். அளவுகோல்களின்படி பார்த்தால், மற்ற மூன்றையும்விட கோ-தான் நீளத்தில் பெருசு. இதன் நீளம் – 3,788 மிமீ.

 Go-வுக்கும், GO ப்ளஸ்ஸுக்கும் நீளம்தான் வித்தியாசம்.
Go-வுக்கும், GO ப்ளஸ்ஸுக்கும் நீளம்தான் வித்தியாசம்.

ஆனால், மற்ற மூன்றையும்விட இது உயரம் குறைவான கார். இதன் உயரம் – 1,507 மிமீ. 14 இன்ச் வீல்களில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், கோவுக்கு கெத்து. ஆனால், இது டாப் மாடல் ‘T(O)’வில் மட்டும்தான்.

அறுங்கோண வடிவ கிரில்லில் இருந்து, மேலே ரூஃப் ரெயில், பின் பக்கம் வரை நன்றாகவே மாற்றங்கள் தெரிகின்றன. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல், பழைய கோவைவிட 40 கிலோ அதிகம். நெடுஞ்சாலையில் நூறு கி.மீட்டர் வேகத்தில் ஓட்டிப் பார்த்தோம். ஸ்டெபிலிட்டியில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது.

ரியர் ஏ.சி வென்ட், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இல்லை.
ரியர் ஏ.சி வென்ட், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இல்லை.

கோ ப்ளஸ் காரிலும் அதே மாற்றங்கள். 2 சீட்டர் அதிகம் என்பதால், நீளமும் அதிகம். ஆனால், கடைசி சீட்டில் பெரியவர்கள் உட்கார்ந்து வருவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மற்றபடி இரண்டு கார்களிலும் இன்டீரீயர் ஒரே மாதிரிதான்.

7 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி வசதி இருந்தது. காரை ரிவர்ஸ் எடுக்கும்போதுதான் தெரிந்தது – ரிவர்ஸ் கேமரா இல்லை. சென்ஸார் மட்டும்தான். சான்ட்ரோ, டியாகோ கார்களில் எல்லாம் இந்த வசதி உண்டு. ஆனால், கோவிலும் கோ ப்ளஸ்ஸிலும் உள்ள ட்ராக்ஷன் கன்ட்ரோலும், ESC–(Electronic Stability Control)யும் மற்றவற்றில் இல்லை!

 இரண்டிலும் ஒரே டேஷ்போர்டு. ரிவர்ஸ் கேமரா இல்லை. ,  CVT கியர்பாக்ஸ்... ஸ்போர்ட்ஸ் மோடு, லீவருக்குக் கீழே!
இரண்டிலும் ஒரே டேஷ்போர்டு. ரிவர்ஸ் கேமரா இல்லை. , CVT கியர்பாக்ஸ்... ஸ்போர்ட்ஸ் மோடு, லீவருக்குக் கீழே!

ஓகே! விஷயத்துக்கு வருவோம். CVTதான் இங்கே விஷயமே! கியர் லீவரை ‘D’ மோடுக்குத் தள்ளிவிட்டு, ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்தாலும் கார் தானாகவே மூவ் ஆகிறது. இதை ‘க்ரீப் ஃபங்ஷன்’ என்பார்கள். இது மலைச்சாலைகளில் ஏறும்போது நல்ல பலனளிக்கும். டிராஃபிக்கில் இந்த க்ரீப் ஃபங்ஷன் செம ஸ்மூத். த்ராட்டில் இன்புட் கிடைத்த அடுத்த நொடி, சர்ரென வேலை பார்க்கிறது CVT. மற்ற AMT கார்களை ஓட்டும்போது, பவர் டெலிவரியில் ஒரு ஜெர்க்கினெஸ் தெரியும். இந்த கோ CVT செம!

இருந்தாலும், ஆக்ஸிலரேட்டருக்கு அதிக வேலை கொடுத்தால், கியர்பாக்ஸ் தடுமாற ஆரம்பித்து விடுகிறது. ஃபுல் த்ராட்டிலில், இன்னும் கொஞ்சம் வீக். அதாவது, அதிக வேகங்களில் டேக்கோ மீட்டர் முள் உயரும். ஆனால், கார் அதற்குத் தகுந்த மாதிரி வேகம் செல்லாது. இதைத்தான் ரப்பர் பேண்ட் எஃபெக்ட் என்பார்கள். இது எல்லா CVT கார்களுக்கும் உள்ள பொதுவான அம்சம். மைலேஜுக்காக இந்த ரப்பர் பேண்ட் எஃபெக்ட்டை வேண்டுமென்றே உருவாக்கி இருப்பார்கள்.

இதன் மைலேஜ் – 20.07 கி.மீ என்று அராய் அளவைக் காட்டுகிறது டட்ஸன். இதுவே கோ ப்ளஸ்ஸுக்கு 19.41 கி.மீ. அதேநேரம், இந்த ரப்பர் பேண்ட்தான், ஓவர்டேக்கிங்கில் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தி விடும். எனவே, ஓட்டுதலில் புத்திசாலித்தனம் வேண்டும்.

பொதுவாக, CVT–களில் பேடில் ஷிஃப்டர்கள் போன்ற மேனுவல் ஆப்ஷன் கொடுத்திருப்பார்கள். இந்த டட்ஸன் CVT-ல் அது மிஸ்ஸிங். ஆட்டோமேட்டிக் மட்டும்தான். ஆனால், ஸ்போர்ட்ஸ் மோடு கொடுத்திருந்தார்கள். ‘ஸ்போர்ட்ஸ் மோடு இல்லையே.. எங்க இருக்கு’ என்று தேட ஆரம்பித்து விட்டேன். கியர்லீவரில் உள்ள பட்டன்தான் ஸ்போர்ட்ஸ் மோடு என்றார்கள்.

Datsun GO
Datsun GO

இந்த 1.2 லிட்டர் இன்ஜினை எப்போதும் அலெர்ட்டாகவே வைத்திருக்கிறது ஸ்போர்ட்ஸ் மோடு. பழைய மேனுவல் டட்ஸன் கோவில் 68 bhp. இதில் அதைவிட 9 bhp அதிகம் (77bhp). ஆனால், ஸ்போர்ட்ஸ் மோடில்கூட 9 bhp அதிகமானதை அவ்வளவாக உணர முடியவில்லை. ஆனால், 5,000 ஆர்பிஎம்–மைத் தாண்டினால், பர்ஃபாமென்ஸ் கிடைப்பதுபோல் தெரிகிறது.

ஓட்டுதலைப் பொறுத்தவரை லைட் ஸ்டீயரிங்கும், 14 இன்ச் வீல்களும் ஓகே! நெருக்கங்களில் திருப்ப ஜாலியாக இருக்கிறது. இதுவே டியாகோவில் 15 இன்ச் என்பதை டட்ஸன் நினைவில் கொள்ள வேண்டும். ஓட்டுதல் கொஞ்சம் இறுக்கமாக இருந்தாலும், அதிவேகங்களில் ஓகே! வெளிச்சத்தம் கேபினுக்குள் கேட்கிறது.

கோ... கோ ப்ளஸ்... CVT எப்படி இருக்கு?

T, T(O) - என இரு வேரியன்ட்களில், 5.94 – 6.58 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலைகளில் வந்திருக்கின்றன கோவும், கோ ப்ளஸ்ஸும். இரண்டு காற்றுப்பைகள், டச் ஸ்க்ரீன், கனெக்ட்டிவிட்டி, டாப் மாடலில் டைமண்ட் அலாய் வீல்... முக்கியமாக வேறெந்த பட்ஜெட் ஹேட்ச்பேக்குகளிலும் இல்லாத ESC, VDC, ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்புக்காகவே டட்ஸனுக்கு லைக் போடலாம். மற்றபடி ஒரு பக்கா ஹேட்ச்பேக்குகள் – இந்த கோவும், கோ ப்ளஸ்ஸும். டீலர் நெட்வொர்க்கிலும், கூடுதல் மாடல்களிலும் கவனம் செலுத்தினால், ‘கோ’ முன்னேறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு