Published:Updated:

ஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா?

ஹோண்டா சிட்டி 2020
பிரீமியம் ஸ்டோரி
News
ஹோண்டா சிட்டி 2020

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹோண்டா சிட்டி 2020

ருபத்தியிரண்டு ஆண்டுகளாக சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் சிட்டியின் ஐந்தாவது தலைமுறை மாடலை இறக்கியிருக்கிறது ஹோண்டா. லைட் வெயிட்டான 1.5 VTEC வெர்ஷனில் ஆரம்பித்து லேட்டஸ்ட் இன்ஜினான DOHC 1.5 லி இன்ஜின் வரை சிட்டி, எப்போதுமே டிரைவர்ஸுக்கான கார். மூன்று ஜெனரேஷன் வரை பெட்ரோலில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த சிட்டி, 4-வது தலைமுறையில்தான் டீசலில் வர ஆரம்பித்தது. சிட்டியின் வரலாற்றைச் சொன்னால் பக்கம் போதாது. அளவில் பெருசாக, ஸ்டிஃப்னெஸ்ஸில் கொஞ்சம் விறைப்பாக, எடையிலும் 40 கிலோ கூடி கெத்தாக வந்திருக்கும் 5-வது ஜென் BS-6 பெட்ரோல் சிட்டியின் நிறை குறைகளைக் கண்டறிய, இந்த லாக்டெளனிலும் ஒரு செமையான வாய்ப்பு கிடைத்தால் எப்படி விட முடியும்?

வென்ட்டோ, வெர்னா, ரேபிட், சியாஸ் – இவற்றுக்கெல்லாம் அள்ளுவிட்டு, தள்ளிவிடுமா சிட்டி? பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புதுசில் என்ன வித்தியாசம்?

பழைய சிட்டியின் அதே பிளாட்ஃபார்மில்தான் ரெடி ஆகியிருக்கிறது புது சிட்டி. ஆனால், அதிபட்சமாக ஹை ஸ்டென்ஸில் ஸ்ட்ரென்த் ஸ்டீல் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் விறைப்புத்தன்மையும், ஸ்டெபிலிட்டியும் இன்னும் அபாரமாக இருக்கும். ஹைவேஸில் பறப்பதற்கு ஏற்றபடி உயரத்தையும் குறைத்திருக்கிறார்கள். ஆனால், 40 கிலோ எடை அதிகமாகி இருக்கிறது புது சிட்டி. நீளம் – 4,549 மிமீ. இந்த நாலரை மீட்டர் நீளம், ஃபர்ஸ்ட் ஜென் சிவிக்கை விட நீளம் என்பது `அட’தான்! ஒவ்வொரு ஜெனரேஷனிலும் இடவசதியை அதிகப்படுத்தும் ஹோண்டா. இதிலும் அப்படித்தான்; முன்-பின் என இரண்டு சீட்களிலும் செம இடவசதி. அதிகமாகி இருக்கணுமே என்றால், இல்லை. வீல்பேஸ் - அதே 2,600 மிமீதான்.

விலை: `13.08 - 17.50 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை: `13.08 - 17.50 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

சிட்டியின் முன் பக்க க்ரோம் பார், முன்பைவிட கொஞ்சம் தடிமனாகி இருக்கிறது. அது எல்இடி ஹெட்லைட்ஸுக்கு மேலே பரவும் விதம், நச்! ஹெட்லைட்ஸும் செம ஷார்ப். பாதசாரிகளின் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப பானெட் நீளமாகவும், உயர்ந்தும் இருக்கிறது. 16 இன்ச் அலாய் வீல்கள் செம ஸ்போர்ட்டி. செக்ஷன்களை அதிகப்படுத்தி இருக்கலாமோ? இதன் 185/55 செக்ஷன் டயர்கள், வீல் ஆர்ச்சுக்குப் பொருந்தவில்லையோ என்று நினைக்கிறேன்.

டெயில் லைட்களிலும் அட போட வைக்கிறது ஹோண்டா. ரியர் பம்பருக்குள் 3D ஸ்டைலில், கறுப்பு நிற வேலைப்பாடுகள், செங்குத்தான ரெஃப்ளெக்டர் ஸ்ட்ரிப்புகள் செம! தோற்றத்தில் முன்பைவிட இன்னும் கொஞ்சம் ஜென்யூன் ஆகி இருக்கிறது சிட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளே…

கதவைத் திறந்தால், லைட் பிரெளன் மற்றும் கறுப்பு நிறத்தில் வரவேற்கிறது சிட்டியின் இன்டீரியர். பிளாஸ்டிக்குகள் பளபளக்கின்றன. பொதுவாக, கார் ஆர்வலர்கள் சாஃப்ட் டச் மெட்டீரியல்களையும், பளபளக்காத மைல்டு வேலைப்பாடுகளையும்தான் விரும்புவார்கள். இது நிறைய பேருக்குப் பிடிக்குமா? ஆனால் சீட், டோர் ட்ரிம், டேஷ்பேனல் என அங்கங்கே லைட் பிரெளன் லெதர் வேலைப்பாடுகளில் கொஞ்சம் ரிச் லுக் காட்ட முயற்சித்திருக்கி றார்கள். முன்பெல்லாம் உயரமானவர்கள் சிட்டிக்குள் ஏறி இறங்கி உட்கார ஓட்ட - என்று சொகுசில் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த 5-வது ஜென் சிட்டியில் அதைச் சரிசெய்து விட்டது ஹோண்டா.

 1. டேஷ்போர்டு செம ப்ரீமியம் லுக்கில் கலக்குகிறது. சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் இருந்திருக்கலாம்.
2.  க்ரூஸ் கன்ட்ரோலுக்கான பட்டன். ஆட்டோமேட்டிக் என்றால், பேடில் ஷஃப்டர்கள் உண்டு.
3.  ஸ்டீயரிங் வீலிலேயே எல்லா கன்ட்ரோல்களும் உண்டு.
1. டேஷ்போர்டு செம ப்ரீமியம் லுக்கில் கலக்குகிறது. சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் இருந்திருக்கலாம். 2. க்ரூஸ் கன்ட்ரோலுக்கான பட்டன். ஆட்டோமேட்டிக் என்றால், பேடில் ஷஃப்டர்கள் உண்டு. 3. ஸ்டீயரிங் வீலிலேயே எல்லா கன்ட்ரோல்களும் உண்டு.

பழைய 4-வது ஜென் சிட்டியைவிட பின் பக்கத்தில்தான் பெரிய மாற்றம். பென்ச் சீட். நடுவே ஆர்ம் ரெஸ்ட் வேண்டுமானால் விரித்துக் கொள்ளலாம். ஏகப்பட்ட லெக் ரூம். அநேகமாக இந்த செக்மென்ட்டில் தாராளம் எனலாம். செம சொகுசு! அதாவது, டிரைவர் வைத்து ஓட்டும் ஓனர்களையும் கவர் செய்கிறது சிட்டி. ஃபுட்ரெஸ்ட் மாதிரியே முன் பக்க சீட்டுக்குக் கீழே கொஞ்சம் உயர்த்தி இருப்பது நச் ஐடியா. பின்பக்கம் மூன்று பயணிகளுக்குமே சீட் பெல்ட்டும், ஹெட்ரெஸ்ட்டும் உண்டு. பின்பக்கம் சரிவதாலோ என்பதாலோ என்னவோ, உயரமானவர்களுக்கு ஹெட்ரூம் மட்டும் கொஞ்சம் டைட் ஆக இருக்கும்.

ஓனர்கள் பிராக்டிக்காலிட்டி எதிர்பார்ப்பார்கள். அங்கங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸும் உண்டு. அதுவும் போன் வைக்க இடம் கொடுத்திருப்பது சூப்பர். முன் பக்கம் பார்க்கிங் பிரேக்குக்கு இடது - வலது என இரண்டு பக்கமும் ஸ்லாட்கள் உண்டு. அதாவது - டிரைவருக்கும், கோ டிரைவருக்கும்.

பூட் ஸ்பேஸ் மட்டும் 4 லிட்டர் குறைத்திருக்கிறார்கள். ஆனாலும் என்ன, இந்த செக்மென்ட்டில் அதிகபட்சமான 506 லிட்டர் இடவசதி, சிட்டியில் மட்டும்தான்.

எக்யூப்மென்ட்

பொதுவாகவே ஹோண்டா சிட்டியை வெல் எக்யூப்டு கார் என்றுதான் அழைப்பார்கள். இந்தப் புது சிட்டி, அதுக்கும் மேலே! ஆம், காருக்கு மேலே இப்போது சன் ரூஃபெல்லாம் வந்துவிட்டது. பனோரமிக் இல்லை; சின்னதுதான்; ஆனால் ரிமோட் உண்டு. இது தவிர - லேன் வாட்ச் கேமரா, ரியர்வியூ கேமரா (Normal, Wide, TopView), டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், (ஓவர் காற்றழுத்தம் என்றால் வார்னிங் கொடுக்கும்), முன் பக்கம் மற்றும் பக்கவாட்டு கர்டெய்ன் காற்றுப்பைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் – நல்லவேளையாக டச் பட்டன்கள் இல்லாமல் Knob கொடுத்திருக்கிறார்கள். சாலையில் இருந்து பார்வையை எடுக்காமலே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஸ்டீயரிங் வீலிலும் கன்ட்ரோல்கள் உண்டு. இதிலுள்ள ரோல்ஓவர் ஸ்விட்ச் மூலம் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் உள்ள பல விஷயங்களை ஆப்பரேட் செய்து கொள்ளலாம்.

1.  8 இன்ச் டச் ஸ்க்ரீன், வெயிலில் படிக்க முடியவில்லை. கிளார் அடிக்கிறது. 
 2. எல்இடி ஹெட்லைட்டுகள் இரவில் செம பளீர். 3.  டீசலில் ஆட்டோமேட்டிக் கிடையாது. பெட்ரோலில் மட்டும்தான். 
 4. 16 இன்ச் அலாய் வீல்கள் செம ஸ்போர்ட்டி. ஆனால், செக்‌ஷன் அதிகப்படுத்தி இருக்கலாம்.
1. 8 இன்ச் டச் ஸ்க்ரீன், வெயிலில் படிக்க முடியவில்லை. கிளார் அடிக்கிறது. 2. எல்இடி ஹெட்லைட்டுகள் இரவில் செம பளீர். 3. டீசலில் ஆட்டோமேட்டிக் கிடையாது. பெட்ரோலில் மட்டும்தான். 4. 16 இன்ச் அலாய் வீல்கள் செம ஸ்போர்ட்டி. ஆனால், செக்‌ஷன் அதிகப்படுத்தி இருக்கலாம்.

7.0 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் ஒரு அனலாக் ஸ்பீடோ மீட்டர், நடுவே டிஜிட்டல் டயல், இடது பக்கம் டிஜிட்டல் டேக்கோமீட்டர் செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது. வெர்னாபோல இதன் க்ளாரிட்டி அருமை. பார்க்க, படிக்க தெளிவாக இருக்கிறது. ஆனால், 8.0 இன்ச் டச் ஸ்க்ரீனில் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது சிட்டி. ரெஃப்ளெக்ஷனைக் குறைக்கும் ஆப்டிக்கல் அப்ளிகேஷன் பயன்படுத்துவாக ஹோண்டா சொன்னாலும், ஸ்க்ரீனில் பிரைட்னெஸ் இல்லையே ஹோண்டா? ஃபுல் பிரைட் செட்டிங்கில் மாற்றினாலும்கூட, பகல் நேரங்களில் இதைப் படிப்பது மாணவர்கள் `நீட்’ எக்ஸாமுக்குப் படிப்பதுபோல் கஷ்டமாகவே இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே கொடுத்துள்ளது ஹோண்டா.

மேலும் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் எனும் சிஸ்டத்தைச் சேர்த்துள்ளார்கள். அதாவது, வாய்ஸ் கமாண்ட் மூலமாகவே இன்ஜின் ஸ்டார்ட் செய்வது, ஏ.சி ஆன் செய்வது போன்ற விஷயங்களைச் செய்து கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே காரில் எரிபொருள் அளவு, கேபின் லைட் எரிகிறதா போன்றவற்றை செக் செய்து கொள்ளலாம்.

ஆனால் வெர்னாவில் உள்ள கூல்டு சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன் போன்ற விஷயங்களை எல்லாம் சிட்டி ஓனர்கள் மிஸ் செய்ய வேண்டியிருக்கும்.

ஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா?

டீசல் டிரைவிங் எப்படி?

போன தலைமுறையில்தான் டீசல் இன்ஜின் அறிமுகமானது சிட்டியில். இது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அமேஸில் இருக்கும் அதே 1.5 லி டீசல்தான். ரிஃபைன்மென்ட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதும் டீசல் பற்றிய பொதுவான கருத்து. ஆனால், டீசலைப் பொறுத்தவரை மைலேஜில் கையைக் கடிக்காது சிட்டி. புது BS-6 டீசலைப் பொருத்தவரை NVH லெவலில் கொஞ்சம் வேலை பார்த்துள்ளதாகச் சொல்கிறது ஹோண்டா. தடிமனான ஃபையர் வால், சவுண்ட் டெட்டனிங் கோட்டிங் ஸ்ப்ரே போன்றவற்றால், முன்பைவிட கொஞ்சம் சத்தம் குறைந்துள்ளது. அதனாலோ என்னவோ, ரிஃபைன்மென்ட் ஓரளவு ஓகே! இருந்தாலும், லோ ரெவ்களில் இன்னும் முன்னேற்றம் வேண்டும். ஆனால், டர்போ லேக் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1,500 ஆர்பிஎம்-மைத் தாண்டினால் சட்டெனச் சீற முடியவில்லை; ஆனால், கிளம்பத் துடிக்கிறது கார். என்ன, 4,200 ஆர்பிஎம் வரை பவர் பில்டு ஆவது ஓகே. ஆனாலும், ஹை ரெவ்களில் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருப்பதுபோல் தெரிகிறதே!

6 ஸ்பீடு மேனுவலில் மட்டும்தான் வருகிறது டீசல் இன்ஜின். இதன் 0-100 கி.மீ வேகம் 12.9 விநாடிகள். இதுவே மூன்றாவது கியரில் 20-80 கி.மீ, 4-வது கியரில் 40-100 கி.மீ வேகப் போட்டியில் பெட்ரோலைவிட வேகமாக இருப்பதுதான் ஆச்சரியம். டீசல் இன்ஜினைப் பொருத்தவரை ஹூண்டாயின் வெர்னா 1.5 லி டீசலுடன் போட்டி போட, இன்னும் தூரம் போக வேண்டும் ஹோண்டா!

மேலும், இந்த BS-6 இன்ஜின் வேலைப்பாடுகளால், சத்தம் குறைந்ததோடு மைலேஜும் குறைந்து விட்டது. பழைய சிட்டி டீசல் 25.6 கி.மீ; இதுவே புது சிட்டி டீசலின் மைலேஜ் 24.1 கி.மீதான். இதற்குக் காரணம், ஆட்புளூ லிக்விட் சிஸ்டத்தைத் தவிர்ப்பதற்காக, NOx Storage Catalyst (NSC) பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால், எக்ஸாஸ்ட்டுக்கு எக்ஸ்ட்ரா எரிபொருள் தேவைப்படுவதால், மைலேஜ் குறைந்திருக்கலாம்.

பெட்ரோல் டிரைவிங் பெஸ்ட்டா?

சிட்டி என்றாலே, இதன் மைல்டான சத்தம் போடும் பெட்ரோல் இன்ஜின்தான் நினைவுக்கு வரும். நாம் ஓட்டிய 1.5 லிட்டர் DOHC பெட்ரோல் இன்ஜினிலும் அதே ஸ்மூத்னெஸ். டர்போ அளவுக்கு பன்ச் இல்லை; ஆனால், எந்த இடத்திலும் சொதப்பவில்லை பெட்ரோல் பெர்ஃபாமென்ஸ். லோ ரெவ் – ஹை ரெவ் இரண்டிலுமே செம ஸ்ட்ராங். அதிக கியரில் கூட லோ ரெவ்களில் திணறாமல் போக முடிகிறது. உதாரணத்துக்கு 15 கி.மீ-ல் ஆரம்பித்து அப்படியே 150 கி.மீ வரை மூன்றாவது கியரிலும் போக முடிகிறது. போன சிட்டியைவிட கியர் ரேஷியோக்களை உயர்த்தி இருக்கிறார்கள். அதாவது, கியர் மாற்றுவதைப் பொருத்தவரை, உங்களுக்கு ஃபியர் இருக்காது. மேலும் ரெட்லைன் 7,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி லீனியராகக் கிடைக்கிறது.

ஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா?

6 ஸ்பீடு மேனுவல், CVT ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் இருக்கிறது பெட்ரோல் சிட்டி. மேனுவலில் 17.8 கி.மீ-யும், ஆட்டோமேட்டிக்கில் 18.4 கி.மீ-யும் கிடைக்கும் என்கிறது ஹோண்டா. இது பழைய SOHC மோட்டார் கொண்ட சிட்டி காரைவிட கொஞ்சூண்டு அதிகம்.

இந்தப் புது இன்ஜின், பெரிதாக இறையவில்லை. ஆனால், லேசாகச் சத்தம் போடுகிறது. சவுண்ட் இன்சுலேஷன் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்க வேண்டும். பழைய சிட்டியைப்போலவே வெளிச்சத்தம் கேபினுக்குள் கேட்கிறது.

இது ஒன்றும் டர்போ இல்லை; அதனால் `விருட்’ எனக் கிளம்பி 100-யைத் தொடுவதை எதிர்பார்க்க முடியாது சிட்டியில். ஆனாலும் ஆச்சரியம் – வெறும் 10.20 விநாடிகளில் 100 கி.மீ-யைத் தொடுகிறது சிட்டி. எதற்குச் சொல்கிறேன் என்றால், ரேபிட் 1.0 TSI டர்போவைவிட (10.09 Sec) மைக்ரோ விநாடிகள்தான் பின்தங்கியிருக்கிறது சிட்டி. அதுவே டாலர் கியர் ரேஷியோ என்பதால், கியர் டைமிங்கில் (3rd Gear-20-80kph–13.23Sec; 4th Gear-40-100kph-18.23Sec) டீசலைவிடப் பின் தங்கிவிடுகிறது சிட்டி பெட்ரோல். ஆனால், இது ஒன்றும் பெரிய குறை இல்லை. ஆனால், ரேபிட்டில் இருக்கும் மிட் ரேஞ்ச் பன்ச் - சிட்டியில் மிஸ்ஸிங்.

ஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா?

CVT–க்கு வரலாம். எதிர்பார்த்தபடியே கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கிறது சிட்டி ஆட்டோமேட்டிக். இது 0-100 கி.மீ-யை வெறும் 12.05 விநாடிகளில் தொடுகிறது. ஆனால், இது ஓகேதான். ஆட்டோமேட்டிக் கியர் கிக்டெளன் இருப்பதால், இதன் கியர் ரேஷியோ டைமிங்கைக் கவனியுங்கள். 20-80 கி.மீ-யை 6.58 விநாடிகளிலும், 40-100 கி.மீ-யை 8.52 விநாடிகளிலும் கடக்கிறது. மேலும், CVT கியர்பாக்ஸில் தென்படும் ரப்பர்பேண்ட் எஃபெக்ட் இதில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள கன்ட்ரோல் யூனிட்டை கேலிப்ரேட் செய்துள்ளதாகச் சொல்கிறது ஹோண்டா. நிஜம்தான்; வேகம் கூட்டும்போது அப்ஷிஃப்ட்டிங்கில் ஆக்ஸிலரேஷனிலும், பிரேக் பிடிக்கும்போது டவுன்ஷிஃப்ட்டில் இன்ஜின் பிரேக்கிங்கிலும் செமையான முன்னேற்றம். கூடவே, பேடில் ஷிஃப்ட்டர்கள் இருப்பதால், மேனுவல் விரும்பிகளுக்கும் ஜாலிதான்.

சஸ்பென்ஷன்

ஏற்கெனவே ஸ்டிஃப்பான பாடி என்பதால், சஸ்பென்ஷனில் சாஃப்ட் செட்-அப்பைக் கடைப்பிடித்திருப்பதாகச் சொல்கிறது ஹோண்டா. எப்படிப்பட்ட மேடு பள்ளங்களையும் அசால்ட்டாக உள்வாங்குகிறது சிட்டியின் சஸ்பென்ஷன். ஓட்டுதலில் கொஞ்சம் மெச்சூரிட்டி தெரிகிறது. கொஞ்சம் கி.கிளியரன்ஸ் கூட்டியிருக்கிறார்கள் என்பதால், ஹைவேஸில் மூன்றிலக்க வேகங்களில் பறக்கும்போது, ஸ்டெபிலிட்டியில் மாற்றம் தெரிவது உண்மை.

ஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா?

அதேபோல், ஹார்டு ஆக்ஸிலரேஷன்களில் இந்த சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப்பால், லேசான பாடி ரோலும், அண்டர்ஸ்டீயரும் தெரிகிறது. சிட்டியில் பாடி ரோல் என்பதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. லைட் வெயிட் ஸ்டீயரிங்தான் என்றாலும், ஹேண்ட்லிங்கில் கொஞ்சம் ஸ்போர்ட்டினெஸ் குறைகிறது.

சிட்டி வாங்கலாமா?

பழைய சிட்டிபோல் புது சிட்டி இல்லை; நிறைய மாற்றங்கள்; நிறைய ஏமாற்றங்கள். ஸ்போர்ட்டினெஸ் இல்லாத ஹேண்ட்லிங், பாடிரோல் – ஜாலியான டிரைவர்களை ஏமாற்றலாம். டல் அடிக்கும் டச் ஸ்க்ரீன், வெர்னாவை ஒப்பிடுகையில் வசதிகள் மிஸ்ஸிங் என்று சில ஏமாற்றங்கள். மற்றபடி இடவசதி, சீட் சொகுசு, பிராக்டிக்கலான கேபின், அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட்ஸ், சன்ரூஃப் என்று பல முன்னேற்றங்கள் புது சிட்டியில். இரண்டு இன்ஜின்களுமே நல்ல பெர்ஃபாமென்ஸ் என்று சிட்டியில் காலரைத் தூக்கிக் கொள்ளலாம் ஹோண்டா. அதைவிட வரலாற்றில் முதன்முறையாக இரண்டு ஜெனரேஷன் கார்களும் விற்பனைக்கு இருப்பது சிட்டி மட்டுமே! 4-வது ஜென் சிட்டியின் ஆன்ரோடு விலை 11.5 லட்சத்தில் ஆரம்பித்து, 15.89 லட்சத்தில் முடிகிறது. இந்தப் புதிய சிட்டியின் விலையோ, 13.08 – 17.5 லட்சம் வரை எகிறுகிறது. இதில் ஹோண்டா கொஞ்சம் இறங்கி வந்தால், சிட்டி மிட்சைஸ் செக்மென்ட் கிராஃபில் ஏறலாம்.