Published:Updated:

இது ஸ்பீடான வெர்னா!

ஹூண்டாய் வெர்னா டர்போ
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் வெர்னா டர்போ

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் வெர்னா டர்போ

ஃப்ளூயிடிக் வெர்னா... 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்த மிட்சைஸ் செடானை மறக்க முடியுமா? சிறப்பான ப்ரொஃபைல், கச்சிதமான அளவுகள், டீட்டெய்லிங் நிரம்பிய வடிவமைப்பு என காரின் வெளிப்புறத்தில் சிலாகிப்பதற்கு நிறைய அம்சங்கள் இருந்தன.

இந்த வெர்னாவின் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், பவர்ஃபுல் இன்ஜின்கள் மற்றும் அதிக வசதிகள் ஆகியவை அந்தக் குறைபாட்டைச் சரிகட்டின. எனவே எதிர்பார்த்தபடியே, இந்த ஹூண்டாய் கார் விற்பனையில் எகிறியடித்தது. பிறகு 2017-ம் ஆண்டு வெளியான புதிய வெர்னா, ஒட்டுமொத்த தரம் - ஓட்டுதல் அனுபவத்தில் பலத்த முன்னேற்றம் கண்டது. மேலும் லக்ஸூரி காருக்கு இணையாக, இந்த மாடலில் சிறப்பம்சங்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன. தற்போது வந்திருக்கும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் என்றாலும், அது கணிசமான மாற்றங்களைப் பெற்றுள்ளது. BS-6 மாடலான இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் T-GDi இன்ஜின், 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள், முறையே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றன. எனவே எல்லாருக்கும் ஒரு வேரியன்ட் கிடைக்கும்படி, காரை பக்காவாகப் பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய்.

ஹூண்டாய் வெர்னா டர்போ
ஹூண்டாய் வெர்னா டர்போ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிசைன்

முன்பைவிட ஃப்ரெஷ்ஷாகக் காட்சியளிக்கும் வெர்னாவின் கிரில், பழசைவிடப் பெரிதாகவும் ஃப்ரேம்லெஸ் பாணியிலும் அமைந்திருக்கிறது. இது ஷார்ப்பான LED ஹெட்லைட்களுடன் இணையும் விதம் அழகு. பம்பரில் ஏகப்பட்ட Cuts & Creases இருக்கின்றன. பனி விளக்குகள் கீழ்ப்பகுதியில் இடம்பிடித்திருக்கின்றன.

இது ஸ்பீடான வெர்னா!

அட.... முன்பக்கத்தில் ஸ்பாய்லர்கூட! பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் புதிய 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்களைக் கவனிக்கும்போது, முன்பைவிட கார் தரையில் இருந்து கொஞ்சம் உயர்ந்து நிற்பது தெரிகிறது (165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்). மற்றபடி கூபே போன்ற ரூஃப் லைன், பூட்டின் மேலே இருக்கும் ஸ்பாய்லர் டச், LED டெயில் லைட்ஸ் ஆகியவை தொடர்கின்றன. பின்பக்கத்தில் உள்ள பம்பரின் கீழே செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகள் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், அது அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே! க்ரோம் எக்ஸாஸ்ட் பைப், கறுப்பு நிற மிரர்கள் மற்றும் Shark Fin ஆன்ட்டெனா, செம ஸ்டைல் ரகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

வெளித்தோற்றத்துடன் ஒப்பிட்டால், காரின் உள்ளே மாற்றங்கள் குறைவு. புதிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Floating பாணியில் இருக்கிறது. ஏசி வென்ட்களில் இருக்கும் பெரிய சிவப்பு நிற Metal Bracket நைஸ். ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், பிஎம்டபிள்யூ கார்களை நினைவுபடுத்துகிறது. இது பார்க்க மாடர்னாக இருந்தாலும், Needle இல்லாத காரணத்தால் கொஞ்சம் தெளிவாக இல்லை (காரை ஓட்டும்போது). ஆனால் இதிலேயே வேகம் மற்றும் ஆர்பிஎம்முக்கு எனத் தனித்தனியாக Readout வழங்கப்பட்டிருப்பது ஆறுதல். எதிர்பார்த்தபடியே, வெர்னா டர்போ கேபின் கறுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதில் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் சிவப்பு நிற வேலைப்பாடுகள் (ஸ்டீயரிங் வீல், சீட், ஏசி வென்ட்), ஒரு ஸ்போர்ட்டி ஃபீலைத் தருகின்றன. கறுப்பு நிறக் கேபினைப் பராமரிப்பது எளிது என்றாலும், அந்த நிறம் இடவசதி குறைவாக இருப்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வெர்னாவில் அது ப்ளாஸ்டிக்கின் ஃபினிஷை டல்லாகக் காட்டுகிறது.

விலை ரூ.16.89 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை ரூ.16.89 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

மற்றபடி கேபினில் எந்த மாறுதலும் இல்லை. முன்பக்க கூல்டு சீட்கள் சொகுசாகவும் இருப்பதுடன், போதுமான சப்போர்ட்டையும் தருகின்றன. டர்போ மாடலில் பேடில் ஷிஃப்ட்டர்கள் இருப்பது செம! டச் ஸ்க்ரீனில் இருக்கும் புளூ லிங்க் வசதியைப் பயன்படுத்தி ரிமோட் ஸ்டார்ட், கதவுகளைத் திறக்க/பூட்ட, ரிமோட் ஏசி, ரியல் டைம் எரிபொருள் அளவு மற்றும் இருப்பிடம், லைவ்வாக டயரின் காற்றழுத்தம், SOS, எமர்ஜென்சி RSA, கிரிக்கெட் ஸ்கோர் போன்ற பல விஷயங்களைச் செய்யலாம் (உங்கள் மொபைலை கனெக்ட் செய்தபிறகு). ஆனால் டேட்டா சரிவரக் கிடைக்காவிட்டால், டச் ஸ்க்ரீனில் கொஞ்சம் லேக் இருக்கிறது. வாய்ஸ் கமாண்ட், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, On Board நேவிகேஷன் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.

இன்டீரியர் ப்ரீமியம் ரகம்.டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் புதுசு. டர்போ என்றால் ஃபுல் பிளாக் தீம்.
இன்டீரியர் ப்ரீமியம் ரகம்.டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் புதுசு. டர்போ என்றால் ஃபுல் பிளாக் தீம்.

பின்பக்க இடவசதியில், இன்றும் சில காம்பேக்ட் செடான்களிடம் வீழ்ந்து விடுகிறது வெர்னா. 6 அடிக்கும் மேல் உயரமானவர்கள் உட்காரும்போது, ஹெட்ரூமும் குறைவாக இருக்கும். ஆனால் முன்பக்கப் பயணிகள் இருக்கையில் யாரும் இல்லாமல் இருந்தால், இது குறையாகத் தெரியாது. சீட்டின் பேக்ரெஸ்ட் பக்காவாக இருப்பதுடன், தொடைகளுக்கும் முதுகுக்கும் போதுமான சப்போர்ட் கிடைக்கிறது. ரியர் ஏசி வென்ட், Manual Rear Sun Blind, USB சார்ஜிங் பாயின்ட் ஆகியவை ஓகே!

டாப் வேரியன்ட்டான SX (O)-வில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், 6 காற்றுப்பைகள், ESC, டிராக்‌ஷன் கன்ட்ரோல், LED லைட்டிங், க்ரூஸ் கன்ட்ரோல், முன்பக்க/பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் என அதிக வசதிகள் இருக்கின்றன. எலான்ட்ராவில் இருப்பதுபோலவே, இங்கும் Hands Free பூட் ரிலீஸ் உண்டு. சாவியைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, பூட்டுக்கு அருகில் நின்றால், 480 லிட்டர் பூட் தானாகத் திறந்து கொள்ளும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின்களைப் போல, 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்தாகவே இயங்குகிறது. இந்த 1.0 லிட்டர் T-GDi இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கும் ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் வெர்னாவை ஓட்டுவதற்குச் சுலபமாக்குகிறது. லேசாக டர்போ லேக் இருப்பதால், குறைவான வேகங்களில் பவர் டெலிவரி டல். ஆனால் ஆக்ஸிலரேட்டரில் அழுத்தத்தைக் கூட்டும்போது, கியர்பாக்ஸ் தானாக ஒரு கியரைக் குறைத்து, உடனடியான த்ராட்டில் ரெஸ்பான்ஸுக்கு வழிவகுக்கிறது. வென்யூவில் இருக்கும் அதே செட்-அப் என்பதால், முழுமையான செயல்திறனுடன் இந்த இன்ஜின் வந்துள்ளது (120bhp/17.2kgm). இதனால் ஆக்ஸிலரேஷன் நச்சென இருப்பதுடன், மிட்ரேஞ்ச்சும் அதிரடி. 2,000 ஆர்பிஎம் தொடங்கி 6,000 ஆர்பிஎம் வரை பவர் இருப்பதால், காரை விரட்டி ஓட்டும் நபர்களுக்கு வெர்னா டர்போ பிடிக்கும்.

முன்பு போலவே LED லைட்ஸ்தான். 
டிசைனில் மட்டும் லேசான மாற்றம்.
முன்பு போலவே LED லைட்ஸ்தான். டிசைனில் மட்டும் லேசான மாற்றம்.

டாப் எண்ட் பர்ஃபாமன்ஸுக்குப் பெயர்பெற்ற ஃபோக்ஸ்வாகன் - ஸ்கோடா கார்களுடன் ஒப்பிட்டால், இதன் ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ் அவ்வளவு வேகமாக இல்லை. மேலும் Rev Lock இருப்பதால், விரைவாக வெர்னாவை லாஞ்ச் செய்வது கடினமே! எனவே 0 - 100 கி.மீ வேகத்தைப் பொறுமையாக 13.09 விநாடிகளில்தான் எட்டுகிறது. ஆனால் நிஜத்தில், டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட போட்டி கார்களுக்கு இணையாகவே இதன் செயல்திறன் இருக்கிறது. கியர்களுக்கு இடையேயான பர்ஃபாமன்ஸும் நன்றாக இருப்பதால், முன்னே செல்லும் காரை எளிதாக முந்துவதற்கான திறன் வெர்னாவுக்கு உண்டு. 1.0 லிட்டர் TSI - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட BS-6 ரேபிட், 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 10.09 விநாடிகளில் எட்டிப் பிடித்தது தெரிந்ததே! அதிக வேகத்தில் செல்லும்போது, 3 சிலிண்டர் இன்ஜினின் சத்தம் காருக்குள்ளே கேட்கிறது. ஆனால் நெடுஞ்சாலைகளில் வெர்னா டர்போவை ஓட்டுவது சுகானுபவம்தான்.

ஓட்டுதல் அனுபவம்

முன்பைவிடத் துல்லியமாகவும், அதிக எடையுடனும் ஸ்டீயரிங் முன்னேறியிருக்கிறது. எனவே, திருப்பங்கள் நிறைந்த சாலைகளில் வெர்னாவை ஓட்டுவதில், முன்பைவிட ஃபன் கூடியுள்ளது. மேலும் 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் இருப்பதால், எந்த வேகத்திலும் காரை நிறுத்தக் கூடிய நம்பிக்கை டிரைவருக்குக் கிடைத்து விடுகிறது. இதையெல்லாம் நம்பி காரை விரட்டும்போது, அதன் நிலைத்தன்மையில் ஏற்பட்டிருக்கும் சரிவு கண்கூடாகத் தெரிந்துவிடுகிறது. முந்தைய மாடலைவிட இதன் ரோடு கிரிப் குறைவாகவே உள்ளது. சஸ்பென்ஷன் டிராவல் அதிகரித்திருந்தாலும், அது அமைதியாக தனது வேலையைச் செய்கிறது. மேலும் பெரிய மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளைக்கூட வெர்னா அசால்ட்டாகச் சமாளிக்கிறது. கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, வெளிச்சத்தம் காருக்குள்ளே கேட்கிறது. தவிர வேகமாகச் செல்லும்போது, காரின் பின்பக்கம் கொஞ்சம் ஆட்டம் போடுகிறது.

முதல் தீர்ப்பு

மிட்சைஸ் செடானில் டிரைவர்ஸ் கார் வேண்டும் என்பவர்களுக்கு, வெர்னாவும் ஒரு ஆப்ஷனாக ப்ரமோஷன் பெற்றிருக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜினின் பர்ஃபாமன்ஸ் அட்டகாசமாக இருப்பதுடன், ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ் காரின் ஓட்டுதலை எளிதாக்கியிருக்கிறது. மேலும் ஸ்டீயரிங், பிரேக்ஸ், சஸ்பென்ஷன் ஆகியவற்றின் திறன் கூடியிருப்பது வரவேற்கத்தக்க விஷயமே! மற்றபடி ஹூண்டாயின் பலங்களான ஸ்டைலான டிசைன், தரமான கேபின், அதிகப்படியான வசதிகள் ஆகியவை இங்கும் தொடர்கின்றன. ஆனால் காரின் பர்ஃபாமன்ஸுக்கு ஈடுகொடுக்கும்படி, ஓட்டுதல் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. தவிர பின்பக்க இடவசதி, அனைவருக்கும் போதுமா எனத் தெரியவில்லை. 16.89 லட்ச ரூபாய் சென்னை ஆன்ரோடு விலையில் வரும் வெர்னா டர்போ, கொஞ்சம் காஸ்ட்லி ஆகிவிட்டது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தினசரிப் பயன்பாட்டுக்கு ஃபன்னான... அதே சமயம் சொகுசான கார் வேண்டும் என்பவர்கள், ஹூண்டாய் வெர்னாவைத் தாராளமாக `லைக்' செய்யலாம்.