Published:Updated:

இது பிக் அப் ட்ரக்கா... சொகுசு காரா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - இசுஸூ D–மேக்ஸ் V–க்ராஸ் Z-Prestige

பிரீமியம் ஸ்டோரி

காரில் போய்க்கொண்டிருக்கும் போது, ரியர்வியூ மிரரில் இசுஸூ காரின் முன் பக்கம் தெரிந்தால்... `ஏதோ ஒரு சொகுசு கார் வருது’ என்று நாமாக வழிவிடத் தோன்றும்.

முன்னால் போகவிட்டுப் பார்த்தால்... ‘அட, பிக்–அப் ட்ரக்கா இது’ என்று வியப்பு ஏற்படும். இசுஸூ D–மேக்ஸ் V–க்ராஸ் பிக்–அப் ட்ரக்கின் அம்சமே இதுதான். சட்டெனப் பார்த்தால், ஏதோ லக்ஸூரி கார் என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்தளவு இதன் ரோடு பிரசன்ஸும், பர்ஃபாமென்ஸும் அபாரமாக இருக்கும்.

 இன்டீரியர் சொகுசு கார்போல இருக்கிறது.,  பழுப்பு நிற லெதர் சீட்ஸ்... செம! பக்கவாட்டில் காற்றுப்பைகள்
இன்டீரியர் சொகுசு கார்போல இருக்கிறது., பழுப்பு நிற லெதர் சீட்ஸ்... செம! பக்கவாட்டில் காற்றுப்பைகள்

இப்போது இந்த V–க்ராஸ் ட்ரக்கில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் வந்துவிட்டன. சாலையில் நீங்கள் பார்ப்பது 2.5 லிட்டர்/5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டீசல் இன்ஜின். புதிதாக 1.9 லிட்டர்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ‘Z-Prestige’ என்றொரு டீசல் வேரியன்ட்டைக் களமிறக்கியிருக்கிறது இசுஸூ. புது ப்ரெஸ்டீஜ் ட்ரக் எப்படி இருக்கு?

எம்மாம் பெருசு!

லேடர் ஃப்ரேம் கட்டுமானமும், 4 வீல் டிரைவ் செட்–அப்பும், 18 இன்ச் அலாய் வீல்களும்தான் இசுஸூவை பல்க்கியாகக் காட்டும் அம்சங்கள். இத்தனை ரோடு பிரசன்ஸை, வேறெந்த பிக்-அப்பிலும் பார்த்திருக்க முடியாது. இன்னொரு விஷயம் – இதன் நீள/அகலத்தைப் பாருங்கள். (5,295/1,860மிமீ) மெர்சிடீஸ் ‘S’–க்ளாஸைவிட பெரிய காரில் பயணிப்பதுபோல இருக்கும்.

இது பிக் அப் ட்ரக்கா... சொகுசு காரா?

ஃபேஸ்லிஃப்ட்டில் Bi-Beam LED ஹெட்லைட்ஸை சேர்த்திருக்கிறார்கள். கிரில்லும் காருக்கு ஏற்ப பெருசு. பனி விளக்குகளுக்குக்கூட க்ரோம் ஃபினிஷ் இருந்தன. பக்கவாட்டில் ஃபுட் ஸ்டெப்பும், மேலே ஷார்க்–ஃபின் ஆன்ட்டெனாவும் புதுசு. பின் பக்கம் டெயில் லைட்டும் LED. இதன் கார்கோ ஏரியாவில் Isuzu, D-Max, 4x4, Prestige, Z என்று எத்தனை பேட்ஜிங்! பார்க்க நன்றாகவே இருக்கிறது. பழசு மாதிரியே கார்கோ ஸ்பேஸ் ஓப்பனாகவே இருக்கிறது. இதன் லோடு ஏற்றும் திறன் – 235 கிலோ என்கிறது இசுஸூ.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இம்புட்டு வசதிகளா?

இன்டீரியரில் பீஜ் நிறத்துக்குப் பதிலாக முழுக்கக் கறுப்பாகி விட்டார்கள். அழுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவாம்! உள்ளேயும் பிக்-அப் மாதிரி தெரியவில்லை. பெரிய விலை அதிகமான காருக்குள் இருப்பதுபோல்தான் இருக்கிறது. நிறைய ப்ரீமியம் விஷயங்கள் தெரிகின்றன. ஆம்பியன்ட் லைட்டிங்கில் உருண்டை வடிவ ஏ.சி கன்ட்ரோல் அருமை. மேலே டச் ஸ்க்ரீன். ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி இல்லை. பழுப்பு நிற லெதர் சீட்டுகள் செம! டிரைவர் சீட்டுக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்டெல்லாம் இருந்தது.

இசுஸூ D–மேக்ஸ் V–க்ராஸ் Z-Prestige
இசுஸூ D–மேக்ஸ் V–க்ராஸ் Z-Prestige

ட்ரக் என்பதாலோ என்னவோ, ஏகப்பட்ட ஸ்டோரேஜ் ஏரியாவைப் பார்க்கமுடிந்தது. மூன்று USB ஸ்லாட்டுகள், இரண்டு 12V ஸாக்கெட்டுகள், பெரிய பட்டன்கள் என்று இன்டீரியர் செம பிராக்டிக்கலாக இருந்தது. இடவசதி தாராளம். ஆனால் முன் பக்கமும் பின்னாலும் காருக்குள் ஏறுவதற்கு ட்ரெக்கிங் பழகியிருக்க வேண்டும். நீண்ட தூரப் பயணங்களுக்கும், கரடுமுரடு ரைடுகளுக்கு ஏற்றவாறும் சீட்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இது தவிர – க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு காற்றுப்பைகள், ESP, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் டெஸென்ட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா, கீலெஸ் கோ... என்று சிறப்பம்சங்களில் சொகுசு கார் தோற்றுவிடும் போங்கள்!

பவரு பவருதான்!

விஷயமே இன்ஜினில்தான் இருக்கிறது. ப்ரெஸ்டீஜை ஸ்டார்ட் செய்ததும், 1,898 சிசி - 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், செமையாக உறுமியது. BS–6க்கு எல்லோரும் மாறிக் கொண்டிருக்க, BS–4ல்தான் இந்த ஃபேஸ்லிஃப்ட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பழசைவிட சின்ன இன்ஜின்தான்; ஆனால் பவரிலும் டார்க்கிலும் தாராளம் காட்டிவிட்டது இசுஸூ. 16bhp பவரும், 3kgm டார்க்கும் அதிகம். (150bhp/35kgm).

 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்...,  கார்கோ ஸ்பேஸ்... 235 கிலோ வரை ஏற்றலாம்.
6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்..., கார்கோ ஸ்பேஸ்... 235 கிலோ வரை ஏற்றலாம்.

சின்ன இன்ஜினாக இருந்தாலும், பெருசைப்போல்தான் பர்ஃபாமென்ஸ் இருக்கிறது. அதைவிட ஸ்மூத் என்றும் சர்ட்டிஃபிகேட் கொடுக்கலாம். இதன் லோ எண்ட் பவர் டெலிவரி செம ஸ்மூத். 2,000 rpm–ல் டர்போவில் ஃபுல் பூஸ்ட்டும் கிடைக்கிறது. ஆனால் 3,200 rpm–மைத் தாண்டியதும் காரைவிட இன்ஜின் அதிக சத்தம் போடுகிறது. 4,200 ஆர்பிஎம் ரெட்லைன் வரை இது கேட்டது. டாப் எண்டில் சுமார்தான் என்றால், மிட் ரேஞ்ச் நல்ல ஸ்ட்ராங். 1,900 கிலோ எடை கொண்ட இந்த பிக் அப்பை – 13.22 விநாடிகளில் 0–100 கி.மீ–க்கு இழுக்கிறது இதன் இன்ஜின்.

கியர்பாக்ஸ் பற்றிச் சொல்ல வேண்டுமே? 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர், நல்ல யூஸர் ஃப்ரெண்ட்லியாகவே இருக்கிறது. சிட்டிக்குள் செம ஸ்மூத். ஒரே ஒரு குறை தெரிந்தது – ஆக்ஸிலரேட்டரை நன்கு மிதித்தாலும் டவுன்ஷிஃப்ட்டிங்கில் ஒரு பாஸிங் தெரிகிறது. மேனுவல் மோடும் கொடுத்திருக்கிறார்கள். ரெவ் குறையும்போது, தானாகவே டவுன்ஷிஃப்ட் ஆகிக்கொள்ளும். டீசல் இன்ஜின் ரிஃபைண்டுதான். ஆனால் வேகத்தைக் கூட்டும்போது, பானெட்டுக்கு அடியிலிருந்து இன்ஜினின் கூக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஆஃப்ரோடு ட்ரக்கா?

18 இன்ச் அலாய் வீல் லுக்கில் மட்டுமில்லை; ஒர்க்கிலும் படு சுட்டி. பெரிய பெரிய பள்ளங்களையெல்லாம் அசால்ட் பண்ணுகிறது. சாதாரணமாக, இது ரியர்வீல் டிரைவ்தான். ஆனால், 4வீல் டிரைவ் ஆப்ஷனுடன், 4–high, 4-low மோடுகளும் உள்ளதால், ஆஃப்ரோடுக்கு V–க்ராஸைத் தயார் செய்யலாம். அதற்காக இதை தார், ஜீப் போன்றவற்றுக்கு மாற்றான ஆஃப்ரோடு வாகனம் என்று சொல்லிவிட முடியாது. அதற்கு டிப்பார்ச்சர் ஆங்கிள் எல்லாம் கச்சிதமாக இருக்க வேண்டும். அதிலும் லோடு இல்லாதபட்சத்தில், பின் பக்க வீல்கள் ட்ராக்ஷனுக்குத் திணறுகின்றன.

இசுஸூ D–மேக்ஸ் V–க்ராஸ் Z-Prestige
இசுஸூ D–மேக்ஸ் V–க்ராஸ் Z-Prestige

ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை, இன்னும் லேசான இறுக்கம் இருக்கலாம். எந்த வேகத்திலும் ஆட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. கார்கோ ஸ்பேஸ் காலியாக இருந்தால், குலுங்கிக்கொண்டேதான் பயணிக்க வேண்டும். இதிலிருப்பது ஹைட்ராலிக் ஸ்டீயரிங்தான். குறைவான வேகங்களில் எடை அதிகமாகத்தான் இருக்கிறது. டர்னிங் ரேடியஸும் அதிகம் என்பதால், திருப்பு திருப்பு என்று திருப்ப வேண்டும். ஆனால் அதிவேகங்களில், இது ஓட்டுவதற்குத் தன்னம்பிக்கையாக இருக்கிறது.

வாங்கலாமா?

இன்றைய லைஃப் ஸ்டைலுக்கு ஏற்ப கார் ஸ்டைலாகவும் இருக்க வேண்டும்; லோடும் அடிக்க வேண்டும்; பர்ஃபாமென்ஸும் பக்காவாக இருக்க வேண்டும்; லேசான ஆஃப்ரோடுக்கும் ரெடியாக இருக்க வேண்டும். இது எல்லாவற்றுக்கும் ‘நான் இருக்கேன்’ என்கிறது இசுஸூ D–மேக்ஸ் V–க்ராஸ், Z-Prestige. எல்லாம் ஓகே! ஆனால், இதன் விலைதான் (சுமார் 24.8 லட்சம்) ஒரு சொகுசுக் காருக்கு இணையாக பயமுறுத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு