Published:Updated:

நம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா தார் 2020

பிரீமியம் ஸ்டோரி
லைவாழ் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்தது மஹிந்திராவின் ஜீப் CJ-3. அதே கரடுமுரடு CJ-3-ன் வம்சாவளியாக வலம் வந்த தார் ஜீப்பின் புத்தம் புதிய மாடலை சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்திருக்கிறது மஹிந்திரா.

இன்ஜின்கள், சேஸி, கியர்பாக்ஸ் என வெளியேவும், கேபின் மற்றும் டேஷ்போர்டு என உள்ளேயும் போன தலைமுறை தாரில் இருந்து எந்த ஒரு பாகத்தையும் கொண்டு வரவில்லை என சொல்கிறது மஹிந்திரா. இது எந்தளவுக்கு உண்மை?

நம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்!

டிசைன்

தனது ரோல் மாடலான ஜீப் ரேங்ளர் போல் ஆக வேண்டும் என ஜிம்முக்குப் போய் வந்ததுபோல் உள்ளது புதிய தார். ஜீப் பிரியர்கள் விரும்பும் ‘பாக்ஸ்’ போன்ற டிசைனில் இருந்து சற்றே விலகி ஒரு பக்கா ‘ஜீப்’ தோற்றத்தில் உள்ளது.

இன்ஜின்

புதிய தாரின் பானெட்டைத் திறந்தால் மிகப் பெரிய ஆச்சரியம்! முதல்முறையாக பெட்ரோல் இன்ஜின். அதுவும் 152bhp 2.0 லிட்டர் ‘m ஸ்டாலியன்’ டர்போ-பெட்ரோல் இன்ஜின். பவர், டார்க் போன்றவற்றை ஸ்பெக் ஷீட்டில் படிப்பதற்குச் சாதாரணமாக இருந்தாலும், ஆக்ஸிலரேட்டர் மிதித்ததும் ஒரு ஹாட் ஹேட்ச்போல முன்னே சீறிப் பாய்கிறது.

தாரில் டீசல் இல்லாமலா? அதுவும் இருக்கு. புதிய ஜென் 2.2 mHawk டீசல் இன்ஜினை அறிமுகம் செய்திருக்கிறது மஹிந்திரா. அலுமினியம் பிளாக்கில் லைட் வெயிட்டாகக் கட்டமைக்கப்பட்ட இதே இன்ஜின்தான், மஹிந்திரா - போர்டு கூட்டணியில் வரவிருக்கும் புதிய SUV - களில் வெவ்வேறு ட்யூனிங்குடன் வெளிவரும். தாரில் 132bhp பவர் மற்றும் 30kgm டார்க் என ஸ்பெக்கைப் பார்க்கும் போதே ஜிவ்வென்றிருக்கிறது. ஓட்டுதல் அனுபவம் வேறு கதையைச் சொல்கிறது.

நம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்!

பெட்ரோல் தாரில் மிதமான வேகத்தில் செல்கையில் லேசாக பெடலை மிதித்தாலே போதும், உடனே டர்போ உயிர்த்தெழுகிறது. இதனால் 5,500rpm ரெவ் லிமிட் வரை ஸ்ட்ராங்கான மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் கிடைப்பதால், எப்போதும் பவர் ரிசர்வில் இருக்கும். இது நல்ல ஓட்டுதல் உணர்வைத் தருகிறது. அதேசமயம் லாங்-ஸ்ட்ரோக் கொண்டுள்ளதால், விரட்டி ஓட்டுவதை அவ்வளவாக விரும்பவில்லை இந்த இன்ஜின்.

புதிய m Hawk டீசல் இன்ஜினில் என்ன ஸ்பெஷல் என்றால், 1,000rpm-லிருந்து 4,700 rpm ரெவ் லிமிட் வரை சீரான பவர் டெலிவரியைத் தருகிறது. ஐடிலிங்கில் இது ஒரு டீசல் இன்ஜின் என மறக்க வைக்கும் அளவுக்கு ரீஃபைண்டாக உள்ளது. 3,000 rpm தாண்டும்போதுதான் நாம் பழகிய டீசல் மோட்டாரின் உணர்வு வருகிறது.

நம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்!

சேஸி

பழைய மாடலின் tubular - ladder சேஸிக்குப் பதிலாக, புதிய தார் ‘ஹைட்ரோஃபார்ம்’ முறையில் உருவாக்கப்பட்ட ‘Gen - 3’ பாடி-ஆன்-ஃப்ரேம் சேஸைப் பெறுகிறது. ஸ்கார்ப்பியோ ப்ளாட்ஃபார்மில் கட்டப்படுவதால், அதைப் போன்றே முன்பக்கம் double-wishbone காயில் ஸ்பிரிங்கும், பின்பக்கம் மல்ட்டி லிங்க் லைவ் axle சஸ்பென்ஷன் செட்டப்பும் கொண்டுள்ளது புதிய தார். முந்தைய தார் லீஃப் ஸ்ப்ரிங் அல்லது டார்ஸன் பார் கொண்டிருந்தது. தரை தட்டு தட்ட உதவும் என்றாலும், நெடுஞ்சாலையில் நம்பிக்கையாக ஓட்ட முடியாதது மைனஸாக இருந்தது. புதிய தாரின் சஸ்பென்ஷனில் இந்த மைனஸ் இல்லாததுடன், சிறிய மேடு பள்ளங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. சேஸியில் செய்யப்பட்ட மாற்றங்களால், பழைய தாரில் இருந்த குறுகிய டர்னிங் ரேடியஸ், புதிய தாரில் மிஸ்ஸிங்.

இருப்பினும், பின்பக்கம் உள்ள மெக்கானிக்கல் differential லாக்ஸ் மற்றும் பிரமாண்டமான சஸ்பென்ஷன் டிராவல் ஆகியவை ஸ்பெஷல். ceat நிறுவனத்தின் 255/65 R18 டயர்கள் மற்றும் 226 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஆஃப் ரோடுக்காக ஏங்குகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேபின் வசதிகள்

தாருக்குள் நுழைந்ததும் நம் கண்ணைக் கவர்வது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இந்த டச் ஸ்க்ரீன் ‘drizzle resistant’ வகையைச் சேர்ந்ததால், லேசான தூறலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனச் சொல்கிறது மஹிந்திரா. கேபினுக்குள் படியும் சேற்றை வாட்டர் வாஷ் மூலம் ஈசியாக அகற்றும் வகையில், டிரெய்ன் ப்ளக் உடன் கூடிய பிளாஸ்டிக் கார்பெட் உள்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், காலணி ஈரமாக இருக்கும்போது வழுக்கிக் கொண்டு போவது மைனஸ்.

நம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்!

டேஷ்போர்டு பிளாஸ்டிக்ஸும், ஸ்விட்ச் கியர் மற்றும் அதன் கீழே போன் வைக்கும் இடத்திலும் உள்ள ரப்பர் போன்ற மென்மையான பிளாஸ்டிக்ஸும் நீடித்து உழைக்கும் என்கிறது மஹிந்திரா. கேபின் முழுவதும் ஏராள பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. கழற்றக் கூடிய வகையில் கதவுகள் பொருத்தப்பட்டிருப்பதால், பவர் விண்டோ ஸ்விட்ச் கியர் லீவருக்குப் பின்னே இருந்தது.

புதிய தார் இரட்டை ஏர்பேக்குகளுடன் வருகிறது. முன் பக்கப் பயணியின் ஏர் பேக், டேஷ்போர்டில் இருக்கும் கைப்பிடியில் இருந்து வெளிவரும் வகையில் பொருத்தப்பட்டிருக்கிறது. கைப்பிடி அருகில் ஒரு உலோகத் தகட்டில் தார் முத்திரையுடன், ஃபேக்டரி சீரியல் நம்பர் பொறிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளரைக் கண்டிப்பாகக் கவரும். அதற்குக் கீழே டாக்குமென்ட்ஸ் வைக்க ஒரு சிறிய, பூட்டக் கூடிய பெட்டி. டாப்பை இறக்கிவிடும்போது இது கைகொடுக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் பட்டன்கள், மற்ற மாடல்களில் இருந்து காப்பி பேஸ்ட் செய்துள்ளது மஹிந்திரா. ஸ்பீடோ மீட்டர் டயல்கள் புதியது என்றாலும், முந்தைய தலைமுறை தாரின் டயல்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சாதாரணமாகத் தெரிகிறது.

நம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்!

இடவசதி

டிரைவர் சீட்டைப் பொறுத்தவரை ஜஸ்ட் பாஸ் மட்டுமே செய்கிறது புது தார். டோர்பேடுகள் தோள்பட்டைக்குச் சற்று நெருக்கமாக உள்ளன. கால் வைக்கும் இடம் சற்று குறுகலாக இருப்பதுடன், ஸ்டீயரிங்கில் டெலிஸ்கோப்பிக் அட்ஜஸ்ட் இல்லை, உயரத்தை மட்டுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மேலும், இருக்கைககளின் குஷனிங் இன்னும் கொஞ்சம் சொகுசாக கொடுத்திருக்கலாம்.

பின்புற சீட்டை அணுகுவது அவ்வளவு எளிதல்ல. முன் சீட்டுகளைக் கீழே மடித்தால் ஒரு குறுகலான இடைவெளி கிடைக்கும். அதன் வழியே மூச்சைப் பிடித்து, வயிற்றை இழுத்து மினி ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தால் தான், பின்புறச் சீட்டை அடைய முடியும். இவ்வளவு சிரமத்துக்கும் காரணம், பழைய தாரில் உள்ள மிலிட்டரி வகை எதிரெதிர் பென்ச் சீட்டிற்குப் பதிலாக புதிய தாரில் சாலையை எதிர்நோக்கும் சீட்டைக் கொடுத்துள்ளது மஹிந்திரா.

நம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்!

லெக்ரூம் நன்றாக இருப்பினும், உயரம் அதிகமானவர்களுக்குத் தலை மேலே தட்டும். வீல் ஆர்ச்சுகள் இரண்டு பக்கமும் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதால், இரண்டு பேர் மட்டும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் பக்கப் பயணிகளுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் சாலையை வேடிக்கை பார்த்து விட்டு வரலாம் என்பதே!

கட்டுமானம்

புதிய தார் ஹார்டு டாப், சாஃப்ட் டாப் மற்றும் கன்வெர்ட்டிபிள் போல மேனுவலாக இறக்கி விட்டுக் கொள்ளக்கூடிய சாஃப்ட் டாப் என மூன்று வகை பில்டுகளில் வருகிறது. ஹார்டு டாப் வழக்கமான கார் போன்று வெளிச்சத்தத்தை அவ்வளவாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் சாஃப்ட் டாப் மாடலில், 60 கிமீ வேகத்திற்கு மேல் சாலை மற்றும் காற்றுச் சத்தம் உள்ளே கேட்க ஆரம்பிக்கிறது. 100 கிமீ வேகத்தில் செல்லும்போது புயலுக்கு நடுவே செல்வது போல டாப் அடித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. சாஃப்ட் டாப் டெஸ்ட் செய்தபோது, மழை! மேற்புறம் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டது. ஒரு சில துளிகள் தவிர்த்து கேபின் உலர்வாகவே இருந்தது.

கன்வெர்ட்டிபிளைப் பொறுத்த வரையில் ப்ளாஸ்டிக் ஜன்னல்கள் மற்றும் கேன்வாஸை நீக்கிவிட்டு, விண்ட்ஸ்கிரீனின் மேலிருந்து கூரையை அவிழ்த்தால், ரோல்-ஓவர் பாரின் பின்னால் ஒரு குவியலாக மடிகிறது தாரின் டாப். தனியாக ஒரு நபர் சீராக இறக்கி ஏற்றுவதற்கு, நிறைய பொறுமையும் கொஞ்சம் பயிற்சியும் தேவை.

முன்னர் சொன்னதுபோல, புதிய தாரின் B பில்லரை ஒட்டி ஒரு ரோல் ஓவர் பார் நிரந்தரமாக வருகிறது. ஸ்பீக்கர்கள் இதற்குக் கீழே பொருத்தப்பட்டிருப்பதால், மழையில் நனையாமல் நேரே உங்கள் காதுகளுக்கு அருகில் ஒலிக்கும். ஹில் ஹோல்டு, ஹில்-டெஸெண்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் என ஒரு ஆஃப் ரோடு SUV-க்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது புதிய தார்.

ஓட்டுதல் அனுபவம்

மஹிந்திரா, பொதுவாக தனது இன்ஜின்களை மைலேஜைக் காட்டிலும் ஓட்டுதல் அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளித்து ட்யூன் செய்திருக்கும். இந்தப் புதிய பெட்ரோல் இன்ஜினிலும் அந்த அம்சம் அப்படியே தொடர்கிறது. எந்த வேகத்திலும் பவர் டெலிவெரிக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு 4X4 SUV-க்கு ஏற்ற ட்யூனிங்குடன் இருக்கிறது தாரின் புதிய பெட்ரோல் இன்ஜின்.

XUV 500-ல் இருக்கும் அதே 6 ஸ்பீடு AISIN ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் புதிய தாரிலும் இடம்பெறுகிறது. ஸ்ட்ராங்கான மிட் ரேஞ்ச் தாரில் செம! அதேசமயம், சிக்னலில் இருந்து புறப்படும்போது ஷிஃப்ட் செய்ய கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறது.

6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் ஷிப்ட்டுகள் லைட்டாக இருந்தாலும், த்ரோ அதிகமாக இருப்பதால், அடுத்தடுத்து கியர் மாற்றத் தூண்டவில்லை. உண்மையில் ரெவ் பேண்ட் முழுவதும் டார்க் இருப்பதால், அப்படி மாற்றுவதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஜீப் அல்லவா? அதுதான் 4x4 கியர்களை மாற்ற low-ratio ட்ரான்ஸ்ஃபெர் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது தார். இதன் ஆஃப்-ரோடு, மைலேஜ் இனிதான் தெரியும்.

பொதுவாக, தார் போடப்பட்டு பூசி மெழுகிய நகரத்துச் சாலைகள் தாரின் ஏரியா இல்லை. எனினும் LX வேரியண்ட் நகர்ப்புற வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டிருப்பதால், ஓட்டுதல் தரத்தில் மஹிந்திரா கவனம் செலுத்தியுள்ளது என்பதை நகரில் ஓட்டுகையில் கண்கூடாகக் காணமுடிகிறது.

226 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக குழிகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், வந்த வேகத்தில் அப்படியே இறக்கினால், இதன் ஸ்டிப்பான சஸ்பென்ஷன் உள்ளிருப்பவர்களைக் குலுங்க வைக்கிறது.

நல்ல நெடுஞ்சாலையில் ஓட்டும்போது ‘All - terrain’ டயர் காரணமாக ஸ்டீயரிங் அவ்வளவு ஷார்ப்பாக இல்லையோ எனத் தோன்றுகிறது. மற்றபடி பிரேக்குகள் ரொம்ப ஷார்ப்பாக இருப்பதால், சடர்ன் பிரேக் அடிப்பது போன்று உள்ளது. மேலும் இந்த உணர்வு பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில்தான். டீசல் - மேனுவலில் ப்ளே மற்றும் ஷார்ப்னெஸ் சரியான விதத்தில் இருந்தது.

சிறப்பம்சங்கள்

புதிய தார் AX, LX என இரண்டு வேரியன்ட்டுகளில் வரும். AX - ஆஃப்ரோடு அன்பர்களுக்கு. இதில் சாஃப்ட் டாப், மிலிட்டரி ஸ்டைல் எதிரெதிர் பின்பக்க சீட்டுகள், 16 இன்ச் ஸ்டீல் வீல், மெக்கானிக்கல் லாக்கிங் டிஃப்ரென்ஷியல், பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங், AC, சென்ட்ரல் லாக்கிங், மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை உண்டு. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனிலும் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்.

LX வேரியன்ட்டில் 8-வே அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட், 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், LED DRL கொண்ட ஹெட்லைட், டூயல் டோன் பம்பர்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிடர் சிஸ்டம் (TPS ) உடன் கூடிய 255/65 R18 ஆல்-டெரெய்ன் டயர்கள் உண்டு. ஹார்டு டாப் அல்லது சாஃப்ட் டாப் என கஸ்டமைஸ் ஆப்ஷனும் LX வேரியன்ட்டில் கொடுத்துள்ளார்கள். சாலையை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட 4 இருக்கைகள் மட்டும் ஸ்டாண்டர்ட்!

முதல் தீர்ப்பு

புதிய அவதாரத்தில் மேம்பட்ட கேபின் வசதிகளுடன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கைச் சேர்த்திருப்பது செம! அதேசமயம் போன ஜெனெரேஷன் தாரைவிட இதன் விலை அதிகமானதாகவே இருக்கும். அக்டோபர் 2-ல் மஹிந்திரா விலையை அறிவிக்கும்போது, ஸ்கார்ப்பியோவைவிட 1 - 2 லட்சம் குறைவாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தார் இப்போது வார இறுதிக்கான ஜீப் அல்ல, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய SUV ஆகவும் பதவி உயர்வு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு