Published:Updated:

எஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி எஸ்-ப்ரஸ்ஸோ

பிரீமியம் ஸ்டோரி

எஸ்-ப்ரஸ்ஸோவை டெஸ்ட் டிரைவ் செய்ய, ராஜஸ்தான் மாநிலத்தைத் தேர்வு செய்திருந்தது மாருதி சுஸூகி. எனவே - மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், பழங்காலக் கட்டடங்கள் அடங்கிய ஜோத்பூரிலிருந்து பயணத்தைத் தொடங்கினோம்.

உயரமான இருக்கைகளும், கம்பீரமான முன்பகுதியும் உள்ள எஸ்-ப்ரஸ்ஸோவை மினி எஸ்யூவி என அழைக்கிறது மாருதி சுஸூகி. ஆல்ட்டோ 800, ஆல்ட்டோ K10 ஆகிய மாடல்களுக்கு அடுத்தபடியாக பட்ஜெட் செக்மென்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது எஸ்-ப்ரஸ்ஸோ.

ரெனோ க்விட்டுக்குப் போட்டியாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த காரில் இருப்பது, 67bhp பவர் மற்றும் 9kgm டார்க்கை வெளிப்படுத்தும் K10B 1.0 லிட்டர் BS-6 பெட்ரோல் இன்ஜின். 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருப்பதால், அவரவர் விருப்பத்துக்கேற்ற மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1. மினி காரை நினைவுப்படுத்தும் சென்டர் கன்சோல். மீட்டரைக் கவனியுங்கள்... டேஷ்போர்டுக்கு நடுவே!
2.  மற்ற மாருதி கார்களில் இருக்கும் அதே 7 இன்ச் டச் ஸ்க்ரீன்... ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி உண்டு.
3. பின் பக்க சீட்டில் இருவர் வேண்டுமானால் வசதியாக உட்காரலாம். ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்ய முடியாது.
4. பின் பக்க டிசைன் எத்தனை பேருக்குப் பிடிக்கும் எனத் தெரியவில்லை; ரிவர்ஸ் கேமரா, ரியர் வைப்பர் இல்லை.
1. மினி காரை நினைவுப்படுத்தும் சென்டர் கன்சோல். மீட்டரைக் கவனியுங்கள்... டேஷ்போர்டுக்கு நடுவே! 2. மற்ற மாருதி கார்களில் இருக்கும் அதே 7 இன்ச் டச் ஸ்க்ரீன்... ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி உண்டு. 3. பின் பக்க சீட்டில் இருவர் வேண்டுமானால் வசதியாக உட்காரலாம். ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்ய முடியாது. 4. பின் பக்க டிசைன் எத்தனை பேருக்குப் பிடிக்கும் எனத் தெரியவில்லை; ரிவர்ஸ் கேமரா, ரியர் வைப்பர் இல்லை.

டிசைன்

3,565 மிமீ நீளம், 1,520 மிமீ அகலம், 1,549 மிமீ உயரம் எனும் அளவுகளைக் கொண்டிருக்கிறது எஸ்-ப்ரஸ்ஸோ. சின்ன கார் என்பதால் 14 இன்ச் வீல்கள் சிறிதாகத் தெரியவில்லை.

முன்பகுதியில் உள்ள ஹெட்லைட் மற்றும் போனட், முதல் தலைமுறை மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை நினைவுபடுத்துகின்றன. DRL, அலாய் வீல், ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகளை, ஆக்சஸரீஸில்தான் வாங்கிப் பொருத்த வேண்டும் என்பது நெருடல்.

கிரில் வேலைப்பாடு, அப்படியே விட்டாராவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சுஸூகியின் Jimny போன்ற பாக்ஸ் டைப் டிசைன்தான் இங்கேயும் என்றாலும், அதிலிருக்கும் கெத்து இங்கே சுத்தமாக மிஸ்ஸிங்.

எஸ்-ப்ரஸ்ஸோவின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்பக்கம், எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை. ஸ்பாய்லர், ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங் ஆகியவற்றை ஆக்சஸரீஸாக வேண்டுமானால் வாங்கிப் பொருத்தி, காரை ஸ்பெஷலாக்கிக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேபின், சிறப்பம்சங்கள்

இங்கேதான் ஆல்ட்டோவைவிடக் கொஞ்சம் வேறுபடுகிறது எஸ்-ப்ரஸ்ஸோ. மற்ற பட்ஜெட் கார்களுடன் ஒப்பிடும்போது, எஸ்-ப்ரஸ்ஸோவின் கேபின் காற்றோட்டமாக உள்ளது. பிளாஸ்டிக் தரம் ஓகே என்பதுடன், ஃபிட் அண்டு ஃபினிஷும் மனநிறைவைத் தருகிறது. பாடி கலரிலேயே இன்ட்டீரியர் வேலைப்பாடுகள் நீட் டச். ஓட்டுனர் இருக்கையை முன்னால் பின்னால் நகர்த்தலாம் என்றாலும், அதன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாது.

எஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா?

பின்பகுதியில் இருவர்தான் சொகுசாக உட்கார முடிகிறது. மூன்று பேர் என்றால் அசெளகரியமாக இருக்கும். கார் சற்றே உயரம் என்பதால், உயரமான நபர்கள்கூட இங்கு ஹாயாகப் பயணிக்கலாம்.

எந்தச் சீட்டிலுமே ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பது பெரிய மைனஸ். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஸ்டீயரிங்கின் பின்புறம் இல்லாமல், டேஷ்போர்டின் நடுவே அமைந்திருப்பது, புதுமை.

ரெனோ க்விட்டைப் போலவே இங்கும் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் இருக்கிறது. அதற்குக் கீழே 7 இன்ச் டச் ஸ்கிரீன் இடம்பெற்றுள்ளது. மாருதி சுஸூகியின் மற்ற கார்களில் இருக்கும் அதே ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இது! ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள் இருப்பது செம!

இதற்காக, பின்பக்க பவர் விண்டோ மற்றும் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவற்றைத் தியாகம் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. டச் ஸ்க்ரீனுக்குக் கீழே ஏசி கன்ட்ரோல் மற்றும் பவர் விண்டோக்களுக்கான ஸ்விட்ச் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்-ப்ரஸ்ஸோவின் பூட் ஸ்பேஸ் 240 லிட்டர். அதிகளவில் பொருள்களை வைத்துக் கொள்ளலாம்போல. எஸ்-ப்ரஸ்ஸோவில் பயணிகள் பாதுகாப்புக்கு 2 காற்றுப்பைகள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் (80 கிலோ மீட்டரைத் தாண்டிவிட்டால் ஒருமுறை எச்சரிக்கை மணி அடிக்கும்), ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவை இருக்கின்றன. ஸ்விஃப்ட் தயாராகும் Heartect பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருப்பதால், க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Safety விதிகளுக்கேற்ப காரின் கட்டுமானம் இருக்கும் என்கிறது மாருதி சுஸூகி.

எஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா?

ஓட்டுதல் அனுபவம்

எஸ்-ப்ரஸ்ஸோவின் எடை குறைவான ஸ்டீயரிங், பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருக்கிறது. ஓட்டுநரின் இருக்கை உயரமாக உள்ளதால், வெளிச்சாலை முழுவதையும் தெளிவாகக் காண முடிகிறது. 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், நம் ஊரின் கரடுமுரடான சாலைகள் மற்றும் ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. சஸ்பென்ஷன் செட்-அப்பும், காரின் இயல்புக்கேற்றபடி அமைந்திருக்கிறது. இதற்காக இதனை ஆஃப் ரோடு எஸ்யூவியாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில் இது எஸ்யூவி தோற்றத்தில் இருக்கும் ஒரு பட்ஜெட் கார்... அவ்வளவே! கிளட்ச் - ஆக்ஸிலரேட்டர் - பிரேக் பெடல்கள், உபயோகிப்பதற்கு மிகவும் எளிதாக உள்ளன.

ஸ்மூத்தான 1.0 லிட்டர் இன்ஜின் - துல்லியமான 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் கூட்டணியின் செயல்பாடு, எதிர்பார்த்ததைவிடச் சிறப்பான அனுபவத்தையே தந்தது. குறைவான 4.5 மீட்டர் டர்னிங் ரேடியஸ், நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் கைகொடுக்கும். ஏ.சி, மேனுவல் வகையைச் சேர்ந்தது என்றாலும், குளுகுளு பயணத்துக்குத் துணைநிற்கிறது.

பெரிய ரியர்வியூ மிரர்கள், பின்னால் வரும் வாகனங்களைத் துல்லியமாகக் காண்பிக்கின்றன. 726 - 767 கிலோ எடையுள்ள இந்த வாகனம், ஒரு லிட்டருக்கு 21.7 கிமீ மைலேஜ் (அராய்) தரும் என்கிறது மாருதி சுஸூகி. காரின் சிறப்பான பர்ஃபாமன்ஸுக்கு, குறைவான எடையும் ஒரு காரணம். ஆனால் இதனால், காரின் அதிவேக நிலைத்தன்மை சுமாராகவே இருக்கிறது.

எஸ்-ப்ரஸ்ஸோவின் சென்னை ஆன்ரோடு விலை 4.26 - 5.65 லட்சம். கொஞ்சம் விநோதமான காராகவே காட்சியளித்தாலும், முதல்முறை கார் வாங்குபவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இதில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. க்விட்டுக்குப் போட்டியாக வந்திருக்கும் எஸ்-ப்ரஸ்ஸோவை நிச்சயம் பரிசீலிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு