Published:Updated:

4 மீட்டர்தான்... ஆனால் 7 பேர் போகலாம்! - ரெனோ ட்ரைபர்

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

ஃபர்ஸ்ட் டிரைவ் - ரெனோ ட்ரைபர்

4 மீட்டர்தான்... ஆனால் 7 பேர் போகலாம்! - ரெனோ ட்ரைபர்

ஃபர்ஸ்ட் டிரைவ் - ரெனோ ட்ரைபர்

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

ரெனோவின் ட்ரைபரைப் பார்த்தால், ஒரு வகையில் வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரு 4 மீட்டர் காரை, 7 சீட்டராக வடிவமைக்க முடியுமா? அப்படியே இருந்தாலும், 7 பேர் அதில் வசதியாகப் பயணிக்க முடியுமா? அப்படியே பயணித்தாலும், ஒரு எம்பிவி-க்கான புத்திசாலித்தனமான வசதிகள் ட்ரைபரில் இருக்குமா? அது மட்டுமில்லை; ஓட்டுநர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்; ட்ரைபர் அதைச் செய்யுமா? பெட்ரோலில் மட்டுமே பிறந்திருக்கும் ட்ரைபர் - எம்பிவி மார்க்கெட்டில் எடுபடுமா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கெல்லாம் விடை கிடைத்திருக்கிறது. சென்ற மாதம் ஃபர்ஸ்ட் லுக்குக்கு மட்டும் சிக்கிய ட்ரைபர், இந்த மாதம் ஃபர்ஸ்ட் டிரைவுக்குச் சிக்கிவிட்டது. ட்ரைபரில் ஒரு ஜாலி எக்ஸ்க்ளூசிவ் டிரைவ்.

4 மீட்டர்தான்... ஆனால் 7 பேர் போகலாம்! -  ரெனோ ட்ரைபர்

ஃபர்ஸ்ட் லுக்கிலேயே நம்மைக் கவர்ந்தது ட்ரைபர். எஸ்யூவி ஸ்டைல் கிரில், பல்க்கியான பானெட், ஷார்ப்பான கோடுகள், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL என்று எல்லாமே பக்கா! பல எம்பிவி-க்களின் பின்பக்கம், பார்ப்பதற்கு வேன் போன்று தோற்றமளிக்கும். ரியர் விண்ட்ஷீல்டு செங்குத்தாக இருப்பதுதான் இதற்குக் காரணம். ட்ரைபரில் இருக்கும் ரேப்-அரவுண்ட் விண்ட் ஸ்க்ரீன், ஸ்டைலாக இருக்கிறது. பின் பக்க டெயில் லைட்ஸை உற்றுக் கவனியுங்கள். கழுகின் அலகுபோலத் தெரியும். ரூஃப் ரெயிலிலும் டிசைன் நேர்த்தி தெரிந்தது. இது 50 கிலோ எடை வரை தாங்குமாம்.

காரின் நீளம் - 3990 மிமீ. இதற்குள் 7 சீட்கள் எப்படிச் சாத்தியம்? முதலில் பானெட்டில் இருந்து ஆராய்ச்சியைத் தொடங்கினோம். பானெட்டைத் திறந்து பார்த்தால், பெட்ரோல் இன்ஜின்தான். ஆனால் இதில் 3 சிலிண்டர் என்பதற்கான அடையாளம் தெரிந்தது.

ட்ரைபரில் வீல்பேஸ் 2,636 மிமீ. ‘‘வீல்பேஸில் மட்டுமில்லை; ஒவ்வொரு மிமீ-யையும் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்தி இருக்கிறோம்’’ என்கிறது ரெனோவின் குளோபல் டிசைன் டீம்.க்விட் போன்ற கார்கள் தயாராவது CMF-A எனும் ப்ளாட்ஃபார்மில். ட்ரைபர் தயாராவது அதற்கு அடுத்தபடியான ‘CMF-A+’ என்ற புதிய ப்ளாட்ஃபார்மில். க்விட்டைவிட இந்த ப்ளாட்ஃபார்மில் வரும் கார்களின் நீளம் அதிகம்.

4 மீட்டர்தான்... ஆனால் 7 பேர் போகலாம்! -  ரெனோ ட்ரைபர்

சில பாகங்கள் மட்டும் க்விட்டைச் சேர்ந்ததே! கேபினுக்குள் நுழைந்தவுடனே இதைக் கண்டுபிடித்துவிட முடிகிறது. கியர் லீவர், பவர் விண்டோ பட்டன்கள் போன்றவை உதாரணம். ஆனால், தரத்தில் ட்ரைபர், க்விட்டை விட ஒரு படி மேலே.

டேஷ்போர்டில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் எங்கேயும் இல்லை. இழைமம் (டெக்ஷர்கள்), டூயல் டோன் கலர்கள் என மெனக்கெட்டிருக்கிறார்கள். சில மெட்டாலிக் ஃபினிஷிங் வேலைப்பாடுகள் நச்! ஜாயின்ட்கள்கூட வெளியே தெரியாத வண்ணம், ஃபிட் அண்ட் ஃபினிஷும் நைஸ்! இன்டீரியரில் சட்டென நம்மைக் கவர்வது - 8 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். கேப்ச்சர், க்விட்டில் இருப்பது 7 இன்ச்தான். இதன் ரெசொல்யூஷன் அவுட்புட்டும் மற்ற டச் ஸ்க்ரீன்களைவிடத் தரமாகவே இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டியும் உண்டு.

டச் ஸ்க்ரீனுக்கு அடுத்தபடியாக, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைச் சொல்லலாம். 3.5 இன்ச் LCD ஸ்க்ரீனுக்கு நடுவே, பீட்ஸாவை வெட்டி எடுத்ததுபோன்ற வடிவத்தில் இருக்கும் டேக்கோ மீட்டரின் டிசைன் நீட்! ஆனால், படிப்பதற்கு இலகுவாக இல்லை.

ட்ரைபரில் பயணிக்கும் 7 பேரும் கூலாகப் பயணிக்க, வசதி செய்திருக்கிறது ரெனோ. முன்பக்கம் 4 ஏர்-வென்ட்கள் போக, B-பில்லரில் இரண்டாவது வரிசை நபர்களுக்கான ஏர்-வென்ட்டும், மூன்றாவது வரிசை நபர்களுக்கு தலைக்கு மேலேயும் ஒரு ஏர்-வென்ட். அட! இரண்டாவது வரிசை இருக்கைக்கு ஏ.சி-க்கான கன்ட்ரோல் பட்டனும் கொடுத்திருந்தார்கள்.

முன் சீட்கள், வழக்கம்போல் நல்ல பெருசு மற்றும் சொகுசு. பெரிய பயணங்களுக்கு ஏற்றபடி லெக்ரூம், ஹெட்ரூம் எல்லாமே தாராளம். இரண்டாவது வரிசையிலும் நல்ல இடவசதி உண்டு. தொடை மற்றும் முதுகுக்கான சப்போர்ட்டும் அருமை. இதிலும் நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ப சீட்களைச் சாய்த்துக் கொள்ளலாம்.

மூன்றாவது வரிசை? இதுதான் ட்ரைபரின் USP. அட, மூன்றாவது சீட்களுக்குப் போவதற்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சியெல்லாம் எடுக்க வேண்டியதில்லை! இரண்டாவது வரிசை சீட்களை மடக்க, இரண்டு விரல்கள் போதும்... மடிந்த சீட்கள் தாழ்வாகவே இருப்பதால், சட்டென 3-வது வரிசைக்கு முழங்கால்களை வைத்தே ஏறிவிடலாம். காரின் பெரிய பின்பக்கக் கதவு அகலமாகத் திறப்பதும், இதற்கு இன்னொரு காரணம். ஆறு அடி உள்ளவர்களுக்கு, வழக்கம்போல ஹெட்ரூம்... போதாது! பல்க்கியானவர்களுக்கு நீண்ட தூரப் பயணம் கொஞ்சம் சிரமம்தான். ஆனால் பாடாய்ப்படுத்தாது.

4 மீட்டர்தான்... ஆனால் 7 பேர் போகலாம்! -  ரெனோ ட்ரைபர்

மூன்று வரிசை சீட்களிலும் ஆட்கள் இருந்தாலும், டிக்கி இடவசதி வெறும் 84 லிட்டர்தான். இரண்டு சின்ன ஷோல்டர் பைகள் வைக்கலாம். மூன்றாவது சீட்களை மடக்கலாம், எடுக்கலாம். ஒன்றை மட்டும் எடுத்துவிட்டால், பூட் கொள்ளளவு 320 லிட்டர். இதுவே மூன்றையும் எடுத்துவிட்டால், பெரிய ப்ரீமியம் செடான் கார்களுக்கு இணையான இடவசதி கிடைக்கிறது. 625 லிட்டர்.

இன்ஜினுக்கு வரலாம். க்ளியோ, சாண்டீரோ எனச் சர்வதேச சந்தைகளில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் அதே இன்ஜின்தான் ட்ரைபரிலும். அதாவது, நம் ஊர் க்விட் போலவே 999சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் வால்வ்களில், கூடுதலாக வேரியபிள் வால்வ் டைமிங் கொடுத்திருக்கிறார்கள். இதனால் லோ இன்ஜின் ஸ்பீடுகளிலும், டாப் எண்டிலும் பவர் டெலிவரி சீராக இருக்கும். நீங்கள் பார்க்கும் இந்த கார், ப்ரோட்டோடைப்தான். இன்ஜின் கேலிப்ரேஷன் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முழுமையான டெஸ்ட் டிரைவின்போதுதான், வேரியபிள் வால்வ் டைமிங்கின் வேலைப்பாடு தெரியும்.

இதன் பவர் 72 bhp, டார்க் 9.6 kgm. ஐடிலிங் ரிலாக்ஸாகவே இருக்கிறது. க்விட் கியர்பாக்ஸில் இருக்கும் அம்சங்கள்தான் ட்ரைபரிலும் இருக்கின்றன. கியரை மாற்றுவது எளிதாகவே இருக்கிறது. இதன் லாங் டிராவல் கொண்ட ஹைட்ராலிக் கிளட்ச், இந்த எம்பிவியை ஓட்டுவதற்கு வாகாகவே இருக்கிறது. கிளட்ச் போலவே இதன் சஸ்பென்ஷன் ஸ்ப்ரிங்குகளையும் நீளமாகவும், லாங் டிராவல் செய்யும்படிதான் டிசைன் செய்திருந்தார்கள். அதாவது ஒரு பெரிய 5 மீட்டர் எம்பிவி-க்கான சஸ்பென்ஷனில் இருப்பதுபோல இருக்கிறது. சாலையில் மேடு பள்ளங்களை அலேக்காக உள்வாங்கி, நம்மை சொகுசாக வைத்துக் கொள்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸும் (192 மிமீ) ஓகே ரகம். சில மோசமான சாலைகளில் கார் அதிகமாகத் ‘தடதட’க்கவில்லை. ஆனால், கார்னரிங்குகளில் லேசான பாடி ரோல் தெரிகிறது. இதனால் ஸ்போர்ட்டியாகவெல்லாம் ட்ரைபரை ஓட்டலாம் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதேநேரம் ஸ்டீரியங் வேலைப்பாடு துல்லியம் என்பதைச் சொல்லியாக வேண்டும். ஓட்டுநருக்குத் தேவையான ஃபீட்பேக் கிடைக்கிறது.

வரும் ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகலாம் ட்ரைபர். எத்தனை வேரியன்ட்கள், எவ்வளவு விலை என்பதை இன்னும் ரெனோ சொல்லவில்லை. AMT, மேனுவல் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது ட்ரைபர். பெட்ரோல் மட்டும்தான் என்பதால், 6 முதல் 9 லட்சத்துக்குள் பிறந்தால், 7 சீட் விரும்பிகள் மனசில் ‘பச்சக்’ என அமரலாம். டீசல் விரும்பிகள்தான், வேறு பக்கம் போயாக வேண்டும்.