ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

யெட்டியின் வாத்தி... ஸ்கோடாவின் மாஸ்டர் ப்ளான்!

ஸ்கோடா கரோக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கோடா கரோக்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஸ்கோடா கரோக்

ஸ்கோடா யெட்டி, வெற்றிச் சிகரத்தை ஏன் எட்டவில்லை தெரியுமா? இது டிரைவர்ஸ் கார் என்பதால், இதை ஓட்ட விரும்புபவர்களே வாங்குவார்கள். பின் சீட்டில் உட்கார்ந்து வருவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை, சின்ன எஸ்யூவி என்பதால், மாஸ் தோற்றமும் இல்லை. இதனால், யெட்டிக்கு எட்டாமல் இருந்த வாடிக்கையாளர்களைக் ஈர்க்க ஸ்கோடா கொண்டு வந்த கார்தான் கரோக்.

இப்படியும் ஒரு டிசைன்

கரோக் மாடலின் டிசைனைத் தனித்துக் காட்ட வேண்டும் என ஸ்கோடா அதிகம் மெனக்கெடவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் `பட்டாஸ்’ தனுஷ்போல பாந்தமாக இருக்கும் இந்த கார், உற்றுப்பார்த்தால் `வா-அசுரா-வா’ என ஈட்டியை நீட்டிக்கொண்டு கரடுமுரடாகத் தெரிகிறது. பெரிய ஸ்கொயர் வீல் ஆர்ச் முரட்டுத்தனமான ஸ்டைல் என்றால், அகலமான கண்ணாடிகளும், நீளமான மேற்கூரையும் கோட்டு சூட் பார்ட்டிகளுக்கு மேட்ச்சிங். ஒட்டு மீசை போலவே வரும் கிரில்லும், கட்டமான ஹெட்லைட் டிசைனும் முறைக்கும் தோற்றத்தைத் தருகின்றன. பின்பக்கம் ஸ்கோடாவின் ‘றெக்கை முளைத்த அம்பு’ லோகோவைக் காணவில்லை. ஸ்கோடா என ஆங்கிலத்தில் பெரிசாக எழுதியிருக்கிறார்கள்.

சிம்ப்ளி க்ளெவர்... உண்மையா?

சிம்ப்ளி க்ளெவர் என்பதுதான் ஸ்கோடாவின் வாசகம். அது உண்மை. கரோக்கின் பூட்டில் இருக்கும் பல அம்சங்கள் வேறு எந்த காரிலும் பார்க்க முடியாது. தனியாகக் கழற்றிப் பயன்படுத்தும் வகையில் ரீசார்ஜ் செய்து கொள்ளக்கூடிய LED டார்ச் இருக்கிறது. நிறைய வெல்க்ரோ வைத்த பிராக்கெட் இருப்பதால் ஷூ, சூட், தண்ணி பாட்டில் போன்ற சின்னச் சின்னப் பொருட்களை வைக்கும்போது அது காருக்குள் பறக்காமல் இருக்க அவற்றைக் கட்டி வைத்திடலாம். பூட் ரயில் மற்றும் நகர்த்திக் கொள்ளும் வகையிலாக பை மாட்டும் கொக்கிகள் கூட இருக்கின்றன. 521 லிட்டர் பூட் ஸ்பேஸ் தாராளம். இன்னும் தேவை என்றால் ரியர் சீட்டை மடித்துக் கொள்ளலாம். எல்லாமே க்ளெவர்.

விலை I 24-30 லட்சம் ரூபாய் (தோராயமாக)
விலை I 24-30 லட்சம் ரூபாய் (தோராயமாக)

4382 மிமீ நீளத்தில் கரோக், ஃபோக்ஸ்வாகனின் டி-ராக் மாடலைவிட பெரிது. 2.6 மீட்டர் வீல்பேஸ் இருப்பதால் பின் சீட் பயணிகளுக்கு இடவசதி இருக்கிறது. சீட் உயரம், தொடைகளுக்கான சப்போர்ட் எல்லாம் ஓகே. பேக்ரெஸ்ட் மட்டும் கொஞ்சம் செங்குத்தாக இருக்கிறது. பெரிய சன்ரூஃப் மற்றும் கண்ணாடிகள் இருப்பதால் விசாலமாக உட்கார்ந்திருக்கும் உணர்வு கிடைக்கிறது. அகலம், அடுத்த செக்மென்ட்டில் இருக்கும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரை விட அதிகம்.

என்னதான் பின்சீட் சொகுசாக இருந்தாலும், கரோக் ஓனர்கள் இருக்க வேண்டிய இடம் டிரைவர் சீட்தான். இங்கேதான் ஸ்கோடாவின் பில்டு குவாலிட்டியை முழுவதுமாக அனுபவிக்க முடியும். டேஷ்போர்டிலும் தரம் கொப்புளிக்கிறது. ‘அதாம்லே ஸ்கோடா’ எனக் கெத்து காட்டுகிறது. இன்டீரியரில் எந்த இடத்தைத் தொட்டாலும் ‘செம பில்டு பாஸ்’ என்று புளகாங்கிதம் அடையலாம். ஏர் வென்ட், ஸ்டீயரிங் வீல், டோர் பேட், சென்ட்டர் கன்சோல் போன்ற சில இடங்களில் உயர்தரமான க்ரோம் ஃபினிஷ் என எல்லாமே ப்ரீமியம் ஃபீல்.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட கன்சோலும், மெல்லிசான இன்ஃபோடெயின்மென்ட ஸ்கிரீனும் ஆடி கார்களைவிட இங்கே அருமை. டிஸ்ப்ளே ஷார்ப்பாக, சட்டென்ற ரெஸ்பான்ஸ் கொடுக்கிறது. மூட் லைட்டிங், இளைஞர்களுக்கான ரொமான்ட்டிக் மொமன்ட்டுகளை சாத்தியப்படுத்தும். கியர் செலக்டர் மட்டும்தான் சம்பந்தமே இல்லாமல் ரொம்ப சிம்பிளாக இருக்கிறது.

பெரிய போல்ஸ்ட்டர், செம குஷன், முதுகுக்கு பலமான சப்போர்ட் என முன்பக்க சீட்டின் தரம் வேற லெவல். பல மணிநேரம் காரை டிரைவ் செய்துவிட்டு கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் வெளியே வந்து குத்தாட்டம் போடலாம்.

கெட் ரெடி ஃபோக்ஸ்

150bhp பவர் கொண்ட TSI இன்ஜின், 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இரண்டின் கூட்டணியும் கரோக்கை டிரைவ் செய்ய சுலபமான காராக வைத்திருக்கிறது. TSI பெட்ரோல் இன்ஜின்கள் சிலிர்க்கும் டிரைவிங் அனுபவத்தைத் தருவதற்காகவே டியூன் செய்யப்பட்டவை. ஆனால், கரோக்கின் லாங் ஸ்டிரோக் TSI இன்ஜின் அப்படியில்லை. டார்க்குக்காகவே டியூன் செய்யப்பட்டுள்ளது. 2,000 முதல் 4,500rpm-ல் இன்ஜினில் அதிகமான இழுவைத் திறன் கிடைக்கிறது. ஆக்ஸிலரேட்டரைப் பாதி அழுத்தியபடி பயணிப்பதே நல்ல டிரைவிங் அனுபவத்தைக் கொடுக்கிறது. இன்ஜினுக்கு எப்போது டர்போசார்ஜரின் பவர் கிடைக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு ஸ்மூத்தாக இருக்கிறது டர்போ பூஸ்ட். இது காரை சிட்டியில் ஓட்டுவதற்குச் சுலபமாக்குகிறது. DSG கியர்பாக்ஸ் வேகம் குறைவாகச் செல்லும்போது, சில நேரம் வேலை செய்யத் தயங்குகிறது. சில நேரம் தேவையில்லாமல் இயங்குகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த காரை சிட்டியில் ஓட்டுவது செம குஷி.

டிராஃபிக் எல்லாம் தாண்டி, நெடுஞ்சாலைக்குச் சென்று ஆக்ஸிலரேட்டரில் ஏறி மிதித்தால் TSI இன்ஜினின் மொத்தத் திறனும் வெளிப்படுகிறது. 10.03 நொடிகளில் 100 கி.மீ வேகம். அப்படியே 25 நொடிகளுக்கு பெடலை அழுத்தினால், 160 கி.மீ வேகத்தில் பறக்கிறது. என்னதான் வேகம் இருந்தாலும், இது பெஸ்ட் TSI இன்ஜின் கிடையாது. 4,500rpm கடந்தால் இன்ஜினுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிகிறது. ரெட்லைன் வரை இழுத்தால் சத்தமாகக் கதறுகிறது. பர்ஃபாமன்ஸ் போதவில்லை என்ற தருணம் வரும் வரை இந்த காரை ரிலாக்ஸாக டிரைவ் செய்வதே சிறப்பான, தரமான அனுபவம்.

1. சூப்பர்ப், கோடியாக் கார்களுக்கு இணையான இன்டீரியர் தரம்... 9 காற்றுப்பைகள் ப்ளஸ். 
2. டிஜிட்டல் மீட்டர்கள் படிக்கத் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன.
3.சொகுசான முன்பக்க இருக்கைகளுக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உண்டு.
1. சூப்பர்ப், கோடியாக் கார்களுக்கு இணையான இன்டீரியர் தரம்... 9 காற்றுப்பைகள் ப்ளஸ். 2. டிஜிட்டல் மீட்டர்கள் படிக்கத் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன. 3.சொகுசான முன்பக்க இருக்கைகளுக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உண்டு.

சஸ்பென்ஷன் செட்டப்பில் இந்தியர்களின் தேவையைப் புரிந்துகொள்வதில் ஸ்கோடாவுக்கு இதுவரை சக்ஸஸ்தான். இந்த முறையும் அதில் மாற்றம் இல்லை. ரைடு குவாலிட்டிக்குப் பெரிய பாராட்டுகள். தரமான சாலை, மோசமான சாலை, தரலோக்கல் என எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் கேபினில் அதிர்வுகள் தெரியாமல் சைலென்ட்டாக, ஸ்மூத்தாகக் கடக்கிறது கரோக். வெளியில் இருக்கும் சத்தங்கள் உள்ளே கேட்காத அளவுக்கு கேபினைக் கட்டமைத்திருக்கும் விதம் அருமை. இவ்வளவு பெரிய எஸ்யூவியில் நல்ல சொகுசான, பாந்தமான ரைடிங் கிடைப்பது அரிது. சிட்டியில் ஓட்டும்போது ஒவ்வொரு திருப்புதலுக்கும், ஸ்டீயரிங்கின் மூவ்மென்ட் இயற்கையாக இருக்கிறது.

முகத்தைச் சுளித்துக்கொண்டு எக்ஸ்ட்ரா உழைக்க வேண்டிய தேவையில்லை. கியர் லீவரை லைட்டாகத் தட்டி டிரைவ் மோடு போட்டால் போதும், ஒரு நாள் முழுக்க அலுப்பு தெரியாமல் ஓட்டலாம். என்டர்டெயின் மென்ட்டுக்கும் குறையில்லை. ஒவ்வொரு கார்னரும் உற்சாகம் தருகிறது. ஸ்டீயரிங் ஃபீட்பேக் நன்றாகவே கிடைப்பதால் வேகமாகப் போவதில் நம்பிக்கை கிடைக்கிறது. 100-140 என்ற மீடியம் ஸ்பீடில் சிறப்பாக இருக்கிறது கரோக். அதையும் தாண்டி வேகமாகச் செல்லும்போதுதான் முன்பக்க கிரிப்பை உணர முடியவில்லை.

பாடிரோல் அதிகரித்துவிடுகிறது. அற்புதமான டிரைவிங் டைனமிக்ஸ் என்று எதைச் சொன்னோமோ எல்லாமே வினையாகிவிடுகிறது. இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் இல்லை. இதனால், ஸ்கோடா ஆக்டேவியா போலவே இதிலும் இண்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் இல்லை. செடானுக்கு சரி, எஸ்யூவிக்கு...? இந்த விஷயத்தில் சிம்பிள் மட்டும்தான். க்ளெவர் இல்லை.

நீளம் I 4382 மிமீ அகலம் I 1841 மிமீ உயரம் I 1603 மிமீ வீல்பேஸ் I 2638 மிமீ
இன்ஜின் I 1498cc டர்போ (பெ) பவர் I 150bhp@5000rpm 
டார்க் I 25kgm@1500rpm கியர்பாக்ஸ் I 7 ஸ்பீடு DSG
நீளம் I 4382 மிமீ அகலம் I 1841 மிமீ உயரம் I 1603 மிமீ வீல்பேஸ் I 2638 மிமீ இன்ஜின் I 1498cc டர்போ (பெ) பவர் I 150bhp@5000rpm டார்க் I 25kgm@1500rpm கியர்பாக்ஸ் I 7 ஸ்பீடு DSG

இவ்வளவு விலைக்கும் வொர்த்தா?

சொகுசான, தரமான பில்டு குவாலிட்டியோடு, ஓட்டுதல் அனுபவத்தில் சிறப்பாக இருக்கும் ஸ்கோடாவின் கரோக், ஊர் ஊராக டூர் அடிக்கும் ஒரு லக்ஸூரி தேசாந்திரி லைஃப்ஸ்டைல் வாழ விரும்புபவர்களுக்கான அத்தனை கட்டங்களிலும் டிக் அடிக்கிறது. இன்டீரியர் மொத்தமும் தரமான மெட்டீரியல்கள், இன்ஜின்-கியர்பாக்ஸ்-ஸ்டீயரிங் மூன்றும் சேர்ந்து டிரைவிங்கை சுலபமாகவும், உற்சாகமாகவும் மாற்றுகின்றன.

ஒயர்லெஸ் சார்ஜிங், வென்ட்டிலேட்டட் சீட்ஸ், பின்பக்கம் கொஞ்சம் கூடுதலான இடவசதி என சில விஷயங்கள் இல்லை. இறக்குமதியாகி வருவதால் விலை ரூ.24 முதல் 30 லட்சம் வரை இருக்கும். அதிகம்தான். ஆனால், உற்சாகமான டிரைவிங் அளிக்கக்கூடிய சிறிய கோடியாக் தேவை என்றால்... உங்களுக்கான பரிந்துரை புது ஸ்கோடா கரோக். இது யெட்டிக்கு மேலே, கோடியாக்குக்குக் கீழே. இதை இந்தியாவில் தயாரிக்க ஆரம்பிப்பதுதான் ஸ்கோடா வரைய வேண்டிய மாஸ்டர் ஸ்ட்ரோக்.