Published:Updated:

ஸ்கோடா கார்தான் ஆனால், மாருதி விலையில்!

ஸ்கோடா ரேபிட் 1.0 TSI
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கோடா ரேபிட் 1.0 TSI

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஸ்கோடா ரேபிட் 1.0 TSI

ரேபிட்... 2011-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான இந்த மிட்சைஸ் செடான், இந்நாள் வரை பெரிய மாற்றங்களின்றியே விற்பனை ஆகிவருகிறது. தற்போது அறிமுகமாகியிருக்கும் இந்த காரின் BS-6 வெர்ஷனில், எதிர்பார்த்தபடியே வெளிப்புறம் - உட்புறம் ஆகியவற்றில் எந்த மாறுதலும் இல்லை.

ஆனால் 1.6 லிட்டர் - 4 சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக, 3 சிலிண்டர்களைக் கொண்ட 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எடை குறைவான மற்றும் காம்பேக்ட்டான இன்ஜின், ஃபோக்ஸ்வாகனின் லேட்டஸ்ட்டான EA211 இன்ஜின் சீரிஸில் இருப்பது தெரிந்ததே! ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆகியோரிடமிருந்து இனி வரப்போகும் காம்பேக்ட் கார்களில் இதே TSI இன்ஜின் இடம்பெறும். இந்த குழும கார்களில் இருந்த 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் இனி கிடையாது என்பதால், இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் மீது அதிக நம்பிக்கையை அந்த நிறுவனத்தினர் வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. போலோ, வென்ட்டோ, ரேபிட் ஆகிய கார்களில் 1.0 லிட்டர் TSI இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது அதற்கான உதாரணம்.

இன்ஜின் I 1.0லிட்டர் பவர் I 110bhp டார்க் I 17.5kgm விலை I 7.49 - 11.79 (எக்ஸ்-ஷோரூம்)
இன்ஜின் I 1.0லிட்டர் பவர் I 110bhp டார்க் I 17.5kgm விலை I 7.49 - 11.79 (எக்ஸ்-ஷோரூம்)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

110bhp பவர் - 17.5kgm டார்க்கைத் தரும் இந்த 3 சிலிண்டர் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது (முந்தைய பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல்தான்). முன்பிருந்த 1.6 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினைவிட இது 600சிசி - 1 சிலிண்டர் குறைவு என்றாலும், அதைவிட 5bhp அதிக பவர் - 2.2kgm அதிக டார்க் கிடைப்பது பெரிய ப்ளஸ். மேலும் அராய் மைலேஜிலும், அளவில் சிறிய இன்ஜின் எகிறி அடித்திருக்கிறது (18.97 கிமீ - இது 1.6 லிட்டர் இன்ஜினைவிட 3.56 கிமீ அதிகம்); செப்டம்பர் மாதத்தில், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ரேபிட் மாடலை, ஸ்கோடா வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது. விலையைப் பொறுத்தவரை, ஆரம்ப ரைடர் வேரியன்ட்டின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் 7.49 லட்ச ரூபாய்தான் என்பதால், காம்பேக்ட் செடான் அல்லது ப்ரீமியம் ஹேட்ச்பேக் வாங்குபவர்கள்கூட இந்த மாடலைப் பரிசீலிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், 1.0 லிட்டர் TSI இன்ஜினுடன் வரும் போலோ TSI மாடலின் ஆரம்ப வேரியன்ட்டைவிட 53 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் ரேபிட் வந்திருப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஸ்கோடா ரேபிட் 1.0 TSI
ஸ்கோடா ரேபிட் 1.0 TSI

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

‘மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது’... என்ற வார்த்தைகள் ரேபிட்டுக்கு அப்படியே பொருந்துகிறது. 0-100 கி.மீ வேகத்தை வெறும் 10.09 விநாடிகளில் எட்டிப்பிடிக்கிறது ரேபிட் TSI. முந்தைய 1.6 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட ரேபிட்டைவிட இது 1 விநாடி வேகமாக செயல்படுகிறது. இதுவே 140 கி.மீ வேகத்தை எட்டும்போது (ரேபிட் - 19.6 விநாடிகள்), இரு இன்ஜின்களுக்கு இடையேயான நேர இடைவெளி 3 விநாடிகள் ஆகிவிடுகின்றன. பழைய EA111 சீரிஸைச் சேர்ந்த 1.6 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், பர்ஃபாமன்ஸுக்குக்காகக் கட்டமைக்கப்பட்டது அல்ல. ஆனாலும் DOHC, 4 வால்வ் செட்-அப் எனக் கொஞ்சம் மாடர்ன் அம்சங்களைத் தன்வசம் கொண்டிருந்தது. எனவே மிட்சைஸ் செடான் செக்மென்ட்டின் பெட்ரோல் மாடல்களில் ‘ரூட் தல’-யாக இருக்கும் ஹோண்டா சிட்டியுடன் ஒப்பிடும்போது, ரேபிட்டே வேகப்போட்டியில் வெல்கிறது (0 - 100கிமீ: 10.13 விநாடிகள், 0 - 140கிமீ: 19.93 விநாடிகள்). ஆனால் Drag ரேஸில் இந்த இரு கார்கள் பங்கேற்றாலும் கூட, நேர்கோட்டில் இவற்றின் பர்ஃபாமன்ஸ் அளவுகள் (நேரத்தின்படி) ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ஒருவேளை கொஞ்சம் பவர்ஃபுல் மற்றும் Advanced ஆன 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் காம்போவுடன் வரப்போகும் சிட்டியுடன் மோதும்போது, ரேபிட்டின் இடம் மாறலாம்.

உள்பக்கம் பெரிய மாற்றங்கள் இல்லை. முன் பக்க சீட்கள் சொகுசு, சப்போர்ட். கேபினில் ஆங்காங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உண்டு.
உள்பக்கம் பெரிய மாற்றங்கள் இல்லை. முன் பக்க சீட்கள் சொகுசு, சப்போர்ட். கேபினில் ஆங்காங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உண்டு.

தனது பெயருக்கேற்றபடியே, டாப் ஸ்பீடான 195 கிமீ வேகத்தை விரைவாக எட்டிவிடுகிறது ரேபிட். எனவே அதிரடியான பர்ஃபாமன்ஸ் தரக்கூடிய மிட்சைஸ் செடான் வேண்டும் என்பவர்கள், இந்த ஸ்கோடா காரைத் தாராளமாகப் பரிசீலிக்கலாம். கியர்களுக்கு இடையேயான வேகத்திலும், சிட்டியை வீழ்த்திவிடுகிறது ரேபிட். நான்காவது கியரில் 40 - 100கிமீ வேகத்தில் செல்லும்போது, ஹோண்டாவை விட ஸ்கோடா 3 விநாடிகள் வேகமாக இருக்கிறது. இது ரேபிட் எந்தளவுக்கு வேகமாக இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்திவிடுகிறது. கச்சிதமான கியர் ரேஷியோக்களும், கொப்புளிக்கும் டார்க்கும் அதற்குத் துணைநிற்கின்றன. 3,000 ஆர்பிஎம் தொடங்கி 6,700 ஆர்பிஎம் ரெட்லைன் வரை, பவர்ஃபுல் பட்டாசாக வெடிக்கிறது ரேபிட். விரட்டி ஓட்டுவதற்கு ஏற்புடைய இன்ஜினாக இருக்கும் இது, வேகம் செல்லச் செல்ல ஸ்மூத்தானதாக மாறிவிடுகிறது. ஏனெனில் இது 3 சிலிண்டர் இன்ஜின் என்பதை, குறைவான வேகங்களில் (ஐடிலிங் உட்பட) அது இயங்குவதை வைத்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி பெரும்பான்மையான நேரங்களில், அதிர்வுகளின்றி இந்த TSI இன்ஜின் சிறப்பாக இயங்குகிறது. ஆனால் 2,500 ஆர்பிஎம்முக்குக் கீழே இருக்கும்போது, த்ராட்டில் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் டல்லாகவே இருக்கிறது (டர்போ லேக் எனச் சொல்லலாம்).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரேபிட்டில் 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் உண்டு. ஆனால், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இல்லை. ஆனால், ஸ்க்ரீன் மிரரிங் உண்டு.
ரேபிட்டில் 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் உண்டு. ஆனால், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இல்லை. ஆனால், ஸ்க்ரீன் மிரரிங் உண்டு.

மிதமான வேகங்களில் செல்லும்போது, இந்த 3 சிலிண்டர் இன்ஜினின் ஃபீட்பேக் உடனடியாக இருக்கிறது. ஆனால் நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் சீறிப் பறக்க, ஒரு கியரைக் குறைப்பது அவசியமே. 2-வது மற்றும் 3-வது கியரிலேயே நகரங்களில் பயணித்துவிடும் அளவுக்கு, பவர் டெலிவரி அமைந்திருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருந்தாலும், முன்பிருந்த துல்லியத்தன்மை கொஞ்சம் மிஸ்ஸிங். இன்ஜின் தவிர, ரேபிட்டில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் மெக்கானிக்கல் பேக்கேஜ், திறன்மிக்க இன்ஜினுடன் சிறப்பான கூட்டணியை அமைத்திருக்கிறது. சஸ்பென்ஷன் செட்அப் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதால், பெரிய மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகள் தரும் இடர்பாடுகளை காருக்குள்ளே இருப்பவர்களால் உணர முடிகிறது. கொஞ்சம் கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும்போது, கார் கொஞ்சம் ஆட்டம் போடுகிறது. இதர நேரங்களில், ரேபிட்டின் ஓட்டுதல் நன்றாகவே இருக்கிறது. முன்பைவிடச் சிறிய இன்ஜின் இந்த செடானில் இடம்பிடித்திருப்பதால், காரின் முன்பகுதியில் எடை குறைந்திருக்கிறது. பாடி ரோல் அறவே இல்லை என்பதுடன், அதிக வேகங்களில் ரேபிட்டின் நிலைத்தன்மை அட்டகாசம். இந்தத் திறமைகள் பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் Taller Gearing உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் சேரும்போது, நெடுஞ்சாலைகளுக்கு என அளவெடுத்துச் செய்ததுபோன்ற காராக இந்த ஸ்கோடா தயாரிப்பு திகழ்கிறது. இதனுடன் ஒப்பிடும்போது ஸ்டீயரிங்கின் ஃபீட்பேக் உடனடியாக இல்லாவிட்டாலும், போதுமான எடையுடன் அது துல்லியமாக இருக்கிறது. எனவே திருப்பங்களில் ரேபிட்டைச் செலுத்துவது சுகானுபவம்தான்.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

ரேபிட்டின் வெளிப்புறம் போலவே, உட்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. காரைப் போலவே கேபினும் தரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கச்சிதமான எர்கானமிக்ஸ், நீட்டான டிசைன், சிறப்பான ப்ளாஸ்டிக்ஸ் என டேஷ்போர்டு அசத்தினாலும், அதன் டிசைன் மிகவும் பழையதாக இருக்கிறது. Monte Carlo மாடலில், அதன் பெயருக்கேற்றபடி ஸ்போர்ட்டியான அம்சங்கள் இருக்கின்றன. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், பிடித்து இயக்குவதற்கு வாட்டமாக இருக்கிறது. முன்புபோலவே, சீட்கள் சொகுசாகவும் தேவையான சப்போர்ட்டைத் (முதுகு, தொடை) தரும் வகையில் உள்ளன. சியாஸ் மற்றும் சிட்டி உடன் ஒப்பிடும்போது, இங்கே பின்பக்க இடவசதி குறைவாகவே இருக்கிறது. ஆனால் இருக்கைகளின் குஷனிங் மற்றும் பொசிஷனிங், அந்தக் குறைபாட்டை ஓரளவுக்குச் சரி செய்து விடுகிறது. கேபினில் ஆங்காங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதுடன், கூடுதலாக பின்பக்க Window Shade மற்றும் Mildly Tinted கதவுக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட் 1.0 TSI
ஸ்கோடா ரேபிட் 1.0 TSI

ஸ்கோடாவின் புதிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், BS-6 ரேபிட்டில் இடம் பெற்றிருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இதில் இல்லாதது மைனஸ். ஆனால் ஸ்க்ரீன் மிரரிங் வசதி இருக்கிறது (‘EasyConnection’ மொபைல் ஆப்பைப் பயன்படுத்தும்போது) என்றாலும், அதன் பயன்பாடு சீராக இல்லை. High Resolution ஸ்க்ரீன் ஷார்ப்பாக இருப்பதுடன், படிப்பதற்கும் எளிதாகவே உள்ளது. Reflection குறைவாகவே இருந்தாலும், ஸ்க்ரீனின் ரெஸ்பான்ஸ் ஸ்மூத்தாக இல்லை. க்ளோவ்பாக்ஸில் இருக்கும் USB போர்ட், இடைச்செருகலாகவே தோன்றுகிறது. டாப் வேரியன்ட்டான Monte Carlo-வில் ஆட்டோ ஹெட்லைட்ஸ், Rain Sensing வைப்பர்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், Tilt-Telescopic ஸ்டீயரிங், பின்பக்க ஏசி வென்ட்கள், Auto Dimming Inside மிரர், ரியர் வியூ கேமரா, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த வசதிகள். இதைவிட விலை குறைவான ஸ்டைல் வேரியன்ட்டில், 2 பக்கவாட்டுக் காற்றுப்பைகள் கூடுதலாக இருக்கின்றன. இவை Monte Carlo-வில் கிடையாது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது LED ஹெட்லைட்ஸ், கூல்டு சீட்கள், சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட், ESP, TPMS, வயர்லெஸ் சார்ஜர், Shark Fin Antenna போன்ற வசதிகள் - ரேபிட்டின் எந்த வேரியன்ட்டிலும் கிடையாது என்பது நெருடல். இங்குதான் காரின் வயது அப்பட்டமாகத் தெரிகிறது.

முதல் தீர்ப்பு

கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, ரேபிட்டில் ஃபேஸ்லிஃப்ட் என்ற விஷயத்தை ஸ்கோடா செய்யவே இல்லை. இடையே பல்வேறு ஸ்பெஷல் எடிஷன்கள வந்துபோனாலும், காரின் அடிப்படைத் தோற்றம் அப்படியேதான் இருக்கிறது. அட்டகாசமான சேஸி மற்றும் மெக்கானிக்கல் பாகங்களுடன், புதிய TSI இன்ஜின் சிறப்பான கூட்டணியை அமைத்திருக்கிறது. எனவே நகரப் பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிலும் பயன்படுத்துவதற்கான வாகனமாக மாறியிருக்கும் ரேபிட், முன்பைவிட மைலேஜிலும் ஸ்கோர் செய்கிறது. டாப் வேரியன்ட்டான Monte Carlo-வின் விலை கட்டுபடியாகக்கூடிய அளவிலேயே இருந்தாலும் (11.79 லட்ச ரூபாய், இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை), யாருமே எதிர்பார்க்காத விலையான 7.49 லட்சத்துக்கு வந்திருக்கும் (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) ஆரம்ப ரைடர் வேரியன்ட், பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் டச் ஸ்க்ரீன், அலாய் வீல்கள், பனி விளக்குகள், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஆடியோ கன்ட்ரோல்களுடன் கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் போன்ற பல வசதிகள் இல்லை. இருப்பினும், After Market ஆக்ஸசரீஸ்களில் பல்வேறு ஆப்ஷன்கள் இருப்பதால், இது ஒரு பிரச்னை கிடையாது (அவரவர் தேவைக்கு ஏற்றபடி காரை கஸ்டமைஸ் செய்யலாம்). போலோவைவிட இதன் விலை குறைவு என்பது, கொடுக்கும் காசுக்கான மதிப்பை உணர்த்துகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, போட்டி கார்களில் இருக்கும் லேட்டஸ்ட் அம்சங்கள் ரேபிட்டில் கிடையாது. எனவே மெக்கானிக்கல்/அனலாக் உணர்வைத் தரும் இந்த ஸ்கோடா தயாரிப்பு, கார் ஆர்வலர்களுக்குப் பிடித்த வகையில் தயாராகி இருக்கிறது. தரமான கட்டுமானம், ஸ்போர்ட்டியான ஓட்டுதல், மனநிறைவான பிராக்டிக்காலிட்டி போன்ற குணாதிசயங்களை உள்ளடக்கிய தயாரிப்புகள் சொற்பமே என்ற ரீதியில் பார்க்கும்போது, ரேபிட் முன்னிலை பெறுகிறது. Old-School ஃபீலிங் எதிரொலித்தாலும், அது ரசிக்கும்படியே அமைந்திருப்பது பெரிய ப்ளஸ். எனவே காரைத் தாமாகவே ஓட்ட விரும்புபவர்கள் மற்றும் சிறப்பான கட்டுமானத்தை ஒருசேர எதிர்பார்ப்பவர்கள், தாராளமாக ரேபிட் TSI காரைப் பரிசீலிக்கலாம்.