கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

பாதுகாப்பில் 5 ஸ்டார்... மைலேஜில்.. வசதிகளில்... ஓட்டுதலில்?

டாடா நெக்ஸான் டீசல்
பிரீமியம் ஸ்டோரி
News
டாடா நெக்ஸான் டீசல்

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா நெக்ஸான் டீசல்

டாடா நெக்ஸானை ஒரு நீங்கள் க்ராஸ்ஓவராகப் பார்க்கிறீர்களா... சரி. ஒரு கூபே மாடலாகப் பார்க்கிறீர்களா... அதுவும் சரி. ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக்காகப் பார்க்கிறீர்களா... இதுவும் சரி. ஆனால் என்னைப் பொருத்தவரை நெக்ஸானை ஒரு பாதுகாப்பான, கம்ப்ளீட் எஸ்யூவி என்றுதான் சொல்வேன். இதை ஒரு முழுமையான எஸ்யூவி என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
பாதுகாப்பில் 5 ஸ்டார்... மைலேஜில்.. வசதிகளில்... ஓட்டுதலில்?

கிரில்லில் ஆரம்பித்து, கீழே உறுதியான Bull Bar, ஸ்கஃப் ப்ளேட், உயர்த்தப்பட்ட பானெட், கும்மென்ற பில்டு குவாலிட்டி, பெரிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், மேலே ரூஃப் ரெயில் எல்லாவற்றையும் உதாரணம் காட்டலாம். அட, அதை விடுங்கள்; இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் – பெரிய லேண்ட்ரோவர் கார்களை நெருங்கும் 209 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்.

அதையும் விடுங்கள்; டாடா மட்டுமில்லை; மொத்த ஆட்டோமொபைல் உலகமுமே லைக் போட வேண்டிய விஷயம் – குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் – நெக்ஸான். பாதுகாப்பில் பெரியர்வகளுக்கு 5 ஸ்டார்; குழந்தைகளுக்கு 3 ஸ்டார் ரேட்டிங் என்று மற்ற எஸ்யூவிகளுக்கு அள்ளு கிளப்பி விட்டது உண்மைதான். (எக்ஸ்யூவி 300–வுக்கும் ஒரு பாராட்டு)

பாதுகாப்பில் 5 ஸ்டார்... மைலேஜில்.. வசதிகளில்... ஓட்டுதலில்?

நெக்ஸானின் ஃபர்ஸ்ட் டிரைவ் போன இதழிலேயே பார்த்தாகிவிட்டது. அது பெட்ரோல். BS-6–க்கு அப்டேட் செய்யப்பட்ட பெட்ரோல்தான் டாக் ஆஃப் தி ஏரியாவாக இருந்தது. ‘ஹலோ என்னை மறந்துடாதீங்க’ என்று டீசல் நெக்ஸான், நமது அலுவலகத்துக்கு வந்திறங்கி இருந்தது. மற்ற நிறுவனங்களெல்லாம் டீசலை அப்டேட் செய்ய முடியாமல் கைவிட்டுக் கொண்டிருக்க, டாடா மட்டும்தான் நெக்ஸான் டீசலையும் அப்கிரேட் செய்திருக்கிறது. இந்த மாதம் BS-6 டீசல் நெக்ஸானை எடுத்துக் கொண்டு சென்னை அதிர அதிர டெஸ்ட் செய்தேன்.

ஓவர்ஆலாக வெளித்தோற்றம், கேபின் இடவசதி, சிறப்பம்சங்களை போன இதழிலேயே பார்த்தாகி விட்டது.

விலை: ரூ. 12.5 லட்சம் முதல் 14.58 லட்சம் வரை (ஆன்ரோடு, சென்னை)
விலை: ரூ. 12.5 லட்சம் முதல் 14.58 லட்சம் வரை (ஆன்ரோடு, சென்னை)

பழைய நெக்ஸானில் இருந்த செராமிக் வேலைப்பாடுகளை புது நெக்ஸானில் மிஸ் செய்தது; புதுசில் பின் பக்கம் Union Jack ஃபினிஷிங் கொண்ட டெயில் லைட் க்ளஸ்டர் நம்மைக் கவர்ந்தது; அல்ட்ராஸ் காரில் இருந்த ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் நெக்ஸானுக்கு ஸ்போர்ட்டினெஸ் ஃபீல் கொடுத்தது; ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் நச்சென்று இருந்தாலும், வெயிலில் செம கிளார் அடித்துக் கண்களை உறுத்துவது; நேவிகேஷனில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவைப்படுவது; குடை வைக்க இடம் கொடுத்து நம்மை இம்ப்ரஸ் செய்திருப்பது; எர்கானமிக்ஸில் சில கோளாறுகள் இருப்பது (உதாரணம்: ஹெக்ஸாவில் இருக்கும் டிரைவிங் Knob நெக்ஸானில் இருப்பதற்குப் பதில் ஒரு கப் அல்லது பாட்டில் ஹோல்டர் கொடுத்திருக்கலாம்; டச் ஸ்க்ரீனை ஆப்பரேட் செய்வதில் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் இருந்திருக்கலாம்; பின் பக்கம் USB போர்ட் இருந்திருக்கலாம் போன்றவை); 350 லிட்டர் பூட் ஸ்பேஸ் போன்ற எல்லாமே பெட்ரோலில் இருக்கும் அதே... அதே!

பாதுகாப்பில் 5 ஸ்டார்... மைலேஜில்.. வசதிகளில்... ஓட்டுதலில்?

சிறப்பம்சங்களில் சன்ரூஃப் அருமை. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் செம ஸ்போர்ட்டியாக இருந்தாலும், அனலாக் மீட்டரில் இருக்கும் முள் மாதிரி பிராக்டிக்காலிட்டியில் அசத்த முடியாது என்பது உண்மை. வேகங்களில் எத்தனை கி.மீ–யில் போகிறது என்பதைப் பார்க்க, சாலையில் இருந்து கண்களை எடுத்து ஒவ்வொரு முறையும் ரீடிங்கில் உற்றுப் படிக்க வேண்டியிருக்கிறது.

பெரிய கூல்டு க்ளோவ் பாக்ஸ் தவிர்த்து இன்னொரு கூலான அம்சம் – அந்த Express Cool. இந்த பட்டனை ப்ரெஸ் செய்தால், தானாகவே டிரைவர் விண்டோ இறங்குகிறது. இது கேபினுக்கு உள்ளே இருக்கும் சூடான காற்று வெளியே போவதற்காக! கூலிங் நிரம்பியதும், விண்டோவை இறக்கச் சொல்லி ஒரு வாய்ஸ் கமாண்ட் வரும். மற்றபடி ஒயர்லெஸ் சார்ஜிங், 6 காற்றுப்பைகள் நெக்ஸான் டீசலிலும் அவ்வ்வ்!

இடவசதி ஓகே ரகம்தான். காரணம், மற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளை விட குறைந்த வீல்பேஸ் (2,498 மிமீ) நெக்ஸானில்தான். வென்யூ, எக்கோஸ்போர்ட் போன்ற மற்ற போட்டியாளர்கள் எல்லாமே 2,500 – அதற்கும் மேலேதான். எக்ஸ்யூவி300 - 2,600 மிமீ என்பது செம! சன்ரூஃப் காரணமாக சரிவான கூறை என்றாலும், நெக்ஸானில் ஹெட்ரூம் இடிக்கவில்லை; லெக்ரூமும் டைட் இல்லை.

அதிர அதிர நெக்ஸான் டீசலை டெஸ்ட் செய்தோம் என்று முதல் பாராவில் கூறியிருந்தேன். ஆனால், ஆச்சரியம் – நெக்ஸான் பெரிதாக அதிரவே இல்லை. இதன் NVH லெவலில் அத்தனை சுத்தம். இதுதான் இந்த BS-6 டீசலில் பெரிய வேலைப்பாடு. மற்றபடி இதன் பவர் டார்க் போன்றவற்றில் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான்; 4 சிலிண்டர்தான். பவர்கூட 110bhp; டார்க் 26kgm. BS-6 டீசலுக்காக ஆட்புளூ டேங்க் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். எங்கும் இல்லை. பவர் டார்க்கில் கை வைக்காமல் இதன் NVH லெவலை மட்டும் கவனித்துள்ளது டாடா. நிஜமாகவே விண்டோவை ஏற்றினால், பெரிய அதிர்வுகளெல்லாம் தெரியவில்லை. கார் தானாகவே மூவ் ஆகிப்போனது. ஒருவேளை க்ரீப் ஃபங்ஷன் இருக்கிறதோ என்று நினைத்தேன். அது இருக்கிற ஆர்பிஎம்–மில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்புறம்தான் தெரிந்தது – நமக்குக் கிடைத்த நெக்ஸான் ஆட்டோமேட்டிக் இல்லை. மேனுவல்தான்.

பாதுகாப்பில் 5 ஸ்டார்... மைலேஜில்.. வசதிகளில்... ஓட்டுதலில்?

ஆம், நெக்ஸானில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. ஆட்டோமேட்டிக்கும் ஓட்டியிருக்கிறேன். கியர் ஷிஃப்ட்டிங் அற்புதமாகத்தான் இருந்தது. மேனுவல் கியர்பாக்ஸும், க்ளட்ச்சும் இன்னும் கொஞ்சம் லைட் வெயிட்டாக இருந்தால் நன்றாக இருக்கும். இதன் ஆரம்ப கட்ட பெர்ஃபாமென்ஸில் தெறி இல்லை; 1,500 ஆர்பிஎம்–முக்குக் கீழே கொஞ்சம் டர்போ லேக்கை உணர்ந்தேன். 2,000 ஆர்பிஎம்–மைத் தாண்டினால், இதன் மிட் ரேஞ்ச் வாவ் ரகம்தான். இதன் பெட்ரோல் 0–100 கி.மீ–ன் விநாடிகள் 13.01. டீசலில் சரியாக டெஸ்ட் செய்ய முடியவில்லை. கொஞ்சம் விநாடிகள் அதிகமாகத்தான் இருக்கலாம்.

அதேபோல், இதன் டாப் எண்டும் அசத்தல் ரகம். கிட்டத்தட்ட 170 கி.மீ வரை இதன் டாப் ஸ்பீடு செக் செய்தேன். டிரைவர் சீட்டில் நான் உட்கார்ந்தவுடன் இதன் ஆர்பிஎம் மீட்டரைக் கவனித்துத்தான் நான் மிரண்டு போனேன். காரணம், இதன் ரெட் லைன் 8,000 ஆர்பிஎம் வரை இருந்தது. அட, 8,000 வரை விரட்டலாமா என்று நினைத்தேன். ஆனால், 4,500–யைத் தாண்டியவுடன் ரெட்லைன் காட்ட ஆரம்பித்து விட்டது. அப்புறம்தான் தெரிந்தது – பெட்ரோல் நெக்ஸானில் இருக்கக் கூடிய அதே மீட்டர் என்பதால், இந்த ஏமாற்றம்.

டர்போ லேக் இருப்பதாலோ என்னவோ, இதன் ஓவர்டேக்கிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும். கியரைக் குறைத்து, கூட்டி என்று முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கிறது. பெட்ரோல் மாதிரியே இதிலும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருப்பதால், அதிக ஆர்பிஎம்–மில் காரை லாஞ்ச் செய்ய முடியவில்லை. அதாவது, சிக்னலில் இருந்து சட் சட் எனச் சீறிவிட முடியாது நெக்ஸானில். இது பெரிய குறை இல்லை; பாதுகாப்பு அம்சம்தான். புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

வழக்கம்போல் டிரைவிங் மோடுகள் இருந்தன. எக்கோ, சிட்டி, ஸ்போர்ட் மோடு. கடைசி மோடு வேற லெவல். ஃபன் டிரைவிங் பார்ட்டிகளுக்கு ஸ்போர்ட் மோடுதான் சரி. எக்கோ மோடு புதிதாக கார் ஓட்டுபவர்களுக்குக்கூடப் பிடிக்காது. ஆனால், அசத்தல் மைலேஜுக்கு இதுதான் செம!

நெக்ஸானின் ஸ்டெபிலிட்டி அசத்தல் ரகம். நான் 170 கி.மீ வேகத்தில் போகிறேன் என்பதை டிஜிட்டல் மீட்டர் வைத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆடாமல் அசையாமல் கிச்சென நம்மை உட்கார்ந்த இடத்தில் அமர வைக்கிறது நெக்ஸானின் டைனமிக்ஸ். எலெக்ட்ரிக் ஸ்டீயரிங்கின் ஃபீட்பேக்கும் அருமை.

இதன் சஸ்பென்ஷனைப் பொருத்தவரை அதே ஸ்டிஃப் செட்–அப்தான். மோசமான சாலைகளில் இதன் ஓட்டுதல் அட்டகாசம். 209 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆச்சே... அதனால் நன்றாகவே ஆஃப்ரோடும் பண்ணலாம். குறைந்த வேகங்களில் மெதுவாக ஏற்றி இறக்கினால் ஓகே. ஆனால், வந்த வேகத்தில் அப்படியே பெரிய மேடு பள்ளங்களில் இறக்கும்போது ‘டங் டங்’ என ஃபீலிங்கை உணர்ந்தேன். ஆனால், இதுதான் அதிவேகங்களில் இதன் ஸ்டெபிலிடிக்கு உதவியது. ஓரளவு ஹைஸ்பீடில் அப்படியே சட்டெனத் திருப்பிப் பார்த்தேன். குறை சொல்லும்படி பாடி ரோல் இல்லை. காரின் நல்ல எடையும் ஒரு காரணம். பின் பக்கம் டிஸ்க் கொடுத்திருக்கலாம். நெக்ஸானின் ‘ஏ’ பில்லர்கள் செம தடிமன். அதனால், லேசான பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்துகிறது. ஆனால், இதுதான் இதன் பில்டு குவாலிட்டிக்கு உறுதுணை. மற்றபடி, பெட்ரோலைப் போலவே அதே 44 லிட்டர் டீசல் டேங்க்தான்.

டீசல் வாங்கலாமா?

மொத்தம் 6 வேரியன்ட்கள், 6 கலர்கள் என அசத்தலாக வருகிறது நெக்ஸான். டாடாவின் பில்டு குவாலிட்டிக்கு ஒரு சல்யூட். பில்டு குவாலிட்டியைத் தாண்டி நெக்ஸான் என்றாலே இதுதான் என்று நச்சென்று ஒரு விஷயத்தைக் குறிப்பிட முடியவில்லை. உதாரணத்துக்கு, செல்ட்டோஸ் என்றால் வென்டிலேட்டட் சீட்ஸ், வென்யூ என்றால் ஒயர்லெஸ் சார்ஜிங் என்று மற்ற கார்கள் எங்கேயோ போய் விட்டன. படு ப்ரீமியமாக சோனெட் வேறு வந்துவிட்டது. டாடா இப்போதுதான் சன்ரூஃபுக்கே வந்திருக்கிறது.

டீசல் இன்ஜினின் லோ த்ராட்டில் ரெஸ்பான்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும். சில எர்கானமிக் குறைகளைத் தாண்டி நெக்ஸானில் பெரிதாகக் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. மேனுவலைவிட இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இன்னும் ஸ்மூத். ஓர் ஆச்சரியம் - மேனுவல், AMT இரண்டின் அராய் மைலேஜும் 22.4 கி.மீ. இது பெட்ரோலைவிட அதிகம். இப்போதைக்கு 12 முதல் 15 லட்சத்துக்கு ஒரு அற்புதமான டீசல் எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கு, நெக்ஸான் ஆட்டோமேட்டிக்கோ... மேனுவலோ இரண்டுமே சரியான சாய்ஸ்.

ஹில்ஹோல்டு, சன்ரூஃபை எல்லாம் மிஸ் பண்ணிட்டேனே?

ரண்டு ஆண்டுகளாக நெக்ஸான் டீசல் கார் ஓட்டி வரும் நமது வாசகர் வேல்சாமி, நெக்ஸான் BS-6 டீசல் கார் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே ஓடி வந்து நமது ஷூட்டில் ஐக்கியமாகிவிட்டார். ‘‘புது நெக்ஸான் எப்படி இருக்குன்னு ஒரு தடவை பார்த்துடறேனே’’ என்று நெக்ஸானில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்து விட்டார்.

பாதுகாப்பில் 5 ஸ்டார்... மைலேஜில்.. வசதிகளில்... ஓட்டுதலில்?

‘‘என்னோட நெக்ஸானில் கியர்பாக்ஸ், டச் ஸ்க்ரீன்னு சில சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும், அதில் எனக்குப் பிடிச்ச விஷயம் மைலேஜ்தான். ஹைவேஸில் எனக்கு சில நேரம் 20 கி.மீ–யைத் தாண்டியெல்லாம் மைலேஜ் வரும். புது நெக்ஸான் ஓட்டிப் பார்த்தேன். செமையா இருக்கு. க்ளட்ச் அதே மாதிரி டைட்டாகத்தான் இருக்கு. மற்றபடி அதே மாதிரி ஹை ஸ்பீடில் இதோட ரியாக்ஷன் சூப்பர். என்னோட நெக்ஸானில் ஹில் ஹோல்டு அசிஸ்ட் இல்லை; புது நெக்ஸான் டீசலில் இருக்குனு சொன்னாங்க. அப்புறம் சன் ரூஃப்பை மிஸ் பண்றேன். காருக்கு முன்னாடி நெக்ஸான்னு ஒரு பேட்ஜ் கொடுத்திருக்கலாம். இன்னும் ஸ்டைலா இருந்திருக்கும். நானும் கார் மாத்துற ஐடியாவில் இருக்கேன். இந்த நெக்ஸானோட ஒரிஜினல் மைலேஜ் என்னனு தெரியலை. ஆனா, அடுத்து ஹேரியர் அல்லது கிராவிட்டாஸ்னு முடிவு பண்ணிட்டேன்!’’ என்றார்.