Published:Updated:

நீண்ட பயணங்களுக்கு நல்ல தோழன் டிகுவான்!

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

காலத்துக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சியடைந்து மீண்டும் வந்திருக்கிறது. ஃபோக்ஸ்வாகனின் டிகுவான். 5 சீட்டர் டீசல் இன்ஜின் டிகுவான் நிறுத்தப்பட்டுவிட்டது. இனி 7 சீட், பெட்ரோல் இன்ஜின் மாடல் மட்டும்தான் இந்தியாவில். இதுதான் புது டிகுவான் ஆல்ஸ்பேஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெளித்தோற்றம்

இந்த XL சைஸ் டிகுவான், பழைய மாடலை விட 215 மிமீ நீளமானது. வீல்பேஸ் 110 மிமீ வரை அதிகரித்திருக்கிறது. அகலமும் கூடியுள்ளது. ஆல்ஸ்பேஸ் தோற்றத்தில் கொஞ்சம் நீண்ட காராகத் தெரிகிறது. கட்டமான முன்பக்க டிசைன் மாறவில்லை. பழைய மாடலில் இருந்த பாடி கிளாடிங் இதில் இல்லை. கேபின் பகுதி பெரிதாக, பின்பக்கம் அதிக ஓவர்ஹேங் உடன் ஏடாகூடமாக வளர்ச்சியடைந்ததைப்போல தெரிகிறது.

பழைய மாடலில் இருந்த காம்பேக்ட் மற்றும் சமமான டிசைன் இதில் இல்லை. டெயில் பகுதியில் எக்ஸாஸ்ட் போன்ற டிசைனுக்கு க்ரோம் ஃபினிஷ் கொடுத்திருப்பதைத் தவிர, புதிதாக எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கொஞ்சம் ப்ரீமியமான எஸ்டேட் காராகவே தெரிகிறது டிகுவான் ஆல்ஸ்பேஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளே

இன்டீரியர் டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. கதவைச் சாத்தும்போதே வரும் அந்த ‘தட்’ சத்தத்திலேயே பில்டு குவாலிட்டி தெரிந்துவிடும். காரின் உள்ளே மொத்தமும் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள். கொடுக்கும் பணத்துக்குப் பெருமானமான உதிரிபாகங்கள். கறுப்பு இன்டீரியர் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், இந்த எஸ்யூவியைக் கொஞ்சம் மந்தமாகவே காட்டுகிறது. கன்ட்ரோல்கள் எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன. டேஷ்போர்டு டிசைனில் கவர்ச்சிகரமான மாடர்ன் டச் எதுவும் இல்லை. இன்டீரியரில் முக்கியமான அப்டேட், ஆடி கார்களில் வருவதுபோல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்! படிப்பதற்கு வசதியாக இருப்பது மட்டுமில்லை, தேவைக்கு ஏற்ப இதன் லேஅவுட்டையும் மாற்றிக் கொள்ளலாம்.

1. கறுப்பு நிற இன்டீரியர், ஸ்போர்ட்டி. 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்டு மெமரி லெதர் சீட் எல்லாம் உண்டு.
 2. கொஞ்சம் உயரம் அதிகமானவர்களுக்கு, ஹெட்ரூம் சிக்கல்தான்.
1. கறுப்பு நிற இன்டீரியர், ஸ்போர்ட்டி. 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்டு மெமரி லெதர் சீட் எல்லாம் உண்டு. 2. கொஞ்சம் உயரம் அதிகமானவர்களுக்கு, ஹெட்ரூம் சிக்கல்தான்.

வழக்கமாக இந்த விலையில் வரும் எஸ்யூவிகளைப்போல இதில் உயரமான சீட்டிங் பொசிஷன் கிடையாது. ஆனால், பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஜன்னல்களும், சிறிய A பில்லரும் சாலையை நன்றாகப் பார்க்க உதவுகின்றன. முன் வரிசை சீட் கடினமாக இருக்கிறது. ஆனால், இதன் டிசைன் உடலுக்கு ஏற்ப சரியாகப் பொருந்துவதால் - தோள், தொடை, முதுகு என எல்லா இடங்களுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. லாங் டிரைவுக்குப் பிறகும் எந்தப் பிரச்னையும் இல்லை.

நடுவரிசை அனுபவமும் நன்றாகவே அமைந்தது. சீட் போல்ஸ்ட்டர்கள் அருமையாக இருப்பதால், சீட்டில் சொகுசாக உட்கார முடிகிறது. லெக்ரூம் அதிகம். பேக்ரெஸ்ட்டைச் சாய்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இரண்டு பேருக்குச் சொகுசான சீட். மூன்றுபேர் உட்காரவேண்டும் என்றால் நடுவில் உட்காருபவருக்குக் கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். கப் ஹோல்டர், ட்ரே, 12V சார்ஜிங் சாக்கெட் என எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில். பின்பக்கம் இருக்கும் பெரிய ஜன்னல்களுக்கு சன்ஸ்கிரீன் கொடுத்திருக்கலாம்.

மொத்த காரும் 4.8 மீட்டர் நீளத்தில் இருக்க, அதில் ஃபார்ச்சூனர், எண்டேவர் அளவுக்கு மூன்றாம் வரிசை சீட் சொகுசாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

மூன்றாம் வரிசை சீட்டுக்குப் போவதற்கே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. கஷ்டப்பட்டு உள்ளே சென்றால், இதுக்கா இவ்வளவு கஷ்டம் எனும் மனநிலைதான். இடவசதி சிறப்பாக இல்லையென்றாலும் பரவாயில்லை, போதுமான அளவுக்காவது இருந்திருக்கலாம்.

5.5 அடி உயரத்துக்கு மேல் இருப்பவர்களாக இருந்தால் ஹெட்ரூம் கஷ்டம்தான். மூன்றாம் வரிசையில் குழந்தைகள் பயணிக்கலாம். பெரியவர்கள் பயணிக்க வேண்டும் என்றால் சிறிய தூரங்களுக்குப் பயணிக்கலாம். லாங் டிரைவுக்கு செட் ஆகாது. பின்பக்கம் இருக்கும் 50:50 ஸ்ப்ளிட் சீட்டை மடித்துவைத்திருப்பதே நல்லது. அப்படிச் செய்தால் டிகுவான் ஆல்ஸ்பேஸின் 230 லிட்டர் பூட் ஸ்பேஸை 700 ஆக அதிகரிக்கலாம். நடுவரிசை சீட்டையும் மடக்க முடியும். அதையும் செய்துவிட்டால் கார்கோ வேன் அளவுக்கு இடவசதி கிடைக்கும்.

வசதிகள்

எல்லா வசதிகளையும் உள்ளடக்கியே, ஒரே வேரியன்ட்டில் மட்டும்தான் ஆல்ஸ்பேஸ் கிடைக்கிறது. 7 காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்ட்டி ஸ்லிப் ரெகுலேஷன், காரைச்சுற்றி பார்க்கிங் சென்சார் மற்றும் கார்னரிங் LED ஹெட்லைட் போன்ற பாதுகாப்பு வசதிகள் இதில் உண்டு. காரின் எக்ஸ்பீரியன்ஸை அதிகரிக்கும் வசதிகளாக பெரிய பனோரமிக் சன்ரூஃப், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட், மெமரி வசதியுடன் கூடிய பவர்டு டிரைவர் சீட், பவர்டு பூட் லிட், பார்க்கிங் அசிஸ்ட் போன்றவை இருக்கின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, மிரர்லிங்க் போன்ற வசதிகளும் உண்டு.

டிரைவிங்

டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் டைரக்ட் இன்ஜக்‌ஷன் TSI பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. வெறும் 4,200rpm-ல் 190bhp பவரும், 4,100rpm-ல் அதிகபட்சம் 32kgm டார்க்கும் உருவாக்குகிறது இந்த இன்ஜின்.

7 ஸ்பீடு DCT வழியாக நான்கு வீல்களுக்குமே பவர் கிடைக்கிறது. டீசல் இன்ஜின் எஸ்யூவி ஓட்டிப்பழகிய டிரைவர்கள், நிச்சயமாக ஸ்டிராங்கான பிக்அப்பைத் தவறவிடுவார்கள். ஆனாலும், பெட்ரோல் இன்ஜினுக்கு இந்த பிக்அப் உண்மையில் சிறப்பாகவே இருக்கிறது. ஆக்ஸிலரேட்டரை அழுத்தி 2,000rpm கடக்கும்போதுதான் இன்ஜின் உயிர்பெறுகிறது. வழக்கமான எல்லா TSI இன்ஜின்களைபோலவே ஆல்ஸ்பேஸ் இன்ஜினின் சிறப்பும் அதன் மிட்ரேஞ்ச் பவர்தான். மிட்ரேஞ்சில் பவர் எக்கச்சக்கமாக இருப்பதால் ஓவர்டேக் செய்வது சுலபம். கியர்பாக்ஸும் பவரை மிட்ரேஞ்சில் அதிகப்படுத்தித் தருவதில் நன்றாகவே வேலை செய்கிறது. கியர் ஷிஃப்ட்டிங் நடக்கவில்லை, ஓடுகிறது.

6,000rpm கடந்துவிட்டால் ஃபன் நிச்சயம். டிரைவ் மோடுகள், வெவ்வேறான டிரைவிங் அனுபவம் கிடைக்க உதவுகின்றன. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸின் மொத்தத் திறனையும் அனுபவிக்கவேண்டும் என்றால் ஸ்போர்ட் மோடுதான் சிறந்தது. மேனுவல் மோடு மற்றும் பேடில்ஷிஃப்ட்டர் செம எக்ஸ்பீரியன்ஸ்.

நீண்ட பயணங்களுக்கு நல்ல தோழன் டிகுவான்!

டிகுவான் ஆல்ஸ்பேஸ் 100 கி.மீ வேகம் தொட, 8.8 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. ஆக்ஸிலரேஷனிலும் செம! 20 முதல் 80 கி.மீ வேகம் தொட 5.26 நொடிகளையும், 40 முதல் 100 கி.மீ வேகம் தொட 6.79 நொடிகளையும் எடுத்துக் கொள்கிறது. பழைய டிகுவான் இதைவிட வேகம் குறைவு. அதாவது, 0-100 கி.மீ வேகம் செல்ல அந்த கார் 10.55 விநாடிகளை எடுத்துக்கொள்ளும்.

பழைய டீசல் இன்ஜினை ஒப்பிடும்போது புது பெட்ரோல் இன்ஜின் செம ஸ்மூத். ஆனால், அமைதி என்று சொல்லமுடியாது. மிட்ரேஞ்சில் நன்றாகவே சத்தம் போடுகிறது.

ஹேண்டிலிங்கைப் பொருத்தவரை எப்போதுமே நல்ல கிரிப் இருக்கிறது. சாலையை நன்றாக உணர முடிகிறது. ஆனால், பழைய சிறிய டிகுவான் அளவுக்குத் திருப்பங்களில் சுறுசுறுப்பாக இல்லை. காரின் டச் ஸ்கிரீனில் கொடுக்கப்பட்டிருக்கும் செட்டிங்ஸ் மூலம் ஸ்டீயரிங்கின் எடையை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனாலும், இன்ஜின் நம்மை அழுத்தி ஓட்டத் தூண்டும் அளவுக்கு ஸ்டீயரிங் நம்மை வேகமாக ஓட்டுவதற்கு உந்தவில்லை.சஸ்பென்ஷனைப் பொருத்தவரை, குறைவான வேகங்களில் மோசமான சாலைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க தவறிவிடுகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது காரின் நிலைத் தன்மை அருமை. லாங் டிரைவுக்கு ஆல்ஸ்பேஸ் அருமையான தோழன். சாதாரண டிகுவான்போல, ஆல்ஸ்பேஸிலும் ஆஃப்ரோடு மோடு இருக்கிறது. ஹில் டிஸென்ட் கன்ட்ரோலும் இருக்கிறது.

வாங்கலாமா?

39.66 லட்சம் எனும் சென்னை ஆன்ரோடு விலையில், பழைய 5 சீட்டர் மாடலை விட 2.68 லட்சம் ரூபாய் அதிக விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது இந்த கார். டிகுவான்போல டிகுவான் ஆல்ஸ்பேஸ் எல்லோருக்குமான எஸ்யூவி கிடையாது. கொடுக்கும் காசுக்குக் கிடைக்கும் பெரிய எஸ்யூவியும் கிடையாது. அதேபோல பெஸ்ட் 7 சீட்டர் என்றும் இதைச் சொல்ல முடியாது.

நீண்ட பயணங்களுக்கு நல்ல தோழன் டிகுவான்!

ஆனால், சிறப்பான இன்ஜினீயரிங், தரமான கட்டுமானம் மற்றும் உற்சாகம் தரக்கூடிய இன்ஜின் ஆகியவை இருப்பதால், டிரைவிங் பிடிக்கும் அனைவருக்கும் இந்தக் காரைப் பிடிக்கும்.ஆல்ஸ்பேஸ் பிடித்திருந்தால் சீக்கிரமே வாங்கி விடவும். குறைந்த எண்ணிக்கையிலேயே இதை ஃபோக்ஸ்வாகன் இறக்குமதி செய்யவுள்ளது.