ஸ்பை படங்கள், டிசைன் ஸ்கெட்ச், டீஸர்கள் ஆகியவற்றில் பார்த்த கார்தான் நிஸான் மேக்னைட். போட்டி மிகுந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், மேக்னைட் வாயிலாகத் தடம் பதித்திருக்கிறது நிஸான். ரெனோ டிரைபர் தயாராகும் அதே CMF-A+ ப்ளாட்ஃபார்மில்தான் இதுவும் தயாராகிறது. சென்னையில் தயாராகும் இது, உலகின் பல நாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதியாக இருக்கிறது.
டிசைன்
மேக்னைட்டின் அளவுகளை நிஸான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அது நிச்சயம் 4 மீட்டருக்குட்பட்ட காராகத்தான் இருக்கும். இதன் Unladen கிரவுண்ட் கிளியரன்ஸ் 205மிமீ என்பதுடன், அனைத்து வேரியன்ட்களிலும் 16 இன்ச் வீல் இருக்கும் (195/60 R16 - MRF Wanderer ட்யூப்லெஸ் ரேடியல் டயர்கள்) என்பது வரவேற்கத்தக்க அம்சம். இது காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தாலும், நேரில் பார்ப்பதற்கு ஒரு பெரிய கார் போலவே உள்ளது. கட்டுமஸ்தான பானெட், நிஸான் கிக்ஸை நினைவுபடுத்தும் மெலிதான ஹெட்லைட் அதற்குத் துணை நிற்கின்றன. டாப் வேரியன்ட்களில் முன்பக்க விளக்குகள் அனைத்துமே LED என்பது நைஸ். அதற்கேற்ப Bi-Projector LED ஹெட்லைட்ஸ், L வடிவ LED DRL, LED பனி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. முன்பக்க பம்பரின் அடிப்பகுதியில் இருக்கும் சில்வர் ஸ்கிட் ப்ளேட், அதன் தோற்றத்துக்கு வலுச்சேர்க்கிறது. இங்கே இருக்கும் பெரிய Octagon வடிவ கிரில்லின் டீட்டெய்லிங் மற்றும் அதன் இருபுறமும் உள்ள க்ரோம் வேலைப்பாடு ரசிக்கும்படி அமைந்துள்ளது. ஆனால் இது, டட்ஸனை நினைவுபடுத்தவே செய்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் முன்பக்கத்துடன் ஒப்பிடும்போது, பக்கவாட்டுப் பகுதி க்ராஸ்ஓவர் போலவே இருக்கிறது. Machined ஃபினிஷில் இருக்கும் அலாய் வீல்கள் ஸ்போர்ட்டி டச். ஆனால் காரின் பெரிய வீல் ஆர்ச்களைப் பார்த்தால், இன்னும் பெரிய வீல்களைக்கூட இதில் பொருத்தலாம் எனத் தோன்றுகிறது. கதவுகளின் அடிப்பகுதி மற்றும் வீல் ஆர்ச்களில் இடம்பெற்றுள்ள பாடி க்ளாடிங், மேக்னைட்டின் ஸ்டைலான தோற்றத்துக்குத் துணைநிற்கிறது. பின்பகுதியில் இருக்கும் க்யூட் ஸ்பாய்லர் மற்றும் அகலமான டெயில் லைட் ஆகியவை பார்க்க சூப்பர். பின்பக்க பம்பரில் இருக்கும் சில்வர் கிளாடிங் நீட்டாக இருந்தாலும், அகலமான டயர்கள் இருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும். டெயில் லைட்டில் LED கிடையாது என்பது நெருடல். விண்டோ லைன் மற்றும் கதவுக் கைப்பிடிகள் ஆகியவற்றில் இருக்கக்கூடிய க்ரோம் ஃபினிஷ் ப்ரீமியம் ரகம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகேபின் மற்றும் சிறப்பம்சங்கள்
காருக்குள்ளே நுழைந்தால், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஷ்போர்டு வரவேற்கிறது. இது பிராக்டிக்காலிட்டியிலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறது. சென்டர் கன்சோலின் கீழ்ப்பகுதி, வயர்லெஸ் சார்ஜர் வசதியுடன் மொபைலை வைக்க இடம், மூடியுடன் கூடிய 10 லிட்டர் க்ளோவ் பாக்ஸ், கதவுகளில் உள்ள ஸ்டோரேஜ் என அத்தனையும் இருக்கின்றன. லம்போர்கினி Urus காரில் இருப்பதுபோன்ற ஏசி வென்ட்கள், இங்கும் இருப்பது க்ளாஸ். 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன் (Nissan Intelligent Mobility), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார் ப்ளே உள்ளது. 360 டிகிரி கேமராவும் உண்டு.

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் இருக்கும் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, Welcome Animation சூப்பர். Air Purifier - Puddle Lamps - Ambient Mood Lighting - 6 JBL ஸ்பீக்கர்களைக் கொண்ட ஆடியோ சிஸ்டம் (இவை Tech Pack), புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் கொண்ட மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட், கீலெஸ் என்ட்ரி... என இதில் வசதிகள் அத்தனையும் உண்டு. ஆனால் சன்ரூஃப் மற்றும் Shark Fin Antenna மிஸ்ஸிங்.
டேஷ்போர்டின் மேல்பகுதியில் உள்ள இறுக்கமான பிளாஸ்டிக் மற்றும் விலை குறைவான கார்களில் உள்ள Non Woven (Knitted) ரூஃப் லைனிங் ஆகியவை ஏற்கும்படி இல்லை. பின்பக்க வைப்பர் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இடவசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள்
முன் பக்க இருக்கைகள் ஓகே. பில்லர்கள் மேல்நோக்கி இல்லாவிட்டாலும், ஓட்டுனர் இருக்கையிலிருந்து வெளிச்சாலை பளிச்செனத் தெரிகிறது. பின் வரிசைக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் கதவுகள் அகலமாக இருப்பதால், காருக்குள் போவதும் வெளியேறுவதும் சுலபமாக இருக்கிறது.

ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் தாராளமாக இருக்கிறது. தவிர சீட்டின் குஷனிங் மற்றும் தொடைகளுக்கான சப்போர்ட் நன்றாக இருக்கிறது. இதில் 3 பேர் அமர முடியும் என்றே தோன்றுகிறது.
ஸ்மார்ட்ஃபோன் வைக்கவும், சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டும் இருப்பது நச். அட்ஜஸ்டபிள் பின்பக்க ஹெட்ரெஸ்ட், பின்பக்க ஏசி வென்ட்கள், 12V சார்ஜிங் பாயின்ட், Quarter Glass ஆகியவை இருப்பது பெரிய ப்ளஸ். 336 லிட்டர் பூட் ஸ்பேஸ் தவிர 60:40 ஸ்ப்ளிட் சீட் இருப்பதால், பொருள்களை வைக்க அதிக இடமிருக்கிறது. டாப் வேரியன்ட்களில் VDC எனப்படும் Vehicle Dynamic Control, டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ISOFIX, சென்ட்ரல் லாக்கிங், ESC, டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீயரிங் ஆகியவை உள்ளன. மற்றபடி அனைத்து வேரியன்ட்களிலும் 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் கட்டுமானத்தில் High Tensile ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதால், க்ராஷ் டெஸ்ட்டில் நல்ல ரேட்டிங்கை எதிர்பார்க்கலாம்.
இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்
மேக்னைட்டின் இன்ஜின் விபரங்களை, இன்னும் நிஸான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. என்றாலும், டிரைபரில் உள்ள அதே 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் ஆரம்ப வேரியன்ட்களில் இருக்கலாம். மற்றபடி டாப் வேரியன்ட்களில், 1.0 லிட்டர் HRAO டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறக்கூடும். நிஸான் GT-R காரின் இன்ஜினில் இருக்கும் Mirror Bore Cylinder Coating தொழில்நுட்பம், இந்த 3 சிலிண்டர் இன்ஜினில் இருக்கிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, X-Tronic CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனுடனும் வருகிறது. போட்டி பெட்ரோல் கார்களில் AMTதான் பிரதானம் என்ற நிலையில், இது நல்லதொரு அம்சம்தான். இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் டீசல் கிடையாது மக்களே!
முதல் தீர்ப்பு
சோனெட் மற்றும் அர்பன் க்ரூஸர், வென்யூ, XUV 3OO, நெக்ஸான், விட்டாரா பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட் ஆகியவற்றுடன் போட்டி போட இருக்கும் நிஸானின் இந்த காம்பேக்ட் எஸ்யூவி விற்பனை அடுத்த வருடம் ஆரம்பிக்கும். இந்தப் பட்டியலில் ரெனோவின் Kiger, அடுத்த ஆண்டில் இணையக்கூடும். விலைதான் கிக்ஸுக்கு வில்லனாக அமைந்தது. அந்தத் தவறு மேக்னைட்டில் நடக்காது என்று தெரிகிறது. உத்தேசமாக 5.3 - 7.5 லட்ச ரூபாய் எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் மேக்னைட் வரலாம். இந்த வகை கார்களுக்குத் தேவையான ஸ்டைலான டிசைன், அதிக இடவசதி, நிறைய சிறப்பம்சங்களைக் கொண்ட மேக்னைட், இந்தியாவில் நிஸானின் செகண்ட் இன்னிங்ஸுக்கு (Nissan Next) வழிவகுக்கும் என நம்பலாம். தவிர காம்பேக்ட் எஸ்யூவிகளிலேயே முதன்முறையாக, CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன்கூடிய ஒரே மாடல் என்ற தகுதியும் அதற்கு உதவக்கூடும்.