Published:Updated:

பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட் : டாடா சஃபாரி

பிரீமியம் ஸ்டோரி

பஸ்ஸார்டு ஆக வெளிவந்து, கிராவிட்டாஸ் ஆக மாறி, தற்போது சஃபாரி ஆக அறிமுகமாகிவிட்டது, டாடாவின் Flagship வாகனம்! இந்த 7 சீட் எஸ்யூவியின் உற்பத்தி ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், குடியரசு தினத்தன்று இதுகுறித்த தகவல்களை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தனது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தயாரிப்புகளில் ஒன்றான சஃபாரியின் பெயரைச் சூட்டி, இதற்குப் பெரிய அந்தஸ்தையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். எம்ஜி ஹெக்டர் சீரீஸ், XUV 5OO (தற்போதைய & புதிய மாடல்), 7 சீட் க்ரெட்டா போன்றவற்றுடன் போட்டியிடும் இந்த மூன்றாம் தலைமுறை சஃபாரி எப்படி இருக்கிறது?

பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி

டிசைன் மற்றும் கேபின்

கடந்த 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கிராவிட்டாஸ் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட எஸ்யூவிதான், சஃபாரி எனப் பெயர்மாற்றம் கண்டிருக்கிறது. ஹேரியர் போலவே, இதுவும் IMPACT 2.0 டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதோடு நின்றுவிடாமல், சிற்சில வேறுபாடுகளையும் காரில் செய்திருக்கிறது டாடா. க்ரோம் Tri-Arrow Motif உடனான புதிய கிரில், ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ் - கதவுக் கைப்பிடிகள் ஆகியவற்றில் இருக்கும் க்ரோம் ஃபினிஷ், டூயல் டோன் பம்பர்கள் ஆகியவை அதற்கான உதாரணம். புதிய Royale Blue கலர் ஆப்ஷன் தவிர, வழக்கமான வெள்ளை & கிரே நிறங்களில் சஃபாரி வருகிறது. மற்றபடி ஹேரியரில் உள்ள பனோரமிக் சன்ரூஃப் - ரியர் வியூ மிரர், Shark Fin Antenna ஆகியவையும் உண்டு . டாப் வேரியன்ட்களில் இருக்கும் அலாய் வீல்கள் ஹேரியரில் இருப்பதுபோலவே தெரிந்தாலும், அவை அளவில் பெரிது (18 இன்ச்). ஹெட்லைட்ஸும் வைப்பர்களும், வெளிப்புறச் சூழலின் தன்மைக்கேற்ப தானாக இயங்குகின்றன

பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி

C-பில்லர் வரை இந்த 7 சீட்டர் பார்க்க ஹேரியர் போலவே இருந்தாலும், அதன்பிறகு இருக்கும் சில்வர் ஃபினிஷ் கொண்ட ரூஃப் ரெயில், பெரிய பின்பக்க Quarter க்ளாஸ், உயர்த்தப்பட்ட ரூஃப், புதிய டெயில்கேட் மற்றும் LED டெயில் லைட்ஸ் என வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஹேரியரில் இருப்பதை விடக் கூடுதலாக ஒருவரிசை இருக்கை வேண்டும் என்பதால், அதைவிட 63மிமீ அதிக நீளம் மற்றும் 80மிமீ அதிக உயரத்தில் வந்திருக்கிறது சஃபாரி. கேபினில் இரண்டுக்கும் அதிக ஒற்றுமைகள் இருந்தாலும், Oyster White Leatherette அப்ஹோல்சரி - Ashwood ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு - Auto Hold உடனான எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை புதிது. மேலும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லீவர், தொடுவதற்கு மென்மையான Anti-Reflective Nappa Grain ஃபினிஷில் இருக்கும் டேஷ்போர்டு ஆகியவை, கேபினின் ப்ரீமியம் ஃபீலுக்குத் துணை நிற்கின்றன. அல்ட்ராஸ் டர்போவைத் தொடர்ந்து, இங்கேயுள்ள Floating பாணியில் அமைந்திருக்கும் 8.8 இன்ச் டச் ஸ்க்ரீனிலும் iRA கனெக்ட்டிவிட்டி உண்டு. ஆம்பியன்ட் லைட்டிங், 9 ஸ்பீக்கர்களைக் கொண்ட JBL ஆடியோ சிஸ்டம், Auto Dimming IRVM, 7 இன்ச் TFT டிஸ்பளே உடனான மீட்டர் ஆகியவை வெரி நைஸ்.

பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி
பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி

இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் வேரியன்ட்கள்

ஹேரியரில் இருக்கும் அதே 2.0 லிட்டர் Kryotec டர்போ டீசல் இன்ஜின்தான் சஃபாரியிலும் இருக்கும். 170bhp பவரைத் தரும் இந்த 4 சிலிண்டர் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் மல்ட்டி டிரைவ் மோடுகள் (Eco, City, Sport), ESP Terrain Response மோடுகள் (Normal, Rough, W‑et), eVGT - EGR - SCR ஆகிய தொழில்நுட்பங்கள் இருப்பதால், சிறப்பான பெர்ஃபாமான்ஸை எதிர்பார்க்கலாம். லேண்ட்ரோவர் டிஸ்கவரி உற்பத்தியாகும் D8 ப்ளாட்ஃபார்மில் இருந்து தயாரிக்கப்பட்ட Omega Arc ப்ளாட்ஃபார்ம், 4 வீல் டிரைவ் & எலெக்ட்ரிக் அமைப்பு பொருத்தக்கூடிய திறனைப் பெற்றிருந்தது. எனவே சஃபாரியின் பெயருக்கு நியாயம் கற்பிக்கும் விதமாக, அதன் ஆஃப் ரோடு வெர்ஷனை டாடா பின்னர் வெளியிடலாம். காரின் கூடுதல் அளவுகளைக் கருத்தில்கொண்டு, ஸ்டீயரிங்கில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி
பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி

மற்றபடி ஹெக்டர் சீரிஸுடன் போட்டி போடும் விதமாக, 6 மற்றும் 7 சீட் ஆப்ஷன்களில் சஃபாரி களமிறங்குகிறது (ஹேரியர் ஒரு 5 சீட்டர்). எனவே தேர்ந்தெடுக்கும் வெர்ஷனுக்கு ஏற்ப, நடுவரிசை இருக்கை கேப்டன் சீட்கள் அல்லது பெஞ்ச் சீட்டாக இருக்கும். கூடவே பின்பக்கப் பயணிக்கு லெக்ரூமை அதிகரிக்கும் படியான Boss மோடு வசதியும் உள்ளது. எதிர்பார்த்தபடியே ஹேரியரைவிட அதிக எடை மற்றும் விலையில் வரப்போகும் இந்த 7 சீட்டர், 6 வேரியன்ட்களில் கிடைக்கும். பிப்ரவரி 4-ம் தேதி முதலாக சஃபாரியின் புக்கிங் ஆரம்பமாவதுடன், பின்னாளில் விலை அறிவிப்பு வரக்கூடும். 6 காற்றுப்பைகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ESC, CSC, EBD, ஏபிஎஸ், TPMS, ISOFIX எனப்பல பாதுகாப்பு வசதிகள் காரில் உள்ளன.

முதல் தீர்ப்பு

இந்தியாவில் எஸ்யூவி செக்மென்ட்டைப் பரவலாக்கியது சஃபாரி! தான் இருந்த 20 ஆண்டு காலத்தில் (1998-2018) கார் ஆர்வலர்களிடையே தனக்கென்று ஒரு பெயரைச் சம்பாதித்திருந்தது (Reclaim Your Life விளம்பரம் நினைவிருக்கிறதா?) அந்த மாடலுக்கும் இதற்கும் பெயரைத் தாண்டி, எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு நிறுவனமாக டாடா எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. எப்படி லேடர் சேஸியில் இருந்து மோனோகாக் சேஸிக்கு டிஃபெண்டர் வந்திருக்கிறதோ, அதுபோலவே சஃபாரியும் காலத்துக்கேற்ப மாறிவிட்டது.

Transversely Mounted இன்ஜின் - ஃப்ரன்ட் வீல் டிரைவ் அமைப்பு அதனை உறுதிப்படுத்தி விடுகிறது (முந்தைய சஃபாரி எல்லாம் Longitudinally Mounted இன்ஜின் - ரியர் வீல் டிரைவ் செட்-அப்). ஆனால் கெத்தான தோற்றம், பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸ், 7 பேருக்கான இடவசதி என இரண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதும் நன்மைக்கே! ஆனால் போட்டியாளர்களில் காணப்படும் வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் டெயில்கேட், ஃபுல் டிஜிட்டல் மீட்டர் போன்ற சில வசதிகள் மிஸ்ஸிங் என்பது மைனஸ். இதிலும் ஹேரியரிலும், டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வருமா... என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு