Published:Updated:

வென்ட்டோ வெர்னா... ஓரம் போங்க!

ஃபர்ஸ்ட் லுக்: ஸ்கோடா ரேபிட் 1.0 TSI

பிரீமியம் ஸ்டோரி

“லாக்டெளன் இருந்தா நமக்கென்ன.. நம்ம வேலையைப் பார்ப்போம்'' என்று ஸ்கோடா, 4-வது டாக்டெளனில் 3 கார்களை லாஞ்ச் செய்து அசத்திவிட்டது. ரேபிட், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட், கரோக் - மூன்றுமே ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட கார்கள். ஆனாலும், இதில் `டாக் ஆஃப் தி லாஞ்ச்' ஆகப் பேசப்படுவது ரேபிட்தான். காரணம் - கடைசி பாராவில்.

ஸ்கோடா ரேபிட் 1.0 TSI
ஸ்கோடா ரேபிட் 1.0 TSI

வழக்கம்போல், இனி ரேபிட்டிலும் டீசல் (1.5லி) கிடையாது. அதேபோல், பழைய 1.6 லி பெட்ரோலும் கிடையாது. குட்டிக் குட்டி கார்களிலேயே டர்போ இருக்கும்போது, ரேபிட் போன்ற வ்வ்ர்ர்ரூம் கார்களில் டர்போ இல்லாமல் இருந்தால் எப்படி? 1.0 லி, டர்போ இன்ஜினில் வழக்கம்போல் 3 சிலிண்டர்தான். ஆனால், பவர் 110 bhp. எப்படியும் பறக்கும்! டார்க், 17.5kgm. மேனுவல், டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டுமே 6 ஸ்பீடுதான். டார்க் கன்வெர்ட்டர், இனிமேல்தான் வரும். ஃபோக்ஸ்வாகன் போல, DSG கியர்பாக்ஸ் கொடுத்தால், வெர்னாவுக்கு இன்னும் ஆட்டம் அதிகரிக்கும்.

Rider, Ambition, Onyx, Style, MonteCarlo - என மொத்தம் 5 வேரியன்ட்களில் வருகிறது இந்த டர்போ ரேபிட். வேரியன்ட்டைப் பொறுத்து வசதிகள். புதிய 16 இன்ச் அலாய்வீல்ஸ், 4 காற்றுப் பைகள், ரியர் கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ்/வைப்பர்ஸ், பூட் ஸ்பாய்லர், க்ளைமேட் கன்ட்ரோல், 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆண்ட்ராய்டு/ஆப்பிள் ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட்மென்ட், லெதர் சீட்கள் என்று கலக்குகிறது. குறைந்த விலை வேரியன்ட்களில் 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சன்ரூஃப், ESP, LED ஹெட்லைட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு சீட்ஸ்.. இதெல்லாம் வெர்னாவில் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ஸ்கோடா.

வென்ட்டோ வெர்னா... ஓரம் போங்க!

'டர்போனா மைலேஜ் அடி வாங்குமே' என்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி உண்டு. இந்தப் புதிய டர்போவின் மைலேஜ் 18.97 கி.மீ என்று க்ளெய்ம் செய்கிறது ஸ்கோடா. பழைய ரேபிட்டைவிட, இது 23% கூடுதலாம்.

`ரேபிட்தான் டாக் ஆஃப் தி லாஞ்ச்' என்று சொன்னதற்குக் காரணம் இதுதான். பொதுவாக, ஸ்கோடா கார்கள் என்றாலே காஸ்ட்லி என்றுதான் ஒரு டாக் உண்டு. ஆனால், ஸ்கோடாவின் என்ட்ரி லெவல் காரான ரேபிட் BS-6 மாடலை, நிஜமாகவே என்ட்ரி லெவல் செடான்களுக்கு இணையான விலையில் (7.49 - 11.79 லட்சம், எக்ஸ்ஷோரூம்) லாஞ்ச் செய்ததுதான் அசத்தல். பெரும் போட்டியான வெர்னாவை விடுங்கள்; சிட்டி, யாரிஸ், அட... நம்ம மலிவுவிலை சியாஸைவிட விலை குறைந்த கார் ஒன்று ஸ்கோடாவில் இருக்கிறது என்பது பேசுபொருள்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு