Published:Updated:

கியா செல்ட்டோஸ் - க்ரெட்டாவுக்கு இன்னொரு போட்டி!

 கியா செல்ட்டோஸ்
பிரீமியம் ஸ்டோரி
கியா செல்ட்டோஸ்

ஃபர்ஸ்ட் ரைடு - கியா செல்ட்டோஸ்

கியா செல்ட்டோஸ் - க்ரெட்டாவுக்கு இன்னொரு போட்டி!

ஃபர்ஸ்ட் ரைடு - கியா செல்ட்டோஸ்

Published:Updated:
 கியா செல்ட்டோஸ்
பிரீமியம் ஸ்டோரி
கியா செல்ட்டோஸ்

SP2i கான்செப்ட்.... 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எஸ்யூவி கான்செப்ட்டான இதுதான், தற்போது செல்ட்டோஸ் என்ற பெயருடன் வருகிறது. தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸின் இந்திய விசிட்டிங் கார்டாக இருக்கப் போவது இந்த செல்ட்டோஸ்தான்!

செல்ட்டோஸைச் சுற்றியிருக்கும் பரபரப்புக்கும் ஆர்வத்துக்கும் காரணம், கியா கார்கள் எப்படியிருக்கும் என்ற ஆர்வம் மட்டுமல்ல, இது ஒரு மிட்சைஸ் எஸ்யூவி என்பதும்தான்.

4 மீட்டருக்கும் அதிகமான எஸ்யூவிகள் மீது சிலருக்கு ஈர்ப்பு அதிகம். காரணம் - இவை காம்பேக்ட் எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது அதிக இடவசதி கொண்டவை. அத்துடன், நம் ஊர்ச் சாலைகளுக்கேற்ற சைஸ் மற்றும் கச்சிதமான ஓட்டுதல் அனுபவமும் கிடைக்கிறது.

செல்ட்டோஸின் டெஸ்ட் டிரைவ், ஆந்திராவின் அனந்தபூரில் இருக்கும் கியா தொழிற்சாலை டெஸ்ட் ட்ராக்கில் நடந்தது. Gully கிரிக்கெட்டில் மேட்ச் தொடங்கும் முன்பு Trials ஆடுவோம் இல்லையா.... அதைப் போலவே இந்த ட்ராக் டிரைவை எடுத்துக் கொள்வோம்.

டிசைன்

காரின் ஸ்டைலான முன்பக்கம், எடுத்த எடுப்பிலேயே கவனத்தை ஈர்க்கிறது. வெயில் நேரத்தில் கிரில்லில் இருக்கும் க்ரோம் வேலைப்பாடுகள் (Knurled Effect) தகதகவென ஜொலிக்கின்றன. நீல நிறம் எக்ஸ்ட்ரா அழகு. ஷார்ப்பான LED ஹெட்லைட்ஸ், ஐஸ் க்யூபுகளை நினைவுபடுத்தும்படியான LED பனி விளக்குகள், சதுர வடிவ வீல் ஆர்ச்கள், LED டெயில் லைட்ஸ் எனக் காரில் அசத்தலான பாகங்கள் இருப்பதால், சாலையில் செல்லும்போது செல்ட்டோஸ் நிச்சயமாகப் பலரை இரண்டாவது முறையாகத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

கியா செல்ட்டோஸ் - க்ரெட்டாவுக்கு  இன்னொரு போட்டி!

4 வேரியன்ட்களில் இந்த எஸ்யூவியை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ள கியா மோட்டார்ஸ், ஒவ்வொன்றிலும் Tech Line மற்றும் GT Line என இரு ஆப்ஷன்களைக் கொடுக்கும். இவற்றின் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், பெயருக்கேற்றபடி சிவப்பு நிற பிரேக் கேலிப்பர் - பம்பரில் சிவப்பு நிற வேலைப்பாடுகள் - சிவப்பு நிறத் தையலுடன் கூடிய சீட்கள் என ஸ்போர்ட்டி அம்சங்களுடன் GT Line இருக்கும். அதேபோல, Tech Line-ல் கறுப்பு மற்றும் பீஜ் என இரு வண்ணங்களில் இன்டீரியர் இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேபின்

நாம் ஓட்டியது Prototype காராகவே இருந்தாலும், அவற்றின் கேபின் தரம் அட்டகாசமாக இருந்ததைச் சொல்லியாக வேண்டும். முன்பக்க - பின்பக்க இருக்கைகள் இரண்டுமே பெரிதாகவும் சொகுசாகவும் உள்ளன. இதில் முன்பக்க இருக்கைகளுக்கு வென்ட்டிலேஷன் வசதி இருப்பது பெரிய ப்ளஸ். Bose சவுண்ட் சிஸ்டம், 8 இன்ச் Heads Up டிஸ்பிளே, 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கேபின் Air Purifier, சன்ரூஃப், சிம் கார்டு உடனான கனெக்ட்டிவிட்டி Suite என ஏராளமான வசதிகள். மேலும் Ambient லைட்டிங், காரில் ஒலிக்கும் இசைக்கேற்ப மாறும் என்பது `வாவ்' ரகம்.

கியா செல்ட்டோஸ் - க்ரெட்டாவுக்கு  இன்னொரு போட்டி!

ஹூண்டாய் மற்றும் கியா - இரண்டுக்கும் ஒரே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்தான். எனவே செல்ட்டோஸின் பிளாட்ஃபார்மில்தான், அடுத்த தலைமுறை க்ரெட்டா தயாரிக்கப்படும் என்பது ஸ்கூப் நியூஸ். தற்போது விற்பனையில் இருக்கும் க்ரெட்டாவுடன் ஒப்பிடும்போது, 45மிமீ அதிக நீளம் - 20மிமீ அதிக அகலம் - 45மிமீ குறைவான உயரம் எனும் அளவுகளில் இருக்கிறது செல்ட்டோஸ். மேலும் 20மிமீ அதிக வீல்பேஸ் இருப்பதால், க்ரெட்டாவைவிட செல்ட்டோஸின் பின்பக்க இடவசதி அதிகம். ஹெட்ரூம் க்ரெட்டாவைவிடக் குறைவுதான். ஆனால் போதுமான அளவில் இருக்கிறது. செல்ட்டோஸின் 433 லிட்டர் பூட் ஸ்பேஸ், க்ரெட்டாவைவிட 28 லிட்டர் அதிகம்!

இன்ஜின் - கியர்பாக்ஸ்

வேரியன்ட்களைப்போலவே, இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியிலும் ஆப்ஷன்கள் உண்டு. இரண்டு வகையான பெட்ரோல் இன்ஜின், ஒரு டீசல் இன்ஜின் என்று மூன்று இன்ஜின் ஆப்ஷன்ஸ் உண்டு, அவை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 115bhp பவர் மற்றும் 14.4kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், CVT உடன் வருகிறது.

1.4 லிட்டர் (டைரக்ட் இன்ஜெக்‌ஷன்) டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட செல்ட்டோஸ், 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது. இது 140bhp பவர் மற்றும் 24.2kgm டார்க்கை வெளிப்படுத்தும்.

115bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மாடலுக்கு, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு மாடல்களையும் ஓட்டிப் பார்த்தோம்.

1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில், 1,500 rpm முதலாகவே பவர் டெலிவரி கிடைக்கிறது. பவர் டெலிவரி சீராக இருப்பதுடன், இன்ஜினின் ரெட்லைன் 6,800 ஆர்பிஎம் வரை உள்ளது. இது Free Revving பாணியில் இல்லாவிட்டாலும் தேவையான பவர், டிரைவருக்குக் கிடைத்துவிடுகிறது. க்ரெட்டாவில் இருப்பதுபோலவே, மேனுவல் கியர்பாக்ஸின் செயல்பாடு துல்லியமாக இருக்கிறது.

டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடும் சிறப்பாக இருப்பதால், இது கார் ஆர்வலர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறலாம். 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், சத்தமின்றி தனது பணியைத் திறம்படச் செய்கிறது. தற்போது க்ரெட்டாவில் இருக்கும் டீசல் இன்ஜினைவிட இது ரிஃபைண்டாக இயங்குகிறது. 1,200 rpm முதலே போதுமான டார்க் வந்துவிடுகிறது. பெட்ரோல் இன்ஜினின் அதே மேனுவல் கியர்பாக்ஸ்தான் இதிலும் என்பதால், இதுவும் பயன்படுத்த உற்சாகமாக இருக்கிறது. டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், எதிர்பார்த்தபடியே செம ஸ்மூத்.

கியா செல்ட்டோஸ் - க்ரெட்டாவுக்கு  இன்னொரு போட்டி!

ஓட்டுதல் அனுபவம்

அனைத்து இன்ஜின்களிலும் டிரைவ் மற்றும் டிராக்‌ஷன் `மோடு'கள் உள்ளன. எக்கோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் ஆகியவை டிரைவிங் மோடுகள் என்றால், Mud - Snow /Wet - Sand ஆகியவை டிராக்‌ஷன் `மோடு'கள். டிரைவிங் மோடுகள் இன்ஜின், ஸ்டீயரிங், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செட்டிங்கை மாற்றியமைக்கும். நீளமான ட்ராக்கின் இறுதியில் ஒரு திருப்பம்... இந்தப் பாதையில் செல்ட்டோஸை ஓட்டியதால், காரின் ஓட்டுதல் பற்றிப் பெரிதாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் Durability டெஸ்ட்டிங் ஏரியாவில் காரைச் செலுத்தியபோது, சஸ்பென்ஷன் செட்-அப் க்ரெட்டாவைவிடக் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கிறது. மேலும் க்ரெட்டாவைவிட செல்ட்டோஸின் பின்பக்கம் அலைபாயாமல் நிலையாக இருக்கிறது. ஸ்டீயரிங்கும் க்ரெட்டாவைவிட நல்ல ஃபீட்பேக் தருவதுடன், பாடி ரோலும் குறைவாகவே உள்ளது.

முதல் தீர்ப்பு

மேலோட்டமாகப் பார்க்கும்போதே, இந்த எஸ்யூவியின் நோக்கம் தெரிகிறது. நாங்கள் குறைவான நேரமே காரை ஓட்டியதால், பக்காவான ரோடு டெஸ்ட்டுக்குப் பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். அற்புதமான டிசைன், Segment First சிறப்பம்சங்கள், சிறப்பான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், தரமான கேபின் என ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, செல்ட்டோஸ் ஒரு நல்ல சாய்ஸ். இதற்கு அதிரடியான விலையை நிர்ணயிக்கப் போவதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கும் நிலையில், புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே 6,046 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்பது `வாவ்'தான்.