உங்களுக்கு ‘ஜேம்ஸ்பாண்ட் 007’ ஓட்டும் ஆஸ்ட்டன் மார்ட்டின் கார் பிடிக்குமா?! அப்படியென்றால், ஃபிஸ்க்கரையும் பிடிக்கும். ஆம், ஃபிஸ்க்கர் நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவனர்தான் ஹென்ரிக் ஃபிஸ்க்கர் (Henrik Fisker). ஆஸ்ட்டன் மார்ட்டின் DB9, பிஎம்டபிள்யூ Z8 போன்ற வெறித்தனமான சூப்பர் கார்களின் டிசைனர் இவரேதான். ஹென்ரிக் ஃபிஸ்க்கரின் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான 'Fisker Inc’ எனும் நிறுவனம்தான் இந்தியாவுக்கு முதலில் வரப்போகும் வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கப் போகிறது. ‘‘டெஸ்லாவுக்கு முன்பே நாங்கள் வரத் திட்டமிட்டிருக்கிறோம்!’’ என்பதுதான் ஹென்ரிக் ஃபிஸ்க்கரின் ஸ்டேட்மென்ட்.

நிஜம்தான்; அதற்கான ஆரம்பகட்ட வேலையாக ஹைதராபாத்தில் ஒரு உலகத் தொழில்நுட்ப மையத்தை நிறுவிவிட்டது. இப்போதைக்கு இந்த ஃபிஸ்க்கர் தொழில்நுட்ப மையத்தில் 300 சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இன்ஜீனியர்களுக்கு வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், கார் தயாரிப்புத் தொழிற்சாலை இந்தியாவில் எங்கு வரும்? அதற்கான தகவலை இன்னும் முழுதாகத் தெரிவிக்கவில்லை ஃபிஸ்க்கர்.
‘‘தொழில்நுட்ப மையம் பற்றியே இன்னும் சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக முழுமையாகத் தகவல் சொல்கிறோம்!’’ என்கிறார் ஃபிஸ்க்கர்.
தைவானைச் சேர்ந்த டெக் ஜெயன்ட்டான ‘ஃபாக்ஸ்கான்’ (Foxconn) எனும் நிறுவனம்தான் இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனத்துடன் சேர்ந்து ஐபோனைத் தயாரித்து வருவது உங்களுக்குத் தெரியும். ஃபாக்ஸ்கானுடன் இணைந்துதான் ஃபிஸ்க்கர், தனது எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஃபிஸ்க்கர் இன்க் நிறுவனம் – இப்போதே ஐரோப்பா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரித்து வருகிறது. அடுத்தது இந்தியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபிஸ்க்கரின் முதல் தயாரிப்பாக Ocean எனும் எலெக்ட்ரிக் கார்தான் இந்தியாவில் ஓட இருக்கிறது. போன நவம்பரில் உலகளவில் இதை லாஞ்ச் செய்த ஃபிஸ்க்கர், மற்ற நாடுகளில் ஓஸனை விற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே தொழிற்சாலை ஆரம்பித்ததும் முதல் வேலையாக ஓஸன் காரை CBU (Completely Built Up) முறையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய இருக்கிறது ஃபிஸ்க்கர் இன்க். CBU இறக்குமதி விற்பனை என்பதால், இதன் விலை 37,000 டாலர்கள் இருக்கும். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 27–28 லட்சம் வரும். இந்த எஸ்யூவியின் இன்னொரு வேரியன்ட் 69,000 டாலர்கள் இருக்குமாம். சுமார் 51 லட்சம் ரூபாய். இப்போதே ஓஸன் எஸ்யூவிக்கு உலகம் முழுக்க சுமார் 25,000 புக்கிங்குகள் குவிந்துவிட்டனவாம். இதில் இந்தியாவும் அடக்கம். (யாருப்பா ஃபிஸ்க்கர் Ocean கார் வாங்கப் போகிற அந்த தனவான்?)
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஃபிஸ்க்கர் இன்க்கின் இரண்டாவது தயாரிப்பு மாடலாக இருக்கப் போவது Pear எனும் எலெக்ட்ரிக் கார். இதுதான் டெஸ்லாவின் விலை குறைந்த மாடலான டெஸ்லா மாடல் 3-க்குப் போட்டியாக இருக்கும் விலை குறைந்த மாடல். இதன் விலை 30,000 டாலர்கள். அதாவது, இந்திய ரூபாயில் சுமார் 22 லட்சம். அப்படியென்றால், இது இந்தியாவில் ஹூண்டாய் கோனா, எம்ஜி ஹெக்டர் EV போன்ற கார்களுக்கும் கடும்போட்டியாக இருக்கும்.

‘‘நாங்கள் காரை உருவாக்கவில்லை. ஒரு எதிர்காலத்துக்கான போக்குவரத்தை உருவாக்குகிறோம். எமோஷனலான, வியப்பூட்டும் வாகனங்கள் என்றைக்குமே விலை அதிகமாக இருக்கக் கூடாது! எங்களுக்கு இந்தியாவின் மீதும், இந்திய வாடிக்கையாளர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது!’’ என்கிறார் ஹென்ரிக் ஃபிஸ்க்கர்.
அது சரி; இந்தியாவில் எந்த இடத்தில் ஃபிஸ்க்கர் தொழிற்சாலை அமைக்கப் போகிறது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறதாம். ஃபிஸ்க்கருக்கு இந்தியா ஒன்றும் புதிதில்லை; காரணம், ஹென்ரிக்கின் மனைவி இந்தியாவைச் சேர்ந்தவராம். ‘இந்தியாவில் நம் கார் தயாரிப்புத் தொழிற்சாலையை எங்கே ஆரம்பிப்பது’ என்று மனைவியுடன் டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கிறாராம் ஹென்ரிக் ஃபிஸ்க்கர். 2024 - 2025–க்குள் ஃபிஸ்க்கர் பியர் கார் சாலைகளில் ஓடும் என்கிறது ஃபிஸ்க்கர்.
இந்தியாவின் ஆல் மாநிலத் தொழில்துறை மந்திரிகளே... ஃபிஸ்க்கரை இன்வைட் பண்ணி, பிரிஸ்க்கா ஒரு ட்வீட்டைப் போடுங்க!