Published:Updated:

டட்ஸன் கோ.... ஏன் `கோ அவே' ஆனது?

டட்ஸன் கோ
பிரீமியம் ஸ்டோரி
டட்ஸன் கோ

ஃப்ளாப் கார்: டட்ஸன் கோ

டட்ஸன் கோ.... ஏன் `கோ அவே' ஆனது?

ஃப்ளாப் கார்: டட்ஸன் கோ

Published:Updated:
டட்ஸன் கோ
பிரீமியம் ஸ்டோரி
டட்ஸன் கோ
டட்ஸன் கோ....
ஏன் `கோ அவே' ஆனது?

2011 - 2012 ஒரு வருட காலத்தில், ஆல்ட்டோவும் வேகன் ஆரும் சேர்த்து கிட்டத்தட்ட 4 லட்சம் யூனிட்களை விற்றது மாருதி. i10 & இயான் சேர்த்து 1.5 லட்சத்துக்கும் அதிகமான கார்களை ஹுண்டாய் விற்றது. அதே சமயம், சன்னி மற்றும் மைக்ரா வைத்து கொண்டு 33,000 யூனிட்களைக் கஷ்டப்பட்டு விற்றுக் கொண்டிருந்தது நிஸான். அப்போதுதான் A - செக்மென்ட் குட்டி கார்கள் இந்தியாவின் `தங்க முட்டையிடும் வாத்து’ என்று நிஸான் நிறுவனத்திற்குப் புரிந்தது. எனவே 1980-ல் இருந்து கல்லறையில் தூங்கிக் கொண்டிருந்த காம்பேக்ட் கார் பிராண்டான டட்ஸனை மீட்டெடுத்தது. அப்படியே 10 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், கடந்த ஏப்ரல் மாதம் டட்ஸன் பிராண்டை நிறுத்துவதாக அறிவித்தது நிஸான். டட்ஸன் பிராண்ட் இந்தியாவில் டேக் - ஆஃப் ஆகாததற்கு முக்கியக் காரணம், அதன் முதல் மாடலான ‘Go’ ஹேட்ச்பேக். அதன் தோல்வி எப்படி டட்ஸன் பிராண்டைப் பாதித்தது என பாப்போம்.

டட்ஸன் பற்றி ஒரு சுருக்கமான முன்னோட்டம்!

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளுக்குச் சிறிய, மலிவான கார்களை விற்க முடிவெடுத்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு - டட்ஸன் பிராண்டை 2013-ல் நிஸான் புதுப்பித்தது. அப்போது நிஸானின் உலகளாவிய நிலைப்பாடு என்னவென்றால், நுழைவு-நிலைச் சந்தைகளுக்கு டட்ஸன், நடுவில் நிஸான் மற்றும் லக்ஸூரி வாடிக்கையாளர்களுக்கு Infiniti என்று ஏரியா பிரித்து வைத்திருந்தது நிஸான்.

அறிமுகத்தில் அசரடித்த விலை!

ஜூலை 2013-ல் டெல்லியில் வைத்து, கோ ஹேட்ச்பேக் காரின் உலகளாவிய அறிமுகத்தை நடத்தியது டட்ஸன். அறிமுகத்தின்போது, மார்க்கெட்டிங் வித்தையாக இந்தியா முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நகரங்களில் கோ-வைக் காட்சிப்படுத்தியது டட்ஸன். 2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.3.12 - 3.69 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைக்கு கோ விற்பனைக்கு வந்தது. கோ-வை விட ஒரு படி மேலே உள்ள B-செக்மென்ட் ஹேட்ச்பேக் போல பெரிதாகவும், விசாலமாகவும் பேக்கேஜ் செய்திருந்தது டட்ஸன். விலை தந்த பரபரப்பு காரணமாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள், தங்கள் ஊரில் ஷோரூம் இல்லையென்றாலும், பக்கத்து ஊருக்குச் சென்று டெஸ்ட் டிரைவ் பார்த்தனர்.

இன்ஜின் செயல்திறன் எப்படி?

மைக்ராவில் இருந்த அதே 1.2 லி 3 சிலிண்டர் இன்ஜினை டட்ஸன் கோவில் பொருத்தியது நிஸான். இரண்டு கார்களுக்கும் எடையில் மாற்றம் இருந்தாலும், பவர் மட்டும் அப்படியே இருந்தது. 67bhp பவரும், 104Nm டார்க்கும் கொண்டிருந்தது கோ. பின்னர் வந்த CVT ஆட்டோமேட்டிக் மாடலில், சுமார் 10bhp பவர் கூடி 76bhp -ஐ வெளிப்படுத்தியது.

மைலேஜிலும் CVT தான் கில்லி! மேனுவல் மாடலிடம் 19 கிமீ ARAI சான்றிதழ் இருந்தபோது, CVT மாடல் சற்று அதிகமாக 19.5 கிமீ வைத்திருந்தது. மைக்ராவைவிட சுமார் 100 கிலோ எடை குறைவு என்பதால், நெடுஞ்சாலையில் மூன்று இலக்க வேகத்தில் செல்லும்போது, கார் கட்டுப்பாட்டை மீறி அலைபாய்ந்தது.

ஸ்டீயரிங், கியர் லீவர் மற்றும் பெடல்களில் அதிர்வுகள் இருந்து கொண்டே இருந்தன. மேலும், U-டர்ன் அடித்தால் ஸ்டீயரிங் தானாக சென்டர் வராதது மைனஸ்.

டட்ஸன் கோ....
ஏன் `கோ அவே' ஆனது?
டட்ஸன் கோ....
ஏன் `கோ அவே' ஆனது?

வசதிகள்... அப்படினா?

டட்ஸனின் கடுமையான செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக வெளிப்புறக் கண்ணாடிகளை உள்ளிருந்து அட்ஜஸ்ட் செய்ய முடியாது. பின் பக்கப் பயணிகளுக்கு சீட் பெல்ட்டுகள் தானாக ரிட்டர்ன் ஆகாது. சிங்கிள் வைப்பர், ஜீரோ ஏர்பேக் என்று இருந்த வசதிகளைக் காட்டிலும், மிஸ்ஸிங் அம்சங்களே அதிகம்.

மேலும் பேஸ் மாடலில் பவர் ஸ்டீயரிங், ஏசி போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை. மூன்றாவது வேரியன்ட்டான A (O) -வில் தான் AC வந்தது. மூன்று லட்சம் என்று ஆசை காட்டி ஷோரூமுக்கு வர வைத்திருந்த வாடிக்கையாளர்களிடம், AC வேணும்னா 4 லட்சம் ஆகும் என்று சொல்லி ஏமாற்றியது. இந்தத் தந்திரம், இந்திய கார் வாடிக்கையாளர்களுடன் சுத்தமாக பொருந்தவில்லை.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள்

கோ-வைத் தொடர்ந்து, டட்ஸன் இந்தியாவில் கோ+ காம்பாக்ட் எம்பிவியை 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. கோ மற்றும் கோ+ இரண்டும் குறைந்த விலை மைக்ரா ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. 2018-ல் ஒரு ஃபேஸ்லிஃப்ட் பெற்றது. லேசாக மேக்அப் போட்டு, உட்புறத்தில் கூடுதல் அம்சங்கள் சேர்ந்தன. மேலும், 2019-ல் CVT தானியங்கி கியர்பாக்ஸுடன் புதுப்பிக்கப்பட்டு, மிகவும் விலை குறைவான CVT என்ற பெயர் பெற்றது. BS-6 விதிமுறைகளுக்கு ஏற்ப ஏப்ரல் 2020 இல் கோ மற்றும் கோ+ புதுப்பிக்கப்பட்டது.

தோல்விக்கு என்ன காரணம்?

கோ ஹேட்ச்பேக் மட்டுமல்ல, டட்ஸன் பிராண்ட் இந்தியாவில் தொடங்கவே இல்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. டட்ஸன் பிராண்ட் அறிமுகமான போது, இந்தியாவில் நிஸானின் விநியோகம், விற்பனை மற்றும் சர்வீஸ் பங்குதாரரான ஹோவர் ஆட்டோமோட்டிவ் இந்தியா (HAI) நிறுவனத்திற்கும், நிஸானுக்கும் இடையே விவாகரத்து நிகழ்ந்தது. இதனால், ஆரம்பத்திலேயே குழப்பமான ஒரு தொடக்கத்தைப் பெற்றிருந்தது டட்ஸன்.

இது நிர்வாகக் குழப்பம் என்றாலும், வாடிக்கையாளர்களிடம் எந்தத் தீவிரமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததற்குக் காரணம், ஒரு நேர்த்தியான தயாரிப்பாக இல்லாமல், வெளியே தெரியும்படியான வெல்டிங் மற்றும் வயரிங், மோசமான பிளாஸ்டிக் தரம் ஆகியவற்றால் அவதிப்பட்டது கோ.

டட்ஸன் கோ....
ஏன் `கோ அவே' ஆனது?

இந்தத் தவறை எல்லாம் உணர்ந்து, BS6 மாடலில் ஓரளவுக்குத் தரத்தை உயர்த்தி இருந்தாலும், அது விற்பனைக்கு உதவவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே டாடா நானோ போன்று மலிவு விலை கார்களை வாங்குவது இமேஜ் பிரச்னையாக இருந்தது. கோ ஹேட்ச்பேக் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, குளோபல் NCAP சோதனையில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, இந்தியாவில் விற்பனையில் இருந்து ரீ -கால் செய்யுமாறு நிஸானை வலியுறுத்தியது NCAP. டட்ஸன் கார்களின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் எழுந்ததால், பிராண்ட் இமேஜ் மேலும் மொத்தமாக அதலபாதாளத்துக்குச் சென்றது.

உலகளாவிய விற்பனையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா மற்றும் இந்தோனேஷியாவில் டட்ஸன் மாடல்களின் உற்பத்தியை நிஸான் ஏற்கனவே நிறுத்தி விட்டது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும்தான் டட்ஸன் செயல்பட்ட கடைசிச் சந்தையாக இருந்தது. இந்தியாவில் டட்ஸன் பிராண்டை விற்பனையில் இருந்து நிறுத்திவிட்டாலும், ஓரகடத்தில் தயாரிக்கப்படும் கார்கள் இன்னமும் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கிறது. எனவே, டட்ஸன் உரிமையாளர்களுக்குத் தொடர்ந்து ஸ்பேர்ஸ் மற்றும் சர்வீஸ் வழங்குவோம் என்று சொல்லியிருக்கிறது.

டட்ஸன் மற்ற கார் தயாரிப்பாளர்களுக்கு நினைவூட்டியது ஒன்றுதான். இந்திய வாடிக்கையாளர்களை மலிவான கார்கள் ஈர்ப்பதில்லை. அவர்கள் தரமான கார்களை, சரியான விலையில்தான் எதிர்பார்க்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism