கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

குட்டி ஸைலோ... என்ன ஆனது நுவோஸ்போர்ட் காருக்கு?

மஹிந்திரா நுவோஸ்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மஹிந்திரா நுவோஸ்போர்ட்

ஃப்ளாப் கார் : மஹிந்திரா நுவோஸ்போர்ட்

ந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் சமீபத்திய வரலாற்றில், ஒரு கார் விற்பனைக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் அதன் தயாரிப்பு நின்றுபோன சோகம் மஹிந்திரா நுவோஸ்போர்ட்டுக்கு உண்டு. இந்த மாத மிஸ் லிஸ்ட்டுக்குத் தேர்வாகியிருக்கும் நுவோஸ்போர்ட் SUV, ஏன் சொதப்பியது?

மஹிந்திரா & மஹிந்திரா, குவான்ட்டோவை ஃபேஸ்லிஃப்ட் செய்துதான் நுவோஸ்போர்ட் என பெயர் மாற்றியது மஹிந்திரா. நியூமராலஜிபடியோ என்னவோ, மஹிந்திரா தன் வாகனங்களுக்கு ‘ஓ’ சத்தத்துடன் முடியும் வகையில் பெயர் சூட்டும். அதிலிருந்து விலகி ‘நுவோஸ்போர்ட்’ எனப் பெயர் வைத்தது ஆச்சரியம்தான்.

குட்டி ஸைலோ... என்ன ஆனது நுவோஸ்போர்ட் காருக்கு?

முதல் கோணல் முற்றிலும் கோணல்

ஏற்கெனவே கூறியதுபோல சொற்ப எண்ணிக்கையில் விற்பனையான குவான்ட்டோவின் வெர்ஷன் 2.0தான் நுவோஸ்போர்ட். அப்படியென்றால் குவான்ட்டோ எப்படி வந்தது எனத் தெரிந்து கொள்வது அவசியமல்லவா?

ஜனவரி 2012 ஆட்டோ எக்ஸ்போவில், முதன்முதலாக எக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்டைக் காட்சிப்படுத்தியது ஃபோர்டு. கூடவே, ரெனோவும் டஸ்ட்டரை வைத்து ஆழம் பார்த்தது. வரப் போகும் காலகட்டத்தில் காம்பேக்ட் எஸ்யூவிகள்தான் ட்ரெண்டிங் ஆகும் என உஷாரான மஹிந்திராவுக்கு, அப்பாவி ஆட்டோக்காரத் தம்பியாகக் கண்ணில் பட்டது ஸைலோ. ஸைலோவின் டிக்கி பகுதியை 4 மீட்டருக்குள் வருமாறு வெட்டி எடுத்து, சிறிய கார்களுக்கான வரிச்சலுகையுடன் அவசர அவசரமாக 2012 பண்டிகைக் காலத்தில் குவான்ட்டோவை விற்பனைக்குக் கொண்டு வந்தது மஹிந்திரா.

குட்டி ஸைலோ... என்ன ஆனது நுவோஸ்போர்ட் காருக்கு?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸைலோவின் எடை 1,875 கிலோவாகவும், குவான்ட்டோவின் எடை 1,640 கிலோவாகவும் இருந்தது. அதாவது, ஒரு ஸ்டாண்டர்டு 7 சீட்டர் MPV-க்கும் ஒரு காம்பேக்ட் SUV-க்கும் சுமார் 200 கிலோ தான் எடை வித்தியாசம். ஆட்டோமொபைல் இதழ்கள் குவான்ட்டோவை ஓட்டிப் பார்த்து நெகட்டிவ் விமர்சனம் செய்ய, வாடிக்கையாளர்கள் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காருக்காகக் காத்திருந்தனர். இப்படி நூல் பிடித்துச் சென்று பார்த்தால், 2009-ன் தொடக்கத்தில் வெளியான ஸைலோவுக்குப் பட்டி டிங்கரிங் பார்த்து, 7 ஆண்டுகள் கழித்து 2016-ல் நுவோஸ்போர்ட்டாக சந்தைக்குக் கொண்டு வந்தது மஹிந்திரா. கண்ணாடியைத் திருப்பினால் கார் எப்படி ஓடும் மஹிந்திரா?!

காலம் கடந்த முடிவு

2013-ல் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் வெளியாகி, அதன் செக்மென்ட்டில் பெஸ்ட் செல்லராக முத்திரை பதித்தது. இதேநேரம், குவான்ட்டோ விற்பனையில் பெரிதாகச் சோபிக்கவில்லை. இதனால், கிராமப்புற வாடிக்கையாளர்களைக் குறி வைத்து பொலேரோ போல முரட்டு எஸ்யூவியாக TUV 300-ஐ அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. வடமாநிலங்களில் ஓரளவு நல்ல வரவேற்பை TUV300 பெற்றது என்பது உண்மைதான்.

மஹிந்திரா நுவோஸ்போர்ட்
மஹிந்திரா நுவோஸ்போர்ட்

இந்த நேரத்தில்தான், வகுப்பில் ஃபெயில் ஆகும் மாணவன் டீச்சருக்குத் தலைவலியாய் இருப்பதுபோல, குவான்ட்டோ மஹிந்திராவின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. அப்புறமென்ன, `போடு ஒரு ஃபேஸ்லிஃப்ட்டை’ என குவான்ட்டோவாக பியூட்டி பார்லருக்குச் சென்ற குட்டி ஸைலோ, நுவோஸ்பார்ட்டாக வெளிவந்தது. ஊர்ப்புறங்களுக்கு TUV, நகர்ப்புறத்திற்கு நுவோஸ்போர்ட் என மஹிந்திரா ஏரியா பிரிந்திருந்தது நுவோஸ்போர்ட்டின் டிசைனைப் பார்த்தாலே சொல்லி விடலாம்.

மஹிந்திரா நுவோஸ்போர்ட்டில் இருந்த 3 சிலிண்டர் 1.5 லிட்டர் mHawk டீசல் இன்ஜின், 100bhp பவர் மற்றும் 24.0kgm டார்க்கை உற்பத்தி செய்தது. 5-ஸ்பீடு மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் என 2 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வந்தது. `அதே டெய்லர்; அதே வாடகை’ என்பது போல குவான்ட்டோவின் 1,640 கிலோ எடையுடன், TUV300-ன் பெர்ஃபாமன்ஸுடன் இருந்தது நுவோஸ்போர்ட்.

அதேசமயம், குவான்ட்டோவின் பல மைனஸ்களை நுவோஸ்போர்ட்டில் நிவர்த்தி செய்திருந்தது மஹிந்திரா.

  • குவான்ட்டோவில் இருந்த 15 இன்ச் வீல்களுக்குப் பதிலாக 16 இன்ச் அலாய் வீல்கள் இடம் பெற்றிருந்தன.

  • அதே 1.5-லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் என்றாலும், முன்பைக் காட்டிலும் ஸ்மூத்தாக இருந்தது.

  • செயல்திறனைப் பற்றிப் பேசுகையில், பவர் மற்றும் எக்கோ என இரண்டு டிரைவிங் மோடுகளைக் கொண்டிருந்தது நுவோஸ்போர்ட். பவர் மோடில் 24 kgm, எக்கோ மோடில் 18 kgm டார்க்கையும் உற்பத்தி செய்தது.

  • இன்டீரியரில் கன்ட்ரோல்கள் கொண்ட புதிய ஸ்டீயரிங் வீல் இருந்தது.

  • எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் வகையைச் சேர்ந்தது என்றாலும், நுவோஸ்போர்ட்டின் சென்டர் கன்ஸோலில், புதிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருந்தது.

இத்தனை இருந்தும் மஹிந்திராவுக்கு நேரம் சரியில்லை. 2016 ஏப்ரலில் நுவோஸ்போர்ட் வெளியாவதற்கு முன்னரே, பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி மார்ச் மாதம் விட்டாரா பிரெஸ்ஸாவை விற்பனைக்குக் கொண்டு வந்தது மாருதி. ஒட்டுமொத்த காம்பேக்ட் SUV வாடிக்கையாளர்களையும் பிரெஸ்ஸா தன் பக்கம் இழுத்து மார்க்கெட்டைப் பிடித்தது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக 2017-ல் வந்த டாடா நெக்ஸானும் நல்ல வரவேற்பைப் பெற, மாதம் 300 கார்களைக்கூட விற்க முடியாமல் நுவோஸ்போர்ட்டுடன் ​​போராடிக் கொண்டிருந்தது மஹிந்திரா.

இறுதிச் சுற்று

2017 நவம்பரில் இருந்து, இந்தியா முழுவதும் நுவோஸ்போர்ட்டால் ஒற்றை இலக்க விற்பனையை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. 2018 பிப்ரவரியில், மஹிந்திரா - நுவோஸ்போர்ட்டின் தயாரிப்பை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. டீலர்ஷிப்களில் உள்ள ஸ்டாக் தீர்ந்த பிறகு, இறுதியாக 2018 மே மாதத்தில் இந்தியச் சந்தையில் இருந்து நுவோஸ்போர்ட் நிறுத்தப்பட்டது.