Published:Updated:

லேட்டாக வந்த ஃபிகோ ஆட்டோமேட்டிக்... எப்படி இருக்கு?

Figo
பிரீமியம் ஸ்டோரி
Figo

பர்ஸ்ட் ரைடு: போர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக்

லேட்டாக வந்த ஃபிகோ ஆட்டோமேட்டிக்... எப்படி இருக்கு?

பர்ஸ்ட் ரைடு: போர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக்

Published:Updated:
Figo
பிரீமியம் ஸ்டோரி
Figo

குருப்பெயர்ச்சி போல வருடா வருடம் ஃபிகோவின் ஆட்டோமேட்டிக் மாடலில் இன்ஜின் - கியர்பாக்ஸை மாற்றி வருகிறது ஃபோர்டு. தற்போது மூன்றாவது முறையாக நடந்த கூட்டணி மாற்றத்தில், என்ன மாறி இருக்கிறது, என்ன மாறவில்லை என்பதை பார்ப்போம்.

'செல்லுலார்' கிரில் வடிவமைப்பு, சி-வடிவ ஃபாக் லைட் ஹவுசிங் கொண்ட சுத்தமான முன் பம்பர், மற்றும் சற்று ஸ்போர்ட்டியான ரியர் பம்பர் ஆகியவை ஃபிகோவை மார்டனாக்குகிறது. BS6 மாடல் புதிய டைமண்ட் கட் 15 இன்ச் அலாய் வீல்கள் பெறுகிறது . முன்பைவிட ஃபிகோ ஆட்டோமேட்டிக் இன்னும் ஸ்மார்ட்டாக மாறியிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 2019 ஃபேஸ்லிஃப்ட்டில் அறிமுகமான அதே ஸ்டைலைக் கொண்டுள்ளது ஃபிகோ. டிசைனில் பெரிய வித்தியாசங்கள் இல்லாததால், நேரே இன்ஜினில் இருந்து ஆரம்பிப்போம்.

இன்ஜின் & பர்பாமன்ஸ்

முந்தைய மாடலில் இருந்த 1.5 லி பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக, சிறிய 1.2 லிட்டர் - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது BS-6 ஃபிகோ ஆட்டோமேட்டிக்.

இன்ஜின் உற்பத்தி செய்யும் 96bhp பவர் மற்றும் 11.9kgm டார்க்கை 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்கள் வழியாக வீல்களுக்குக் கடத்துகிறது. இந்த செக்மென்ட்டில் டர்போ இல்லாத பெட்ரோல் இன்ஜின் உற்பத்தி செய்யும் அதிகபட்ச சக்தி இதுதான்.

போட்டியாளர்களின் AMTகளைவிட வேகம் உருவெடுக்கும் விதம் சீராக உள்ளது. ஃபிகோவின் மேனுவல் மாடல் 2,500rpm-க்குக் கீழே மந்தமாக இருக்கும். அதை மறைப்பதற்காக முதல் மூன்று கியர்களுக்குக் குறுகிய விகிதத்தைக் கொடுத்துள்ளது ஃபோர்டு. இந்த டெக்னிக் கை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், நகரத்தில் ஓட்டுவதற்கு மிகவும் அழகாக இருக்கிறது ஃபிகோ.

டிரான்ஸ்மிஷனில் ஸ்போர்ட் மோட் உள்ளது. இதில் கியர்பாக்ஸ் 6,500rpm ரெட் லைன் வரை அடுத்த கியருக்கு மாற்றாமல் ஹோல்டில் வைத்துள்ளது. கியர் லீவரில் உள்ள '+' & '-' பொத்தான்கள் மூலம் கியர் மாற்றங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஸ்போர்ட்ஸ் மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கும் அதேவேளையில், நகரப் பயணங்களுக்கு இது மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதை நீங்கள் உணரலாம்.

கியர் லீவரில் உள்ள ப்ளஸ் மைனஸ் பட்டன் மூலம் மேனுவல் டிரைவாகவும் ஓட்டிக் கொள்ளலாம்.
கியர் லீவரில் உள்ள ப்ளஸ் மைனஸ் பட்டன் மூலம் மேனுவல் டிரைவாகவும் ஓட்டிக் கொள்ளலாம்.
ஃப்ரீ ஸ்டாண்டிங் 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் அருமை.
ஃப்ரீ ஸ்டாண்டிங் 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் அருமை.
Figo Automatic
Figo Automatic

வசதிகள் & சிறப்பம்சங்கள்

உள்ளே நுழைந்தால், ஃபேஸ்லிஃப்ட் கார் போலவே கேபின் முழுக்க கருப்பு நிறத்தில் உள்ளது. ஸ்டீயரிங், கியர் லீவர் நாப் மற்றும் கதவு பேனல்கள் ஆகியவை பழசாக இருக்கும் வேளையில், டேஷ்போர்டில் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் பியானோ கறுப்பு ட்ரிம், முதியவரின் தலையில் டை அடித்ததுபோல வயதை மறைக்க முயற்சி செய்கிறது.

இதே கதைதான் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலும் தொடர்கிறது. 7.0 இன்ச் டச் ஸ்கிரீனின் UI ரெஸ்பான்ஸிவ்வாக உள்ள அதே வேளையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு இல்லை. AUX, புளூடூத் என இன்னும் 90-ஸ் கிட்ஸாகவே இருக்கிறது பிகோ.

ஆறுதல் வசதி அம்சங்களாக கீ ஃபோப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற பார்க்கிங் கேமரா, ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் என்று வசதிகள் உண்டு. கேபின் உள்ளே இருக்கும் ஸ்விட்ச் வழியாக எலெக்ட்ரிக்கலாக டெயில்கேட் ரிலீஸ் ஆகும். சிறிய 257 லிட்டர் டிக்கி ஓகே. என்ன, லோடிங் லிப் உயரமாக இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்ஸ், கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ் போன்ற நவீன வசதிகள் எதுவும் இல்லை.

ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்பது ப்ளஸ் என்றால், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் இல்லாதது மைனஸ். முன் இருக்கைகள் நல்ல குஷனிங் மற்றும் தொடைக்கு சப்போர்டுடன் வசதியாக உள்ளது. பின்புற இருக்கைகள் தொடைக்கு சப்போர்ட் தருவதுடன், முன் இருக்கைகள் ஸ்கூப்-அவுட் செய்யப்பட்டுள்ளதால் காலின் முட்டி இடிக்கவில்லை. இருப்பினும், பின்னே சாயாமல் நேராக இருப்பதோடு, கூரையும் கீழே வளைவதால், உயரமான பயணிகளுக்கான ஹெட்ரூம் இறுக்கமாக இருக்கும்.

ஃபிகோ ஆட்டோமேட்டிக் மிட்-ஸ்பெக் டைட்டானியம் மற்றும் டாப்-ஸ்பெக் டைட்டானியம்+ வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது. ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் என இந்த செக்மென்ட்டில் பாதுகாப்பு அம்சங்களைத் தருவதில் சிறந்ததாக உள்ளது. ஃபோர்டு ஃபிகோ இதுவரை NCAP க்ராஷ் டெஸ்ட்டில் சோதனையிடப்படவில்லை என்றாலும், அதன் செடான் உடன்பிறப்பான ஆஸ்பயர், 2017-ம் ஆண்டில் GNCAP- ல் 3 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

Figo
Figo

ஃபிகோ ஆட்டோமேட்டிக் எப்படி?

இந்த ஃபிகோவின் ARAI மைலேஜ் - 16 கிமீ. இது அதன் மேனுவல் மாடலைவிட 2.5 கிமீ குறைவு.

ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. டைட்டானியம் 7.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டைட்டானியம்+ AT 8.20 லட்சம். இதன் போட்டியாளர்களான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் AMT (ரூ. 7.23 லட்சம்) மற்றும் ஸ்விஃப்ட் ZXi AMT (ரூ. 7.64 லட்சம்). ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது விலை அதிகமாக உள்ளது. அதேசமயம், டாப்- எண்ட் ஃபிகோ டைட்டானியம்+, நியோஸ் ஆஸ்டா AMT-யை (ரூ .7.86 லட்சம்) விட விலை அதிகமாக இருந்தாலும், ஸ்விஃப்ட் ZXi+ (ரூ.8.42 லட்சம்) மாடலைவிடக் குறைவாகவே உள்ளது.

வலுவான பில்டு குவாலிட்டி மற்றும் முழுமையான டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஓட்டுதல் அனுபவம் வேண்டும் என்பவர்கள், கண்டிப்பாக ஃபிகோ ஆட்டோமேடிக்கை டெஸ்ட் டிரைவ் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.