ஃபோர்டு... ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் மனதில் எப்போதும் தனி இடம்பிடித்திருக்கும் பெயர் இது. காரணம், ஃபோர்டு கார்கள் சிறந்த ஓட்டுதல் தரத்துக்கு( Fun to drive) பெயர் பெற்றவை. இந்தியாவில் ஐகான், ஃபியஸ்ட்டா, ஃபிகோ, எக்கோஸ்போர்ட் என ஃபோர்டு அறிமுகப்படுத்திய பல கார்களும் மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட். அப்படிப்பட்ட ஃபோர்டு, இந்தியாவில் தனது கார் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்திருப்பது ஆட்டோமொபைல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள சனாந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வருகிறது. இனிமேல் இந்தியாவில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை; ஏற்றுமதியும் செய்யப்போவதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது ஃபோர்டு. இதைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளத்திலும் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது ஃபோர்டு.

ஃபோர்டுக்கு என்னாச்சு?
சமீபகாலமாக மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு வைத்து கார்களைத் தயாரிப்பதாக ஒரு செய்தி அடிபட்டு வந்தது. அக்டோபர் 2019–ல் இதற்கான ஒப்பந்தமும் தயாரானது. ஆண்டுக்கு 4 லட்சம் கார்களைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமெல்லாம் போடப்பட்டது. ஃபோர்டு – மஹிந்திரா கூட்டணியில் ஒரு எஸ்யூவியெல்லாம் ரெடியாகி கான்செப்ட் மாடலும் வைரல் ஆனது. ஆனால், என்ன ஆனதோ ஃபோர்டு - மஹிந்திரா ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராமல் டிசம்பர் 2020–ல் ஒப்பந்தம் முறிந்து போனது.
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸுக்கு அடுத்து ஃபோர்டும் இந்தியாவில் தனது தயாரிப்பை நிறுத்தியிருப்பதற்கான முக்கியமான காரணம் தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப் போதுமான கட்டமைப்பும், திட்டமும் இல்லாததுதான் என்கிறார்கள். இரண்டு யூனிட்டிலும் சேர்த்து ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் தயாரிக்க வேண்டிய இடத்தில், வெறும் 80,000 கார்கள் மட்டும்தான் சமீபகாலமாக தயாராகி வந்தது. அதாவது வெறும் 20 சதவிகிதம் கார்களே தயாரிக்கப்பட்டன.
‘‘இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்தும், எங்களுக்கு இந்த 10 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகி விட்டது. புது வாகனங்களுக்கான எங்கள் வாடிக்கையாளர்களும் குறைந்து விட்டார்கள்!’’ என்கிறார் ஃபோர்டு இந்தியாவின் தலைவர் மற்றும் CEO ஜிம் ஃபேர்லி.
மறைமலை நகர் தொழிற்சாலையை ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள தொழிற்சாலை மிகவும் நவீனமானது. சமீபத்தில் தொடங்கப்பட்டது என்பதால், உலகத் தரத்துக்கு இங்கே கார்கள் தயாரிக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இங்கே இந்தியாவுக்கு ஏற்றபடி கார்களை குறைந்த தயாரிப்பு செலவில் உருவாக்க முடியாததால் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கவில்லை. அதனால்தான், ஃபோர்டின் விலை உயர்ந்த கார்களான எண்டேவர் மற்றும் எக்கோஸ்போர்ட்டைக்கூட சென்னைத் தொழிற்சாலையிலேயே தொடர்ந்து உற்பத்தி செய்துவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலேயே இருக்காதா?
''இந்தியாவில் எங்கள் தடம் இருந்து கொண்டே இருக்கும்’’ என்கிறது ஃபோர்டு. அதாவது, கார்களைத்தான் தயாரிக்கப் போவதில்லை. இறக்குமதி செய்து CBU (Completely Built Unit) முறையில் கார்களை விற்கப் போகிறதாம் ஃபோர்டு. ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளில் விற்பனை செய்வதைப் போலவே, கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஃபோர்டின் காஸ்ட்லியான மஸ்டாங் ஹைபிரிட், Mach-e எலெக்ட்ரிக், பிரான்க்கோ, ரேஞ்சர் பிக்–அப் ட்ரக் போன்றவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்ய இருக்கிறது ஃபோர்டு. (இந்த ரேஞ்சர் பிக்–அப்தான் இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வருவதாக இருந்தது).
இதுபோக ஃபியட் நுழைந்ததுபோல் இன்ஜீனியரிங், இன்ஜின் மெக்கானிஸம், தொழில்நுட்பம் போன்றவற்றில் தனியாக நுழைய இருக்கிறதாம் ஃபோர்டு. எப்படி இருந்தாலும் ஃபோர்டின் இந்த முடிவால் சுமார் 4,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கார் தயாரிப்பை நிறுத்தினாலும் டீலர்ஷிப்கள், சர்வீஸ் சென்டர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை போன்றவை வழக்கம்போல் இயங்கும் என அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு ஃபோர்டு கார் உரிமையாளராக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை என்கிறது அந்நிறுவனம். காருக்கான வாரன்ட்டி, சர்வீஸ், உதிரிபாகங்கள் இறக்குமதி போன்றவற்றுக்கு ஃபோர்டு நிச்சயம் பொறுப்பேற்குமாம்.

இந்தியாவில் இனிமேல் ஃபோர்டு கார்கள் நடுத்தரவாசிகளுக்கானதாக இருக்காது என்பதுதான் உண்மை.
‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தின் ஒரு பாகத்தில் காஸ்ட்லியான ஒரு காரை ஓட்டும் வில்லனிடம் பால்வாக்கர், அதன் விலையைக் கேட்பார். அதற்கு இப்படிச் சொல்வார் அந்த வில்லன்: ‘‘It’s more than you can afford Paul...”
இந்தியாவிலும் அப்படித்தான் நடக்கப் போகிறது.