Published:Updated:

ஹைலேண்டர் இந்தியாவுக்கு வரும்போது...

டொயோட்டா ஹைலேண்டர்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா ஹைலேண்டர்

வெளிநாட்டு கார்: டொயோட்டா ஹைலேண்டர்

ஹைலேண்டர் இந்தியாவுக்கு வரும்போது...

வெளிநாட்டு கார்: டொயோட்டா ஹைலேண்டர்

Published:Updated:
டொயோட்டா ஹைலேண்டர்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா ஹைலேண்டர்
ஹைலேண்டர் இந்தியாவுக்கு வரும்போது...

டொயோட்டாவின் இரு பிரபல யுடிலிட்டி வாகனங்களான இனோவா மற்றும் ஃபார்ச்சூனரின் தற்போதைய ஜென் மாடல் 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இனோவாவுக்கு 2020 - லும், பார்ச்சூனருக்கு 2021 - லும் சிறிய ஃபேஸ்லிஃப்ட் கொடுத்தது. கிட்டத்தட்ட 6 வருட பழைய மாடல்களினால் நமக்குச் சலிப்பு தட்டிவிட்டது. `இனோவா, ஃபார்ச்சூனரைத் தாண்டி 7 சீட் எஸ்யூவி இல்லையா?’ என்றால், இரண்டையும் கலந்ததுபோலவே ஒரு எஸ்யூவி உள்ளது. அமெரிக்காவில் பிரபலமான ஹைலேண்டர் எஸ்யூவியைச் சமீபத்தில் UK -வுக்குக் கொண்டுவந்துள்ளது டொயோட்டா. அப்படியே இது இந்தியாவுக்கு வந்தால் எப்படி இருக்கும்?

டிசைன்

ஸ்கோடா கோடியாக் மற்றும் MG கிளாஸ்டர் போன்ற பெரிய 7 சீட்டர் எஸ்யூவி ஆடியன்ஸை ஹைலேண்டர் இலக்காகக் கொண்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தில் இன்னோவாவை விட ஸ்போர்ட்டியாக இருக்கும் அதே சமயத்தில், ஃபார்ச்சூனரைவிட அடக்கியே வாசிக்கிறது. கியா எஸ்யூவிகளின் ஆர்ப்பாட்டமான டிசைன் அம்சங்கள் இல்லாமல், வழக்கமான எஸ்யூவி தோற்றத்தையே கொண்டுள்ளது ஹைலேண்டர்.

டொயோட்டா ஹைலேண்டரின் கேபின், லக்ஸூரி பிராண்ட் எஸ்யூவி போல ஆடம்பரமாக இல்லை. ஆனால் இது செயல்பாட்டுக்குச் சிறந்ததாக உள்ளது. உதாரணத்துக்கு, AC கன்ட்ரோல் கூட டச் ஸ்க்ரீன் மெனுவுக்குப் பின் ஒளித்து வைக்காமல், பட்டன்கள் கொடுத்திருக்கின்றனர். இதன் சைடு எஃபெக்ட்டாக, சென்டர் கன்சோல் பார்ப்பதற்கு ஏதோ பழைய மாடல் காரில் உள்ளதுபோல் இருக்கிறது.

இடவசதி

டொயோட்டா ஹைலேண்டர், ஏழு இருக்கைகளுடன் பயன்படுத்தக்கூடிய பூட் ஸ்பேஸை வைத்திருக்கும் சில எஸ்யூவி-களில் ஒன்றாகும். ஹைலேண்டரில் முன்பக்கப் பயணிகளுக்கு நிறைய இடவசதி இருப்பதுடன், பின்பக்கப் பயணிகளிடம் இருந்து உங்களுக்கு இடவசதியில் எந்தப் புகாரும் இருக்காது. ஏனென்றால், நடுத்தர வரிசையானது தாராளமான லெக்ரூமை வழங்குகிறது. குறிப்பாக, குஷன் நிறைந்த சாயும் இருக்கைகளைப் பின்னே தள்ளிக் கொள்ளலாம். 180மிமீ முன்புறமும் இழுத்துக் கொள்ளலாம் என்பதால், சீட்டை மடக்காமலேயே மூன்றாம் வரிசையை அடையலாம்.

மற்ற எஸ்யூவிகளைப்போலவே, மூன்றாவது வரிசைக் குழந்தைகளுக்குச் சிறந்தது என்றாலும், சிறிய பயணங்களில் பெரியவர்களும் பயணிக்க முடியும். வீல்பேஸ் மற்றும் அகலத்தை வைத்துப் பார்க்கும்போது, கடைசி வரிசை ஸ்கோடா கோடியாக்கைக் காட்டிலும் இடவசதி நிறைந்ததாகத் தெரிகிறது. டொயோட்டா ஹைலேண்டரில் மூன்றாவது வரிசையிலும் புஷ்பேக் சீட் உள்ளது. லேண்ட்ரோவர் டிஸ்கவரியின் பேஸ் மாடலில்கூட இல்லாத அம்சம் இது.

தலைக்கு மேலே இருக்கும் பனோரமிக் சன்ரூஃப் காற்றோட்டமான உணர்வைத் தருகிறது. ஹைலேண்டரின் அகலமான பாடியுடன், தட்டையான தளம் சேருவதால், நடுவரிசையில் மூன்று பெரியவர்கள் வசதியாக உட்காரலாம்.

டொயோட்டா ஹைலேண்டரின் முன்புறத்தில் போதுமான அளவு சேமிப்பு இடங்கள் உள்ளன. சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டின் கீழ் பெரிய க்ளோவ் பாக்ஸ் உள்ளது. அதில் ஸ்மார்ட்போனை சார்ஜ் ஏற்ற வயர்லெஸ் சார்ஜர் உள்ளது. சைடு டோர் பாக்கெட்டில் வைக்கப்படும் பொருட்கள் நகரும்போது சத்தம் இடுவதைத் தடுக்க, துணி லைனிங்கைக் கொண்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, பின்புறப் பயணிகள் பொருட்களை வைக்க முன் இருக்கைகளின் பின்னே உள்ள பாக்கெட் மட்டும் உள்ளது. டெயில்கேட்டைத் திறந்தால், உள்ளே 332 லி பூட் இடவசதிதான் இருந்தது. இதில் பெரிய ஷாப்பிங் பைகள்கூட வைக்க முடியாது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆறாவது மற்றும் ஏழாவது பயணிகளின் சீட்டை மடக்கி விட்டால், 865 லி பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. இது ஆடி Q7-யை விட அதிகம். இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள் தரையோடு தரையாக மடிவதால், ஒரு அபார்ட்மென்ட்டைக் காலி செய்து இடம் மாற்றுவதற்குத் தேவையான 1,909 லி கொள்ளளவு கிடைக்கிறது.

ஹைலேண்டர் இந்தியாவுக்கு வரும்போது...

இன்ஜின் & பெர்ஃபாமன்ஸ்

டொயோட்டா ஹைலேண்டரில் 2.5-லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இரண்டு மின்சார மோட்டார்கள் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று முன் சக்கரங்களுக்கு; மற்றொன்று பின் சக்கரங்களுக்கு. இன்ஜினில் இருந்து முன்புற வீல்களுக்கு மட்டும்தான் நேரடியாக பவர் செல்கிறது. இது பிளக்-இன் ஹைபிரிட் இல்லை என்றாலும், டொயோட்டா கேம்ரியைப்போல ஸ்டார்ட் செய்து சிறிது தூரத்திற்கு முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் மோடில் பயணிக்கும். நீங்கள் ஆக்ஸலரேட்டரை மிதிக்கும்போது, பெட்ரோல் இன்ஜின் உயிர்த்தெழும். இதனால், மிதமான வேகங்களில் தொடர்ந்து ஓட்டும்போது காம்பேக்ட் டீசல் எஸ்யூவி - க்கு நிகராக 15 - 17 கிமீ மைலேஜ் தரும்.

ஒட்டுமொத்த பவர் 246bhp என்றாலும், இரண்டு டன் எஸ்யூவியை இழுக்க வேண்டும் என்பதால், செயல்திறன் நன்றாக இருக்கும் அதே சமயம், உற்சாகமாக இல்லை என UK கார் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஹைலேண்டர் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உற்சாகமாக ஓட்டுவதற்கு அவ்வளவு சிறந்ததாக இருக்காது. அதேசமயம், நகரத்துக்குள் குறைந்த வேகத்தில் பயணிக்க அற்புதமாக இருக்கும்.

ஏன் இந்தியாவுக்கு வர வேண்டும்?

டொயோட்டா இப்போது வரை எலக்ட்ரிக் வாகனங்களைக் காட்டிலும், ஹைபிரிட் வாகனங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. ஏனென்றால், அதன் தாய் நாடான ஜப்பானில், பெட்ரோல் - டீசலுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறாமல், மக்கள் ஹைட்ரஜன் செல் கார்களைப் பயன்படுத்துகின்றனர்.

எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலம் என்பதும் டொயோட்டாவுக்குத் தெரியும். இதன் அடிப்படையில்தான், மே இரண்டாம் வாரம் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.. அதன்படி, 4,800 கோடி மதிப்பீட்டில் ஹைபிரிட், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையை நிறுவ இருக்கிறது டொயோட்டா நிறுவனம்.

குவாலிஸ், இனோவா, ஃபார்ச்சூனர் என UV செக்மென்ட்டில் எப்போதும் டொயோட்டாதான் ரூட்டு தல. தற்சமயம் கியா, MG போன்ற தயாரிப்பாளர்கள் பெரிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளைத் தயார் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், குடும்பத்துடன் நெடுந்தூரம் பயணிக்கும் அளவுக்கு இன்னும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரிவடையவில்லை. எனவே, புதிய ஆலையில் லோக்கலைசேஷன் செய்து 60 லட்சத்துக்குள் ஹைலேண்டரைக் கொண்டு வந்தால், டொயோட்டா மறுபடியும் ட்ரெண்ட் செட்டர் ஆகலாம்!

ஹைலேண்டர் இந்தியாவுக்கு வரும்போது...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism