Published:Updated:

விபத்துகளினூடே... லூயிஸுக்கே சவால் விட்ட எஸ்டபன்!

எஸ்டபன் ஓகான்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்டபன் ஓகான்

ரேஸ்: ஃபார்முலா 1

விபத்துகளினூடே... லூயிஸுக்கே சவால் விட்ட எஸ்டபன்!

ரேஸ்: ஃபார்முலா 1

Published:Updated:
எஸ்டபன் ஓகான்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்டபன் ஓகான்

2021 ஃபார்முலா 1 சீஸன் போகப் போக விபத்துக்களின் களமாக மாறிக்கொண்டிருக்கிறது. சில்வர்ஸ்டோனின் முதல் லேப்பிலேயே லூயிஸ் ஹாமில்ட்டன், மேக்ஸ் வெர்ஸ்டப்பன் இருவரின் கார்களும் மோதி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹங்கேரி கிராண்ட் ப்ரீ அதை விடப் பெரிய அசம்பாவிதத்தைச் சந்தித்திருக்கிறது. அதன் விளைவாக ஒரு புதிய வெற்றியாளரையும் உருவாக்கியிருக்கிறது.

ரெட்புல், மெர்சிடீஸ் அணிகளுக்கு இடையிலான இடைவெளியும், வெர்ஸ்டப்பன், ஹாமில்டன் ஆகியோருக்குமான இடைவெளியும் குறைந்து கொண்டிருந்ததால், இந்த ரேஸின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. தகுதிச்சுற்றின் முடிவில் இரண்டு மெர்சிடீஸ் கார்கள் முதலிடத்திலும், ரெட்புல் கார்கள் மூன்றாவது, நான்காவது இடங்களிலும் முடித்திருந்தன. அதனால், எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. சில்வர்ஸ்டோன் போல் முதல் லேப்பில் இருந்தே அனல் பறக்கும் என்று கருதப்பட்டது. எதிர்பார்த்தது நடக்கவும் செய்தது.

சில்வர்ஸ்டோனில் ஹாமில்ட்டனின் மெர்சிடீஸில் மோதி ரெட்புல்லின் ரேஸ் பாழானதெனில், ஹங்கேரியில் போட்டாஸின் மெர்சிடீஸ் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த சீஸனில் தொடர்வதுபோல், இந்த ரேஸிலும் போட்டாஸுக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் வளைவுக்கு முன்பாகவே வெர்ஸ்டப்பன், செர்ஜியோ பெரஸ், லாண்டோ நாரிஸ் அனைவரும் அவரை முந்திவிட்டனர். அந்த நெருக்கடியில் இருந்தவர், முதல் வளைவின்போது தாமதமாக பிரேக் அழுத்தி, ஒரு மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தினார்.

அவருடைய கார் முன்னால் சென்று கொண்டிருந்த நாரிஸின் காரில் இடிக்க, அந்த இளம் மெக்லரன் டிரைவரின் காரோ வெர்ஸ்டப்பனின் காருடன் மோதியது. இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, லான்ஸ் ஸ்ட்ரோலும் அதே தவறைச் செய்தார். அவருடைய கார் சார்லஸ் லெக்லர்க் காரில் மோத, அந்தக் கார் டேனியல் ரிக்கியார்டோவின் மெக்லரனில் மோதியது. முதல் வளைவுக்குள்ளாகவே இரண்டு ரெட்புல், இரண்டு மெக்லரன், 1 ஃபெராரி, 1 மெர்சிடீஸ், 1 ஆஸ்டன் மார்ட்டின் என 7 கார்கள் விபத்தைச் சந்தித்தன.

Safety Car, சிவப்புக் கொடி என நிறுத்தத்துக்குப் பிறகுதான் ரேஸ் தொடர்ந்தது. அதற்குள்ளாகவே 5 டிரைவர்கள் விலகியிருந்தனர். வெர்ஸ்டப் பனின் கார் பலத்த சேதமடைந்திருந்தாலும் அவர் ரேஸை தொடர்ந்தார். ட்ராக் சுத்தம் செய்யப்பட்டபிறகு கிரிட்டில் இருந்தே ரேஸ் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

ஃபார்மேஷன் லேப் முடிந்ததும், ஹாமில்ட்டன் தவிர்த்து அத்தனை டிரைவர்களும் பிட் லேனுக்குள் நுழைந்தனர். ரேஸ் தொடங்கியபோது ட்ராக் ஈரமாக இருந்ததால், எல்லோருமே intermediate டயரோடுதான் போட்டியைத் தொடங்கியி ருந்தனர். மீண்டும் ரேஸ் தொடர்ந்தபோது ட்ராக் ஓரளவு காய்ந்திருந்தது. அதனால், வழக்கமான டயர்களுக்கு மாற அனைவரும் பிட்டுக்குள் நுழைந்தனர். ஹாமில்ட்டன் மட்டும் பிட் எடுக்காததால், அந்த ரீஸ்டார்ட்டின்போது அவர் மட்டும் கிரிட்டில் இருந்தார். ஆனால், அந்த லேப் முடிந்தபோதே சூழ்நிலை உணர்ந்து பிட்டுக்குள் நுழைந்தார் ஹாமில்ட்டன். டயர்கள் மாற்றி வெளியேறியபோது கடைசி இடத்துக்குச் சென்றுவிட்டார்.

ஃபார்முலா 1 விபத்து
ஃபார்முலா 1 விபத்து
ஃபார்முலா 1
ஃபார்முலா 1

பிட்டில் இருந்து தொடங்கிய வீரர்களில் ஜார்ஜ் ரஸல், எஸ்டபன் ஓகான் முதல் இரண்டு இடங்களில் இருந்தனர். ஆனால், ஜார்ஜ் ரஸல் மற்ற வீரர்களை அண்டர்கட் செய்ததால், அவரை சில இடங்கள் பின்தங்கச் சொல்லி அறிவுறுத்தியது ஃபார்முலா ஒன் நிர்வாகம். நான்காவது லேப் முடிவுக்கு வந்தபோது முதலிடத்துக்கு முன்னேறியிருந்தார் ஓகான். செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்திலிருந்தார்.

சரி, ட்ராக்கில் விபத்துகள் ஓய்ந்துவிட்டன என்று நினைத்தால், பிட் லேனிலும் ஒரு விபத்து ஏற்பட்டது. 14-வது லேப்பின்போது பிட் ஸ்டாப் செய்திருந்தார் கிமி ராய்க்கோனன். அப்போது பிட்டுக்குள் ஹாஸ் வீரர் நிகிதா மேஸபின் நுழைந்து கொண்டிருக்க, ராய்க்கோனனை ரிலீஸ் செய்துவிட்டது ஆல்ஃபா ரோமியோ அணி. அந்த கார் மோதி மேஸபினின் கார் பழுதாக, அவர் ரேஸிலிருந்து வெளியேறினார். ஆறாவது டிரைவர் அவுட்.

ஹாமில்ட்டன், வெர்ஸ்டப்பன் இருவருமே டாப் -10 பொசிஷன்களுக்கு வெளியே இருந்தததால், பெரிய டிராமாக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெர்ஸ்டப்பனின் கார் பெரிய அளவில் பழுதடைந்திருந்ததால், அவரால் எந்த மேஜிக்கும் நிகழ்த்த முடியவில்லை. சொல்லப்போனால் மிக் ஷுமேக்கரை முந்தவே அவர் பெரும் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருந்தது. அதேசமயம், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கினார் நடப்பு சாம்பியன் ஹாமில்ட்டன். 19-வது லேப்பில் மீண்டும் பிட் எடுத்து ஹார்ட் டயருக்கு மாறியவர், புயலெனப் பாயத் தொடங்கினார். சட்டென ஐந்தாம் இடத்துக்கு முன்னேறினார். அதன்பிறகுதான் ரேஸின் உச்சகட்ட தருணம் அரங்கேறியது.

புதிதாக ஃபார்முலா ஒன் பார்ப்பவர்களுக்குத் தான் யார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினார் மார்கோஸ் அலோன்ஸோ. செபாஸ்டியன் வெட்டல் என்ற மகத்தான சாம்பியனோடு மல்லுக்கட்டி, முதலிடத்தைச் சிறப்பாகத் தக்க வைத்துக்கொண்டிருந்தார் ஓகான். இருந்தாலும், அலோன்ஸோவின் உதவி இல்லாமல் அவரால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஏனெனில், ஹாமில்ட்டன் கோதாவின் இறங்கியிருந்தால் ஓகானால் டிஃபண்ட் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், ஹாமில்ட்டனை அந்தப் போட்டியிலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தார் அலோன்சோ. அதுவும் கிட்டத்தட்ட 12 லேப்களுக்கு!

மகத்தான இரண்டு வீரர்கள் மல்லுக் கட்டுவதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அட்டகாசமாக இருந்தது. ஒவ்வொரு வளைவிலும் இன்சைட், அவுட்சைட் என கட் செய்யப் பார்க்கிறார் லூயிஸ். முடியவில்லை. நேர் செக்டார்களில் தன் வேகத்தால் முந்தப் பார்க்கிறார். முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் தான் காட்டிய வித்தையையெல்லாம் அந்த பத்து லேப்களில் மொத்தமாக இறக்குகிறார். அலோன்சோ எனும் அசுரனிடம் எதுவுமே பலிக்கவில்லை. டாப் ஆர்டரை இழந்த இந்திய அணியைக் காக்கும் டிராவிட்டைப் போல், ஃபெடரர், நடாலுக்கு எதிராக ஒவ்வொரு புள்ளியையும் விட்டுக்கொடுக் காமல் ஆடும் ஜோகோவிச் போல் உச்சபட்ச டிஃபன்ஸ். ஆடிப்போனார் ஏழு முறை சாம்பியன். `சார்பட்டா’ திரைப்பட ரங்கன் வாத்தியார் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால், “நீ வேணா வெர்ஸ்டப்பனை ஈசியா முந்திடலாம். ஆனா, அதுக்காகவெல்லாம் அலோன்சோவை முந்திட முடியாது” என்று சொல்லியிருப்பார்.

ஒருவழியாகப் போராடி அலோன்சோவை முந்திய ஹாமில்ட்டன், அடுத்த 2 லேப்களிலேயே கார்லோஸ் சைன்ஸை முந்தி போடியம் பொசிஷனுக்கு முன்னேறினார். ஆனால் வெட்டல், ஓகான் ஆகியோருக்குச் சவால் கொடுக்க, அவருக்கு நேரம் போதவில்லை. 70 லேப்கள் கொண்ட ரேஸின் பெரும்பகுதியை ஒரு டிரைவருக்கு எதிரான போராட்டத்திலேயே தொலைத்தால் எப்படி நேரம் இருக்கும்?

அலோன்சோ, ஹாமில்ட்டனிடம் சண்டை செய்த நேரத்தில், வெட்டலுக்கு எதிராக ஓகானும் சிறப்பாக டிஃபண்ட் செய்தார். அனுபவம் வாய்ந்த வெட்டலுக்கு எதிராக அந்த இளம் வீரர் காட்டிய முயற்சி அதிசயிக்க வைத்தது. இறுதியாக ஓகான் தன் முதல் ஃபார்முலா ஒன் வெற்றியைப் பதிவு செய்தார். வெட்டல் இரண்டாவதாகவும், ஹாமில்ட்டன் மூன்றாவதாகவும் வந்தனர்.

எஸ்டபன் ஓகான்
எஸ்டபன் ஓகான்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எஸ்டபன் ஓகான்

ஃபார்முலா ஒன் வரலாற்றில் தன் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இந்த 24 வயது ஃபிரெஞ்சு ரேஸர். இதற்கு முன் 2020 ஷகிர் கிராண்ட் ப்ரீயில் இரண்டாவது இடம் பெற்றிருந்தார். 2016-ம் ஆண்டு MRT அணிக்காக அறிமுகமான ஓகான், அடுத்த 2 ஆண்டுகள் ஃபோர்ஸ் இந்தியா அணிக்காகப் பங்கேற்றார். 2017 ஆஸ்திரேலிய கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் பத்தாவது இடம் பிடித்து தன் முதல் ஃபார்முலா ஒன் புள்ளியைப் பதிவு செய்தார். 2019 சீசனில் மெர்சிடீஸ் அணியின் ரிசர்வ் டிரைவராக இருந்த அவர், எந்த ரேஸிலும் பங்கேற்கவில்லை. தான் முன்பு டெஸ்டிங் டிரைவராக இருந்த ரெனோ அணிக்கு 2020-ல் மீண்டும் திரும்பினார். அந்த சீஸனில் 62 புள்ளிகளுடன் 12-வது இடம் பிடித்தார். ரெனோ அணி இந்த சீஸனில் ஆல்பைன் என்று பெயர் மாற்றம் அடைந்த பிறகு, அந்த அணிக்காக ஒரு வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஃபார்முலா ஒன் வரலாற்றில், தொடர்ந்து அதிக ரேஸ்களை நிறைவு செய்த டிரைவர் என்ற சாதனை இவர் வசமே இருக்கிறது. 2016 பெல்ஜியம் ஓப்பன் தொடங்கி, 2017 மெக்ஸிகன் ஓப்பன் வரை தொடர்ந்து 27 ரேஸ்களை நிறைவு செய்திருந்தார் ஓகான்.

2014-ம் ஆண்டு ஃபார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பையும், அடுத்த ஆண்டு GP3 பந்தயத்தையும் வென்றிருக்கிறார்.

வெட்டல் தகுதி நீக்கம்!

FIA விதிகளின்படி, ரேஸ்களுக்குப் பிறகு ஒரு காரின் எரிபொருள் மாதிரி எடுத்து சோதனை செய்யலாம். அப்போது ஒரு காரிலிருந்து குறைந்தபட்சம் 1 லிட்டர் எடுக்குமளவுக்கு எரிபொருள் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த வீரரைத் தகுதி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், வெட்டலின் ஆஸ்டன் மார்ட்டின் காரில் ஒரு லிட்டர் எரிபொருள் எடுக்க முடியாததால், அவர் ஹங்கேரி கிராண்ட் ப்ரீ ரேஸில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். கார்லோஸ் சைன்ஸ் மூன்றாவது இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.