கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

வருக... வருக... 2022 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

ஃபார்முலா 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபார்முலா 1

ரேஸ்: ஃபார்முலா 1

வருக... வருக... 2022 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

மேக்ஸ் வெர்ஸ்டப்பன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு அணிகளுக்கான பட்டத்தை வென்றிருக்கிறது ரெட் புல் ரேஸிங். ஜப்பானில் மேக்ஸ், டிரைவர்களுக்கான பட்டத்தை வெல்ல, அடுத்து நடந்த அமெரிக்கன் கிராண்ட் ப்ரீ பந்தயத்திலேயே மற்றொரு டைட்டிலும் ரெட் புல் பக்கமே வந்தது.

இந்த மாதத்தின் முதல் ரேஸ் சிங்கப்பூரில் நடந்தது. மழை காரணமாக வெட் டயர்களில் நடந்த தகுதிச் சுற்றில் சார்ல் லெக்லர்க், போல் பொசிஷனை வென்றார். தன் கடைசி லேப்பில் வெர்ஸ்டப்பன் போல் பொசிஷனை வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லேப்பை முடிக்கும் முன்பே அவரைப் பிட்டுக்கு அழைத்தது ரெட்புல் அணி. தகுதிச் சுற்றுக்குப் பின்பு, ஒவ்வொரு காரிலும் குறிப்பிட்ட அளவுக்கான எரிபொருள் மீதமிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்குப் பெரிய பெனால்ட்டி கிடைக்கும். அதைத் தவிர்ப்பதற்காக வெர்ஸ்டப்பனைப் பிட்டுக்குள் அழைத்தது ரெட்புல்.

எட்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கிய வெர்ஸ்டப்பனால் பெரும் முன்னேற்றம் காண முடியவில்லை. அவர் ஏழாவதாகவே முடித்தார். அதேசமயம், முதல் லேப்பின் முதல் வளைவிலேயே லெக்லர்க்கை முந்திய செர்ஜியோ பெரஸ், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ரேஸையும் வென்றார். பல இடங்களில் லெக்லர்க் அவருக்குச் சவால் அளித்தாலும், சிறப்பாக டிஃபண்ட் செய்து இந்த சீசனில் தன்னுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார் அவர்.

வெர்ஸ்டப்பன்
வெர்ஸ்டப்பன்

சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை சிங்கப்பூரில் தவறவிட்ட மேக்ஸ், டோக்கியோவில் அதை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நினைத்ததைப் போலவே அதைச் சிறப்பாக செய்தார். மழையால் பெருமளவு பாதிக்கப்பட்ட இந்த ரேஸ், 53 லேப்களுக்குப் பதிலாக 28 லேப்கள் மட்டுமே நடந்தது. போல் பொசிஷனில் இருந்து ரேஸைத் தொடங்கிய வெர்ஸ்டப்பன், ஈரமான டிராக்கில் மிகச் சிறப்பாக ஓட்டினார். யாருமே அவருக்குப் பக்கத்தில்கூட வர முடியாத அளவுக்கு ஒவ்வொரு லேப்பிலும் இடைவெளியை அதிகரித்துக் கொண்டே சென்றார். வெறும் 28 லேப்கள் மட்டுமே நடந்த ஒரு ரேஸில், 27 நொடி முன்னிலை பெறுவது என்பது சாதாரண விஷயமா என்ன!

வருக... வருக... 2022 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

இந்த ரேஸை முடித்தபோது, வெர்ஸ்டப்பன் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டாரா இல்லையா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை. ரேஸ் முழுமையாக நடக்காததால், பாதிப் புள்ளிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி பாதி புள்ளிகள் மட்டுமே கொடுக்கப்பட்டால், அது வெர்ஸ்டப்பன் பட்டம் வெல்வதற்குப் போதுமானதாக இருக்காது. அதனால், ரேஸ் முடிந்த பிறகுகூட யாரும் அதைப் பற்றி நினைக்கவில்லை. ஆனால் சில நிமிடங்கள் கழித்து, இந்த ரேஸுக்கு முழுமையான புள்ளிகள் கொடுக்கப்படுவதாகவும், வெர்ஸ்டப்பன் சாம்பியன் ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. சீசன் பாதியிலேயே இது முடிவு செய்யப்பட்டுவிட்டதால், இந்த அறிவிப்பு வெர்ஸ்டப்பனுக்குக்கூட பெரிய அளவில் ஆச்சர்யம் கொடுக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது சீசனாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தன் ஆதிக்கத்தை நிலைநாட்டினார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்.

இந்த சீசனின் 19-வது ரேஸ் அமெரிக்காவில் நடந்தது. ரேஸுக்கு இரண்டு நாள்கள் முன்பு ரெட் புல் ரேஸிங் அணியைத் தோற்றுவித்த டியட்ரிச் மேட்ஷிட்ஸ் காலமானார். அவருக்குச் சமர்ப்பிக்கும் விதமாக அந்த ரேஸை வென்று, அதன் மூலம் அணிகள் சாம்பியன்ஷிப்பையும் வென்றது ரெட்புல்.

வருக... வருக... 2022 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

கார்லோஸ் சைன்ஸ் போல் பொசிஷனில் இருந்து தொடங்கியிருந்தாலும், முதல் வளைவுக்கு முன்பே முதலிடத்துக்கு முன்னேறினார் வெர்ஸ்டப்பன். சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், ஒரு மோசமான பிட் ஸ்டாப் அவரைப் பின்தங்க வைத்தது. 11 நொடிகள் பிட்டில் தேங்கியிருந்ததால், லூயிஸ் ஹாமில்ட்டன், சார்ல் லெக்லர்க் ஆகியோருக்குப் பின்னால் தள்ளப்பட்டார் வெர்ஸ்டப்பன். இருந்தாலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ரேஸின் கடைசிக் கட்டத்தில் அவர்கள் இருவரையுமே முந்தி முதலிடம் பிடித்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு வெர்ஸ்டப்பன் vs லெக்லர்க், வெர்ஸ்டப்பன் vs ஹாமில்ட்டன் இரு யுத்தங்களையும் ஃபார்முலா 1 ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

கடைசியாக 2013-ம் ஆண்டு அணிகள் சாம்பியன்ஷிப்பை வென்ற ரெட் புல், 9 ஆண்டுகள் கழித்து தங்களின் ஐந்தாவது சாம்பியன்ஷிப்பை வென்றது. செபாஸ்டியன் வெட்டல் தங்கள் அணியில் இருந்து வெளியேறியபோது தங்கள் கடைசி பட்டத்தை வென்றவர்கள், இப்போது அவர் ஃபார்முலா 1 பந்தயத்திலிருந்து வெளியேறும் போது மீண்டும் வென்றிருக்கிறார்கள்.

வருக... வருக... 2022 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!
வருக... வருக... 2022 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!
வருக... வருக... 2022 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

டோக்கியோ பஞ்சாயத்து!

ஜப்பான் கிராண்ட் ப்ரீ பந்தயம் தொடங்கிய முதல் லேப்பிலேயே கார்லோஸ் சைன்ஸின் கார் விபத்துக்குள்ளானது. அதனால் சிவப்புக் கொடி காட்டப்பட்டது. ஆனால் டிரைவர்கள் பிட்டுக்குள் நுழைவதற்கு முன்பே சைன்ஸின் காரை அகற்ற டிரக் ஒன்று டிராக்கிற்குள் நுழைந்திருந்தது. அந்தச் சமயத்தில் வேகமாக வந்த பியர் கேஸ்லி கொட்டும் மழையில் கடைசி தருணத்தில்தான் அந்த டிரக்கைக் கவனித்தார். அது உயிரைப் பறிக்கும் ஒரு பெரிய விபத்துக்குக்கூட காரணமாக அமைந்திருக்கலாம். ஒட்டுமொத்த ரேஸிங் உலகமும் இதைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்க, சிவப்புக் கொடி காட்டப்பட்டிருந்தபோது வேகமாக காரை ஓட்டியதற்காக கேஸ்லிக்கு அபராதம் விதித்தது FIA.

ஷூமேக்கர் - வெட்டல் - வெர்ஸ்டப்பன்!

இந்த சீசனில் தன்னுடைய 13-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் மேக்ஸ் வெர்ஸ்டப்பன், மைக்கேல் ஷூமேக்கர், செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் அடங்கிய பட்டியலில் இணைந்திருக்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த அந்த இரு ஜாம்பவான்களும் ஒரு சீசனில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த சாதனையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 2004 சீசனில் ஷூமேக்கர் 13 வெற்றிகளைப் பெற்று அசத்தினார். 9 ஆண்டுகள் கழித்து அதை வெட்டல் சமன் செய்தார். இப்போது மீண்டும் 9 ஆண்டுகள் கழித்து வெர்ஸ்டப்பன் அதைச் சமன் செய்திருக்கிறார். 2003-ம் ஆண்டு 18 ரேஸ்களே நடந்திருந்தது. 2012-ல் 19 ரேஸ்கள். வெர்ஸ்டப்பன் 19-வது ரேஸில் இச்சாதனையை சமன் செய்திருக்கிறார். இன்னும் 3 ரேஸ்கள் மீதமிருக்கும் நிலையில், நிச்சயம் அவர் அந்தச் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.